Monday 31 August 2015

ரூ.16 கோடியில் 16 புதிய வட்டங்கள் உருவாக்கப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு!









 தமிழகத்தில் புதியதாக 16 வட்டங்கள் ரூ.16 கோடியில் உருவாக்கப்படும் என்று  சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தின் மொத்த வட்டங்கள் 285 ஆக உயர்கின்றன.

இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வாசித்த அறிக்கையில், "நடப்பு ஆண்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை வட்டத்தைப் பிரித்து கீழ்ப் பென்னாத்தூரில் புதிய வட்டமும்; விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி மற்றும் திருக்கோவிலூர் வட்டங்களைப் பிரித்து முறையே மேல்மலையனூர் மற்றும் கண்டாச்சிபுரம் ஆகிய புதிய இரு வட்டங்களும்; கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் வட்டத்தைப் பிரித்து சூளகிரியில் ஒரு புதிய வட்டமும்; தருமபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு, அரூர் ஆகிய வட்டங்களைச் சீரமைத்து காரிமங்கலத்தில் ஒரு புதிய வட்டமும்;

தருமபுரி வட்டத்தைப் பிரித்து நல்லம்பள்ளியில் ஒரு புதிய வட்டமும்; சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் வட்டத்தைப் பிரித்து காடையாம்பட்டியில் ஒரு புதிய வட்டமும்; காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆலந்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் ஆகிய வட்டங்களை சீரமைத்து பல்லாவரத்தில் ஒரு புதிய வட்டமும்; வேலூர் மாவட்டத்திலுள்ள அரக்கோணம் மற்றும் குடியாத்தம் வட்டங்களைப் பிரித்து முறையே நெமிலி மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய இரு புதிய வட்டங்களும்;

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இரு வட்டங்களைப் பிரித்து முறையே மானூர் மற்றும் சேரன்மகாதேவி ஆகிய இரு புதிய வட்டங்களும்; நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு வட்டத்தைப் பிரித்து கொமாரபாளையத்தில் ஒரு புதிய வட்டமும்; ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வட்டத்தைப் பிரித்து தாளவாடியில் ஒரு புதிய வட்டமும்; ஈரோடு வட்டத்தினைப் பிரித்து கொடுமுடி, மொடக்குறிச்சி ஆகிய புதிய இரு வட்டங்களும் என மொத்தம் 16 புதிய வட்டங்கள் 16 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் 269 வட்டங்களின் எண்ணிக்கை 285 வட்டங்களாக அதிகரிக்கும்.

4 புதிய வருவாய் கோட்டங்கள்:

இதே போன்று, கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு புதிய வருவாய் கோட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன. சென்னை மாவட்டத்தில் வருவாய் கோட்டங்கள் எதுவும் இல்லை.

எனவே, நடப்பாண்டில் சென்னை மாவட்டத்தில் எழும்பூர் மற்றும் தண்டையார்பேட்டை என்ற இரு புதிய வருவாய் கோட்டங்கள். மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை கோட்டத்தினைப் பிரித்து மேலூரில் ஒரு புதிய வருவாய் கோட்டம். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோயம்புத்தூர் கோட்டத்தைப் பிரித்து கோயம்புத்தூர் (வடக்கு) என்ற ஒரு புதிய வருவாய் கோட்டம். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி கோட்டத்தைப் பிரித்து சாத்தூரில் ஒரு புதிய வருவாய் கோட்டம் என மொத்தம் 5 வருவாய் கோட்டங்கள் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் வருவாய்க் கோட்டங்களின் எண்ணிக்கை 80-லிருந்து 85-ஆக உயரும்.

மொத்தம் 17 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தவிருக்கும் மேற்கண்ட அறிவிப்புகளின் மூலம், பொதுமக்களுக்கு வருவாய்த் துறையினரின் சேவை விரைந்து கிடைக்கவும், வருவாய்த் துறையினர் தங்கள் சேவையை எளிதாகவும், விரைவாகவும், திறம்படவும் பொதுமக்களுக்கு ஆற்றவும் வழிவகுக்கும்" என்று கூறியுள்ளார்.

Sunday 30 August 2015

Malaysia - மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் விலகக் கோரி போராட்டம் தீவிரம்

நஜீப் ரசாக் பதவி விலக வலியுறுத்தி கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள். படம்: ஏஎப்பி

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி யுள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முதல் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு நிதியில் இருந்து நஜீப் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்குகளுக்கு 70 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 4,600 கோடி) மாற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ரசாக் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தபோதிலும் நாளுக்கு நாள் அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில் ரசாக் பதவி விலகவும், நேர்மையாக தேர்தல் நடத்தவும் வலியுறுத்தி ‘பெர்ஸிஹ்’ என்ற அமைப்பு சார்பில் சனிக்கிழமை முதல் 2 நாள் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையொட்டி தலைநகர் கோலாலம்பூரில் நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு பிரதமருக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது. ஆனால் சுமார் 5000 பேர் திரண்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
கோலாலம்பூரில் உள்ள விடுதலைச் சதுக்கத்தை நோக்கிச் செல்ல போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலைச் சதுக்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மலேசிய அரசு பலப்படுத்தியுள்ளது.
போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனால் ராணுவம் தலையிடும் என்றும் நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப் படும் என்றும் ‘ஸ்டார் டெய்லி’ என்ற நாளேடு வியாழக்கிழமை தெரிவித்திருந்தது. ஆனால் இதுகுறித்து ராணுவம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.
இதனிடையே மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த மலேசிய அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஊழலுக்கு எதிரான சர்வதேச அமைப்பான ‘டிரான்ஸ்பரன்ஸி இன்டெர்நேஷனல்’ கோரிக்கை விடுத்துள்ளது.

Saturday 29 August 2015

அகல ரெயில் பாதைக்கு ஏற்ப பிளாட்பாரங்களை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரம்




திருவாரூரில் அகல ரெயில் பாதைக்கு ஏற்ப பிளாட்பாரங்களை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அகலபாதை

திருவாரூரில் இருந்து காரைக்குடி வரையிலான ரெயில்வே வழித்தடத்தில் திருவாரூர்-பட்டுக்கோட்டை இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை மீட்டர் கேஜ் ரெயில்கள் இயங்கி வந்தன. இந்தியா முழுவதும் இருந்த மீட்டர் கேஜ் பாதைகள் அகல பாதையாக மாற்றப்பட்ட பின்னரும் திருவாரூர்- பட்டுக்கோட்டை இடையே மீட்டர்கேஜ் ரெயில் ஓடியது.

இந்த வழித்தடத்தை அகலபாதையாக மாற்றி திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை தஞ்சை, சென்னை போன்ற நகரங்களுடன் இணைப்பதற்கு ரெயில் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

ரெயில் போக்குவரத்து நிறுத்தம்

இதையடுத்து அகலபாதை அமைப்பதற்காக மீட்டர் கேஜ் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன்பின்னர் அகலபாதை திட்ட பணிகள் உடனடியாக தொடங்கவில்லை. இதனால் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இன்றளவும் ரெயில் வசதி இன்றி சிரமப்படுகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த ரெயில்வே பட்ஜெட்டில் திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி வரையிலான அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருவாரூர்-காரைக்குடி அகலபாதை பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. பட்டுக்கோட்டை முதல் காரைக்குடி வரையிலான பணிகள் 60 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில், திருவாரூர்-பட்டுக்கோட்டை இடையேயான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பணிகள் தீவிரம்

திருவாரூர் ரெயில் நிலையத்தில் தற்போது 1, 2, 3-வது பிளாட்பாரங்களில் மட்டுமே அகல ரெயில் பாதை போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 4-வது, 5-வது பிளாட்பாரங்கள் மீட்டர்கேஜ் பாதைக்கு ஏற்ற வகையிலேயே இருந்தன. அகல ரெயில் பாதை போக்குவரத்து தொடங்க உள்ளதையொட்டி 4-வது, 5-வது பிளாட்பாரங்களை அகலபாதைக்கு ஏற்ப விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை அகல ரெயில் பாதை அமைக்கும் பணியை 6 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டு இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

Friday 28 August 2015

லண்டனில் அம்பேத்கார் வசித்த வீட்டை இந்தியா விலைக்கு வாங்கியது

கஸ்ட் 28,2015, 1:05 AM IST





சட்ட மேதை அம்பேத்கார், லண்டனில் ஆராய்ச்சி படிப்பு படித்தபோது, எண் 10, கிங் ஹென்றி ரோடு என்ற முகவரியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். 1921 மற்றும் 1922–ம் ஆண்டுகளில், மாணவராக அவர் அங்கு வசித்து வந்தார்.
அது, 3 மாடிகள் கொண்ட பங்களா வீடாகும். அதில், 6 படுக்கை அறைகள் உள்ளன. 2 ஆயிரத்து 50 சதுர அடியில் அமைந்துள்ளது.
அந்த வீட்டின் உரிமையாளர், கடந்த ஆண்டு அதை விற்பனைக்கு கொண்டு வந்தார். அந்த தகவலை அறிந்த மராட்டிய மாநில அரசு, வீட்டை விலைக்கு வாங்க முடிவு செய்தது. ரூ.31 கோடிக்கு விலைக்கு வாங்கப் போவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. ஆனால், பல்வேறு நடைமுறை பிரச்சினைகளால், இந்த விற்பனை முடிவுக்கு வராமல் தாமதம் ஆனது.
ஒப்பந்தம் பரிமாற்றம்இந்நிலையில், இழுபறி முடிவடைந்து, மராட்டிய மாநில அரசு நேற்று அந்த வீட்டை விலைக்கு வாங்கியது. இதுதொடர்பான ஒப்பந்தத்தை மராட்டிய மாநில சமூக நீதித்துறை மந்திரி ராஜ்குமார் படோலேவும், வீட்டு உரிமையாளரும் பரிமாறிக் கொண்டனர்.
ஆனால், வீடு எத்தனை கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
சர்வதேச நினைவகம்இதுகுறித்து, இங்கிலாந்தில் உள்ள அம்பேத்கார் மற்றும் புத்தமத இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சந்தோஷ் தாஸ் கூறியதாவது:–
அம்பேத்கார் வசித்த வீடு, சர்வதேச நினைவகமாக மாற்றப்படும். அது, கல்வி மற்றும் கலாச்சார மையமாக திகழும். இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களும், படிக்க வரும் இந்தியர்களும் அதைப் பார்வையிடலாம். ஆனால், பொதுமக்களை அனுமதிப்பதற்கு முன்பு, வீட்டில் நிறைய வேலைகள் செய்ய வேண்டி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Thursday 27 August 2015

குறைந்து வரும் முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம்: புதிய சென்சஸ் தகவல்கள்













கடந்த சில தசம ஆண்டுகளில் இந்து மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இந்திய முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இதனை புதிய சென்சஸ் புள்ளிவிபரம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
அதுவும் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தின் வீழ்ச்சி இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக இருக்கிறது என்கிறது அந்த புள்ளிவிபரம்.
முஸ்லிம் மக்கள்தொகை அதிகரித்து வருவதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சிவிகிதம் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு குறைந்திருப்பதை சுட்டிக்காட்டும் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மதவாரியாக எவ்வளவு?
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மதவாரியான மக்கள்தொகை புள்ளிவிபரத்தை மக்கள்தொகை ஆணையர் மற்றும் பதிவாளர் நேற்று மாலை (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டார்.
அதன்படி, இந்தியாவில் தற்போது 966.3 மில்லியன் இந்துக்கள் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 79.8% ஆகும். இருந்தபோதும் இந்துக்களின் மக்கள்தொகை முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 0.7 சகவிகிதம் குறைந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
முஸ்லிம்கள் 172.2 மில்லியன் ஆவர். மொத்த மக்கள்தொகையில் முஸ்லிம்கள் பங்கு 14.23%.
சிறுபான்மையினத்தவரில் கிறிஸ்தவர்கள் மக்கள்தொகை 2.3% ஆகவும், சீக்கியர்கள் மக்கள்தொகை 2.16% ஆகவும் உள்ளது.
இந்த அறிக்கையில், தேசிய அளவில் துவங்கி, சிறிய நகரங்கள் வரையிலான மதரீதியிலான மக்கள் தொகை விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
121.09 கோடி:
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121.09 கோடி. இந்த மக்கள் தொகையில், 96.63 கோடி பேர் இந்துக்கள். 17.22 கோடி பேர் முஸ்லிம்கள். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.78 கோடியாகும்.
சுதந்திரக்குப் பிந்தைய நிலவரம்:
இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர், முஸ்லிம் மக்கள்தொகையின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வந்திருக்கிறது. இதற்கு காரணம் முஸ்லிம் சமூகத்தில் குழந்தைபிறப்பு விகிதம் அதிகமாக இருந்ததும், அவர்களது வாழ்நாள் காலம் அதிகமாக இருந்ததுமே. ஆனால், அண்மைகாலமாக முஸ்லிம் சமூகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருக்கிறது. இதனால், இந்து மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.
2001, 2011 காலகட்டத்தில் இந்து மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 16.76% ஆகவும், முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 24.6% ஆகவும் உள்ளது. இது இதற்கு முந்தைய கணக்கெடுப்புடம் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக இருக்கிறது. முந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்பில், இந்து மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 19.92% ஆகவும், முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 29.52% ஆகவும் இருந்திருக்கிறது.
முஸ்லிம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முன்னேற்றம்
முஸ்லிம் சமூகத்தில் ஆண் - பெண் விகிதாச்சாரம் ஏற்றம் கண்டுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி முஸ்லிம் சமூகத்தின் ஆண்-பெண் விகிதாச்சாரம் 1000 ஆண்களுக்கு 951 பெண்கள் என்ற நிலையில் உள்ளது. இதற்கு முந்தைய கணக்கெடுப்பில் முஸ்லிம் சமூகத்தின் ஆண்-பெண் விகிதாச்சாரம் 1000 ஆண்களுக்கு 936 பெண்கள் என்ற அளவில் இருந்தது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்து சமூகத்தில் ஆண்-பெண் விகிதாச்சாரம் 1000 ஆண்களுக்கு 939 பெண்களாக இருக்கிறது.
நாட்டிலேயே அசாம் மாநிலத்தில் அதிகளவில் முஸ்லிம்கள் இருக்கின்றனர். அங்கு முஸ்லிம் மக்கள் விகிதாச்சாரம் (34.22%). அசாமை தொடர்ந்து உத்தராகண்ட், கேரளாவில் முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ளனர்.
மொத்த வளர்ச்சி விகிதம்
2001-2011 காலகட்டத்தில் நாட்டின் மொத்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 17.7%. இதே காலக்கட்டத்தில் மதவாரியான மக்கள் தொகை வளர்ச்சி விகிதம்
மதம்
மக்கள்தொகை வளர்ச்சி விகிதம்
இந்து
16.8%
முஸ்லிம்
24.6%
கிறிஸ்தவம்
15.5%
சீக்கிய
8.4%
பெளத்த
6.1%
ஜைன
5.4%

Wednesday 26 August 2015

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு:

கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நமது நாட்டில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்து, ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது தெரியவந்தது.
 இதுகுறித்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர்-தலைமைப் பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
 கடந்த 2011ஆம் ஆண்டு நாடு முழுவதும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகை எண்ணிக்கை 121.09 கோடியாகும்.
 அதில் மக்கள்தொகையின் சமூக, பொருளாதார ரீதியிலான எண்ணிக்கை கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது மதவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வெளிடப்படவில்லை.
 தற்போது மதவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கணக்கிடப்பட்டு வெளியிடப்படுகிறது.
 அதன்படி நம்நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து, ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
 கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, நம் நாட்டில் உள்ள ஹிந்துக்களின் எண்ணிக்கை 96.63 கோடி (79.8 சதவீதம்), முஸ்லிம்களின் எண்ணிக்கை 17.22 கோடி ( 14.2 சதவீதம்), கிறிஸ்தவர்கள் 2.78 கோடி ( 2.3 சதவீதம்), சீக்கியர்கள் 2.08 கோடி (1.7 சதவீதம்), பெüத்தர்கள் 84 லட்சம் (0.7 சதவீதம்), ஜைனர்கள் 45 லட்சம் (0.4 சதவீதம்), பிறர் 79 லட்சம் (0.7 சதவீதம்), மதத்தை குறிப்பிடாதவர்கள் 29 லட்சம் (0.2 சதவீதம்) பேர் உள்ளனர்.
 கடந்த 2001ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்போடு ஒப்பிடுகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2011ஆம் ஆண்டு 0.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
 ஹிந்துக்களின் எண்ணிக்கை 0.7 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல் சீக்கியர்கள், பெüத்தர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கிறிஸ்தவர்கள் மற்றும் ஜைனர்கள் எண்ணிக்கையில் மாற்றமில்லை.
 இதே காலகட்டத்தில் ஹிந்துக்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 17.7 சதவீதமும், முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதம் 24.6 சதவீதமும் உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday 25 August 2015

15 ஆண்டுகளாக தூர்வாரப்படாத கமலாலயக் குளம்


திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் வெள்ளோட்டமும், கும்பாபிஷேகமும் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், சுமார் 15 ஆண்டுகளாக தூர்வாரப்படாத கோயிலின் கமலாலயக் குளம் தூர்வாரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தின் பழைமையான கோயில்களில் ஒன்றான திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், தனிச்சிறப்பாக, ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் எனப்படுவது இக்கோயிலின் பிரம்மாண்டமான ஆழித்தேரே. திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை காண பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் இங்கு வந்து செல்வர்.
இக்கோயில் ஆழித்தேர் தேரோட்டம் கடந்த 16.7.2010-ல் நடைபெற்றது. பின்னர், 2.8.2010-ல் ஆழித்தேர் பிரிக்கப்பட்டது. புதிய தேர்க்கட்டும் பணி கடந்த 4 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று, தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கடந்த 9.4.2001 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி, 2013, ஏப்ரலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.
தமிழக அரசின் நடவடிக்கையால், தற்போது 26.10.2015 அன்று ஆழித்தேர் வெள்ளோட்டமும், 8.11.2015 அன்று கோயில் கும்பாபிஷேகமும் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இக்கோயிலும், ஆழித்தேரும் எவ்வளவு பெருமை வாய்ந்ததோ, அதேபோல், இக்கோயிலின் கமலாலயக் குளமும் வரலாற்று சிறப்பு மிக்கது. இக்குளத்தின் நடுவே நாகநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது மேலும் சிறப்புக்குரியது.
இத்தகைய சிறப்பு பெற்ற கமலாலயக் குளம் கடந்த 2000-ம் ஆண்டில் தூர்வாரப்பட்டு, நீர் நிரப்பப்பட்டது. அதன் பிறகு, சுமார் 15 ஆண்டுகளாக தூர்வாரப்படாமலேயே உள்ளது. நீர் வெளியேற்றும் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதால் நீர் வெளியேற வழியின்றி குளத்தினுள்ளே தேங்கியுள்ளது.
குளத்துக்குள் பிளாஸ்டிக் பொருள்கள், காகிதங்கள் மற்றும் கழிவுப் பொருள்கள், கண்ணாடித் துண்டுகள், பழைய துணிகள் வீசப்பட்டுள்ளதால் நீர் மாசடைந்துள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள கோயில் கும்பாபிஷேகம், ஆழித்தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவர். அப்போது, புனிதக் குளமாக கருதப்படும் கமலாலயக் குளத்தில் குளித்து நீராடி, தியாகராஜரை வழிபடுவார்கள் என்பதால், கடந்த 15 ஆண்டுகளாக தூய்மைப்படுத்தப்படாமல் உள்ள கமலாலய குளத்தை விரைந்து தூர்வாரி, புதிய நீரை நிரப்ப வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Monday 24 August 2015

[3D HD] EXCLUSIVE: The HAJJ (Makkah) as never seen before! 2015 ᴴᴰ - NL

திருவாரூரில் பள்ளி மாணவர்களுக்கு ஆக. 26-ல் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்


திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 26-ம் தேதி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது என்றார் ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆகஸ்ட் 2015 மாதத்துக்கான மாதாந்திர பிளஸ்-2 வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் தடகளம், ஹாக்கி, கபடி மற்றும் நீச்சல் போட்டிகள் நடைபெறவுள்ளன.
குழுப் போட்டியில் கபடியில் மாணவர்களுக்கும், ஹாக்கி விளையாட்டில் மாண விகளுக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. தடகள விளையாட்டுக்களில் மாணவர் மற்றும் மாணவியருக்கு 100 மீ., 200 மீ., 800 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்படும்.
போட்டிகளில் பிளஸ்-2 வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவியர்கள் மட்டும் பங்கேற்கலாம். தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கும், ஹாக்கி மற்றும் கபடி விளையாட்டில் முதல் இரண்டு இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டி காலை 9 மணிக்கு தொடங்கும். போட்டியாளர்கள் குழு மற்றும் தனித்திறன் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும். எனவே, மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 04366- 227158 தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday 23 August 2015

நமதூர் நிக்காஹ் தகவல் 23/8/2015




முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் நிருவாகத்தால் நடைபெறும் திருமணம் :





நமதூர் நடுத்தெரு மு முஹம்மது அலி அவர்களின் மகனார் அப்வான் அலி அவர்களின்   நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1436ம்  துல் காயிதா  பிறை  7 (23/08/2015)  பகல் 11:30 மணிக்கு  நடுத்தெரு மணமகன் இல்லத்தில் நடைபெற உள்ளது .


.


மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)


بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير
 .


நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது


... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...

Saturday 22 August 2015

மன்னார்குடியில் செப். 21-ல் ஹசாரே பங்கேற்கும் தர்னா போராட்டம்


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அன்னா ஹசாரே பங்கேற்கும் தர்னா போராட்டம் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூரில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
ஓ.என்.ஜி.சி., கெயில் நிறுவனங்கள் காவிரிப் படுகையில் இயற்கை எரிவாயு எடுப்பதாகக் கூறி, விளைநிலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றன. இதை மத்திய அரசு தடுத்து நிறுத்தி, காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.விவசாயிகளுக்கு 4 சத வட்டியில் கடன் வழங்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலை சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு அவர்கள் விளைவிக்கும் விளைபொருள்களுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைப்படி லாபகரமான விலை நிர்ணயிக்க வேண்டும்.
முன்னாள் படை வீரர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடியில் செப். 21-ம் தேதி காலை முதல் மாலை வரை நடைபெறவுள்ள தர்னா போராட்டத்தில் காந்தியவாதி அன்னா ஹசாரே பங்கேற்கிறார் என்றார் பாண்டியன்.
அப்போது, தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சங்கத் தலைவர் சி.டி. அரசு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் த. புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தன

Friday 21 August 2015

பாலிதீன் பொருட்களை தயாரித்தால் ரூ.1 லட்சம் அபராதம் திருவாரூர் கலெக்டர் எச்சரிக்கை



சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பாலிதீன் பொருட்களை தயாரித்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் மதிவாணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார். 

இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுற்றுச்சூழலுக்கு தீங்கு

திருவாரூர் மாவட்ட நகர்புறம் மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகளை பயன்படுத்த கூடாது.

மறுசுழற்சிக்கு பயன்படாத பாலிதீன் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் திருவாரூர் மாவட்டத்தில் பாலிதீன் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அபராதம்

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பாலிதீன் பொருட்களை தயாரித்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். கடைகளில் பாலிதீன் பொருட்கள் விற்பது கண்டறியப்பட்டால், முதல் முறை ரூ.250, 2-ம் முறை ரூ.500, 3-ம் முறை ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விற்பது கண்டறியப்பட்டால் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும். பாலிதீன் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

டெல்டாவில் பாறை எரிவாயு எடுக்கும் முயற்சியை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்


காவிரி டெல்டா பகுதிகளில் பாறை எரிவாயு எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டுமென குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
வலங்கைமான் ஜி. சுந்தரமூர்த்தி: கண்டியூர், மாத்தூர் பகுதிகளில் முக்கிய பாசனக் கால்வாய்களில் வரும் நீர் கிளை கால்வாய்களில் தண்ணீர் செல்ல வழியின்றி அடைப்பு உள்ளதால், போர்க்கால அடிப்படையில் கால்வாய்களை தூர்வார வேண்டும். மீத்தேன் திட்டத்தையடுத்து விவசாயிகளை பெரிதும் அச்சுறுத்தும் வகையில் டெல்டாவில் பாறை எரிவாயுத் திட்டம் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
கங்களாஞ்சேரி சா.வி. ராமகிருஷ்ணன்: முறைவைத்து தண்ணீர் விடுவதில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறுவைத் தொகுப்புத் திட்டத்தை செப். 20-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்ய வேண்டும். காவிரி பகுதி விவசாயிகளுக்கு கோடை உழவு மானியம், அனைத்து விவசாயிகளுக்கும் டீசல் மானியம் வழங்க வேண்டும்.
பேரளம் வி. பாலகுமாரன்: நன்னிலம் ஒன்றியம் தேற்பாக்குடி பாசன வாய்க்கால் அகிலாம்பேட்டை, பொரசக்குடி, கோவிந்தச்சேரி, மேலமாங்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு பாசன வாய்க்காலாக உள்ளது. இவ்வாய்க்காலை தூர்வாராததால் தண்ணீர் செல்வதில் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, போர்க்கால அடிப்படையில் இவ்வாய்க்காலை தூர்வார வேண்டும்.
திருத்துறைப்பூண்டி ராமச்சந்திரன்: எங்கள் பகுதி கால்வாய்களை தூர்வாரி பாசனத்துக்கு சம்பா சாகுபடி பிரச்னையின்றி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உரம், விதை விலையில் வித்தியாசம் காணப்படுவதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
எடையூர் கோதண்டராமன்: சம்பா தெளிப்பு விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். எடையூர், வடபாதிமங்கலம் பகுதிகளில் வயல்களில் விழுந்து கிடக்கும் மின்கம்பிகள் மற்றும் மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும்.
நீடாமங்கலம் சாத்தப்பன்: தோட்டக்கலை விவசாயிகளுக்கு சொட்டுநீர்ப் பாசன வசதி செய்து கொடுக்க வேண்டும். வங்கியில் கடன் பெற்ற விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்விக் கடன் வழங்க வங்கிகள் மறுக்கிறது. வங்கிகளின் இந்தச் செயல் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கூட்டத்தில் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகனன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Thursday 20 August 2015

வேளாங்கண்ணி - கோவா இடையே சிறப்பு ரயில்கள்


வேளாங்கண்ணி - கோவா வாஸ்கோடா காமா ரயில் முனையம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 இது குறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
 ரயில் எண் 02716: ஆகஸ்ட் 28 ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து 8.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 9.10 மணிக்கு கோவா சென்றடையும்.
 ரயில் எண் 02718: ஆகஸ்ட் 31 ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து 8.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 9.10 மணிக்கு கோவா சென்றடையும்.
 ரயில் எண் 02719: செப்டம்பர் 3 ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து 8.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 9.10 மணிக்கு கோவா சென்றடையும்.
 இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சோரனூர், கோழிக்கோடு, கன்னூர், காஸர்கோடு, மங்களூர், சூரத்கல், உடுப்பி, குந்தாபூர், பாத்கல், கும்தா, கார்வார், மதகான் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Wednesday 19 August 2015

அண்ணா பல்கலை: கேள்வித்தாள் நடைமுறை மாற்றம் டிச.,2016 முதல் அமல்


அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ள கேள்வித்தாள் நடைமுறை மாற்றம், நிகழாண்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வில் அறிமுகம் செய்யப்படும் என, பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொறியியல் முடிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்காததைத் தொடர்ந்து, திறன்மிக்க பொறியாளர்களை உருவாக்கும் நோக்கில் கேள்வித்தாள் நடைமுறையில் மாற்றம் கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது.
இதற்காக பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் தலைமையில் 9 பேர் குழுவை பல்கலைக்கழகம் நியமித்தது. இந்தக் குழு புதிய தேர்வு நடைமுறையை உருவாக்கி, கடந்த பிப்ரவரி மாதம் சமர்ப்பித்தது.
இந்த புதிய நடைமுறை மீது பல்வேறு தரப்பினரின் கருத்துகள் கேட்கப்பட்டு, ஆட்சிமன்றக் குழுவின் ஒப்புதலும் பெறப்பட்டதால், புதிய நடைமுறையை அமலுக்கு கொண்டுவர பல்கலைக்கழகம் இப்போது முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வெங்கடேசன் ஆகியோர் கூறியது:
மாணவர்களின் புரிதலைச் சோதிக்கும் வகையில் கேள்வித்தாளில் மாற்றம் கொண்டுவந்துள்ளோம். இப்போது கேள்வித்தாளில் ஏ, பி என 2 பிரிவுகள் இருக்கும். புதிய நடைமுறைப்படி "சி' என்ற மூன்றாவது பிரிவைச் சேர்த்துள்ளோம். இதில் ஏ பிரிவில் வழக்கம்போல் 20 மதிப்பெண்களுக்கான 10 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். "பி' பிரிவில் 65 மதிப்பெண்களுக்கு 4 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். புதிதாகச் சேர்க்கப்படும் "சி' பிரிவில் 15 மதிப்பெண்ணுக்கு ஒரே ஒரு கேள்வி இடம்பெற்றிருக்கும். இந்தக் கேள்வியானது மாணவர்களின் புரிதலைச் சோதிக்கும் வகையில் "அப்ளிகேஷன்ஸ் அனலைசிஸ்', "கேஸ் ஸ்டடி' ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
பாடங்களைப் புரிந்து படித்தவர்களால் மட்டுமே இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியும்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற விரும்புபவர்கள் இந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும். விரும்பாதவர்கள் இந்தக் கேள்வியைத் தவிர்த்துவிடலாம்.
இந்தப் புதிய நடைமுறை நிகழாண்டில் பி.இ. சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வு முதல் அதாவது 2016 டிசம்பர் மாதத் தேர்வு முதல் அமலுக்கு வர உள்ளது என்றனர்.
இதுபோல, தேர்வுத்தாள் திருத்தும் நடைமுறையிலும், காப்பி அடிக்கும் மாணவர்களுக்கான தண்டனைகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவியும், நாட்டின் முதல் குடிமகளுமான சுவ்ரா முகர்ஜி காலமானார்.

 மூச்சுத் திணறல் உள்ளிட்ட காரணங்களுக்காக தில்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சுவ்ரா முகர்ஜி, கடந்த 7-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் கடந்த 11 நாள்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் செவ்வாய்க்கிழமை காலை 10.51 மணியளவில் காலமானார்.
 இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நமது நாட்டின் முதல் குடிமகள் சுவ்ரா முகர்ஜி, செவ்வாய்க்கிழமை காலை காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். காலை 10.51 மணியளவில் அவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்றார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவ்ரா முகர்ஜியின் உடல், குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள ஏடிசி அறையில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தில்லி லோதி சாலையில் உள்ள தகன மேடையில் அவரது உடல் புதன்கிழமை (ஆக.19) தகனம் செய்யப்படவுள்ளது.
 வாழ்க்கைக் குறிப்பு: வங்கதேசத்தில் தற்போது இருக்கும் ஜெúஸார் நகரில் கடந்த 1940ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தவர் சுவ்ரா முகர்ஜி. அவரது வயது 10ஆக இருந்தபோது, இந்தியாவுக்கு தனது குடும்பத்தினருடன் குடிபெயர்ந்தார். பட்டதாரியான அவர், ரவீந்திரநாத் தாகூரின் தீவிர ரசிகை ஆவார். ரவீந்திர சங்கீதப் பாடகராகவும், நடனம், ஒவியக் கலைஞராகவும் அவர் திகழ்ந்தார். ரவீந்திரநாத் தாகூர் மீதுள்ள மரியாதையின் காரணமாக, அவரது பெயரில் இசைக் குழுவை சுவ்ரா முகர்ஜி நடத்தினார். பிரணாப் முகர்ஜிக்கும், சுவ்ராவுக்கும் கடந்த 1957ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பிரணாப் முகர்ஜி, சுவ்ரா முகர்ஜி தம்பதியருக்கு, அபிஜித் முகர்ஜி, இந்திரஜித் ஆகிய 2 மகன்களும், சர்மிஸ்டா என்ற மகளும் உள்ளனர். இவர்களில், அபிஜித் முகர்ஜி காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார்.
குடியரசு துணைத் தலைவர், பிரதமர் இரங்கல்
 சுவ்ரா முகர்ஜியின் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிகார் முதல்வர் நிதீஷ் குமார், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது, அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரை வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், "சுவ்ரா முகர்ஜி மறைவு குறித்த செய்தியை கேள்விப்பட்டு வருத்தமுற்றேன். இந்தத் துயரமான நேரத்தில், எனது ஆழ்ந்த இரங்கலை குடியரசுத் தலைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். பிரணாபைச் சந்தித்து இரங்கல் தெரிவிப்பதற்காக வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹசீனா புதன்கிழமை இந்தியா வரவுள்ளார்.
முதல்வர் இரங்கல்
  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மனைவி சுவ்ராவின் மறைவுக்கு, முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர், பிரணாப் முகர்ஜிக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: 
 தங்களுடைய மனைவி சுவ்ரா முகர்ஜி திடீரென காலமான செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்துள்ளேன். இத்தகைய சூழ்நிலையில், ஆறுதல் சொல்ல போதிய வார்த்தைகள் இல்லை. ஆனாலும், தங்களுக்கும், தங்களுடைய குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதன் மூலம் தங்களுடைய துயரத்தில் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகிறேன். 
 இந்த துயரத்தை தாங்கும் சக்தியையும், மன வலிமையையும், தங்களுக்கு வழங்குவதோடு, தங்களுடைய மனைவியின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என தனது இரங்கல் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் இரங்கல்
 குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜி மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 கருணாநிதி: பிரணாப் மனைவி மறைவு செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், அதிலிருந்து விடுபடாமலேயே மறைந்துவிட்டார். அவரை இழந்து வாடும் குடியரசுத் தலைவருக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
 விஜயகாந்த்: பிரணாப் முகர்ஜியின் உற்ற துணையாகவும், அரசியல் பயணத்தில் அவரோடு இணைந்து பணியாற்றியவரும், பல்வேறு சமூக நலத் தொண்டுகளைச் செய்தவருமான சுவ்ரா மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
 பொன்.ராதாகிருஷ்ணன்: இந்தியாவின் முதல் குடிமகள் என்ற பெருமைக்கும், சிறப்புக்கும் உரிய சுவ்ரா, தனது கணவரின் வளர்ச்சி அனைத்துக்கும் உற்ற உறுதுணையாய் இருந்து புகழ்பட வாழ்ந்தவர். அவரது மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
 தமிழிசை சௌந்தரராஜன்: மனைவியை இழந்து வாடும் குடியரசுத் தலைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாஜக சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: இந்திய அரசியலில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று, தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கையோடு நீண்ட காலம் பயணித்த அவர் மனைவியின் மரணம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவர் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
 ஜி.கே.வாசன்: பிரணாப் முகர்ஜியின் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் அவரது உயர்வுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டவர் சுவ்ரா முகர்ஜி. எல்லோரிடமும் அன்பாகவும், எளிமையாகவும் பழகக்கூடியவர். அவர் மறைவு பிரணாப் முகர்ஜிக்கு பேரிழப்பாகும்.

Tuesday 18 August 2015

மூணாறு தலைப்பில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது






























திருவாரூர், நாகை மாவட்ட பாசனத்துக்காக மூணாறு தலைப்பில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மூணாறு தலைப்பு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது கோரையாறு தலைப்பு. மேட் டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கல் லணை, பெரிய வெண்ணாறு வழியாக கோரையாறு தலைப் புக்கு வந்து சேர்கிறது. இங்கி ருந்து வெண்ணாறு, கோரை யாறு, பாமணி ஆறு ஆகிய 3 ஆறுகளுக்கு தண்ணீர் செல் வதால், கோரையாறு தலைப்பை மூணாறு தலைப்பு என்றும் கூறுவார்கள். மேட்டூர் மற்றும் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட் டதை தொடர்ந்து மூணாறு தலைப்பில் இருந்து திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட விவ சாய நிலங்களுக்கு பாசனம் அளிப்பதற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடை பெற்றது.

நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதி வாணன் மூணாறு தலைப்பில் இருந்து தண்ணீரை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதா வது:-

2,295 கன அடி

முதல்-அமைச்சர் ஜெயல லிதாவின் உத்தரவின்படி காவிரி டெல்டாவில் நடை பெற உள்ள சம்பா சாகுபடி பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த 9-ந் தேதி திறந்து விடப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 13-ந் தேதி கல்லணை திறக்கப்பட்டது. மேட்டூர் மற்றும் கல்லணை திறக்கப்பட்டதால் திருவாரூர் மாவட்ட பாசன ஆறுகளுக்கு தண்ணீர் வெகு அளவு வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது மூணாறு தலைப்பில் இருந்து திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதில் வெண்ணாற்றில் வினாடிக்கு 428 கனஅடியும், கோரை யாற்றில் வினாடிக்கு 1457 கனஅடியும், பாமணி ஆற்றில் வினாடிக்கு 410 கனஅடியும் ஆக கூடுதலாக வினாடிக்கு மொத்தம் 2,295 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அதிக மகசூல்

பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீரை விவ சாயிகள் சிக்கனமாக பயன் படுத்தி அதிக மகசூல் பெற்று வளம்பெற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறி னார்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெய சந்திரன், மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், வெண் ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந் திரன், வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகணன், உதவி கலெக்டர்கள் முத்து மீனாட்சி, செல்வசுரபி, தஞ்சாவூர் கூட்டுறவு வங்கி துணை தலைவர் சங்கர், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி குமார் மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.

இந்தியாவில் 1 ட்ரில்லியன் டாலர்கள் முதலீடு சாத்தியமே: அமீரக முதலீட்டாளர்களிடம் மோடி உறுதி

அமீரக முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி. | படம்: பிஐபி

ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதலீட்டாளர்களை சந்தித்து இந்தியாவின் முதலீட்டுச் சாதக சூழ்நிலைகளை விளக்கினார்.
பிரதமர் மோடியின் பயணத்தின் முக்கிய அங்கமான முதலீட்டாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் இந்தியாவை அமீரகம் நீண்டகால முதலீட்டு பிரதேசமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
800 பில்லியன் டாலர்களை தன்னகத்தே கொண்ட அபுதாபி முதலீட்டு ஆணையத்தை இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ரியல் எஸ்டேட், துறைமுக வளர்ச்சி, மற்றும் ரயில்வே ஆகியவற்றில் முதலீடு செய்ய இந்தியாவின் விருப்பத்தை பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், உடனடியாக 1 ட்ரில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய முடியும் என்றும், அதற்குச் சாதகமான சூழ்நிலைகள் இந்தியாவில் உள்ளது என்றும், இது குறித்த அமீர்க முதலீட்டாளர்களின் கவலைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
உலக நிதி அமைப்புகளான ஐஎம்எப், உலக வங்கி உள்ளிட்டவை இந்தியாவின் வளர்ச்சி ஆதாரங்கள் குறித்து நம்பிக்கைக்குரிய கணிப்புகளை வெளியிட்டுள்ளது என்று பிரதமர் மோடி முதலீட்டாளர்களிடன் தெரிவித்தார்.
மேலும் பிரதமர் பேசும்போது, "இந்தியா வாய்ப்புகளுக்கான நாடு, 125 கோடி இந்திய மக்கள் என்பது சந்தை மட்டுமல்ல, பெரும்பலத்தின் ஆதாரம். எங்களுக்கு தொழில்நுட்பம், வேகம், தரமான கட்டுமானங்கள் தேவை. இதோடு குறைந்த விலை கட்டுமான வசதிகளும் எங்களுக்கு முக முக்கியமானது.
இந்தியாவின் வளர்ச்சி ஆதாரங்களும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பலம் இரண்டும் சேர்ந்து இந்த நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாகச் செய்ய முடியும். இந்தியாவில் 7 ஆண்டுகளில் 5 கோடி குறைந்த விலை வீடுகளைக் கட்ட திட்டமிட்டுள்ளோம்.
மேலும், சுற்றுலா என்ற பிரதேசத்தின் வருவாய் ஆதாரங்களை இந்தியா இன்னமும் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. உணவு விடுதிகள், உட்பட பலவற்றுக்கு இந்தியாவில் பெரும் வாய்ப்புகள் உள்ளன.
கடந்த ஆட்சியின் மந்தத் தன்மை, தீர்மானமின்மை ஆகியவற்றால் தடைபட்டுப்போன திட்டங்களை மீண்டும் தொடங்க முன்னுரிமை அளிக்க முடிவெடுத்துள்ளோம்.
அமீரக தொழிலதிபர்களுக்கு இந்தியாவில் ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய துறைகள் பெரிய முதலீட்டு வாய்ப்புகளை அளிக்கும், வேளாண் துறையில் எங்களுக்கு குளிர்பதன வசதி உள்ள கிட்டங்கிகள் தேவைப்படுகிறது. இந்த இடத்திலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீடு இந்தியாவுக்கு அவசியம் என்று உணரப்படுகிறது.
தற்போது இந்தியாவில் தீர்மானமான நிலையான ஆட்சி அமைந்துள்ளது, எனவே 34 ஆண்டுகால பற்றாக்குறையை ஈடுகட்டி விட முடியும் என்றே கருதுகிறேன்" என்றார் பிரதமர் மோடி.

Monday 17 August 2015

2 நாள் சுற்றுப்பயணமாக சென்றார் அபுதாபியில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு


2 நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு அபுதாபியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
26 லட்சம் இந்தியர்கள்வளைகுடா நாடான அமீரகம் (ஐக்கிய அரபு குடியரசு), இந்தியாவின் 3–வது பெரிய வர்த்தக கூட்டாளியாக இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டுக்கு 59 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3¾ லட்சம் கோடி) அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இங்குள்ள மக்கள் தொகையில் 30 சதவீதத்தினர், அதாவது 26 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர்.
இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட கால வர்த்தகம் மற்றும் சிறந்த நட்பு நீடித்து வரும் நிலையில், கடந்த 1981–ல் இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு வேறு எந்த இந்திய பிரதமரும் அங்கு பயணம் மேற்கொள்ளவில்லை.
பட்டத்து இளவரசர் வரவேற்புஇந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று அமீரகம் புறப்பட்டு சென்றார். 34 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்திய பிரதமரின் வரலாற்று சிறப்பு மிக்க இந்த சுற்றுப்பயணத்தை, இந்தியர்கள் மட்டுமின்றி அமீரக குடிமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
இதற்காக சிறப்பு விமானம் மூலம் அபுதாபி போய்ச்சேர்ந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பளத்துடன் கூடிய சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அபுதாபி பட்டத்து இளவரசரும், அமீரக பாதுகாப்பு படையினரின் துணை சுப்ரீம் கமாண்டருமான ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான், தனது 5 சகோதரர்களுடன் விமான நிலையத்தில் மோடியை வரவேற்றார்.
பள்ளிவாசலுக்கு சென்றார்அமீரகத்துக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை பட்டத்து இளவரசர் வரவேற்கும் மரபு இல்லை. ஆனால் அந்த மரபை மீறி பிரதமர் மோடியை, அபுதாபி பட்டத்து இளவரசர் வரவேற்றார். பின்னர் அதிபர் மாளிகையில் மோடிக்கு பாரம்பரிய முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமீரகத்தில் தனது முதல் நிகழ்ச்சியாக அபுதாபியில் உள்ள ஷேக் ஜாயித் கிராண்ட் பள்ளிவாசலுக்கு மோடி சென்றார். இந்தியாவின் தாஜ்மகாலை ஒத்திருக்கும் இந்த பள்ளிவாசல், உலகின் மிகப்பெரிய பள்ளிவாசல்களில் 3–ம் இடத்தில் உள்ளது. முகலாய கட்டடக்கலையில் கட்டப்பட்டிருக்கும் இந்த பள்ளிவாசலுக்கான மக்ரானா கற்கள் இந்தியா மற்றும் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இளவரசருடன் பேச்சுபின்னர் அமீரகத்தின் நவீன நகரங்களில் ஒன்றான மஸ்தார் நகருக்கு மோடி சென்றார். அங்கு அவர் உள்ளூர் வர்த்தக தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். இரவில் இந்திய தொழிலாளர்களை அபுதாபியில் சந்தித்து உரையாடினார்.
இதற்கிடையே அவர் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்துகின்றனர். இதில் வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு மற்றும் முதலீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் முக்கியமாக இடம் பெறுகிறது.
அரபு மொழியில் மோடி பாராட்டுஅபுதாபியில் தனக்கு வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்காக அமீரக மக்களுக்கு மோடி நன்றி தெரிவித்தார். டுவிட்டரில் அரபு மொழியில் எழுதியிருந்த அவர், ‘நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த பயணத்தால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுவடையும் என நம்புகிறேன்’ என்று கூறியிருந்தார். மேலும் விமான நிலையத்தில் தன்னை வரவேற்ற அபுதாபி பட்டத்து இளவரசரையும் அவர் பாராட்டினார்.
மோடியின் அமீரக பயணம், இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளை முன்னெடுத்து செல்வதற்கான திட்டங்களை வகுக்க சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக அமீரக வெளியுறவு மந்திரி ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான் கூறியுள்ளார்.
துபாய் செல்லும் பிரதமர்அபுதாபி நிகழ்ச்சிகளை முடித்து இன்று துபாய் செல்லும் பிரதமர் மோடி, அங்கு அமீரக துணை அதிபர் மற்றும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மேலும் அங்குள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இந்திய வம்சாவளியினரிடையே மோடி உரையாற்றுகிறார். இதில் பங்கேற்க சுமார் 50 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
மதிப்பு மிக்க பங்காளிமுன்னதாக அமீரக பயணம் தொடர்பாக அமீரகத்தில் வெளியாகும் ‘கலீஜ் டைம்ஸ்’ பத்திரிகைக்கு பேட்டியளித்த மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தை ‘இந்தியாவின் மதிப்புமிக்க பங்காளி’ என வர்ணித்தார். அவர் மேலும் கூறியதாவது:–
தீவிரவாதம், பிரிவினைவாதம் உள்ளிட்ட காரணங்களால் இந்த பிராந்தியத்தில் ஒரே மாதிரியான பாதுகாப்பு பிரச்சினைகளை நாம் சந்தித்து வருகிறோம். எனவே இந்தியாவும், அமீரகமும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
உறவுக்கு எல்லை இல்லைஇதே வழியில் தான் நான் அமீரகத்தை பார்க்கிறேன். இந்த வளைகுடா பிராந்தியம் இந்தியாவின் பொருளாதாரம், எரிபொருள் மற்றும் பாதுகாப்பு துறைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. அமீரகத்தை இந்தியாவின் முன்னணி வர்த்தகம் மற்றும் முதலீட்டு பங்காளியாக பார்க்க நான் விரும்புகிறேன்.
பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள வழக்கமான மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பை நாம் உருவாக்க வேண்டும். பிராந்திய மற்றும் சர்வதேச சவால்களை நாம் இணைந்து எதிர்கொள்ள வேண்டும். நமது உறவுக்கு எல்லையே இல்லை.
குட்டி இந்தியாஅமீரகத்தில் வாழும் இந்திய சமூகத்தினரை பொறுத்தவரை, இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தும் அமீரகத்திலும் பேசப்படுகின்றன. இதை பார்க்கும் போது ஐக்கிய அரபு அமீரகம் ஒரு குட்டி இந்தியா போல உள்ளது. இந்த வழியில் இரு சமூகத்தினரும் இணைந்து செயல்படுவது ஒரு சிறப்பு பிணைப்பை பிரதிபலிக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Sunday 16 August 2015

திருவாரூரில் ரூ. 1.67 கோடியில் நலத் திட்ட உதவிகள்


திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூ. 1.67 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், ஆட்சியர் எம். மதிவாணன் தேசியக் கொடியேற்றினார். பின்னர், போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக் கொண்டாரர். தொடர்ந்து, விழா பந்தலில் அமர்ந்திருந்த தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
 பின்னர், சிறப்பாக பணியாற்றிய 47 போலீஸாருக்கும், என்சிசி, என்எஸ்எஸ் மற்றும் அரசுப் பணியில் சிறப்பாக பணியாற்றிய 161 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.  இதையடுத்து, 3 பேருக்கு வன்கொடுமை தீருதவி தொகை, 40 பேருக்கு இலவச தையல் இயந்திரம், 4 பேருக்கு சலவைப்பெட்டி, 4 பேருக்கு வேளாண் இடுபொருள்கள் உதவி என மொத்தம் ரூ. 1.67 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முஸ்லிம்களுக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்க உ.பி. அரசு திட்டம்

உத்தரப் பிரதேத்தில் முஸ்லிம்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்க ஆளும் சமாஜ்வாதி கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சட்டப்பேரவை யின் நடப்பு கூட்டத்தொடரில் தீர் மானம் கொண்டுவந்து நிறைவேற்ற முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
நாட்டில் சிறுபான்மை முஸ்லிம் களின் நிலை அறிய முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது. இக்குழு, “பல்வேறு நிலைகளில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு 20 சதவீதம் வரை இட ஒதுக்கீடு அளிக்கலாம்” என பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில் உ.பி.யில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில், இந்தப் பரிந்துரையை நிறைவேற்றுவோம் என முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி வாக்குறுதி அளித்தது. எனினும் தேர்தலுக்குப் பின் முதல்வரான, முலாயமின் மகன் அகிலேஷ் சிங் இந்த வாக்குறுதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சச்சார் குழுவின் பரிந்துரையை காட்டி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க அகிலேஷ் முடிவு செய்துள்ளார். உ.பி. சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ள நிலையில், இதில் இடஒதுக்கீட்டு தீர்மானத்தை மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆசம்கான் கொண்டுவர இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ’தி இந்து’விடம் சமாஜ்வாதி கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூறும்போது, “உ.பி.யில் அரசு வேலைவாய்ப்புகள், கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து துறைகளிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு விடும் டெண்டர்கள் மற்றும் மாநில அரசின் திட்டங்களிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது” என்றனர்.
சச்சார் குழுவின் பரிந்துரை களை அமல்படுத்தும் முயற்சியில் மாநில சிறுபான்மையினர் நலத்துறை இறங்கியுள்ளது. இதன்படி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இத்துடன் முஸ்லிம் மாணவிகளுக்கு தனியான 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மேல்நிலைப் பள்ளிகளும் தொடங்கப்பட உள்ளன. இதில் ஆசிரியர்களாக பெண்கள் மட்டும் நியமிக்கப்பட உள்ளனர்.
உ.பி.யில் முலாயம் சிங், முஸ்லிம்களின் ஆதரவு பெற்றவர் என்பதை குறிப்பிடும் வகையில் ‘முல்லா முலாயம்’ என அழைக்கப்படுகிறார். இடையில் கடந்த 2009-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் பாஜக முன்னாள் தலைவர் கல்யாண்சிங்கை தமது கட்சியில் சேர்த்ததால் முஸ்லிம் வாக்குகளை இழந்தார். அடுத்து 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது கல்யாண்சிங்கை கட்சியில் இருந்து நீக்கியதுடன், அவரை கட்சியில் சேர்த்ததற்காக முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் சச்சார் குழுவின் பரிந்துரைகளை உ.பி.யில் அமல்படுத்துவதாக உறுதி அளித்தார்.
தற்போது உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி அடுத்த ஆண்டு முடிவுக்கு வருகிறது. எனவே வரும் சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க சமாஜ்வாதி அரசு முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.

Saturday 15 August 2015

மோதலுக்கான களமல்ல நாடாளுமன்றம்



""நாடாளுமன்றம் விவாதம் நடைபெறும் களமாக அல்லாமல், மோதலுக்கான களமாக மாறி வருகிறது; ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியைக் களைவதற்கான நடவடிக்கைகளை அரசியல் தலைவர்களும், அவர்கள் சார்ந்த கட்சிகளும் மேற்கொள்ள வேண்டும்'' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தினார்.
 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் எந்த அலுவல்களும் நடைபெறாமல் முடங்கிய சூழ்நிலையில், பிரணாப் முகர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்.
 நாட்டின் 69-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் ஆற்றிய உரையில் மேலும் கூறியதாவது:
 அரசியலமைப்பு அளித்த மிகப்பெரிய கொடை ஜனநாயகம். இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், நமது நாடாளுமன்றம் கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்ற ஜனநாயகம் நெருக்கடியில் உள்ளது. நாடாளுமன்றம், விவாதம் நடைபெறும் களமாக அல்லாமல் மோதல் நடைபெறும் களமாக மாறிவிட்டது.
 ஜனநாயகத்தின் வேர்கள் மிகவும் ஆழமானவை; ஆனால், அவற்றின் இலைகள் வாடத் தொடங்கிவிட்டன. அவற்றுக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டிய தருணம் இதுவாகும்.
 சமூக நல்லிணக்கத்தைப் பொருத்தவரை, இந்திய ஜனநாயகம் ஆக்கப்பூர்வமானது. சகிப்புத்தன்மை, பொறுமை ஆகியவற்றின் மூலம் அதற்கு ஊட்டமளிக்க வேண்டும்.
 பல நூற்றாண்டுகளாக மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்க நடந்த முயற்சிகள், முறியடிக்கப்பட்டு விட்டன. மக்களுக்கும் அரசுக்கும் நாட்டின் அரசமைப்புச் சட்டம் புனிதமானதாக விளங்குகிறது. ஆனால், சட்டத்தை விட மனிதநேயமே இந்தச் சமூகத்துக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.
 "மனிதநேயம் ஒரு பெருங்கடல் போன்றது; அதில் சில துளிகள் நஞ்சு விழுந்தாலும், பெருங்கடல் முழுவதும் நஞ்சாகி விடாது. எனவே, நீங்கள் மனிதநேயத்தில் நம்பிக்கை இழக்கக் கூடாது' என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்.
 ஆங்கிலேயர் காலத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கும், சவால்களுக்கும் இடையே, நமது கோட்பாடுகளை நமது முன்னோர்கள் காப்பாற்றினார்கள். ஒரு தேசம், அதன் கடந்த கால கோட்பாடுகளை மறந்தால், எதிர்காலத்துக்குரிய கோட்பாடுகளையும் இழந்துவிடும். ஒரு நாட்டின் வளர்ச்சியானது, சமூக மதிப்பீடுகளின் வலிமை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
 கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி, 2014-15-ஆம் நிதியாண்டில் 7.3 சதவீதத்தை எட்டியுள்ளது. எனினும், அதற்கான பலன்கள் செல்வந்தர்களை விட ஏழைகளை விரைவில் சென்றடைய வேண்டும்.
 கல்வி முறை: நமது கல்வி நிறுவனங்களின் தரம் கவலையளிக்கும் விதத்தில் உள்ளது. முன்னொரு காலத்தில் இருந்த குரு-சிஷ்ய முறையை நாம் நினைவுகூர வேண்டும். ஓர் ஆசிரியர், ஒரு மண்பாண்டக் கைவினைஞர் போல, தனது திறமைகளைப் பயன்படுத்தி மாணவர்களை உருவாக்க வேண்டும். ஆசிரியரின் தகுதிகளையும், திறமைகளையும் இந்த சமூகம் மதிப்பளித்து அங்கீகரிக்கிறது. ஆனால், நமது கல்வி முறையில் இன்று நடப்பது என்ன? ஆசிரியர்களும், மாணவர்களும், கல்வி நிறுவனங்களும் தங்களை சுயஆய்வு செய்துகொள்ள வேண்டும்.
 இயற்கையை மீறக்கூடாது: மனிதர்களுக்கும் இயற்கைக்குமான உறவு பாதுகாக்கப்பட வேண்டும். இயற்கையை மீறி செயல்படும்போதெல்லாம், மிகப்பெரிய அளவில் உயிரிழப்பும், பொருள் இழப்பும் ஏற்படுகிறது. 
 வெள்ள பாதிப்புகள் ஏற்படும்போது உடனடி நிவாரணம் தேவைப்படுகிறது. அதே நேரத்தில், தண்ணீர் தட்டுப்பாடு, வெள்ளம் ஆகியவற்றுக்கு நீண்ட கால தீர்வுகளையும் காண வேண்டும் என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் தெரிவித்தார்.
 "பயங்கரவாதிகளுக்கு அண்டை நாடுகள் இடம் கொடுக்கக் கூடாது'
 இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத சக்திகளை பயன்படுத்தவில்லை என்பதை அண்டை நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி கூறினார். அண்டை நாடான பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார்.
 அவர் மேலும் கூறியதாவது:
 நாம் அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் கரங்களை நீட்டும் வேளையில், வேண்டுமென்றே நமது பாதுகாப்பை சீர்குலைக்கும் செயல்களைக் கண்டு கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது. எல்லைகளுக்கு அப்பால் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்தியா இலக்காக உள்ளது. பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. பயங்கரவாதத்தைக் கருவியாக பயன்படுத்தும் முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதத்தை தூண்டும் சக்திகளுக்கு தக்க வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றார் அவர்.

தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருது; மத்திய அரசு அறிவிப்பு



,

சுதந்திர தினத்தையொட்டி போலீஸ் ஐ.ஜி.க்கள் அமரேஷ்பூஜாரி, சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்ட தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேர் ஜனாதிபதி விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக தீயணைப்புத்துறை இணை இயக்குனர் விஜயசேகரும் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

சிறப்பான பணிக்கு விருது

சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு ஜனாதிபதி விருதை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இன்று (சனிக்கிழமை) 69-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக போலீஸ் துறையைச் சார்ந்தவர்களுக்கு ஜனாதிபதி விருதினை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. விருது பட்டியலில் இடம் பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

ஐ.ஜி.க்கள்

1. அமரேஷ்பூஜாரி-சென்னை போலீஸ் அகாடமி ஐ.ஜி. 2. சந்தீப்ராய்ரத்தோர்-தமிழக போலீஸ் துறையைச் சேர்ந்த இவர், டெல்லியில் தேசிய பேரிடர் மீட்பு படை ஐ.ஜி.யாக பணியாற்றுகிறார். 3.சி.சுதர்சன்-துணை போலீஸ் சூப்பிரண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை. 4. ஆனந்த்குமார் சோமானி-மதுரை சரக டி.ஐ.ஜி. 5. ரமேஷ்-போலீஸ் சூப்பிரண்டு, சென்னை கமாண்டோ பயிற்சி பள்ளி. 6. ஜெயவேல்-தமிழ்நாடு சிறப்பு காவல்படை, கமாண்டண்ட், மணிமுத்தாறு. 7. மாரியப்பன்-கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மதுரை. 8. கஜேந்திரகுமார்-கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, சென்னை போலீஸ் பயிற்சி பள்ளி. 9. ஸ்ரீதர்பாபு-கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, சென்னை டி.ஜி.பி. அலுவலகம், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை. 10. டி.கே.நடராஜன்-கூடுதல் சூப்பிரண்டு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, திருச்சி. 11.எம்.சுருளிராஜா-துணை போலீஸ் சூப்பிரண்டு, காங்கேயம். 12. கே.மனோகரன்-துணை போலீஸ் சூப்பிரண்டு, நாமக்கல். 13. பி.ஜேசுஜெயபால்-மதுரை நகர போலீஸ் உதவி கமிஷனர். 14. ஞானசேகரன்-துணை சூப்பிரண்டு, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு பிரிவு. 15. அங்குசாமி-துணை போலீஸ் சூப்பிரண்டு, சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு. 16. உலகநாதன்-துணை போலீஸ் சூப்பிரண்டு, திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு. 17. தமிழ்செல்வன்-துணை போலீஸ் சூப்பிரண்டு, தஞ்சாவூர். 18. ஆறுசாமி-உதவி கமாண்டண்ட், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, போச்சம்பள்ளி. 19. டி.ரங்கசாமி-இன்ஸ்பெக்டர், சி.பி.சி.ஐ.டி. சென்னை. 20. சி.சிவன் அருள்-இன்ஸ்பெக்டர், மாநில உளவுப்பிரிவு, தஞ்சை. 21. சேகர்-இன்ஸ்பெக்டர், லஞ்சஒழிப்பு பிரிவு, சென்னை. 22. நடராஜன்-இன்ஸ்பெக்டர், தொழில்நுட்ப பிரிவு, சென்னை. 23. பி.சங்கர்லால்-இன்ஸ்பெக்டர், முதல்-அமைச்சர் பாதுகாப்பு பிரிவு, சென்னை. 24. பி.அப்பன்-சப்-இன்ஸ்பெக்டர், துடியலூர், கோவை. 25. ஜி.எழில்ராஜ்-சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்பு பிரிவு, சென்னை.

விஜயசேகர்

தீயணைப்புத்துறை இணை இயக்குனர் சுந்தரமூர்த்தி விஜயசேகர், சிறப்பான பணிக்காக ஜனாதிபதி விருது பெறுகிறார். தீயணைப்புதுறையைச் சேர்ந்த நிலைய அதிகாரி முத்தையா தியாகராஜன் மற்றும் வில்வதிரி நாதன், ஜெபமாலை குழந்தைராஜ் ஆகியோரும் ஜனாதிபதி விருது பெறுகிறார்கள்.

ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கம்பெனி கமாண்டர்கள் ராமன் லிங்கராஜ், தில்லை நடராஜன், ஏரியா கமாண்டர் சந்திரன் ஆர்.சித்ரா ஆகியோரும் ஜனாதிபதி விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.