Thursday, 31 December 2015

விழிப்புணர்வு பதிவுதிருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையத்தில் சமீப காலமாக சலவை தூள் விற்ப்பனை, போர்வை என பல்வேறு பொருட்கள் விற்பனை, என்ற பெயரில் ஊரில் வெளிமாநிலத்தை சார்ந்தவர்களும் தமிழகத்தை சார்ந்தவர்களும் வருகின்றன.

அதே போல் இன்று நமதூரில் வட மாநிலத்தை சார்ந்தவர்கள் ஒரு வீட்டின் கொள்ளை பகுதியில் இருவர் நின்று கொண்டு இருந்தன அவர்களை பிடிக்க சென்ற போது ஒருவர் தப்பி சென்றார் ஒருவரை மட்டும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதே போல் பலரும்  வருகின்றன அவர்கள் எதற்காக வருகிறார்கள்? எந்த நோக்கத்தில் வருகிறார்கள்? என பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன. எனவே பொதுமக்கள் யார் இது போன்று விற்பனைக்கு வருபவர்களை உங்கள் கம்பெனி I.D உள்ளதா? உங்களுடைய I.D தாருங்கள் என கேளுங்கள், பொருட்கள் விற்ப்பனைக்கு என்று அதிகமாக வருவார்கள் அவர்களை வீட்டின் உள்ளே அனுமதிக்காதீர்கள் முக்கியமாக தனியாக இருக்கும் பெண்கள் கதவை திறக்காதீகள். எனவே விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடன் இருக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இதுபோன்று யாரேனும் வந்தால் அருகில் உள்ளவர்களை அழைங்கள் அல்லது கீழ் காணும் தொலைபேசி எண்ணுக்கு அழைக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

இதை அதிகமாக நமதூரில் உள்ளவர்களுக்கு அனுப்பி வையுங்கள் குறிப்பாக பெண்களுக்கு இந்த விழிப்புணர்வு பதிவை எடுத்து சொல்லுங்கள்.

9750505098, 9790131486, 9942847537

இவண்
தமுமுக,
கொடிக்கால்பாளையம்,
திருவாரூர் நகரம்.

Wednesday, 30 December 2015

திருவாரூரில் காலாவதியான குளிர்பானம் பறிமுதல்


திருவாரூர் கடைவீதியில் காலாவதியான குளிர் பானங்கள், ரொட்டிகளை உணவுப் பாதுகாப்புத் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, ஆட்சியர் மதிவாணன் அறிவுறுத்தலின் பேரில், தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை, மருந்து நிர்வாகத் துறையினர் திருவாரூர் நகர் பகுதிக்கு உள்பட்ட விளமல், பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, காலாவதியான உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள், தடை செய்யப்பட்ட பான்மசாலா உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டு, ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காலாவதியான குளிர் பானங்கள், ரொட்டிகளை பறிமுதல் செய்தனர். உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Tuesday, 29 December 2015

திருவாரூரில் வேலைவாய்ப்பு முகாம்கள்திருவாரூர் மாவட்டத்தில் டிச.29, 30-இல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என, மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் படித்த ஆண், பெண் இருபாலருக்குமான வேலை வாய்ப்பு முகாம் டிச.29-இல் வலங்கைமான் அருணாசலம் கார்டன் திருமண மண்டபத்திலும், டிச.30-இல் நன்னிலம் அருகே பனங்குடி ஊராட்சி ஆண்டிப்பந்தல் ஜேஆர்எஸ் திருமண மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்களில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குள்பட்ட 8 முதல் பிளஸ்-2 மற்றும் டிப்ளமோ வரை படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.

வேலைவாய்ப்பு முகாம்களில் முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

விரும்புவோர் தங்களுடைய கல்வி சான்றிதழ்களின் நகல்கள் குடும்ப அட்டை இருப்பிடச் சான்று நகல், தகுதி விவரக்குறிப்பு அசல் மற்றும் நகலுடன் 2 மார்பளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் பங்கேற்று பயன்பெறலாம்.

குப்பை தொட்டி அளிப்பு

கொடிக்கால் பாளையம் பைத்துல்மால் சார்பாக நமதூர் முழுவதும் குப்பைத்தொட்டிகள் நகராட்சியிடம் அளிக்கப்பட்டது.

Monday, 28 December 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 28/12/2015

நமதூர் சூஃபி நகர் நடுத்தெரு மர்ஹூம் அப்துல் பத்தாஹ் அவர்களின் மகனார் ஹாஜா மெய்தீன் அவர்கள் மௌத்.


Wednesday, 23 December 2015

Kodikkalpalayam

கொடிக்கால்பாளையத்தில் மீலாது பெருவிழா

Monday, 21 December 2015

தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
 வடகிழக்கு பருவமழை தென் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. தென்தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் இன்று பரவலாக மழை பெய்து வருகின்றது. 
 இந்நிலையில் குமரிக்கடல், அதனை ஒட்டிய இலங்கைப் பகுதியில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, லட்சத்தீவு அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது.
 இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை முதல் இரு தினங்களுக்கு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஆனால் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

Sunday, 20 December 2015

தற்போதைய ரேசன் கார்டு மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு


தற்போதைய ரேசன் கார்டு மேலும் ஒரு ஆண்டுக்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளை ஆதார் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணினி தொகுப்பினை அடிப்படையாக கொண்டு மின்னணு (எலக்ட் ரானிக்) குடும்ப அட்டையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொது விநியோகத் திட்டத்தினை முழு கணினி மயமாக்கும் திட்டத்துடன் ஒருங்கிணைத்து புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணியினை 2015 டிசம்பர் மாதத்துக்குள் மேற் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்தப் பணிகள் முடிவடைய இன்னும் சில காலம் ஆகும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
எனவே தற்போதுள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை மேலும் ஒரு ஆண்டு நீடிக்கவும், ஏற்கனவே குடும்ப அட்டையில் உள்ள உள் தாளை பயன்படுத்திக்
கொள்ளவும் உரிய ஆணைகள் வெளியிடுமாறு அரசை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை கேட்டுக் கொண்டது.
இதை கவனமுடன் பரிசீலித்த பின்பு அவரது கருத்துகளை ஏற்றுக் கொள்ளலாம் என அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 1.1.2016 முதல் 31.12.2016 வரை மேலும் ஓராண்டிற்கு நீடித்தும், இதற்காக தற்போது குடும்ப அட்டையில் காலியாக உள்ள உள்தாளினை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தும் அரசு உத்தரவிடுகிறது என்று கூறப்பட்டுள்ளது

மரபு மருத்துவம்: சேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது?

எப்போதும் நீரில், சேற்றில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கும், தொடர் மழைக் காலத்தில் வெள்ளம் சூழ்ந்து தண்ணீரில் தத்தளிக்கும் மக்களுக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை சேற்றுப்புண், பித்தவெடிப்பு.
காரணம் என்ன?
மழைநீர், சேற்றுநீர், சுகாதாரமற்ற நீரில் நடப்பது மற்றும் நீண்ட நேரம் நிற்பது, உடல் எடை அதிகமாக இருப்பது, காலில் செருப்பு அணியாமல் கரடு, முரடான பாதையில் நடப்பது, தேய்ந்து போன ஒழுங்கற்ற - தரமற்ற செருப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது, குளிக்கும்போது பாதங்களை அழுக்கு தேய்த்துக் குளிக்காதது, பாதம், குதிகாலில் அழுக்கு சேர்வது போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
சொரியாசிஸ் என்ற காளாஞ்சகப் படை தோல் நோய், கரப்பான், தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நாள்பட்ட தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட நேரம் - நீண்ட நாட்களுக்குச் செருப்பு மற்றும் தரமற்ற ஷூக்களைப் பயன்படுத்துவது, வெளியில் சென்று வந்தபிறகு - தோட்ட வேலை - வீட்டு வேலை செய்து முடித்த பிறகு கை, கால்களைச் சரியாக, சுத்தமாகக் கழுவாததாலும், நாள்பட்ட நோய் நிலைகளிலும், வைட்டமின் சத்து குறைவாலும், ஒரு சில மருந்துகளின் ஒவ்வாமையாலும், நாள்பட்ட மருத்துவச் சிகிச்சையின் பக்க விளைவாலும், தொற்றுநோய் கிருமிகளாலும், நாள்பட்ட, தீராத மலக்கட்டு இருந்தாலும் சேற்றுப் புண், பித்த வெடிப்பு ஏற்படலாம்.
நோய் அறிகுறி
கால் ஓரங்களில் வெடிப்பு, புண், தடிப்பு, குறிப்பாகக் குதிகாலில் வெடிப்பு, புண், நடந்தால் தாங்கமுடியாத வலி, குத்தல், நீண்ட நேரம் நிற்க முடியாமை, கால்களில் செருப்பு இல்லாமல் நடக்க இயலாமை, செருப்பு போட்டாலும் ஒரு சிலருக்குத் தாங்க முடியாத வலி, வேதனை, சில நேரங்களில் வெடிப்பிலிருந்து ரத்தம் வருதல், கைவிரல், கால்விரல் இடுக்குகளில் புண், வலி, நீர் வடிதல், நெறி கட்டுதல், சுரம், காலில் ஷூ, சாக்ஸ் அணிய முடியாமை, ஒருவித துர்நாற்றம் போன்றவை அறிகுறிகளாக ஏற்படக் கூடும்.
வராமல் தடுப்பது எப்படி?
வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் கை, கால், முகத்தை நன்கு கழுவ வேண்டும். குளிக்கும்போது உடலின் அழுக்கு, மலம், ஜலத்தை வெளியேற்ற வேண்டும். ஒழுங்கற்ற தரைத் தளங்களில் காலணி இல்லாமல் நடப்பதைத் தவிர்க்கவும். தரமற்ற காலணிகளை அணிவதைத் தவிர்க்கவும்.
வாரம் ஒருமுறை அல்லது இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்துகளையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ளக் கூடாது. சத்துள்ள காய், கீரை, பயறு, பழ வகைகளைத் தினசரிச் சேர்த்துக்கொள்ள வேண்டும். தோல் நோய், வேறு நோய்கள் இருந்தால் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். தொற்றுநோய்கள் தாக்காமல் இருக்கவும் உடலின் எதிர்ப்புச் சக்தி குறையாமல் இருக்கவும் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். சரியான நேரத்தில், சரியான முறையில் உணவை உட்கொண்டுவந்தால் தொற்று நோயிலிருந்தும், சேற்றுப் புண், பித்த வெடிப்பு வராமலும் தடுக்க முடியும்.
மருந்துகள்
சர்க்கரை நோய், தைராய்டு நோய், உடல் பருமன், தொற்று நோய், சத்துக் குறைபாடு போன்றவற்றுக்கு உரிய சிகிச்சை, உணவுக் கட்டுப்பாடுகளுடன் மருந்தையும் உட்கொள்ள வேண்டும். சேற்றுப்புண், பித்தவெடிப்புக்கு உள்மருந்து எடுத்துக்கொள்ளும் முன் சித்தர்கள் விதிப்படி வருடத்துக்கு இரண்டு முறை பேதிக்குச் சாப்பிட்டு உணவுப் பாதையைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
உள்மருந்து
முக்குற்றங்களான வாத, பித்த, கபத்தைச் சமநிலைபடுத்தக்கூடிய மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். சிவனார்வேம்பு, லவங்கப்பட்டை, இலவங்கபத்திரி, சிறுநாகப்பூ, ஏலம் சேர்த்த மருந்து, கார்போக அரிசி, ஆவாரம்பூ, ரோஜா மொக்கு, கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், கசகசா, பூலாங்கிழங்கு, சந்தனம் சேர்ந்த மருந்து, பரங்கிப்பட்டை சேர்ந்த மருந்து, அன்னபேதி, நற்பவளம் சேர்ந்த மருந்துகள் நல்ல பலனைத் தரும்.
வெளிமருந்து
கிளிஞ்சல், நெல்லிக்காய், சிற்றாமணக்கு நெய் சேர்ந்த மருந்து, வங்கச் செந்தூரம், மிருதார்சிங்கி, மயில்துத்தம், வெண்ணெய் சேர்ந்த மருந்து, வீரம், பசுவெண்ணெய் சேர்ந்த மருந்து, ஊமத்தை இலைச்சாறு, தேங்காய் நெய் சேர்ந்த மருந்து, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த மருந்து, படிகார நீர் போன்ற வெளிப்பூச்சு மருந்துகள் பயன்படுத்தினாலும் சேற்றுப் புண், பித்த வெடிப்பு விரைந்து குணமடையும்.

Saturday, 19 December 2015

நீர்நிலைகளில் கட்டுமான பணிகளுக்கு தடை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்
சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மீது எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச் சங்க தலைவர் கே.சண்முகசுந்தரம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டி கிராமத்தில் உள்ள பெரும்பள்ள ஓடை மாசுபடுவதைத் தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதை நம்பியுள்ள நிலங்களை பாதுகாப்பதற்காகவும் இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச் சங்கத்தை தொடங்கினோம். கீழ்பவானி கால்வாய், நிலவியல் ஓடை ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் பெரும்பள்ள ஓடைக்கு வருகிறது.
ஓடை போன்ற நீர்நிலைகள், விவசாய நிலங்களின் பாசனத்துக்கு நீர் ஆதாரமாக இருப்பதுடன், திடீரென கனமழை பெய்து, வெள்ளம் ஏற்படும்போது மழைநீரைத் தேக்கி வைக்கவும் பயன்படுகின்றன. பாசனத்துக்கு பெரிதும் பயன்படும் பெரும்பள்ள ஓடையில் ஆக்கிரமிப்பு செய்து தடுப்பு ஏற்படுத்தியதால் தண்ணீர் செல்வது தடைபடுகிறது. தண்ணீரும் தேங்காததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
ஓடையில் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் கனமழை பெய்யும்போது கதிரம்பட்டி கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி 2009-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி ஈரோடு வட்டாட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடையின்றி தண்ணீர் செல்ல வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை.
தாசில்தார் மட்டுமல்லாமல், நசியனூர் வருவாய் ஆய்வாளர், கதிரம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரும் ஓடையில் கழிவு மண்ணை கொட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். நீர்நிலைகளை பாதுக்காக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஈரோடு மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை பொறியாளர் ஆகியோர் பெரும்பள்ள ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, ஓடையை மீட்டு பழைய நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த விஷயத்தில் கடமையைச் செய்ய அவர்கள் தவறிவிட்டனர். எனவே, பெரும்பள்ள ஓடையை தூர்வாரி மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பெரும்பள்ள ஓடையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. நீதிபதிகள் சதீஷ் கே.அக்னி ஹோத்ரி, பி.தேவதாஸ் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பெரும்பள்ள ஓடையில் ஆய்வு செய்யப்பட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அதையடுத்து மனுதாரர் வழக்கறிஞர் எல்.சந்திரகுமார் வாதிடும்போது, பெரும்பள்ள ஓடை மீது சாலை அமைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், பெரும்பள்ள ஓடை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள அரசு அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Friday, 18 December 2015

தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகளை ஜனவரியில் நடத்த முடிவு: பள்ளிக் கல்வித்துறை


தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி 11-முதல் 27-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகப் புறநகர் பகுதிகளில் பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் மாணவர்களின் நோட்டு புத்தகங்கள், சீருடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து 33 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர், நிலைமை சீரடைந்ததையடுத்து டிசம்பர் 14-ம் தேதி 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, பாடச்சுமை காரணமாக அடுத்தடுத்து தேர்வுகளை எதிர்கொள்ளும் நிலையில் மாணவர்கள் உள்ளதால், அரையாண்டுத் தேர்வுகளை ரத்து செய்து இறுதி தேர்வை நடத்த பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக, தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஜனவரி 11-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மலேசிய நோயாளிக்கு ஸ்டெம்செல் தானம் செய்யும் சீனர்


சீனாவைச் சேர்ந்த ஒருவர், மலேசியாவைச் சேர்ந்த ரத்த சம்பந்தப்பட்ட நோயாளி ஒருவருக்கு ஹீமோபொய்டிக் என்ற ஸ்டெம்செல்லை (எச்எஸ்சி) தானமாக அளித்துள்ளார்.
லு (22) என்ற சீனர், ஸ்டெம்செல் தானம் அளிப்பதாக சீனா மார்ரோ டோனர் திட்டத்தில் தனது பெயரை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், இவரது ஹியூமன் லிகோசைட் ஆன்டிஜென் (எச்எல்ஏ) மலேசியாவைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கு பொருந்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து லு கூறுகையில், இதுபற்றி தெரிந்ததும் நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். ஆனால், நிச்சயம் இந்த ஸ்டெம்செல் தானத்தை செய்தாக வேண்டும் என்று நினைத்தேன் என்றார்.
ஸ்டெம் செல் பொருந்துவது மிகவும் அரிதான செயலாகும். எப்போதாவது அது 0.25 சதவீதம் முதல்  0.01 சதவீதம் வரையே பொருந்தும்.
நான் செய்த ஆய்வுகளின்படி, ஸ்டெம்செல் தானம் செய்வதால், தானம் அளிப்பவருக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது என்று தெரிய வந்தது. மேலும், ஒரு உயிரைக் காப்பாற்றுவது என்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.
லுவின் உடலில் இருந்து சுமார் 420 மில்லி லிட்டர் ஸ்டெம்செல் பிரிக்கப்பட்டு அவை மலேசியா கொண்டு செல்லப்பட்டு நோயாளிக்கு ஊசி மூலம் ஏற்றப்படவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Thursday, 17 December 2015

வி.ஏ.ஓ. தேர்வு பிப்.28-க்கு நீடிப்பு

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வு வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது.
 இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான நேரடி நியமனத்துக்கு விண்ணப்பங்களை அனுப்புமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. அதற்கான இணையவழி விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்காக கடைசி தேதி வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த எழுத்துத் தேர்வு தேதி பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

Wednesday, 16 December 2015

வெள்ளத்தில் மூழ்கிய காந்தியின் வரலாற்று நூல்கள்-ஆவணங்கள்

சென்னையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, தியாகராய நகரில் உள்ள காந்தி கல்வி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வரலாற்று நூல்கள், ஆவணங்கள் தண்ணீரில் மூழ்கி விட்டன. காந்தியக் கொள்கைகளைப் பரப்ப உதவும் வகையில், இந்த நூலகத்தைச் சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
சென்னை தியாகராய நகர் வெங்கட நாராயண சாலையில் உள்ள தக்கர் பாபா வித்யாலய வளாகத்தில் காந்தி கல்வி நிலையம் 1978-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதை தியாகி டி.டி.திருமலை நிறுவினார்.
இங்கு காந்தி தொடர்பான வரலாற்று ஆவணங்கள், அவர் தமிழகத்தில் 20 இடங்களில் நிகழ்த்திய சொற்பொழிவுகள், அவருடன் பழகியவர்கள் கூறிய தகவல்கள் அடங்கிய ஆவணங்கள், 10,000-க்கும் மேற்பட்ட நூல்கள், குறுந்தகடுகள் போன்றவை பராமரிக்கப்பட்டு வந்தன. இதனால், காந்தி குறித்து முழுமையாக அறிய விரும்புவோருக்கு தேவையான தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.
தொடரும் காந்திய பணிகள்: மேலும், நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு காந்தியின் கொள்கைகள், சிந்தனைகள், போராட்ட வரலாறு ஆகியவை குறித்த செய்திகளைக் கொண்டு செல்லுதல், அஞ்சல் மூலம் "காந்தியை அறிவோம்' என்ற திட்டத்தின் மூலம் தேர்வு நடத்தி சான்றிதழ்கள் வழங்குதல், சைக்கிள் பிரசாரம், திரைப்படங்கள், கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளை காந்தி கல்வி நிலையம் மேற்கொண்டு வருகிறது.
இங்கு முன்னாள் தேர்தல் அதிகாரிகள் டி.கே.ஓஜா, நரேஷ் குப்தா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் காந்தி குறித்த முதுநிலை படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர்.
வெள்ளத்தில் சேதம்: இந்த நிலையில், சென்னையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக காந்தி கல்வி நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 90 சதவீத ஆவணங்கள், நூல்கள், பதிவேடுகள் போன்றவை தண்ணீரில் மூழ்கிவிட்டன. மேற்பகுதியில் இருந்த சில நூல்கள், ஆவணங்கள் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன.
இழந்த ஆவணங்களை மீட்டுருவாக்கம் செய்யவும், நூலக கட்டடத்தை புதுப்பிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காந்தி கல்வி நிலைய நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
என்னென்ன ஆவணங்கள்? இதுகுறித்து காந்தி கல்வி நிலையத்தின் தலைவர் மோகன், கௌரவ இயக்குநர் அண்ணாமலை, செயலர் பாண்டியன் ஆகியோர் கூறியது:
இந்த நிலையத்தில் காந்தி குறித்து முதன் முதலாக 1909-இல் தென்னாப்பிரிக்கா எழுத்தாளர் ஜோசப் ஏ.டோக் எழுதிய வாழ்க்கை வரலாறு, 1919 முதல் 1948 வரை காந்தியடிகள் நடத்திய ஹரிஜன், யங் இந்தியா ஆகிய வார இதழ்களின் தொகுப்பு, 1910-இல் ஹெச்.எஸ்.எல்.போலக் எழுதிய எம்.கே.காந்தி சித்திரம், ஏ.கே.செட்டியார் 1952-இல் எழுதிய புண்ணியவான் காந்தி என்ற நூல், அமெரிக்க எழுத்தாளர்கள் ஹோரஸ் அலெக்ஸாண்டர், ஜூடித் எம்.பிரௌன் எழுதிய நூல்கள், எழுத்தாளரும், பதிப்பாளருமான ஜி.ஏ.நடேசன், கணேஷ் போன்றோர் பதிப்பித்த நூல்கள் என பொக்கிஷமாக விளங்கிய அரிய வகை ஆவணங்களைச் சேகரித்து வைத்திருந்தோம். இத்தகைய ஆவணங்களை இழந்ததை பேரிழப்பாகக் கருதுகிறோம். இந்த நூலகத்தை புதுப்பித்து, காந்தியின் வரலாறு குறித்த தகவல்களை மக்களுக்கு அளிக்க விரும்புகிறோம்.
இனி பேரிடர்களிலிருந்து இந்த ஆவணங்களைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து நூல்களையும் டிஜிட்டல் மயமாக்க திட்டமிட்டுள்ளோம். இதை மீண்டும் பொலிவு பெறச் செய்ய பொதுமக்களும், தமிழக அரசும் உதவ வேண்டும்.
அரிய ஆவணங்கள் இருந்தால்...: காந்தி பற்றிய அரிய ஆவணங்கள், செய்திகள், நூல்கள் இருந்தால் அவற்றை காந்தி கல்வி நிலையத்துக்கு நன்கொடையாக வழங்க அனைவரும் முன்வர வேண்டும். மென்பொருள் வடிவில் இருக்கும் நூல்களையும் வழங்கலாம்.
மேலும், நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு தங்களால் இயன்ற பணம், பொருள் சார்ந்த உதவிகளை அளிக்கலாம். இதற்காக ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ரூ.85,000 நிதி திரட்டப்பட்டுள்ளது. தகவல்களுக்கு 99529 52686, 94441 83198 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

Tuesday, 15 December 2015

திருவாரூரில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த கழிவு நீர் தொற்றுநோய் பரவும் அபாயம்


Tபாதாள சாக்கடையில் இருந்து வெளியான கழிவு நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் தொற்று நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கழிவு நீர்

வடகிழக்கு பருவமழை காரணமாக திருவாரூர் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தற்போது மழை நின்று தண்ணீர் வடிய தொடங்கி விட்டது. இந்த நிலையில் திருவாரூர் விவேகானந்தர் நகர், வாசன் நகர் உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடை உந்து நிலையம் சரிவர செயல்படாததால் கழிவு நீர் வெளியேறி சாலையில் வழிந்து ஓடுகிறது. இந்த கழிவுநீர், மழைநீருடன் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்திருப்பதால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவேகானந்தர் நகர், வாசன் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

துர்நாற்றம்

பாதாள சாக்கடைகளில் இருந்து கழிவு நீர் வெளியேறி குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கழிவுநீர் தேங்கி நிற்பதால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பாதாள சாக்கடை பழுதுகளை விரைவாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர். 

Monday, 14 December 2015

சவுதி உள்ளாட்சி தேர்தல்: முதல்முறையாக ஒரு பெண், கவுன்சிலராக தேர்வு 

சவுதி உள்ளாட்சி தேர்தலில் முதல்முறையாக ஒரு பெண், கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். 

மன்னர் ஆட்சி நடக்கிற சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் மன்னர் அப்துல்லா மரணம் அடைவதற்கு முன்பாக சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கவும் அவர் முடிவு எடுத்தார். அத்துடன், நாட்டின் மிகப்பெரிய ஆலோசனை அமைப்பான சுரா கவுன்சிலிலும் 30 பெண்களை நியமித்தார்.

இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள 2 ஆயிரத்து 100 உள்ளாட்சி கவுன்சில் இடங்களுக்கு நேற்று தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 1,050 இடங்களில் மன்னர் ஒப்புதலுடன் நியமனங்கள் செய்யப்படும். நேற்றைய தேர்தலில் 5 ஆயிரத்து 938 ஆண்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இவர்களுடன் 978 பெண்களும் வேட்பாளர்களாக களம் இறங்கினர்.

இது சவுதியில், மறைந்த மன்னர் அப்துல்லா மேற்கொண்ட அரசியல் சீர்திருத்தத்தின் மூலமாக ஏற்பட்டுள்ள வரலாற்று திருப்புமுனையாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவர தொடங்கியது. அதில், மெக்கா மாகாணத்தில், மெத்ரக்கா என்ற இடத்தில் சல்மா பிண்ட் ஹிஜாப் அல் ஒட்டேய்பி என்ற பெண் வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏழு ஆண்களையும், 2 பெண்களையும் எதிர்த்து நின்று அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் எந்தவொரு ஆண் வாக்காளரையும் பெண் வேட்பாளர்கள் நேரில் சந்தித்து ஓட்டு கூட கேட்கமுடியாது என்ற சூழலில் அவர் இந்த வெற்றியை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, 13 December 2015

வெளியூர் மௌத் அறிவிப்பு 13/12/2015

கொடிநகர் மேலத்தெரு குத்துபுதீன் பாய் (ஹாலா) அவர்களின் மாமனார் காதர் அலி (நாகூரார் வீடு) அவர்கள் அடியக்கமங்களத்தில் மௌத்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மூணாறு தலைப்பில் தண்ணீர் திறப்பு


திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள  மூணாறு தலைப்பிலிருந்து பாசனத்துக்கு சீரான வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு உள்ளது. இதனை கோரையாறு தலைப்பு என்றும் கூறுவர். கல்லணையிலிருந்து பெரியவெண்ணாறு வழியாக இந்த மூணாறு தலைப்புக்கு ஆற்றுநீர் வருகிறது. மூணாறு தலைப்பிலிருந்து கோரையாறு, வெண்ணாறு, பாமணியாறு ஆகிய ஆறுகளுக்கு பாசனத்துக்காக தண்ணீர் பிரித்து விடப்படுகிறது.
தொடர்ந்து மழை பெய்ததால் மேட்டூர் அணை மூடப்பட்டு கல்லணையிலிருந்தும் தண்ணீர் திறக்கப்படாததால், பெரிய வெண்ணாற்றில் மழைநீர் மட்டுமே வந்தடைகிறது. இந்த மழைநீர் மூணாறு தலைப்புக்கு தற்போது 321 கனஅடி மட்டுமே வருகிறது. இந்த நீரானது கோரையாற்றில் திறந்துவிடப்படுகிறது.
மூணாறு தலைப்புக்கு வரும் மழைநீரால் பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Saturday, 12 December 2015

விமான நிலையத்தில் வெள்ளம்: ரூ. 1,000 கோடி நஷ்டம்

சென்னை விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால், விமான நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 சென்னையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி, டிசம்பர் 1-ஆம் தேதி பெய்த பெரு மழை, சென்னை விமான நிலையத்தை வெள்ளத்தில் மிதக்க வைத்தது. ஓடுபாதைகளில் மழை வெள்ளம் கரை புரண்டோடியதால் விமானங்கள் வருவதும், புறப்படுவதும் முடங்கியது. இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம், 2-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை மூடப்பட்டது. 6-ஆம் தேதி பிற்பகல்தான் மீனம்பாக்கம் விமான நிலையம் செயல்பட தொடங்கியது.
 பல்லாவரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு விமான நிலையத்தையும் விட்டுவைக்கவில்லை. சில மணி நேரங்களில் வெள்ளநீர், சென்னை விமான நிலைய பகுதியை பெரிய குளம் போல மாற்றி விட்டது. அந்த சமயத்தில் சுமார் 20 விமானங்கள் அங்கு இருந்தன. அதில், சில விமானங்களை வெள்ளம் இழுத்து சென்றது. 2 பெரிய விமானங்களை இழுத்து சென்று வனப்பகுதிக்குள் புரட்டிப் போட்டது. ஓடு பாதையின் மையப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஓரிரு விமானங்கள் மட்டுமே தப்பின. மற்ற எல்லா விமானங்களும் வெள்ள நீரில் மிதந்தன. இதில், அவை கடுமையாக சேதம் அடைந்துள்ளன. சேதமடைந்த விமானங்களை சீரமைக்க பல கோடி செலவாகும் என்று தெரிகிறது.
 ரூ.1,000 கோடி இழப்பு: கடலோர காவல் படைக்கும் இந்த மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் ஒரு பகுதியில் கடலோர காவல் படைக்கு சொந்தமான விமானங்களும் ஹெலிகாப்டர்களும் நிறுத்தப்பட்டிருந்தன.
 இதில், 5 சிறு ரக விமானங்கள், 2 ஹெலிகாப்டர்களுக்குள் வெள்ளம் புகுந்தது. எனவே, இந்த 7 விமானங்களையும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் சீரமைக்க குறைந்தபட்சம் ரூ.50 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
 சென்னை விமான நிலையத்துக்குள் புகுந்த வெள்ளத்தால் சுமார் 35 விமானங்கள் சேதமடைந்துள்ளன. தனியார் விமான நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான சேவை 5 நாட்கள் முடங்கியது. இதனால் விமான நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் வெள்ளம் முழுமையாக வடிந்து விட்டாலும் இன்னமும் 100 சதவீத இயல்பு நிலை திரும்பவில்லை.
 
 

நேரு விளையாட்டு அரங்கில் மலைபோல் குவியும் நிவாரண பொருட்கள்சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மலைபோல் வெள்ள நிவாரண பொருட்கள் குவிகிறது. இதுவரையில் 1,200 டன் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

உதவிக்கரம்

தமிழகத்தில் பெய்த கனமழையால் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் சின்னாபின்னமாகின. மழை வெள்ளத்தால் மக்கள் பலர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள மக்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர்.

அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், சமூகசேவை நிறுவனங்கள், பள்ளி-கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் என பல தரப்பட்டவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறி தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

நேரு உள்விளையாட்டு அரங்கம்

நிவாரண பொருட்களை கொடுக்க விரும்புவோர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஒப்படைக்கலாம் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி அங்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் பெறப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் மலைபோல நிவாரண பொருட்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசுடன் இணைந்து நிவாரண பொருட்களை பிரித்து ஒருங்கிணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

1,200 டன் வினியோகம்

இதுகுறித்து நிவாரண பொருட்களை கண்காணிக்கும் குழுவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரவீன்குமார் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 3-ந்தேதி முதல் ஆவின் பால் பவுடர், அம்மா குடிநீர் போன்ற பொருட்கள் நிவாரணத்துக்காக பெறப்பட்டன. முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோளின்படி தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண பொருட்கள் லாரிகள் மூலம் வந்தவண்ணம் உள்ளன.

பெறப்படும் நிவாரண பொருட்கள் உடனுக்குடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக சென்னையில் உள்ள 15 மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பப்படுகிறது. திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் கடலூர் கலெக்டர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இதுவரையில் சுமார் 1,200 டன் நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திரகுமாரி உதவி

சென்னை சித்தாலப்பக்கத்தில் ஏராளமானவர்கள் வீடு இழந்து மழை வெள்ளத்தால் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தி.மு.க. இலக்கிய அணி புரவலர் இந்திரகுமாரி வீட்டுக்கு தேவையான பொருட்கள், அரிசி, வேட்டி-சேலை, போர்வை, பாய், தலையணை போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

புரசைவாக்கம் பெரிய மசூதி சார்பில் 30 ஆயிரம் உணவு பொட்டலங்களும், போர்வை, லுங்கி, நைட்டி, புடவை, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

டெல்லியை தலைமை இடமாக கொண்டு இயங்கும் ‘ஜமியத் உலமாயே ந்த்’ நிறுவனம் சார்பில் ரூ.2 கோடி செலவில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஒருங்கிணைக்கும் பணிகளை ஜமியத் உலமா தேசிய பொதுசெயலாளர் முகமது அஷ்ஹது மதானி, முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் உள்ளிட்டோர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மனிதநேயம் மடியவில்லை

சாதி-மத பேதங்களை மறந்து மக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன், போட்டி போட்டு நிவாரண உதவிகளை வழங்குவது, ‘மனிதநேயம் இன்னும் மடியவில்லை’ என்பதை பறைசாற்றும் விதமாக உள்ளது.
 

Friday, 11 December 2015

2016-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி), 2016-ம் ஆண்டுக்கான தேர்வு தேதிகள் வெளியிட்டுள்ளது.
யுபிஎஸ்சி நிறுவனம் பல்வேறு பணிகளில் ஆட்களை நியமிப்பதற்கு போட்டித் தேர்வுகள் நடத்தி வருகின்றது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், அடுத்த கல்வியாண்டுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சேவை தேர்வு (CDS I) பிப்ரவரி 14-ம் நடத்தப்படுகிறது. வழக்கமாக இந்த தேர்வு ஆண்டின் முதல் மாதம் அதாவது ஜனவரி மாதம் நடத்தப்படும். இந்த ஆண்டு தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
சிவில் (பிரிமினரி) தேர்வு ஆகஸ்ட் 7, 2016-ம், மெயின் தேர்வு டிசம்பர் 3-ம் தேதியும் நடத்தப்படுவதாக யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Thursday, 10 December 2015

தணிந்தது மழை; திரும்பியது இயல்புநிலை


திருவாரூர் மாவட்டத்தில் மழை தணிந்ததால் புதன்கிழமை இயல்புநிலை திரும்பியது. விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நிகழாண்டு 81,467 ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 38,000 ஏக்கரில் இயல்பான நடவு முறையிலும், 1,65,590 ஏக்கரில் நேரடி விதைப்பு முறையிலும் என மொத்தம் 2,85,057 ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 29-ஆம் தேதி முதல் தொடர்ந்து பெய்த மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மழை நீரில் மூழ்கின. நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. மனித உயிரிழப்பும், கால்நடைகள் இழப்பும் ஏற்பட்டன.
இதனால், விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், புதன்கிழமை காலை முதல் மழையின் தீவிரம் சற்று தணியத் தொடங்கியது.
இதனால், கடந்த சில நாள்களாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த மக்கள் வெளியில் நடமாடத் தொடங்கினர். நிலத்தில் தேங்கிய மழைநீர் வடியத் தொடங்கியதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். மாவட்டம் முமுழுவதும் இயல்புநிலை திரும்பியது.
மழையளவு: புதன்கிழமை காலை 8.30 ம மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக முத்துப்பேட்டையில் 78.86 மில்லி மீட்டர் மழை பதிவானது. திருத்துறைப்பூண்டியில் 78, மன்னார்குடியில் 45, குடவாசல் 26.1, பாண்டவையாறு தலைப்பு 23, திருவாரூர் 21.4, நன்னிலம் 17.4, நீடாமங்கலம் 16.8, வலங்கைமான் 15.1 மில்லிமீட்டர் மழை பதிவானது.

Wednesday, 9 December 2015

தவறான வானிலை விவரங்களைத் தெரிவிக்க வேண்டாம்: வானிலை அதிகாரி வேண்டுகோள்

வானிலை குறித்து பொதுமக்களிடம் சரியான தகவல்களை மட்டுமே ஊடகங்கள் தெரிவிக்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைமை இயக்குநர் எஸ்.பாகுலேயன் தம்பி கேட்டுக் கொண்டுள்ளார்.
 சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது:
 இந்திய வானிலை துறை அறிக்கையை அக்டோபர் 16-இல் வெளியிட்ட அறிக்கையில், நிகழாண்டு வட கிழக்குப் பருவ மழை காலத்தில் தென் தீபகற்பத்தில் இயல்பை விட 88 சதவீதமும், தமிழகத்தில் இயல்பை விட 90 சதவீதமும் மழை பொழிவுக்கான வாய்ப்பு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளது.
 அதாவது, இயல்பைவிட அதிகப்படியான மழையை பெறுவதற்குத்தான் 90 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது என்று பொருள்படும். அதாவது, இயல்பை விட 19 சதவீதம் கூடுதலாக இருந்தால், அதிகப்படியான (உஷ்ஸ்ரீங்ள்ள்) மழை என்று பொருள்படும். ஆனால், இந்த விவரங்களைத் தவறாக குறிப்பிட்டு, "அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?' என்ற தலைப்பில் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருக்கிறது.
 செய்தியில் இந்த ஆண்டு, வட கிழக்கு பருவமழை இயல்பைவிட, 90 சதவீதம் வரை கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறான தகவலாகும். இருப்பினும், வானிலை குறித்து சரியான தகவலை அச்சு, காட்சி ஊடகங்கள் தெரியப்படுத்த வேண்டும்.
 முகநூல், சுட்டுரை கணக்கு கிடையாது: "முகநூல், சுட்டுரை போன்ற சமூக வலைதளங்களில், எந்த விதமான தனிப்பட்ட கணக்குகள் கிடையாது. எனது பெயரில், சமூக வலைதளங்களில் கணக்குகள் உள்ளன. அவற்றில் வானிலை தொடர்பான செய்திகளை வெளியிடுகிறார்கள். இதுபோன்ற வலைதளங்களில் என் பெயரைக் குறிப்பிட்டு வெளியிடப்படும் செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்' என வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர் ரமணன் கூறினார்.

Tuesday, 8 December 2015

வீடுகளுக்கு 1/2 கிலோ பிளீச்சிங் பவுடர், குளோரின் மாத்திரைகள் வழங்க உத்தரவு

நோய் தொற்றைத் தடுக்க பொதுமக்களுக்கு பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் மாத்திரைகள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கிட உத்தரவிட்டதன் அடிப்படையில் அவை வழங்கப்பட்டு வருகின்றன.  பாதிக்கப்பட்ட மக்களுக்கான  நிவாரண உதவிகள் குறித்து ஒரு விரிவான அறிக்கையை நான் நேற்று வெளியிட்டிருந்தேன். 
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  மேலும் சில உதவிகள்  வழங்க நான் தற்போது உத்தரவிட்டுள்ளேன்.  அதன்படி,
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்கவும், நோய்தொற்றை தடுக்கவும்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா 1/2 கிலோ பிளீச்சிங் பவுடர் மற்றும் தண்ணீரை சுத்தம் செய்ய ஏதுவாக 20 குளோரின் மாத்திரைகள் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். 
பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் மாத்திரைகள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி  அமைப்புகள் மூலம் வழங்கப்படும்.
உடனடியாக 2,000 டன் பிளீச்சிங் பவுடர் மற்றும் 1 கோடி குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும்.  மேலும்,  சுகாதாரத் துறையினால் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது நடத்தப்பட்டு வரும் 1,105 மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தவும் நான்  ஆணையிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளம் பாதித்த கோயில்களை சுத்தப்படுத்திய முஸ்லிம்கள்

கோயிலை சுத்தம் செய்யும் இஸ்லாமிய அமைப்பு தன்னார்வலர்கள். | படம்: தி இந்து (ஆங்கிலம்).
கோயிலை சுத்தம் செய்யும் இஸ்லாமிய அமைப்பு தன்னார்வலர்கள். | .
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோயிலை முஸ்லிம் தன்னார்வலர்கள் சுத்தம் செய்ததனர். அவர்களது செயல் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
ஜம்மாத் இ இஸ்லாமி ஹிந்த் என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர்.
கடந்த 2 நாட்களில் அவர்கள் கோட்டூர்புரம் மற்றும் சைதாப்பேட்டையில் இருவேறு கோயில்களையும் மசூதிகளையும் சுத்தம் செய்தனர். இந்த இடங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிதிலமடைந்த நிலையில் இருந்தன.
இந்த அமைப்பைச் சேர்ந்த முதுகலை பொறியியல் மாணவர் பீர் முகமது நம்மிடம் இது குறித்து கூறும்போது, "இந்துக்கள் கோயில்களுக்குள் சென்று வழிபாடு நடத்த முடியாத நிலையில் இருப்பதை பார்த்தோம். அதனால் அந்த கோயில்களை சுத்தம் செய்தோம். அந்த 2 கோயில்கள் இருந்த தெருக்களும் மிகவும் மோசமான நிலையில் நிவாரணம் சென்றடைய முடியாத சூழலில் இருந்தது.
நாங்கள் பணிகளில் ஈடுபட்டபோது அங்கிருந்த மக்களும் யார் எவரென்று பாராமல், உடன் வந்து உதவியது எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தூண்டுதலாகவும் இருந்தது.
வரும் வாரங்களில் மற்ற பகுதிகளுக்கும் சென்று அங்கிருக்கும் வழிபாட்டு தளங்களை சுத்தம் செய்ய உள்ளோம்." என்றார்.

Monday, 7 December 2015

கனமழையால் சென்னை மூழ்கும்: வாட்ஸ்அப்பில் பரவும் செய்திக்கு ரமணன் விளக்கம்

சென்னையில் கனமழை பெய்யும், நகரமே மூழ்கும் என எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்ஆப்பில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும், சென்னை நகரமே மூழ்கும் அளவுக்கு தொடர் மழை பெய்யும், ஜோதிடம் பொய்க்காது, பல்வேறு ஆதாரமான தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன'' என்ற தகவல் எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் பரவி வருகிறது.
இந்த தகவலில் உண்மை இல்லை. நாளை வரை பெரும்பாலான இடக்களில் மழை பெய்யும் என்றும், 8ம் தேதிக்கு பின் மழை படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதனால் கனமழை, நகரம் மூழ்கும் என்று வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.
குமரி கடல் பகுதியில் இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஆனால் கனமழைக்கு வாய்ப்பு இல்லை. கிழக்கில் இருந்து சென்னையை நோக்கி மேகக் கூட்டங்கள் வருவதால் விட்டு விட்டு மழை பெய்யும். காற்றின் வேகம் அதிகரிக்கும் போது மட்டும் கனமழை பெய்யும் மற்றபடி சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

Sunday, 6 December 2015

திருவாரூர் மாவட்டத்தில் 6–வது நாளாக மழை: ஆறு–வாய்க்கால்கள் வேகமாக நிரம்புகின்றனதிருவாரூர் மாவட்டத்தில் நேற்று 6–வது நாளாக மழை பெய்தது. இதனால் ஆறு, வாய்க்கால்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. பயிர்களை வெள்ளம் சூழ்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
6–வது நாளாக மழைவடகிழக்கு பருவமழை தொடங்கிய நேரத்தில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் மிதமான அளவு மழை பெய்து வந்தது. கடந்த மாதம் (நவம்பர்) 8–ந்தேதிக்கு பிறகு மழை தீவிரம் அடைய தொடங்கியது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதால் திருவாரூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்ய தொடங்கிய மழை நேற்று 6–வது நாளாக நீடித்தது. தொடர் மழை காரணமாக கடந்த திங்கட்கிழமையும், புதன்கிழமையும் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து 6–வது நாளாக மழை பெய்ததால் நேற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
திருவாரூரில் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. நேற்று காலை 6 மணி அளவில் மழை தீவிரம் அடைந்து வெளுத்து வாங்கியது. அதேபோல மதிய வேளையிலும் பலத்த மழை பெய்தது. மாலை வரை விட்டு விட்டு பலத்த மழை பெய்தபடி இருந்தது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளான நன்னிலம், குடவாசல், மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், கூத்தாநல்லூர், கோட்டூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.
விவசாயிகள் கவலைஇந்த ஆண்டு ஆற்றில் தண்ணீர் இல்லாததால் திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி அதிகமாக நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து அணை திறக்கப்பட்டு ஆற்றில் தண்ணீர் வந்ததால் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் செய்து வந்தனர்.
நடப்பாண்டில் சம்பா சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடி முறையில் 37 ஆயிரத்து 714 எக்டேரிலும், இயல்பான நடவு முறையில் 14 ஆயிரத்து 292 எக்டேரிலும், நேரடி நெல் விதைப்பு முறையில் இதுவரை 66 ஆயிரத்து 985 எக்டேரிலும் என மொத்தம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 991 எக்டேரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல 27 ஆயிரத்து 767 எக்டேரில் தாளடி நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. தொடக்கத்தில் மிதமாக பெய்த பருவ மழை பயிர்களுக்கு உதவியது.
ஆனால் படிப்படியாக அதிகரித்த மழையால் திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட 20 ஆயிரம் எக்டேர் வயல்களை மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. அதேநேரத்தில் ஆறு, வாய்க்கால்கள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி ஆறு, வாய்க்கால்களில் கரையை தொடுகிற அளவுக்கு வெள்ள ஓட்டம் இருக்கிறது. குளங்களும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தொடர்ந்து பெய்யும் மழையால் பயிர்கள் மூழ்கும் அபாயம் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மழை அளவுதிருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நன்னிலத்தில் 39 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டர் அளவுகளில்) வருமாறு:–
திருத்துறைப்பூண்டி–36, முத்துப்பேட்டை–32, குடவாசல்–29, திருவாரூர்–25, மன்னார்குடி–15, பாண்டவையாறு தலைப்பு–14, நீடாமங்கலம்–14, வலங்கைமான்–10. மொத்த மழை அளவு–213 மி.மீட்டர். சராசரி–24 மி.மீட்டர்.

Saturday, 5 December 2015

வடமேற்கு நோக்கி நகரும் தாழ்வு நிலை: தமிழகம், புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு நோக்கி நகர்வதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் அந்தமானுக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையும், இலங்கைக்கு அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகியிருந்தது.
இதன் காரணமாக தமிழகத்தில் மிக கன மழை பெய்து, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாகியுள்ளது.
இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலைகள் வடமேற்காக நோக்கி நகர்வால், தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு சற்று ஆறுதலை அளிக்கிறது.

Friday, 4 December 2015

தமிழகத்திற்கு ரூ.1000 கோடி உடனடியாக நிதிவழங்க பிரதமர் மோடி உத்தரவு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உடனடி நிவாரண நிதியாக ரூ. 1000 கோடி உடனடியாக நிதிவழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். 

கனமழை மற்றும் வெள்ளத்தினால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தின் முப்படையும், தமிழக காவல்படை மற்றும் தீயணைப்பு படை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் வெள்ளச்சேதத்தை பார்வையிட பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் புதுடெல்லியில் இருந்து அரக்கோணம் வந்தார். 

அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு ராணுவ ஹெலிகாப்டரில்வந்த பிரதமர் மோடி அடையாறில் உள்ள ஐ.என்.எஸ். கடற்படை தளத்திற்கு சென்றார். கடற்படை அலுவலகத்தில் பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் கவர்னர் ரோசயாவுடன் வெள்ளத்தினால் ஏற்பட்டுஉள்ள சேதம் குறித்து ஆலோசனை நடத்தினார். வெள்ளச் சேதத்தை தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் விளக்கி கூறினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ. 1000 கோடி உடனடியாக நிதிவழங்க உத்தரவிட்டு உள்ளதாக கூறிஉள்ளார். தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இந்திய அரசு உள்ளது என்றும் குறிப்பிட்டார். 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ஏற்கனவே ரூ. 940 கோடி நிவாரண நிதிவழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறித்து இருந்தார். தற்போது கூடுதலாக ரூ.1000 கோடி அறிவித்து உள்ளார். பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அவருடன் பார்வையிட்ட மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன், பாதிப்பு குறித்து, பிரதமர் மோடியிடம் விளக்கி கூறுகிறார். மிகவும் கடுமையாக பெய்த கனமழையினால் ஏற்பட்டுஉள்ள சேதம் மற்றும் துயரத்தை நானே நேரில் பார்த்தேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார். 

நமதூர் மௌத் அறிவிப்பு 04/12/2015

திருவாரூர் - புதுத்தெரு எம்.ஜி.ஆர் சிலை எதிரே காட்டுராஜா வீட்டு மர்ஹும் ஜாபர்  அவர்களின் மனைவியும், குத்புதீன்,நூருல் அமீன்,முனவர் ஜமான் இவர்களின் தாயாருமான ஹசீனா அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


Thursday, 3 December 2015

கனமழை: வியாழன் காலை வரை மூடப்பட்டது சென்னை விமான நிலையம்


சென்னை விமான நிலையத்தின் ஒடுதளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், விமான சேவை வியாழன் இன்று காலை வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நேற்று முழுவதும் கன மழை கொட்டி தீர்த்தது.
இதனால் சென்னை விமான நிலையத்தினுள் தண்ணீர் புகுந்தது. விமான ஓடுதளம் முழுவதும் தண்ணீர் ஆறாக ஓடுகிறது.
இதையடுத்து இந்திய விமான ஆணையம், சென்னை விமான நிலையத்தை நாளை காலை வரை மூடுவதற்கு முடிவு செய்தது.
விமானம் நிலையம் மூடப்பட்டது குறித்து அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தின் அனைத்து வசதிகளும் தற்போது முடக்கப்பட்டுள்ளன என சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கஜபதி ராஜூ கூறினார்.
பலர் விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்கு விமான நிலைய ஆணையத் தலைவர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார் ராஜூ.
மழை முற்றிலும் நின்ற பின்னர், வெள்ள நீர் வெளியேற்றப்பட்ட பின்னரே விமான சேவை தொடங்கப்படும்.  இதற்காக எவ்வித கால அளவையும் நிர்ணயிக்க முடியாது என்றார் அமைச்சர்.

Wednesday, 2 December 2015

இருள் சூழ்ந்த நிலையில் சென்னை


தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
தமிழகம் முழுவதும் நேற்று முதல் கனமழை கொட்டி வருகின்றது. இந்நிலையில் மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், சென்னை முழுவதும் இருள் சூழ்ந்து நிலையில், புறநகர்ப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரி களுக்கு விடுமுறை

தமிழக முழுவதும் பெய்த்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் மாணவர்கள் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று டிசம்பர் 2 புதன்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் மதிவாணன் அறிவித்துள்ளார்கள்.

Tuesday, 1 December 2015

பள்ளி அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரிக்கு ஒத்திவைப்பு: ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அரையாண்டுத் தேர்வுகளை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே அனைத்து துறை அதிகாரிகளும் எனது ஆணையின் பேரில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனினும், ஒரு சில தினங்களில் மிக அதிக அளவு மழைப் பொழிவு ஏற்பட்டதால், சில மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட குழுவை நான் அனுப்பி வைத்தேன். இதன் அடிப்படையில், மழையால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் துரிதமாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பியது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று (30.11.2015) இரவு முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இன்றும் (1.12.2015) கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
மாநிலத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, 7.12.2015 அன்று முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைத்திட நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த தேர்வுகள் வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும்" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மின்சாரம் உற்பத்தி செய்யும் மிதிவண்டி சாதனம்: ரூ.12,000 ரூ.15,000 விலையில் மார்ச் மாதம் சந்தைக்கு வருகிறது

மின்சாரம் உற்பத்தி செய்யும் மிதிவண்டி சாதனம். (உள்படம்) மனோஜ் பர்கவா.
மின்சாரம் உற்பத்தி செய்யும் மிதிவண்டி சாதனம். (உள்படம்) மனோஜ் பர்கவா.
‘பெடல்’ செய்வதன் மூலம் மின் சாரம் உற்பத்தி செய்யும் நிலையான மிதிவண்டி சாதனத்தை அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபரும் கொடையாளருமான மனோஜ் பர்கவா அறிமுகம் செய்துள்ளார்.
இந்த சாதனத்தை பர்கவா நேற்று டெல்லியில் அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசும் போது, “இந்த மிதிவண்டி சாதனத்தில் அமர்ந்து ‘பெடல்’ செய்யும் போது, செயின் மூலம் இணைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர் இயங்கி, மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த மின்சாரம் ஜெனரேட்டருடன் இணைக்கப்பட்டுள்ள பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. ரூ.12,000 முதல் ரூ.15,000 வரையிலான இந்த மிதிவண்டி சாதனம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சந்தைக்கு வருகிறது” என்றார்.
“ஒரு மணி நேரம் பெடல் செய்தால் போதும், கிராமப்புற குடும்பத்தின் 24 மணி நேர மின்சாரத் தேவை பூர்த்தியாகும். இதில் விளக்குகள், சிறிய மின்விசிறி இயங்கச் செய்வதுடன் ஒரு செல்போனை சார்ஜ் செய்துகொள்ளவும் முடியும். மின்கட்டண ரசீது இல்லை. எரிபொருள் செலவு இல்லை. மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை” என்கிறார் பர்கவா.
ஓராண்டுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இது தொடர்பாக பர்கவா பேசியுள்ளார். மேலும் பல்வேறு துறை அதிகாரிகளிடமும் சென்று உற்சாகத்துடன் விளக்கியுள்ளார். ஆனால் அவருக்கு எந்த துறை உதவி செய்யும் என்பதை முடிவு செய்வதற்கே 6 மாதங்கள் ஆனதுதான் துரதிருஷ்டம்.
இந்த மிதிவண்டி சாதனம் முதலில் உத்தராகண்ட் மாநிலத்திலும் பிறகு நாட்டின் பிற மாநிலங்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் அமெரிக்காவிலும் இது உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இந்த மிதிவண்டி சாதனத்தில் ஒருவர் பெடல் செய்யும்போது அவரது உடலில் எவ்வளவு கலோரி எரிக்கப்பட்டுள்ளது என்பதை அறியும் வகையிலான ஒரு மாடலும் விற்பனைக்கு வரவுள்ளது. எனவே உடல் பருமனை குறைக்கவும் இந்த சாதனம் பேருதவியாக இருக்கும்.
“உலகம் முழுவதும் 130 கோடி மக்கள் மின்சார வசதி கிடைக்காமல் உள்ளனர். இவர்களுக்கு இந்த மிதிவண்டி சாதனம் மிகவும் உதவியாக இருக்கும்” என்கிறார் பர்கவா.
சுமார் ரூ. 27,000 கோடி சொத்துகள் கொண்ட பர்கவா, தனது தொழில் முதலீடுகளில் 99 சதவீதம், மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவே இருக்க வேண்டும் என உறுதிபூண்டுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய அறக்கட்டளைகளில் ஒன்றான தி ஹாண்ஸ் புவுன்டேஷனுக்கு பர்கவா ஆதரவளித்து வருகிறார்.