Monday 31 October 2016

இனி வீட்டு வேலை செய்வோருக்கும் உண்டு இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீடு: மத்திய அமைச்சர் தகவல்!

 மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள புதிய திட்டப்படி இனி வீட்டு வேலை செய்வோருக்கும்  இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
இது தொடர்பாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு அனைவருக்கும் காப்பீடு என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி நாட்டிலேயே முதல் முறையாக வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டுவர ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக இந்த திட்டம் டெல்லி மற்றும் ஐதராபாத்திலும் தொடங்கப்படும். இந்த திட்டத்தில் சேருபவர்களுக்கு தொழிலாளர்களின் பங்களிப்புடன், தொழில் அதிபர்களின் பங்களிப்பும் இருக்கும். இந்த திட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் பாதுகாப்பு ஊழியர்கள் (காவலாளிகள்) ஆகியோரும் சேர்க்கப்படுவார்கள்.
இது தொடர்பான பயிற்சி வகுப்புகள் விரைவில் நடை பெறும். அதன் பிறகு இறுதி முடிவு செய்யப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் 1கோடி தொழிலாளர்கள் பயன் அடைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Sunday 30 October 2016

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

வழக்கமாக வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 3-ம் வாரத்தில் தொடங்க வேண்டும், ஆனால் அதற்குச் சாதகமான சூழ்நிலை இல்லாததால் சற்றே தாமதமடைந்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியிருப்பதாவது:

ஈரப்பதம் நிறைந்த கிழக்கு திசைக் காற்று தென்னிந்திய பகுதியில் பரவியுள்ளதால் மழை பெய்துள்ளது. இதன் மூலம் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தற்போது தொடங்கியுள்ள மிதமான மழை அடுத்த 48 மணி நேரத்திற்கும் பெய்யும். 

கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பெய்துள்ளது. தொழுதூர், வலங்கைமானில் தலா 6 செமீ மழையும் பெய்துள்ளது. 

மேலும் சென்னை, ஜெயங்கொண்டம், முசிறி, மயிலாடுதுறை, வேதாராண்யம், கந்தர்வக்கோட்டை ஆகிய பகுதிகளில் 4 செமீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு சராசரி மழை அளவான 44 செமீ வரை இயல்பான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு தெரிவித்தார்.

இடைத்தேர்தல்: படிவம் பி-ல் ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதில் இடது கை பெருவிரல் ரேகை பதிவு

இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைநாட்டு வைத்துள்ளார்.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில். திருப்பரங்குன்றம், தஞ்சை மற்றம் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த வேட்பாளர்களுக்கு, கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்காக அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து படிவம் பி வழங்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதில் இடது கையின் பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிவம் பி-ல் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை.அதற்குப் பதிலாக அவருடைய விரல் ரேகை பதிக்கப்பட்டு இருக்கிறது என்று ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் பேராசிரியர் பி. பாலாஜி, இதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறார்

Saturday 29 October 2016

வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக ஓடம்போக்கி ஆற்றை தூர்வார வேண்டும் கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவு

வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக ஓடம்போக்கி ஆற்றை தூர்வார வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ள பாதிப்புகளை தடுத்திட தேவையான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. திருவாரூர், நன்னிலம், குடவாசல் மற்றும் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட திருவாரூர் வருவாய் கோட்டத்தில் உள்ள ஓடம்போக்கி ஆறு, வெண்ணாறு, சுள்ளான் ஆறு, வெட்டாறு உள்ளிட்ட பாசன ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
மருந்து பொருட்கள்
தூர்வாரும் பணிகளை கண்காணிக்க மண்டல அளவில் மாவட்ட அலுவலர்கள், உதவி கலெக்டர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சி ஆணையர், பேருராட்சி செயல் அலுவலர் நியமிக்கப்பட்டு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை செய்து வருகிறன்றனர். ஆதலால் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக இந்த பணிகளை வெகு விரைவாக செய்து விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் இருப்பு வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், திருவாரூர் உதவி கலெக்டர் முத்துமீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Friday 28 October 2016

ஏமாற்றத்தோடு விடைபெற்றது தென்மேற்கு பருவ மழை

தமிழகத்தைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவ மழை முடிவடைந்துவிட்டதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது.
தென்மேற்கு பருவ மழை தமிழகத்தில் முடிந்து விட்டது. வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் 30ம் தேதி துவங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Thursday 27 October 2016

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நிர்ணயிக்கவில்லை: உணவுத் துறை விளக்கம்

 ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று தமிழக உணவுத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நவம்பர் 1ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் உணவு பொருட்கள் வழங்கப்படாது என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் பொதுமக்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது.
இதனால், ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கும் விவகாரம் குறித்து தமிழக உணவுத் துறை சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும். ஆனால், இதற்காக காலக்கெடு எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் அட்டை வடிவிலான ரேஷன் கார்டுக்கு ஆதார் எண் அவசியம் என்பதால், பொதுமக்கள், தாங்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Wednesday 26 October 2016

மும்முறை தலாக்; இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையை அழிக்க அனுமதிக்க கூடாது - பிரதமர் மோடி பேச்சு

மும்முறை தலாக் முறையினால் இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையை அழிக்க அனுமதிக்க கூடாது என்று பிரதமர் மோடி கூறிஉள்ளார். 

இஸ்லாமிய வழக்கப்படி "தலாக்' என்ற வார்த்தையை பிரயோகித்து விவகாரத்து செய்து கொள்ளும் நடைமுறை காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையால் பெண்களுக்கு பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதுதொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்த மத்திய அரசும் இம்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. 

இதற்கிடையே இஸ்லாமிய வழக்கப்படி "தலாக்' என்ற வார்த்தையை பிரயோகித்து விவகாரத்து செய்து கொள்ளும் நடைமுறைக்கு தடை விதிக்கவும், நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தக் கூடிய ’பொது சிவில் சட்டம்’  தொடர்பாகவும் சமீபத்தில் மத்திய சட்ட கமிஷன் பொதுமக்களின் கருத்தை கோரியது. இதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன... இதனையடுத்து இஸ்லாமிய சமூகத்தில் ’மும்முறை தலாக்’ முறைக்கு ஆதரவாகவும், எதிராகவும் தனித்தனியாக கையெழுத்து சேகரிக்கப்பட்டு வருகிறது. 

உத்தரபிரதேச மாநிலத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இவ்விவகாரம் தொடர்பாக முதல் முறையாக பேசினார். 
மும்முறை தலாக் முறையினால் இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையை அழிக்க அனுமதிக்க கூடாது என்றார். 

பிரதமர் மோடி பேசுகையில், அடுத்த 10 வருடங்களில் உத்தர பிரதேசம் வளர்ச்சி அடையவேண்டும் என்றால் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் என்ற ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ஒரு கையில் குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள், மற்றொரு கையில் ஆட்சி அதிகாரத்தை பெற முயற்சிக்கிறார்கள். நாங்கள் உத்தரபிரதேச மாநிலத்திற்கு பணியாற்ற வேண்டும். உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பிற பிரதமர்களைவிட அதிகமான நற்பணிகளை உ.பி.க்கு செய்ய நான் முயற்சி செய்கின்றேன் என்றார்.  

அரசியலமைப்பின் கீழ் இஸ்லாமிய பெண்களுக்கு நீதி வழங்க வேண்டியது அரசு மற்றும் மக்களின் பொறுப்பு ஆகும். சீர்திருத்தம் வேண்டும் என்ற இஸ்லாமியருக்கும், வேண்டாம் என்று கூறும் இஸ்லாமியர்களுக்கும் இடையே விவாதமானது நடத்தப்பட வேண்டும். மும்முறை தலாக் முறையினால் இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையை அழிக்க அனுமதிக்க கூடாது என்றார் பிரதமர் மோடி. 

இவ்விவகாரத்தில் வாக்குவங்கி அரசியலால் தான் அதிர்ச்சி அடைவதாக கூறிய பிரதமர் மோடி, “சில கட்சிகள் இஸ்லாமிய பெண்கள் அவர்களது அடிப்படை உரிமையை பறிக்கப்பட்ட நிலையில் வைத்திருக்கவே விரும்புகிறது. ஒரு ஆண் தொலைபேசியில் ஒரு பெண்ணிடன் மூன்று முறை தலாக் கூறிவிட்டால், அந்த பெண்ணுடயை வாழ்க்கையானது அழிந்துவிடாது? இவ்விவகாரம் அரசியல் ஆக்கப்பட கூடாது என்றார். மேலும் டிவியில் விவாதங்களில் பங்கேற்பவர்களுக்கு கோரிக்கை விடுத்த பிரதமர் மோடி, இஸ்லாமிய பெண்களின் உரிமையை இஸ்லாமியம் மற்றும் இந்து பிரச்சனையாகாக்காதீர்கள் என்றார். பெண்களின் உரிமையானது வளர்ச்சி விவகாரம். 

மும்முறை தலாக் முறையை அரசியல் ஆக்காதீர்கள். பெண்களுக்கும் சம உரிமையை கொடுக்க நடவடிக்கை எடுக்க அனுமதியுங்கள் என்றார் பிரதமர் மோடி. 

Monday 24 October 2016

மேதகு' வேண்டாம்; 'மாண்புமிகு' என்றே பயன்படுத்தலாம்: ஆளுநர் அறிவிப்பு

ஆளுநரை இனி மரியாதையுடன் அழைக்க மேதகு ஆளுநர் என்ற வார்த்தையை இனி பயன்படுத்த வேண்டாம். மாண்புமிகு ஆளுநர் என்ற வார்த்தையையே பயன்படுத்த வேண்டும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''அரசு விழாக்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களில் ஆளுநரை மரியாதையுடன் அழைக்க பயன்படுத்தப்பட்டு வரும் மேதகு ஆளுநர் என்ற வார்த்தையை இனி பயன்படுத்த வேண்டாம்.
அதற்குப் பதிலாக, மாண்புமிகு ஆளுநர் என்ற வார்த்தையை அடைமொழியாக பயன்படுத்தும்படி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில், அயல்நாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது, மேதகு என்ற அடைமொழி தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday 23 October 2016

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு கணக்குத் தணிக்கையாளர்களுக்கு சவால்

ரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா அமல்படுத்தப்பட்ட பிறகு, பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் அதேநேரம் மிகப் பெரிய சவால்களையும் கணக்குத் தணிக்கையாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
இந்திய கணக்குத் தணிக்கையாளர்கள் நிறுவனத்தின் சார்பில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது:
கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதில் கணக்குத் தணிக்கையாளர் மிக முக்கியப் பங்காற்ற வேண்டும். ஜிஎஸ்டி மசோதா அமலுக்கு வந்த பிறகு, அதிக வாய்ப்புகள் உருவாகும் அதே நேரத்தில் மிகப் பெரிய சவால்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே, இந்த மாற்றத்தை எதிர்கொள்ள நீங்கள் (கணக்குத் தணிக்கையாளர்கள்) தயாராக வேண்டும். நமது தேசத்தில் எந்தவொரு கணக்குத் தணிக்கையாளர்கள் நிறுவனமும் ஊழலில் ஈடுபடவில்லை என்பது இத்தருணத்தில் பெருமைப்பட வேண்டிய விஷயம் என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

Saturday 22 October 2016

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் வடக்குகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வு கூட்டம் 


திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அனைத்துறைகளின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார். உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக முதல் கட்டமாக 212 வெள்ளம் பாதிக்கும் இடங்களை கண்டறிந்து அந்த பகுதிகளை ஆய்வு செய்து தேவையான வெள்ள தடுப்புப்பணிகள் செய்திட வேண்டும். அதற்காக பல்வேறு குழுக்கள் மாவட்ட அளவிலும், வருவாய் கோட்ட அளவிலும், வட்ட அளவிலும், வட்ட அளவிலும் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையினை எதிர்நோக்கி உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்கள் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் ஆகாயத்தாமரை மற்றும் காட்டாமணக்கு செடிகள் அகற்றப்பட்டு, தூர்வாரப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி உணவு பொருட்கள் வினியோகம் செய்ய போதுமான அளவு பொருட்கள் இருப்பு வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருந்து பொருட்கள் இருப்பு 


அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் இருப்பு வைக்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளும் கால்நடை மருத்துவமனைகளில் இருப்பு வைக்க வேண்டும். மேலும் விவசாய பெருமக்களுக்கு தேவையான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் இதுவரை 145.32 கி.மீ. தூரத்திற்கு வெள்ளநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டுள்ளது. 230.75 கி.மீ. கால்வாய்களும், பொதுப்பணித்துறை மூலம் ரூ.2 கோடியே 97 லட்சம் மதிப்பில் 286.65 கி.மீ. தொலைவிற்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மேலும் 3,160 பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. 93 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக 884 பள்ளிகள், 31 கல்லூரிகள் 2 சமுதாய கூடங்கள் மற்றும் 136 திருமண மண்டபங்கள் கண்டறியப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட சட்ட நடவடிக்கையினால் காவிரியில் தண்ணீர் வரப்பெற்று திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் சம்பா நேரடி விதை தெளிப்பு மற்றும் நடவு முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையினால் கிடைக்கும் மழை நீரை விவசாய பெருமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள ஏதுவாக மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தியாகராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி அம்பிகாபதி, திருவாரூர் நகரசபைதலைவர் ரவிச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகனன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அழகிரிசாமி, உதவி கலெக்டர்கள் முத்துமீனாட்சி (திருவாரூர்), செல்வசுரபி (மன்னார்குடி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Friday 21 October 2016

ஜிஎஸ்டி வரி எதிரொலி: விலை உயரும் - குறையும் பொருட்கள்


நடைமுறைப்படுத்தப்படவுள்ள 4 அடுக்கு சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி விதிப்பினால் சாமானிய மக்களின் பொருளாதார சுமை அதிகரிக்கும் விதமாக பல்வேறு பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
உதாரணமாக சமையல் எண்ணெய், மிளகு, கிராம்பு, ஏலக்காய் போன்ற பொருட்கள் மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆனால் தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், குளிர்பதன பெட்டிகள், வாஷிங் மெஷின்கள் ஆகியவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.

2017 ஏப்ரல் முதல் மறைமுக வரியை புதிய சரக்கு மற்றும் சேவை வரியாக மத்திய அரசு ஒருமுனைப்படுத்துகிறது. இது குறித்த மாநிலங்களுடனான சந்திப்பில் 4 அடுக்கு ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

இதில் குறைந்த வரியாக 6% முன்மொழியப்பட்டதோடு 12% மற்றும் 18% வரி விகிதமும் முன்மொழியப்பட்டுள்ளது. எப்.எம்.சி.ஜி மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கு அதிகபட்சமாக 26% வரி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதகம் விளைவிக்கும் பொருட்களுக்கு மேல்வரியும் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த 4 அடுக்கு வரி முறையினால் கோழி இறைச்சி மற்றும் தேங்காய் எண்ணெய் மீதான வரி தற்போது 4% ஆக உள்ளது 6% ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

அதே போல் ரீபைண்டு ஆயில், கடுகு எண்ணெய், கடலை எண்ணெய் மீதான வரி 5%-லிருந்து 6% ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. மஞ்சள் மற்றும் ஜீரகத்தின் மீது தற்போது உள்ள 3% வரி 6% ஆக அதிகரிக்கவுள்ளது. தனியா மற்றும் கருப்பு மிளகு, எண்ணெய் வித்துக்கள் மீதான வரி 5% ஆக அதிகரிக்கவுள்ளது.

தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப்பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், இன்வர்ட்டர்கள், குளிர்ப்பதன பெட்டிகள், மின்விசிறி மற்றும் சமையல் உபகரணங்கள் ஆகியவற்றின் மீதான வரி 29%லிருந்து 26% ஆக குறையும்.

வாசனைத் திரவியங்கள், ஷேவிங் கிரீம், முகப்பவுடர், ஹேர் ஆயில், ஷாம்பு, சோப் ஆகியவற்றின் வரியும் 29%-லிருந்து 26% ஆக குறையவுள்ளது.

கியாஸ் ஸ்டவ், கியாஸ் பர்னர், கொசுவிரட்டி மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் மீதான வரி விதிப்பு 26%ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள 4 அடுக்கு வரிவிதிப்பு முறையினால் தற்போது 3-9% வரிவிதிப்பில் உள்ள பொருட்கள் 6% வரிவிதிப்புக்குள் அடங்கும். தற்போது 9-15% வரி விதிப்பில் உள்ள பொருட்கள் 12% வரிவிதிப்பில் அடங்கும்.

தற்போது 15-21% வரி விதிக்கப்படும் பொருட்கள் அதிகபட்ச வரியான 26%-க்கு உயர்த்தப்படும்.

வரிவிகிதம் குறித்து மத்திய நிதியமைச்சர் மற்றும் மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய குழு அடுத்த மாதம் தீர்மானிக்கும்.

வர்த்தகர்களின் வருவாய் பாதிக்காத வகையிலும் அதே வேளையில் மக்களின் வரிச்சுமையும் அதிகரிக்காதவாறு ஜிஎஸ்டி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். 

விலை உயரும் பொருட்கள்:

கோழி இறைச்சி

சமையல் எண்ணெய்

கிராம்பு

ரீஃபைன்டு ஆயில்

கடுகு எண்ணெய்

கடலை எண்ணெய்
தேங்காய் எண்ணெய் 

மிளகு

ஏலக்காய் உள்ளிட்ட சமையல் இடுபொருட்கள்

மஞ்சள்

ஜீரகம்

தனியா 

கருப்பு மிளகு

எண்ணெய் வித்துக்கள்

கியாஸ் ஸ்டவ்

கியாஸ் பர்னர்

கொசுவிரட்டி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள்

விலை குறையும் பொருட்கள்:

டிவி

ஏர் கண்டிஷனர்கள்

ரெஃப்ரிஜிரேட்டர்கள்

சமையல் சாதனங்கள்

மின்விசிறி

வாஷிங் மெஷின்

இன்வர்ட்டர்

வாசனை திரவியங்கள்

சோப்பு 

ஷாம்பு

ஹேர் ஆயில்

ஷேவிங் கிரீம் 

முகப்பவுடர்

Thursday 20 October 2016

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்

உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு அதிகாரிகளை நியமிப்பதற்கான அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டது. அரசாணைப்படி . ஊராட்சி பேரூராட்சி, நகராட்சி, மட்டுமல்லாது 12 மாநகராட்சிகளுக்கும் தனி அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளின்  முதல் கூட்டம் நடைபெறும் வரையில் இந்த தனி அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அவரச சட்டத்தை பிறப்பித்தார். ஆளுநர் வித்தியாசகர் ராவ். அக்டோபர் 24ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Wednesday 19 October 2016

கேஸ் மானியத்துக்கு ஆதார் எண்ணை இணைக்க நவம்பர் வரை காலக்கெடு

ஆதார் எண்ணை எல்பிஜி சிலிண்டர் நிறுவனத்திடம் வழங்கி நேரடி மானியம் பெறுவதற்கு நவம்பர் மாதம் வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
எல்பிஜி சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதில், ஆதார் எண்ணை எல்பிஜி நிறுவனங்களிடம் சமர்ப்பித்தவர்களுக்கு, அவரவர் வங்கிக் கணக்கில் மானியத் தொகை செலுத்தப்படுகிறது.
அவ்வாறு ஆதார் எண்ணை இணைக்கத் தவறிய வாடிக்கையாளர்களக்கு கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு மானியம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கான மானியத் தொகை தனியாக வங்கிக் கணக்கில் சேமிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு ஆதார் எண்ணை இணைக்காதவர்கள், வரும் நவம்பர் மாதம் 30ம் தேதிக்குள், எல்பிஜி சிலிண்டர் வழங்கும் நிறுவனத்திடம் வழங்கிவிட்டால், ஜூலை மாதம் அவர்களுக்கு சேர வேண்டிய மானியத்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதன்பிறகு அவர்களுக்கான மானியமும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி எட்டு மொழிகளில் அனுப்பலாம் ஈமெயில்!

மின்னஞ்சல் தகவல் தொடர்பில் ஒரு புதிய சாதனையாக மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, ஒரே  நேரத்தில் எட்டு மொழிகளில் மின்னஞ்சல் அனுப்பும் முறையைக் கண்டுபிடுத்துள்ளது. 
டேட்டா எக்ஸ்ஜேன் டெக்னாலஜிஸ் என்ற இந்த இந்திய நிறுவனத்தின் கண்டுபிடிப்புக்கு 'டேட்டா மெயில்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. முற்றிலும் இலவசமாக தற்பொழுது வழங்கப்படும் இந்த 'மொழி சார் மின்னஞ்சல்' சேவையானது எட்டு இந்திய மொழிகளில் கிடைக்கும்.
மேலும் இந்த சேவையானது ஹிந்தி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி கொள்ளவும் வழி செய்கிறது.
ஆங்கிலத்தில் தவிர அரபி, ருஷ்யன் மற்றும் சீனம் உள்ளிட்ட சர்வதேச மொழிகளிலும் இந்த மின்னஞ்சல் சேவை வழங்கப்படுகிறது.
இந்த விபரங்கள் அனைத்தும் அந்நிறுவனத்தின் நிறுவனர் அஜய் தத்தா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tuesday 18 October 2016

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தல் நவம்பர் 19 ந்தேதி

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வந்த குற்றச்சாட்டை அடுத்து, தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டு  இருந்தது. இந்த தொகுதிகளுக்கு  நவம்பர் 19 ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கபட்டு உள்ளது. அது போல் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற வேட்பாளர் சீனிவேல் கடந்த மே 25-ந் தேதி மரணமடைந்தார்.இதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தல் தஞ்சாவூர், அரவக்குறிச்சி இரண்டு தொகுதிக்கான தேர்தலும் நடக்கும் தேதியிலேயே நடக்கிறது.

புதுச்சேரியில் நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ததால், அந்த தொகுதியும் காலியாக உள்ளது. எனவே அந்த தொகுதியையும் சேர்த்து 4 தொகுதிக்குமான தேர்தல் தேதி நவம்பர் 19 என அறிவிக்கபட்டு உள்ளது.

நாடு முழுவதும் இது போல் 7 மாநிலங்களில் 12 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கபட்டு உள்ளது.

4 தொகுதிகளுக்குமான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 26 ந்தேதி ந்தேதி தொடங்குகிறது.வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர்- 2ந்தேதி, வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் நவம்பர் 5 ந்தேதி,வேட்பாளர் இறுதி பட்டியல் 5 ந்தேதி மாலை வெளியிடப்படும்.   22 ந்தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

இது தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

Monday 17 October 2016

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, தமிழ்நாட்டில் இன்று ரெயில் மறியல் போராட்டம்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

காவிரி மேலாண்மை வாரியம்


அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ந் தேதிக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், அக்டோபர் 3-ந் தேதி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று தெரிவித்ததுடன், பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும் என்றும் கூறி இருந்தது.

எதிர்ப்பு


மத்திய அரசு இப்படி திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் தற்போது 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில், கர்நாடக அரசு உரிய அளவில் தண்ணீர் திறந்துவிடாததால் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.

எனவே, காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பி வருகின்றன. ஆங்காங்கே போராட்டங்களும் நடந்து வருகின்றன.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு


இந்த நிலையில், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, கடந்த 6-ந் தேதி சென்னையில் தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக் கத்தினர் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் அக்டோபர் 17 (இன்று), 18-ந் தேதிகளில் (நாளை) தொடர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விவசாய சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. தி.மு.க., காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், ம.தி.மு.க., தே.மு.தி.க., மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், புதிய தமிழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை ரெயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்து உள்ளன.

200 இடங்களில் ரெயில் மறியல்


அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட தலைநகரங்கள், முக்கிய நகரங்கள் என மொத்தம் 200 இடங்களில் இந்த ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்கின்றனர். இதில், ஏதாவது ஒரு இடத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினும் கலந்துகொள்வார் என தெரிகிறது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை சென்டிரலில் இன்றும், எழும்பூரில் நாளையும் நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொள்கிறார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சாவூரில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொள்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை பேசின்பிரிட்ஜில் நாளை நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் பங்குகொள்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களான தா.பாண்டியன் தென்சென்னையிலும், இரா.முத்தரசன் திருவாரூரிலும் இன்று ரெயில் மறியலில் ஈடுபடுகிறார்கள்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு


தொடர்ந்து, 48 மணி நேரம் இந்த ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்பதால், ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. என்றாலும், ரெயில் போக்குவரத்தை வழக்கம் போல் நடத்த ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை சென்டிரல், எழும்பூர் உள்பட தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போராட்டக்காரர்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் வழக்கம் போல் நடைபெறும் கலெக்டர் தகவல்

ருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள் மாநில தேர்தல் ஆணையத்தால் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள்

வருகிற 17–ந் தேதி(திங்கட்கிழமை) முதல் வழக்கம் போல் நடைபெறும். மேலும் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் இதர குறைதீர்க்கும் கூட்டங்களும் வழக்கம் போல் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் கூறியுள்ளார்.

Sunday 16 October 2016

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை சனிக்கிழமை நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் வாட் வரி விதிப்பில் காணப்படும் வேறுபாட்டின் காரணமாக, விலை உயர்விலும் வேறுபாடு நிலவும். இதன்படி, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.45-க்கும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.55.38-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.72 உயர்ந்து, ரூ.65.96-க்கு விற்கப்படுகிறது. டீசலின் விலையும் ரூ.2.88 அதிகரித்து, ரூ.56.95 ஆக உள்ளது. கடந்த 2 மாதங்களில் பெட்ரோல் விலை தற்போது 5-ஆவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 5-ஆம் தேதி பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்த்தப்பட்டன. அதேபோல், டீசலின் விலையும் லிட்டருக்கு 10 காசுகள் அதிகரிக்கப்பட்டது.

Saturday 15 October 2016

பொது சிவில் சட்டம்: முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் எதிர்ப்பு

பொது சிவில் சட்டத்தை குறித்த ஆலோசனைகள் பெறும் மத்திய சட்ட ஆணையத்தின் முயற்சிகளை அனைத்திந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

மத்திய அரசு ஒரு சமூகத்துக்கு எதிராக தொடுக்கும் போர் இது என்று முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து புதுடெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய பொதுச்செயலர் வாலி ரெஹ்மானி கூறும்போது, 'மக்களை ஒரே விதமாக சித்தரிக்க முயலும் இந்தப் பொது சிவில் சட்டம், நாட்டின் பன்முகத்துவம் மற்றும் கலாச்சார தனித்துவங்களுக்கு அச்சுறுத்தல்' என்று கண்டித்துள்ளார்.

“பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் அது அனைவரையும் ஒரே மாதிரியானவர்களாக காட்டும் முயற்சியாகும். இது நாட்டு நலனுக்கு நல்லதல்ல.
அதே போல் மூன்று முறை தலாக் கூறும் நடைமுறையை நீக்கவும் நாங்கள் விருமபவில்லை. பிற சமூகத்தினரிடையே அதிகமாக விவாகரத்துகள் நடைபெறுகின்றன. முஸ்லிம்களை விட இந்துக்களிடையே இருமடங்கு விவாகரத்துகள் அதிகமாக உள்ளன” என்று ஜமையது உலிமா-ஹிந்த் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி தெரிவித்தார்.

சில முஸ்லிம்கள் மூன்று முறை தலாக் கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களே என்று கேட்ட போது முஸ்லிம் சட்ட வாரிய பொதுச்செயலர் வாலி ரெஹ்மானி “ஜனநாயகத்தில் அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு” என்றார்.

“மத்திய அரசு தனது தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சி செய்கிறது. எனவே அரசு இந்த முயற்சியைக் கைவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பொது சிவில் சட்ட முயற்சிகளை கைவிடவில்லை எனில் எங்களது எதிர்கால நடவடிக்கைகள் என்ன என்பதை நாங்கள் முடிவெடுப்போம். இப்போதைக்கு முஸ்லிம் மக்களிடையே நாங்கள் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மை மக்கள், சமூகக் குழுக்கள், என்.ஜி.ஓ.க்கள், அரசியல் கட்சிகள், அரசு முகமைகள், ஆகியோரிடம் மத்திய சட்ட வாரியம் கேள்விகளை தயாரித்து அளித்து பொது சிவில் சட்டம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு முறையிட்டுள்ளது. இந்த கேள்விகள் தொகுப்பில் மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்தல், பெண் குடிமக்களுக்கு சொத்துரிமை ஆகியவையும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Friday 14 October 2016

முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறு பரப்பிய மேலும் 2 பேர் கோவையில் கைது

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அவதூறாகப் பேசியதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக நிர்வாகி புனிதா அளித்த புகாரின் பேரில் கோவையைச் சேர்ந்த ரமேஷ், சுரேஷ் ஆகிய 2 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர்.
அவதூறு பரப்பியதாக ஏற்கெனவே 4 பேர் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதான இருவரும் வங்கியில் பணிபுரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Thursday 13 October 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 13/10/2016

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.

கொடிக்கால்பாளையம் தெற்கு தெரு முன்னாள் நகர மன்ற உறுப்பினர்  AMM. ஹமீத் சுல்தான்
அண்ணன் மௌத்...

அண்ணன் அவர்கள் MC யாக இருந்தபேது பல நன்மைகளை செய்திருக்கிறார்கள், அவர்களின் மஃபிரத்திற்கு துவா செய்வோம்.

Wednesday 12 October 2016

நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மத்தியக் குழு ஆய்வு

காவிரி நீர் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட மத்திய தொழில்நுட்பக் குழுவினர் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை உறுதி செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மத்திய நீர் வள ஆணையத் தலைவர் ஜி.எஸ். ஜா தலைமையில், ஆணைய உறுப்பினர் மசூத் உசேன், கிருஷ்ணா- கோதாவரி அமைப்பு தலைமைப் பொறியாளர் ஆர்.கே. குப்தா ஆகியோரடங்கிய மத்தியக் குழுவினர், திங்கள்கிழமை பிற்பகல் நாகை மாவட்டம், கருங்கண்ணி, கிள்ளுக்குடி ஆகிய பகுதிகளில் வேளாண் விளை நிலங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளைச் சந்தித்தனர்.
தமிழக வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, பொதுப் பணித் துறை அரசு செயலாளர் பிரபாகரன், வேளாண் இயக்குநர் தெட்சிணாமூர்த்தி, நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி, நாகை தொகுதி மக்களவை உறுப்பினர் கே. கோபால், ஆகியோர் கடைமடை பகுதி வேளாண் பணிகள் எதிர்கொண்டுள்ள சவால்களை குழுவினரிடம் விளக்கினர்.
தமிழகத்தில் முப்போகம் சாகுபடி நடைபெற்று வந்த நிலையில், காவிரி நீர் பிரச்னை தொடங்கியதிலிருந்து 2 போக சாகுபடியாகக் குறைந்தது. தற்போது, கர்நாடக அரசு கடைப்பிடிக்கும் பிடிவாதம் காரணமாக, காவிரி கடைமடை பகுதிகளில் ஒரு போக சாகுபடி கூட உறுதியற்ற நிலைக்கு உள்ளாகியுள்ளது.
தற்போதைய நிலையில், வரும் 110 நாள்களுக்குத் தொடர்ந்து காவிரி நீர் கிடைக்காவிட்டால், நிகழாண்டும் சம்பா நெல் சாகுபடி பணிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாக நேரிடும் என அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில்... மத்திய உயர்நிலைத் தொழில்நுட்பக் குழுவினர் திங்கள்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தானில் நேரடி விதைப்பு செய்து தண்ணீரின்றி காயும் நிலங்களை குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளிடம் தற்போதைய சாகுபடி நிலவரம் குறித்து கேட்டறிந்தனர்.
டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை காப்பாற்ற உடனடியாக 25 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகத்திடமிருந்து பெற மத்திய உயர்நிலைத் தொழில்நுட்பக் குழு பரிந்துரைக்க வேண்டும். அத்துடன், டிசம்பர் மாதவாக்கில் சம்பா சாகுபடிக்கென காவிரியில் தண்ணீர் பெறவும் வழிவகை செய்ய வேண்டும். ஆண்டுதோறும் கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்குரிய தண்ணீரை பெறுவதற்கு நடத்தப்படும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தமிழக மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டையும் போக்கும் வகையில் மத்தியக் குழுவினர் எங்களின் நிலைப்பாட்டை நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tuesday 11 October 2016

அக்.12-ம் தேதி மொகரம்: தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு

தமிழ்நாட்டில் அக்டோபர் 12-ம் தேதி மொகரம் கடைப்பிடிக்கப்படும் என மாநில தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார்.
கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்து ஷியா பிரிவு முஸ்லிம்களால் துக்க தினமாக மொகரம் அனுசரிக்கப்படுகிறது.
அதேவேளையில், ஷியா முஸ்லிம்கள் தவிர்ந்த ஏனைய இஸ்லாமியர், மொகரம் மாதத்தின் பத்தாவது நாளில் நோன்பிருந்து, தன்னைத்தானே கடவுள் என்று பிரகடணப்படுத்திய  ஃபிர்அவ்ன் என்ற மன்னன் மற்றும் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா நபியை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி வருகின்றனர்.
இந்த மொகரம் பிறையின் பத்தாவதுநாள் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டின் மொகரம் நாள் வரும் 12-ம் தேதி கடைப்பிடிக்கப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மது அய்யூப் இன்று அறிவித்துள்ளார்.

நமதூர் மௌத் அறிவிப்பு 10/10/2016

இன்னாலில்லாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்

நமதூர் தெற்கு தெரு நரியும் வீட்டு முஹம்மது பாஸ் அவர்களின் மனைவி பேபி என்கிற ரஹ்மத் கனி அவர்கள் மௌத் .
 

Monday 10 October 2016

பிரதமர் அலுவலகத்திற்கு கடந்த 20 மாதங்களில் 10 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்

பிரதமர் அலுவலகத்திற்கு கடந்த 20 மாதங்களில் 10 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், தினமும் 1,500 மனுக்கள் வருவதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குர்கானை சேர்ந்த அசீம் தக்யார் என்பவர் தகவல் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமர் அலுவலகத்திற்கு தினமும் எத்தனை மனுக்கள் வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பின் மனுக்களின் எண்ணிக்கை குறித்து தகவல் அளிக்குமாறு தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பிரதமர் அலுவலகத்திற்கு கேட்டு இருந்தார்.

அவரின் கேள்விகளுக்கு பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.

இது குறித்து விவரம் வருமாறு:

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் ஜனவரி 31, 2016 ம் ஆண்டு வரை 10 லட்சம் மனுக்கள் வந்துள்ளது. கடந்த 20 மாதங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 1,500 மனுக்கள் பிரதமர் அலுவலகத்திற்கு வந்துள்ளது.  மேலும் பிரதமர் அலுவலகத்துக்கென பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின்  எண்ணிக்கை, காய்கறிகளுக்கான செலவு விபரம், தொலைபேசி, இணையதள பயன்பாடு, பிரதமர் நரேந்திர மோடியின் பணி, அவரை சந்திக்க வருவோர் உள்ளிட்ட  விவரங்களை கேட்டு மனுக்கள் வந்துள்ளன.

Sunday 9 October 2016

வடகிழக்கு பருவமழை: அக்.20-இல் தொடங்க வாய்ப்பு


வடகிழக்கு பருவமழை வரும் 20 -ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழைக் காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையாகும். இந்த ஆண்டைப் பொருத்தவரை தென்மேற்கு பருவமழையானது தென் மாநிலங்களை காட்டிலும் வட மாநிலங்களில் அதிக அளவு பெய்துள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் இருந்து படிப்படியாகக் குறையத் தொடங்கி, அக்டோபர் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காலம் முடிவடையும். அதன்பின்பு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியது:
வடகிழக்கு பருவமழையானது பொதுவாக அக்டோபர் 20 -ஆம் தேதி தொடங்கும். இந்தத் தேதிக்கு 7 நாள்கள் முன்பாகவோ, 7 நாள்கள் பின்பாகவோ மழை தொடங்கலாம். ஒன்று அல்லது இரண்டு காரணிகளைக் கொண்டு, வடகிழக்கு பருவமழை தொடங்குவதை துல்லியமாகக் கணிக்க இயலாது.
பருவமழையின்போது இந்த ஆண்டு 2 அல்லது 3 புயல்கள் வங்கக் கடலில் உருவாக வாய்ப்புள்ளது. ஆனால் அந்தப் புயலானது இந்திய கடலோரங்களை குறிப்பாக தமிழகத்தை தாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். புயல் தொடர்பான கணிப்புகளை, அது உருவாகும் 10 நாள்களுக்கு முன்புதான் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 50 சதவீதம் வடகிழக்கு பருவமழையின் மூலம் தான் கிடைக்கும். இந்த ஆண்டு பருவமழைக் காலத்தில் 3 மாதத்தில் 40 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Saturday 8 October 2016

பெற்றோரிடம் இருந்து பிரிக்க முயலும் மனைவியை விவாகரத்து செய்யலாம்: உச்ச நீதிமன்றம்

பெற்றோரிடம் இருந்து தன்னைப் பிரிக்க முயலும் மனைவியை விவாகரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெற்றோரிடம் இருந்து பிரிந்து தனிக்குடித்தனத்துக்கு மனைவி வற்புறுத்துவதாக பெங்களூரு குடும்ப நீதிமன்றத்தில், கணவர் விவாகரத்து கோரியதன்பேரில் அத்தம்பதிக்கு 2001-ஆம் ஆண்டில் அந்நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

இதனை எதிர்த்து மனைவி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை அடுத்து, குடும்ப நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் கணவர் மேல்முறையீடு செய்தார்.

அந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனில் ஆர். தவே மற்றும் எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

பெற்றோரால் வளர்க்கப்பட்டு, கல்வி பெறப்பட்ட மகனுக்கு, திருமணத்துக்குப் பிறகும், அவர்களை பேணிக் காப்பதற்கு தார்மிக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கடமை உள்ளது. இது ஹிந்து மத தர்மமும்கூட. மேலும் பொருளாதார ரீதியாக மகனைச் சார்ந்திருக்கும் பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிக்குடித்தனம் செய்ய மனைவி அழைப்பதை எந்த மகனாலும் பொறுத்துக் கொள்ள முடியாது.

அவ்வாறு வலுக்கட்டாயமாக பிரிக்க முயலுவது கணவனுக்கு பெரும் தொந்தரவாகவே இருக்கும். மேலும் வாழ்க்கையில் நிம்மதியும் கிடைக்காது. எங்களைப் பொருத்தவரை, கீழமை நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு சரியே.

இந்த வழக்கில் பெற்றோரிடம் இருந்து பிரிந்து செல்வதற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்கள் ஏதும் இல்லை என்பதாலும், மகன் என்ற ரீதியிலான கடமையை செய்வதிலிருந்து விலக கட்டாயப்படுத்துவதாலும் மனுதாரர் தன் மனைவியை விவாகரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டு என்று தீர்ப்பளித்தனர்.

Friday 7 October 2016

இந்தியாவில் முதன்முறையாக கொடைக்கானலில் ‘ஸ்கை வாக்’அமைக்க முடிவு

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இந்தியாவில் முதன்முறையாக கொடைக்கானல் மலைப் பகுதியில் ‘ஸ்கை வாக்’ அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. கொடைக்கானலில் 12 மைல் சுற்றுச் சாலையில் உள்ள சுற்றுலாத் தலங்களான மோயர் பாய்ன்ட், பைன் பாரஸ்ட், தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு என வரிசை யாக அமைந்து இயற்கையை ரசிக்க ஏற்றவையாக உள்ளன. இவற்றையும் கடந்து பிரை யண்ட் பூங்கா, ஏரியில் படகு சவாரி ஆகியவை உள்ளன.
சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை ஆகியவை பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கொடைக்கானல் மலைப் பகுதியில் டால்பின்நோஸ் என்ற இடத்தில் ‘ஸ்கை வாக்’ திட்டத்தை வனத்துறை செயல்படுத்த உள்ளது.
மலைப் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் கண்ணாடி பாலம் அமைத்து சுற்றிலும் பாதுகாப்பாக கம்பிகள் அமைத்து சுற்றுலாப் பயணிகள் சிறிது தூரம் நடந்து செல்லும் வகையில் ஏற்படுத்துவதுதான் ‘ஸ்கை வாக்’. இதில் நடக்கும்போது சுற்றுலாப் பயணிகளுக்கு ‘த்ரில்’ அனுபவம் ஏற்படும். காரணம், கண்ணாடி பாலத்தின் மீது நடக்கும்போது கீழே பார்த்தால் அதளபாதளமாக பள்ளத்தாக்கு தெரியும். இதனால் நாம் கண்ணாடி மேல் நடந்தாலும் ஒருவித அச்ச உணர்வு நமக்கு ஏற்படும்.
இந்த சுற்றுலாத் தலங்கள் வெளிநாடுகளில் மலைப் பகுதி களில் மட்டுமே உள்ளன. இந்தியாவில் முதன்முறையாக கொடைக்கானலில் ‘ஸ்கை வாக்’ சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கொடைக்கானல் வனத்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, “சுற்றுலாப் பயணிகளை கவர ‘ஸ்கை வாக்’ அமைப்பது குறித்து திட்டங்கள் தயாரித்துள்ளோம். இதை அமைப்பதற்கு நிதி எவ்வளவு செலவாகும் என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். இத்திட்டத்தை தனியார் நிதியுதவியுடன் செயல்படுத்தவும் திட்டம் உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் ‘ஸ்கை வாக்’ அமைக்கும் பணிகள் வெளிநாட்டு நிறுவன உதவியுடன் தொடங்கும்” என்றார்.

Thursday 6 October 2016

இந்திய அஞ்சல் துறை வங்கியில் 1060 மேலாளர் பணி

இந்திய அஞ்சல் பண அளிப்பு வங்கியில் (IPPB) நிரப்பப்பட உள்ள 1060 மேலாளர், மூத்த மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Manager, Senior Manager
காலியிடங்கள்:  1060
பதவி: Senior Manager (Branch) - 350
பதவி: Manager (Area Sales) - 250
பதவி: Manager (Area Operations) - 350
பதவி: Senior Manager (Sales Operation) - 02
பதவி: Senior Manager (UI/ UX) - 01
பதவி: Senior Manager (Retail Products) - 03
பதவி: Senior Manager (Merchant Products) - 02
பதவி: Senior Manager (Government Products) - 02
பதவி: Manager (Product Research) - 01
பதவி: Manager (User Experience UX) - 02
பதவி: Manager (User Interface UI) - 02
பதவி: Senior Manager (Digital Marketing) - 01
பதவி: Senior Manager (Branding & Marketing) - 01
பதவி: Senior Manager (Financial Planning & Budgeting) - 01
பதவி: Manager (Account Payable) - 01
பதவி: Manager (Taxation) - 01
பதவி: Manager (Procurement) - 01
பதவி: Manager (Treasury Settlements & Reconciliation) - 01
பதவி: Manager (Program Management Office) - 01
பதவி: Senior Manager (Training) - 01
பதவி: Senior Manager (HR Generalist Manpower Planning & Recruitment, Performance Management System) - 02
பதவி: Manager (Training) - 01
பதவி: Manager (HR Generalist Manpower Planning & Recruitment, Performance Management System) - 02
பதவி: Manager (Corporate HR & Administration) - 01
பதவி: Manager (Branch HR & Administration) - 04
பதவி: Manager (Administration) - 01
பதவி: Manager (Hindi Cell) - 01
பதவி: Senior Manager (Risk & Concurrent Audit) - 02
பதவி: Manager (Risk & Concurrent Audit) - 02
பதவி: Senior Manager (Fraud Control Operations) - 04
பதவி: Senior Manager (Customer Service) - 04
பதவி: Senior Manager (Call Centre) - 01
பதவி: Senior Manager (Branch Operations) - 04
பதவி: Senior Manager (Cheque Truncation System) - 03
பதவி: Senior Manager (Reconciliation) - 03
பதவி: Manager (Customer Acquisition Support) - 16
பதவி: Manager (Vendor Performance Management) - 03
பதவி: Senior Manager (Compliance Support & Reporting) - 02
பதவி: Manager (Compliance Support & Reporting) - 02
பதவி: Manager (Operational Risk) - 06
பதவி: Manager (Legal) -01
பதவி: Senior Manager (System/ Database Administration) - 05
பதவி: Senior Manager (Security Administration) - 05
பதவி: Senior Manager (Network/ Infrastructure Administration) - 05
பதவி: Senior Manager (IT Project Management) - 03
பதவி: Manager (Vendor Management - Hardware/ Software/ Services) - 02
பதவி: Manager (Digital Technology Innovation) - 01
தகுதி: ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியான தகுதிகளும், அனுபவமும் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 01.09.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:  MMGS-III பிரிவுக்கு மாதம் ரூ.42,020-51,490 106,000
MMGS-II  பிரிவுக்கு மாதம் ரூ.31,705-45,950 83,000
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700, மற்ற பிரிவினருக்கு ரூ.150.
விண்ணப்பிக்கும் முறை: http://www.indiapost.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.11.2016
எழுத்துத் தேர்வு: டிசம்பர் 2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.indiapost.gov.in/Financial/DOP_PDFFiles/20160929_1220%20hrs_Detailed%20Advertisement%20for%20Scale%20II%20%20III.pdfஎன்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வெங்கடேசன். ஆர்