ஆறரை கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மதுரை ஹாக்கி மைதானம், ரூ.1.60 கோடியில் கட்டப்பட்ட விருதுநகர் சங்கர லிங்கனார் மணிமண்டபம் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் உள்ளிட்ட பல புதிய கட்டிடங்கள் முதல்வரின் தேதிக்காக காத்திருக்கின்றன. திறப்பு விழா கல்வெட்டில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் வருவதைத் தவிர்க்கவே, விழா தள்ளிப் போடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பிரம்மாண்டமான பாலம் முதல் வி.ஏ.ஓ. அலுவலகம் வரையில், எந்தக் கட்டிடமாக இருந்தாலும் முதல்வரே திறந்து வைக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு கடைசியாக 22.9.14ம் தேதியன்று சென்னையில் உள்ள 4 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகங்களை அன்றைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள விடுபட்ட மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் நகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் கட்டி முடிக்கப் பட்டன. ஆனால், இன்னும் திறக்கப் படவில்லை. மதுரையில் ஆறரை கோடி ரூபாய் செலவில் நவீன ஹாக்கி மைதானம் கட்டப்பட்டு, சுமார் 5 மாதங்களாகிவிட்டன. இன்னமும் மைதானம் திறக்கப் படாததால் முதல்வர் கோப்பை ஹாக்கி போட்டிகள் அமெரிக்கன் கல்லூரி மைதானத்தில் நடந்தன.
‘இந்த மைதானத்தில் விரிக்கப்பட்டுள்ள செயற்கை புல் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது. விளையாட விளையாட தான் மைதானம் செட் ஆகும். பயன்படுத்தப்படாமல் கிடந்தால் சேதமடைந்துவிடும்’ என்று பயிற்சியாளர்கள் பதறுகிறார்கள். விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர் ஜெயலலிதா. அவரது பெயரைச் சொல்லியே, அதிகாரிகள் மைதானத்தை வீணாக்குவது வேதனையளிக்கிறது என்கிறார்கள் ஹாக்கி வீரர்கள்.
சிவகங்கை தாலுகா அலுவல கம், திண்டுக்கல் அரசு மருத்துவ மனையின் மகப்பேறு மற்றும் தீக்காயப் பிரிவு போன்றவை கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாக பூட்டிக் கிடக்கின்றன. மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் முழுவதும் புதிதாக கட்டப்பட்ட அம்மா உணவகங்கள் திறப்பு விழா காணாமல் உள்ளன. முதல்வரின் சொந்தத் தொகுதியான போடி பஸ்நிலையத்தில் கட்டப்பட்ட அம்மா உணவகத்தின் நிலையும் இதுதான். விருதுநகரில் 1.60 கோடி ரூபாயில் கட்டப்பட்ட தியாகி சங்கரலிங்கனார் மணிமண் டபத்தை, அவரது நினைவுச் தினமான அக்டோபர் 13-ம் தேதிக்கு முன் திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அதற்குள் ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு வந்ததால், அந்த விழாவும் ரத்தாகிவிட்டது.
முதல்வராக பதவியேற்று 3 மாதங்கள் ஆகியும் ஓ.பன்னீர் செல்வம் எந்த புதிய கட்டிடங் களையும் திறந்து வைக்கவில்லை. கல்வெட்டில் தன்னுடைய பெயர் இடம்பெறுவதைத் தவிர்ப் பதற்காகவே, திறப்பு விழாவில் முதல்வர் ஆர்வம் காட்டுவதில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் கூறும்போது, ஏழை மக்களுக்கு உணவளிக்கும் அம்மா உணவகங்கள், சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ் நாடு என்று மாற்றுவதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார் நினைவு மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களை உடனே திறக்க வேண்டும். பொருத்தமில்லாத காரணங்களைக் கூறி மக்கள் பயன்பாட்டுக்கான கட்டிடங்களை மூடி வைத்திருப்பது நியாயமில்லை என்றார்.
புதிய கட்டிடங்களை திறக்க முதல்வர் ஓ.பி.எஸ். முன்வர வேண்டும். இல்லை என்றால், முந்தைய ஆட்சிக் காலங்களில் இருந்ததைப் போல அந்தந்த மாவட்ட ஆட்சியர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டே இந்த கட்டிடங்களைத் திறக்க அவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment