Saturday 31 December 2016

2016 ம் ஆண்டு விடை பெற்றது 2017ம் பிறக்கிறது


பழைய ரூபாய் நோட்டுகள் குறித்த தகவலை வங்கிகள் தெரிவிக்க ஆர்பிஐ உத்தரவு

நவம்பர் 8-ம் தேதி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. பழைய நோட்டுகளை நவம்பர் 10-ம் தேதியில் இருந்து டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்வதற்காக 50 நாள் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்து.
நேற்றைய வங்கி நேர முடிவில் எவ்வளவு தொகை இருக்கிறது என்னும் தகவலை உடனடியாக இமெயில் மூலம் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளாது.
பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் தங்கள் கிளைகளில் எவ்வளவு பழைய நோட்டுகள் தொகை இருக்கிறது என்பதை ஒருங்கிணைத்து தகவல் தெரிவிக்க வேண்டும். தற்போது இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை இன்று (டிசம்பர் 31) ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். டிசம்பர் 31-ம் தேதிக்கு பிறகு பழைய நோட்டுகள் வங்கிகளின் வரவுகளில் இருக்க கூடாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

பாஸ்போர்ட் பெற எளிதாக்கப்பட்ட விதிமுறைகள்:



பாஸ்போர்ட் பெற சில விதிமுறைகள் கடுமையாக இருந்ததால் பொதுமக்கள் பாஸ்போர்ட் பெற மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சகம் இந்த விதிமுறைகளை தற்போது எளிமையாக்கி உள்ளது. இதன்படி, 1989-ம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் எடுக்க பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக இருந்தது. ஆனால், இனி அது தேவையில்லை. அதற்குப் பதிலாக தங்களது பிறந்த தேதி இடம் பெற்றுள்ள பள்ளிச் சான்றிதழ்கள், பான்கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இன்சூரன்ஸ் பாண்டுகள், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

அதேபோல், ஒற்றை பெற்றோர் உள்ள குழந்தைகள் மற்றும் தத்து குழந்தைகள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது தங்களது தந்தை, தாய் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர்கள் பெயர்களை குறிப்பிடுவதற்குப் பதிலாக ஒரு பெற்றோர் பெயர் மட்டும் குறிப் பிட்டால் போதுமானது. இதற்காக விண்ணப்பதாரர்கள் அளிக்க வேண்டிய பின்னிணைப்புகளில் (அனெக்சர்ஸ்) முன்பு நோட்டரி பப்ளிக், ஜுடிசியல் மாஜிஸ்திரேட் உள்ளிட்டோரின் சான்று அவசியமாக இருந்தது. இனி, விண் ணப்பதாரரே ஒரு வெள்ளைத் தாளில் ஒரு சுய கையொப்பம் (செல்ப் அட்டெஸ்டட்) இட்டு சமர்ப்பித்தால் போதுமானது.

மேலும், திருமணமானவர்கள் பாஸ்போர்ட் பெற திருமணச் சான்று சமர்ப்பிக்கத் தேவையில்லை. விவாக ரத்து பெற்றவர்கள் தங்களது விவாகரத்து சான்றிதழையும் சமர்ப்பிக்கத் தேவை யில்லை. அதற்கு பதிலாக விண்ணப்ப தாரர்களே சுய கையொப்பம் இட்ட சான்றிதழை அளித்தால் போதும். அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல தங்களது துறை உயர் அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ் பெற்று பாஸ்போர்ட் பெறுவது அவசியமாக இருந்தது. இனி அவர்கள் தங்களது துறைக்கு தகவல் மட்டும் தெரிவித்தால் போதுமானது.

பெற்றோரை இழந்து காப்பகத்தில் வசிக்கும் குழந்தைகள் பாஸ்போர்ட் பெற அந்தக் காப்பகத்தின் நிறுவனர் சான்றிதழ் அளித்தால் போதும். அதேபோல், சாதுக்கள், சன்னியாசிகள் பாஸ்போர்ட் பெற தங்களது ஆன்மிக குரு தரும் சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இவைகள் அனைத்தும் 2ம் ஜனவரி 2017 முதல் அமுலுக்கு வருகிறது என மத்திய வெளியுறவு துறை அறிவித்துள்ளது .

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா


அதிமுக பொதுச்செயலாளராக இன்று (சனிக்கிழமை) கட்சியின் தலைமை அலுவலகத்தில் சசிகலா முறைப்படி பொறுப்பேற்றார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்துக்கு வந்த அவர் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பொதுச்செயலாளர் அறைக்குச் சென்று அங்கு இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்துக்கும் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனையில் ஈடுபட்டார்..
அதைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதுடன், எம்ஜிஆர், அண்ணா நினைவிடங்களிலும் மரியாதை செலுத்தினார்.
பொதுக்குழுவில் தீர்மானம்:
அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா பொதுச் செயலாளராக முன்னிறுத்தப்பட்டார். வியாழக்கிழமை நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், தேர்தல் மூலம் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படும் வரை, சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்து, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Friday 30 December 2016

நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்

நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், வேளாண் இணை இயக்குனர் மயில்வாகனன், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாண்டியராஜன், வேளாண்மை அறிவியல் மைய தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-

சேகர்:- விவசாய பணிகளில் முழுமையாக போர்வெல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மின்சார கட்டணம் அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்.

பூமிநாதன்:- நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பாரபட்சமாக கடன் வழங்கப்படுகிறது. தகுதியுடைய விவசாயிகளுக்கு உடன் கடன் வழங்கிட வேண்டும்.

நிலத்தடி நீர்மட்டம்

சத்தியநாராயணன்:- நிலத்தடி நீரை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் எந்த அளவு குறைந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். விவசாய பம்புசெட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. விவசாயிகள் நலன் கருதி போதிய மின் இணைப்பு வழங்க வேண்டும்.

காவிரி ரெங்கநாதன்:- இந்த ஆண்டு வறட்சி ஏற்பட்டுள்ளதால் கோடை நெல் சாகுபடியை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். நெல்லுக்கு மாற்றாக உளுந்து, பயிர் சாகுபடி செய்ய வேண்டும். அப்போது தான் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும்.

மணி:- மன்னார்குடி மூலங்குடி கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் முறையாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து உரிய ஆய்வு செய்ய வேண்டும். விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் 100 நாள் வேலை திட்டப்பணிகளை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்.

பயிர்க்கடன்

ராமமூர்த்தி:- மத்திய கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். வைக்கோல் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் வெளி மாநிலங்களுக்கு வைக்கோல் கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும்.

தம்புசாமி:- கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 850 என்கிற தமிழக அரசு அறிவிப்பு போதுமானதாக இல்லை. அம்மையப்பன்-திருக்கண்ணமங்கை சாலையில் கனரக வாகனங்கள் அதிகமாக செல்வதால், பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

சுந்தரமூர்த்தி:- காவிரி நீர் கானல் நீராக மாறிவிட்டதால் இனி வருங்காலங்களில் இருக்கின்ற நிலத்தடி நீரை பயன்படுத்தி அதிக மகசூல் பெறும் சாகுபடி முறைகள் குறித்து வேளாண்மை துறை உரிய பயிற்சியை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் சமுதாய போர்செட்டுகளை அமைத்திட வேண்டும்.

ஆக்கிரமிப்புகள்

சேதுராமன்:- ஆக்கிரமிப்புகளை அகற்றி குளம், நீர் நிலைகளை தூர்வாரி மழை நீரை சேமிக்க வேண்டும். கஞ்சி தொட்டிகளை திறக்கின்ற நிலைக்கு விவசாயிகள் செல்லாத வகையில் தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

பாலகுமாரன்:- வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விலையில்லா உளுந்து, பயிறு வழங்க வேண்டும். புதுச்சேரி அரசு வழங்குவதுபோல் விலையில்லா மின் மோட்டார் வழங்க வேண்டும்.

மாசிலாமணி:- விவசாயிகள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். எலி தொல்லையை கட்டுப்படுத்திட வேண்டும்.

வடுகநாதன்:- ஆறு, ஏரி, குளங்களை தூர்வாரிட வேண்டும். குளங்களுக்கு செல்லும் வாய்க்கால்களை தூர்வாரிட வேண்டும். இவ்வாறு விவாதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த இன்று கடைசி நாள்

பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற மத்திய அரசு அறிவித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இன்று மாலை 4 மணிக்கு மேல் பழைய நோட்டுகளை வங்கிகளில் செலுத்த முடியாது.
நாடு முழுவதும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கம் செய்யப் படுவதாக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்றும் தெரிவித்தார். நவம்பர் 10-ம் தேதி முதல் வங்கிகளில் பழைய நோட்டுகளை பெற்றுக் கொண்டு, புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை வழங்கப்பட்டன. மேலும் பழைய நோட்டுகளை மருத்துவமனைகள், உள்ளாட்சி மற்றும் குடிநீர் வரி வசூல் மையங்கள், பெட்ரோல் நிலையங்கள் ஆகியவற்றில் செலுத்துவதற்கான அவகாசம், கடந்த 15-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
வங்கிகள், ஏடிஎம்களில் பணம் எடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெரும் பாலான ஏடிஎம்கள் மூடியே கிடப்பதால் மக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். புதிய ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகள் போதிய அளவு இருப்பில் உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும் வங்கிகளுக்கும் ஏடிஎம்களில் நிரப்பவும் போதிய அளவு புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி விநியோகிக்கவில்லை.
பழைய நோட்டுகளை வங்கியில் ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே செலுத்த முடியும் என்று கடந்த டிசம்பர் 20-ல் அறிவித்த மத்திய அரசு, பின்னர் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றது. இந்நிலையில் பழைய நோட்டுகளை வங்கிகளில் செலுத்துவதற்கான காலக்கெடு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.
இது தொடர்பாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவர் டி.தாமஸ் பிராங்கோ கூறும்போது, ‘‘வங்கிகளுக்கு பணம் கொடுப்பதை செவ்வாய்க்கிழமையே ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது. வங்கியில் டெபாசிட் செய்யப்படும் பணத்தை மட்டுமே இரு நாட்களாக வழங்கி வருகிறோம். பழைய நோட்டுகளை வங்கியில் செலுத்த இன்றே கடைசி. இன்று மாலை 4 மணிக்குமேல் பழைய நோட்டுகளை வாங்கக் கூடாது என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது’’ என்றார்.

தமிழகம் பேசியது 2016

நிறைகிறது 2016. வழக்கம்போல இந்த ஆண்டில் தமிழகம் பேசியது, சர்வதேச அளவில் அதிகம் கவனம் ஈர்த்த தருணங்கள், தேசிய அளவில் அதிகம் கவனம் ஈர்த்த முகங்களைப் பட்டியலிடும் 'தி இந்து'வின் வருடாந்திரச் சிறப்புப் பக்கங்கள் இன்று தொடங்குகின்றன. 'தி இந்து' ஆசிரியர் குழு எப்போதுமே ஏதோ ஒரு முத்திரை இடுவதுபோல 'இவைதான் முக்கியமானவை அல்லது கவனிக்கப்பட்டவை' எனும் தொனியில் பட்டியலிடுவது இல்லை என்பதை நம்முடைய வாசகர்கள் நன்கறிவார்கள்.
இன்றைய 'தமிழகம் பேசியது 2016' பட்டியலில் இடம்பெறாத, அதேசமயம் இந்திய அளவில் பேசப்பட வேண்டிய தமிழக ஆளுமைகள், நிகழ்வுகளை நாம் அடுத்தடுத்த நாட்களில் வரும் பதிவுகளில் பார்க்கவிருக்கிறோம். இந்தப் பதிவுகள், பட்டியல்களையெல்லாம் தாண்டியும் முக்கியமான நிகழ்வுகள், விஷயங்கள், மனிதர்கள் நிச்சயம் இருக்கலாம். அப்படியான விஷயங்களையும் பொதுவெளியின் கவனத்துக்குக் கொண்டுவருவதில்தான் ஒரு ஊடகம் எதிர்கொள்ளும் உண்மையான சவால். வழக்கம்போல் அந்தச் சவாலுக்கு நாம் ஒவ்வொரு நாளும் உயிர்ப்போடு முகங்கொடுக்கிறோம்!

ஜெயலலிதா | ஒரு சகாப்தம்

தமிழகத்தின் மூன்று தசாப்த அரசியலைத் தன்னை மையமிட்டுச் சுழல வைத்திருந்த நான்கு முறை முதல்வர் ஜெயலலிதா, டிசம்பர் 5 அன்று மறைந்தார். செப்.22 அன்று திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், 75 நாட்கள் போராட்டத்துக்குப் பின் உயிரிழந்தார்.
தமிழக மக்களால் பெரிய அளவில் நேசிக்கப்பட்ட, முக்கியமாகப் பெண்களால் ஆராதிக்கப்பட்ட, அவருடைய கட்சியினரால் வழிபடப்பட்ட தலைவர். கள்ளச் சாராய ஒழிப்பு, தொட்டில் குழந்தைத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், தமிழகத்தின் பிரத்யேகமான 69% இடஒதுக்கீடு நீதிமன்றத்தால் கேள்விக்குள்ளாக்கப்பட்டபோது, சட்டரீதியாக அதைப் பாதுகாக்க எடுத்த சட்ட நடவடிக்கை, உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கான 50% ஒதுக்கீடு, மாநிலங்களின் உரிமைக்காகத் தொடர்ந்து ஒலிக்கும் குரல்களில் ஒன்றாகத் தமிழகத்தைத் தக்கவைத்தது உள்ளிட்ட அவருடைய நடவடிக்கைகள் புரட்சிகரமானவை.
கட்சியையும் ஆட்சியையும் ஜனநாயகத்துக்கு அப்பாற்பட்ட ஒற்றைக் குரல் எதிரொலிப்பு அமைப்பாக மாற்றியது, இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு முதல்வராக ஆட்சியிலிருக்கும்போதே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை செல்லும் அளவுக்குத் தன்னைச் சுற்றி முறைகேடுகளுக்கு வழிவகுத்தது, மது விற்பனையை அரசின் கீழ் கொண்டுவந்து மது பெருக்கெடுத்து ஓட வித்திட்டது போன்ற அவருடைய நடவடிக்கைகள் மோசமானவை. ஒரு நபர் ராணுவம் என அதிமுகவை அவர் வழிநடத்தினார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்சியில் இருந்த ஒரு அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் நிலைக்கு அதிமுகவை இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அவர் உயர்த்தினார். ஏற்கெனவே மக்களவையிலும் 37 உறுப்பினர்களுடன் இருக்கிறது அதிமுக. அதிமுக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வலுவான இடத்தில் அதை அமரவைத்துவிட்டு, 'அடுத்து என்ன?' எனும் கேள்விச் சுழலுக்குள் கட்சியோடு சேர்த்து, தமிழக மக்களையும் தள்ளிவிட்டு விடைபெற்றுக்கொண்டார் ஜெயலலிதா!

ஓட்டுக்கு நோட்டு | ஒரு அவமானம்

தேர்தல் சமயத்தில், திருப்பூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி மூன்று கன்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.570 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல்செய்தார்கள். நள்ளிரவு நேரம், சுங்கச்சாவடியைத் தவிர்த்துவிட்டு, மாற்றுப் பாதையில் சென்ற அந்த லாரிகள், அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறிச் சென்றவை. விரட்டிப் பிடித்தார்கள் அதிகாரிகள். தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சமாகக் கொடுக்க ஆளுங்கட்சியினர் மூலம் கொண்டுசெல்லப்பட்ட பணம் இது என்று குற்றஞ்சாட்டினர் எதிர்க்கட்சியினர். ஆனால், இது வங்கிக்காக எடுத்துச் செல்லப்பட்ட பணம் என்று பின்பு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு. தொடர் நிகழ்வாக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது ஒரு பெரும் சர்ச்சையாகி, நாட்டிலேயே முதல் முறையாக தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்காக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இரு தொகுதிகளிலும் தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. தமிழகம் தலைகுனிந்து நின்றது!

மக்கள் நலக் கூட்டணி | ஒரு ஏமாற்றம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்த, 'மக்கள் நலக் கூட்டணி' உருவானது. 2016 சட்டசபைத் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்று எனும் குரலோடு உருவான இந்தக் கூட்டணி, பரவலான கவனத்தையும் புதிய நம்பிக்கைகளையும் உருவாக்கியது. தேர்தல் நெருங்கிய சூழலில், தேமுதிக, தமாகாவோடு கை கோத்து, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தபோது, நம்பிக்கையும் நம்பகத்தன்மையும் அடிவாங்கியது.
தேர்தலில் மோசமான தோல்வியை அடைந்தது மநகூ. இடதுசாரிகள் இடம்பெறாத முதல் சட்டசபை எனும் நிலை ஏற்பட்டது. தேர்தல் தோல்விக்குப் பின் விஜயகாந்தும், வாசனும் மநகூவுடன் உறவை முறித்துக்கொள்ள, கடைசியில் கூட்டணியின் அமைப்பாளரான வைகோவும் வெளியேற... மாற்று கோஷம் எழுப்பியவர்கள் முகத்தில் கரியைத் தடவிவிட்டு, தள்ளாடிக்கொண்டிருக்கிறது மநகூ.

ஜல்லிக்கட்டு | ஒரு தடை

2014-ல் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் விதித்த தடைக்குப் பிறகு, இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த அரசு கொண்டுவந்த அவசர ஆணைக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது 'பெடா' அமைப்பு. இதையடுத்து, அந்த ஆணைக்கும் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இந்த விவகாரத்தில் பின் சர்வதேச அரசியலும், சூழ்ச்சியும் இருப்பதாகப் பேசப்பட்டது. நாட்டு மாட்டினங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியே ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டங்கள் என்றது விவசாயிகள், சூழலியலாளர்கள் தரப்பு. தமிழ்ப் பண்பாட்டின் மீதான தாக்குதல் என்றது தமிழ் இன உணர்வாளர் தரப்பு. தமிழக அரசால் வேடிக்கை பார்ப்பதன்றி ஒன்றும் செய்ய முடியவில்லை.

தமிழக விவசாயிகள் | ஒரு தொடர் வதை

பருவ மழை பொய்த்ததால், தமிழக விவசாயிகள் கண்ணீர் விட்ட ஆண்டு இது. காவிரியில் தமிழக உரிமையை மறுதலித்தது கர்நாடக அரசு. தமிழக அரசால் அரசியல்ரீதியாகத் தீர்வுகாண முடியாத நிலையில், நீதிமன்றம் மூலமாகவே பிரச்சினையை அணுகியது. பெங்களூருவில் கலவரம் வெடித்தது. தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். கேபிஎன் நிறுவனத்துக்குச் சொந்தமான 42 பேருந்துகள் எரிக்கப்பட்டன. தமிழகத்துக்குத் தண்ணீர் தர உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தையும் நான்கு வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. முதலில் இதற்குச் சம்மதித்த மத்திய அரசு, பிறகு அந்தர்பல்டி அடித்தது. தொடர்ந்து நீதிமன்றப் படியேறிக் காத்திருக்கின்றனர் தமிழக விவசாயிகள்.
தமிழகத்தின் விளைநிலங்களின் வழி குழாய் பதிக்கும் 'கெயில்' நிறுவனத் திட்டத்துக்கு எதிரான வழக்கிலும் தமிழக விவசாயிகளால் வெற்றி பெற முடியவில்லை. இயற்கை ஒருபுறம், அரசியல் ஒருபுறம் என வதைக்க அதிர்ச்சியும் மனவேதனையும் தாங்காமல் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். பயிர்கள் கருகியதைப் பார்த்து மனமுடைந்து மாரடைப்பால் காலமான விவசாயிகளின் எண்ணிக்கை 30-ஐத் தாண்டியது. தமிழக விவசாயிகள் கண்ணீரில் தத்தளித்த ஆண்டு இது!

ராம்குமார் | ஒரு மர்மம்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், பட்டப் பகலில் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டார் இளம்பெண் சுவாதி. நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், தமிழகக் காவல் துறையினரைக் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. விரைவில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ராம்குமாரைக் கைதுசெய்து, குற்றவாளி என்று மக்கள் முன் நிறுத்தினர் காவல் துறையினர். சுவாதி, ராம்குமார் இருவர் தொடர்பிலும் தனித்தனியே பல கதைகள் பரப்பப்பட்ட நிலையில், திடீரென ராம்குமார் இறந்தார். சிறையில் மின் கம்பியை இழுத்து, தன் பற்களால் கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். ஒரு கொலை வழக்கு ஏராளமான மர்ம முடிச்சுகளோடு முடிந்தது.

வழக்கறிஞர்கள் போராட்டம் | ஒரு முற்றுகை

சென்னை உயர் நீதிமன்றம், வழக்கறிஞர் சட்டம் 1961 பிரிவு34(1)-ல் பல்வேறு புதிய திருத்தங்களை அறிவித்ததுப் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதன்படி, நீதிபதிகளை முற்றுகையிடுவது, நீதிமன்ற வளாகத்துக்குள் ஊர்வலம் நடத்துவது, நீதிமன்ற அறைக்குள் முழக்க அட்டைகளைப் பிடிப்பது, நீதிபதிகளை முறைத்துப் பார்ப்பது, குரல் உயர்த்திப் பேசுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவது குற்றம். சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களைச் சம்பந்தப்பட்ட நீதிபதிகளே தண்டிக்கலாம். வழக்கறிஞர் தொழில் செய்ய தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தடை விதிக்கலாம்.
இந்தப் புதிய விதிமுறைகளைக் கண்டித்து காலவரையறையற்ற போராட்டத்தில் குதித்தனர் வழக்கறிஞர்கள். "ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் நீதிபதிகளின் பெயர்களை வெளியிட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையில் வழக்கறிஞர் பேரணி நடைபெற்றதே இந்த விதிமுறைகளுக்குக் காரணம்" என்று குற்றஞ்சாட்டிய வழக்கறிஞர்கள், இது மோசமான ஒடுக்குமுறைக்கு வித்திடும் என்றார்கள். தொடர் போராட்டத்தின் விளைவாக, இந்த சட்டத் திருத்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அமைதி திரும்பியது.

மதுவிலக்கு | ஒரு போராட்டம்

காந்தியர் சசிபெருமாள் கடந்த ஆண்டு தன்னுடைய தியாகத்தின் வழி ஏற்றிவைத்த மதுவிலக்குப் போராட்ட நெருப்பு தமிழகத்தைச் சூழ்ந்தது. எல்லாக் கட்சிகளும் இந்த முறை தேர்தலில் மதுவிலக்கை முன்மொழியும் சூழல் உருவானது. மதுவுக்கு எதிரான போராட்டங்களைக் கடுமையாக ஒடுக்கிய ஜெயலலிதாவே, ஒருகட்டத்தில் மதுவிலக்கு வாக்குறுதியை அளித்தார். மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் 500 மதுக் கடைகளை முதல் கட்டமாக மூடினார். படிப்படியான முழு அடைப்புக்கு மக்கள் குழுக்கள் தொடர்ந்து குரல் கொடுத்தவண்ணம் இருக்கின்றன.

பியூஸ் மானுஷ் | ஒரு போராளி

தனி ஒருவரின் விடுதலைக்காக எந்தவித எதிர்பார்ப்புமின்றி தமிழகமே கொந்தளித்தது. சமூக வலைதளங்களிலும் ஆதரவுக் குரல்கள் அலறின. ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவரான பியூஸ் மானுஷ், 2010-ல் சில சூழலியல் நண்பர்களுடன் கரம்கோத்து 'சேலம் சிட்டிசன் ஃபோரம்' இயக்கத்தைத் தொடங்கியவர். கஞ்சமலை சட்ட விரோத சுரங்கத் தொழிலை எதிர்த்தவர். நீர்ப் பிடிப்புப் பகுதியான கவுத்திமலை, கல்வராயன் மலையைத் தகர்த்து, இரும்பை எடுக்க முயன்ற பெருநிறுவனத்தை விரட்டியவர். கூட்டுறவுக் காடுகள் திட்டத்தைத் தொடங்கி, அங்கு 100 ஏக்கரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு, ஒரு தனிக் காட்டையே உருவாக்கியவர்.
விஷ்ணுப்ரியா மரணம் தொடர்பான விசாரணையில் மெத்தனம் காட்டிய சேலம் காவல் துறையினரைக் கண்டித்துத் தொடர்ந்து போராடியவர். நேரம் பார்த்து பியூஸ் மானுஷைக் கைதுசெய்தனர் காவலர்கள். மக்கள் ஆதரவோடு எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு வெளிவந்தார் மானுஷ்.

மாரியப்பன் | ஒரு தங்கத் தருணம்

உயரம் தாண்டுதலில் மாற்றுத்திறனாளிகளின் உலக சாம்பியனான அமெரிக்க வீரர் சாம் கிரீவ்வை பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தோற்கடித்து, உலக சாதனையை நிகழ்த்தினார் மாரியப்பன். ஐந்தாவது வயதில் ஒரு விபத்தின் விளைவாக மாற்றுத்திறனாளியான மாரியப்பன், சேலம் பெரியவடகன்பட்டியைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்து மிகுந்த போராட்டங்களினூடே வந்தவர். தன்னுடைய தன்னம்பிக்கையின் விளை வாக அவர் வென்ற தங்கம், நாட்டின் மக்கள்தொகையில் 2.13% அளவுக்கு விரிந்திருக்கும் கோடிக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்குள்ளும் நம்பிக்கை, பெருமிதச் சிறகுகளை விரித்தது!

ஆணவக் கொலைகள் | ஒரு சமூகக் குற்றம்

சமூகநீதி காக்கும் மாநிலம், பெரியார் மண் என்றெல்லாம் வெளியே சொல்லிக்கொண்டாலும், தமிழகத்தின் உள்ளே நாளுக்கு நாள் வெறித்தன மாக வளர்ந்துகொண்டிருக்கிறது சாதியம். அடக்குமுறை களின் உச்சம் சாதி ஆணவக் கொலைகள். உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சங்கர், அவருடைய காதல் மனைவி கௌசல்யா இருவரும் கடைவீதியில், பகலில் பலர் பார்க்க ஆதிக்கச் சாதியினரால் வெட்டப்பட்டதையும் சங்கர் கொல்லப்பட்டதையும் கேமரா பதிவின் வழி பார்த்த தமிழகம் உறைந்தது. 2016-ல் மட்டும் 40-க்கும் மேல் ஆணவக் கொலைகள் தமிழகத்தில் நடந்ததாகச் சொல்கிறார்கள் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள். சாதி ஒழிப்பு முழக்கத்துக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது!

தமிழ்நாடு 60 | ஒரு வரலாற்று மறதி

தொல்காப்பிய காலத்திலேயே, 'தமிழ்கூறு நல்லுலகம்...' என்றழைக்கப்பட்ட நம் மண் சேர, சோழ, பாண்டியர் காலமானாலும் சரி, அதற்கும் முந்தைய காலமானாலும் சரி; ஒரு எல்லைக்குட்பட்ட இந்நிலத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அத்தனை பேரையும் உள்ளடக்கிய ஒரே பிராந்தியமாக இருந்ததில்லை. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் நிர்வாக வசதிக்காக மதராஸ் மாகாணமாக இருந்தபோதும்கூட, இன்றைய ஆந்திரம், கர்நாடகம், கேரளத்தின் பல பகுதிகளை உள்ளடக்கியதாகவே அது இருந்தது. பின்னாளில் அண்ணாவால் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நம் நிலம் முன்னதாக 1956, நவம்பர் 1 அன்று நம் நிலம் தமிழ் மாநிலமானது பெருமிதத்துக்குரிய வரலாற்று நிகழ்வு. மொழிவாரி மாநிலம் உருவானதன் ஆண்டு விழாவை ஏனைய எல்லா மாநிலங்களும் கொண்டாடியபோது, எதிர்க்கட்சிகள் இதை நினைவூட்டியபோதும் தமிழக அரசு கொண்டாட மறுத்தது; தமிழ் மக்களும் மறந்தோம்!

தேவிபாரதி | ஒரு எழுச்சி

இந்த ஆண்டு தனது படைப்புகளின் மூலம் வாசிப்பனுபவத்துக்குப் புதிய பரிமாணம் சேர்த்தார் தேவிபாரதி. சமகால அபத்தங்களை அவல நகைச்சுவையுடன் வெளிப்படுத்திய 'நட்ராஜ் மகராஜ்' நாவல், அதன் உள்ளடக்கத்துக்காகவும் சொல்லப்பட்ட முறைக்காகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 'கறுப்பு வெள்ளைக் கடவுள்' சிறுகதைத் தொகுப்பும் பரவலான கவனத்தை ஈர்த்தது. தேவிபாரதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கத் தொகுப்பான 'ஃபேர்வல் மகாத்மா' நூல் கிராஸ்வேர்ட் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றது. மோசமான சாலை விபத்தில் சிக்கி, மீண்டு வந்த தேவிபாரதி, தன்னுடைய எழுத்துகளால் காலத்தைத் திருப்பியடிக்க ஆரம்பித்த முக்கியமான ஆண்டு இது.

சுசீந்திரன் | ஒரு நம்பிக்கை

தலித் மாணவர்கள் எதிர்கொள்ளும் சாதிய அடக்குமுறையை வலியுடன் பேசிய 'மாவீரன் கிட்டு' படத்தின் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்தார் சுசீந்திரன். முன்னதாக, கிரிக்கெட் தேர்வில் நிலவும் சாதியப் பாகுபாட்டைக் கடுமையாகச் சாடும் 'ஜீவா' படமே தமிழ்த் திரையுலகுக்கு ஆச்சரியமான வருகை. "ரஜினியின் 'கபாலி' தலித் அரசியல் பேசும் படமா?" எனும் விவாதம் இந்த ஆண்டில் பெரிய அளவில் பேசப்பட்டது என்றாலும், சாதிய அடக்குமுறைக்கு எதிராகத் தயக்கமின்றி வெளிப்படையாக உரக்கப் பேசுவதில் 'கபாலி'யைப் பின்னுக்குத் தள்ளினான் 'மாவீரன் கிட்டு'. பார்வையாளர்களின் மனசாட்சியை உலுக்கினான். வெகுஜன சினிமாவின் எல்லைக்குள் தொடர்ந்து வெவ்வேறு களங்களில் களமாடுவதன் மூலம் தமிழ்த் திரையின் எல்லைகளை விரிக்கிறார் சுசீந்திரன்.

வார்தா | ஒரு பேரிடர்

கடந்த ஆண்டு பெய்து கெடுத்த மழை, இந்த ஆண்டு பெய்யாமல் கெடுத்தது. கூடவே, அழையா விருந்தாளியாக வந்த 'வார்தா' புயல் தலைநகரைப் புரட்டிப்போட்டது. கால் நூற்றாண்டுக்குப் பின் சென்னை எதிர்கொண்ட பெரும் புயல் இது. சென்னையின் நுரையீரலாகத் திகழ்ந்த மரங்களில் ஒரு கணிசமான பகுதியைச் சூறையாடியது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல்லாயிரம் கோடி அளவுக்குச் சேதம் ஏற்பட்டது. புறநகரில் ஒரு வாரத்தைக் கடந்தும் மின், குடிநீர் விநியோகம் மீளாச் சூழல். பேரிடர்களை எதிர்கொள்ள நாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்று சுட்டிக்காட்டிச் சென்றது 'வார்தா' புயல்.

சசிகலா | ஒரு புதிய அதிகார மையம்

அதிமுகவின் 'நிரந்தரப் பொதுச்செயலாளர்' என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா மறைவின் தொடர்ச்சியாக, அவருடைய அணுக்கத் தோழியான சசிகலாவின் கைக்கு வந்தது கட்சி. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியில் ஓ.பன்னீர்செல்வத்தை அமர்த்தியவர், பொதுச்செயலாளர் பதவி தன்னை நோக்கி வருமாறு பார்த்துக்கொண்டார். மேல் மட்டத்தில் கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லாமல் கட்சியைத் தன் வசப்படுத்திவிட்ட அவர், அடுத்து ஆட்சியையும் வசப்படுத்துவார் என்கிறார்கள்.

Thursday 29 December 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 29/12/2016

 இன்னா  லில்லாஹி  வஇன்னா  இலைஹி  ராஜிவூன் "


நமதூர்   நடுத்தெரு  சர்மிளா சவுன்டு  சர்வீஸ்  அ. மீ. அ. அஸ்ரப் அலி ( சேட்டு )  அவர்கள்  (29-12-2016)  இன்று  மௌத்தாகி விட்டார்கள் .


அன்னாரின்  மறுமைக்காக  துஆச்  செய்யவும் .

Wednesday 28 December 2016

மின்னணு கட்டண பரிவர்த்தனை குறித்த சந்தேகங்களுக்கு தெளிவு பெற விரைவில் 14444 என்ற உதவி எண் அறிவிப்பு

மின்னணு கட்டண பரிமாற்றம் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு பெற  14444 என்ற இலவச உதவி எண்களை ஐடி துறை அமைப்பான நாஸ்காம், தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் நிதி ஆயோக் ஒருங்கிணைந்து விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிஜிட்டல் பணபரிவர்த்தனை தொடர்பான முதல் அமைச்சர்கள் குழுவின் நான்காவது கூட்டம் நடைபெற்றது. இதன் ஒருங்கிணைப்பாளர் சந்திரபாபு நாயுடு பின்னர் கூறுகையில், “ நாடு முழுவதும் ரொக்கமில்லா பணபரிவர்த்தனைக்கு ஆயத்தமாகும் வகையில், ஒருலட்சம் பி.ஓ.எஸ் இயந்திரங்கள் இறக்குமதி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது” என்றார். 

நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனாகாரியா கூறுகையில், “ டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவு பெற ஐடி துறை அமைப்பான நாஸ்காம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் அரசு தொலைபேசி எண்ணை உருவாக்கி வருகிறது. உதவி எண்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.  

Monday 26 December 2016

பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு டிசம்பர் 30-க்கு பிறகும் தொடரும்?

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. 50 நாட்களுக்குள் நிலைமை சரியாகவிடும் என மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் டிசம்பர் 30-ம் தேதிக்கு பிறகும் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தையின் தேவைக்கு ஏற்ப ரிசர்வ் வங்கியால் புதிய நோட்டு களை அச்சடிக்க முடியவில்லை. பெரும்பாலான வங்கியாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு கள் தொடரும் என்றே தெரிவித் திருக்கிறார்கள். ஒரு வாரத்துக்கு அதிகபட்சம் 24,000 ரூபாய் பணம் எடுக்கலாம். ஆனால் சில வங்கி களில் இந்தத் தொகையை கூட விநியோகம் செய்ய முடியாத சூழல் இருக்கிறது.
இந்த நிலையில் தற்போதைய விதிமுறைகளை தளர்த்தினால் கூட வங்கிகளால் கூடுதல் தொகையை விநியோகம் செய்ய முடியாத சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகும். அதனால் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு முழுமையாக விலக்கிக்கொள்ள வாய்ப்பு இல்லை. பணப்புழக்கம் அதிகரித்தால்தான் அது குறித்த முடிவு எடுக்கப்படும் என பொதுத்துறை வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களையே சமா ளிக்க முடியாத சூழல் இருக்கும் போது, நடப்பு கணக்கு மற்றும் பெரிய கார்ப்பரேட் கணக்குகளை எப்படி சமாளிக்க முடியும். இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த் தப்படும் என்றும் அவர் கூறினார்.
வங்கிகளுக்கு வரும் பணம் அதிகரிக்காத வரையில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு நீக்கப் பட வாய்ப்பு இல்லை என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, வங்கிகளில் இருந்து ஒரு வாரத்தில் 24,000 ரூபாய் எடுக்க முடியும். ஏடிஎம் மையங்களில் இருந்து ஒரு நாளைக்கு 2,500 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாடு எப்போது விலக்கப்படும் என்று மத்திய அரசோ அல்லது ரிசர்வ் வங்கியோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
முன்னதாக டிசம்பர் 30-ம் தேதி பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு கள் குறித்து மத்திய அரசு பரி சீலனை செய்யும் என நிதி செயலாளர் அசோக் லவாசா கூறியிருந்தார்.
பணம் எடுப்பதற்கான கட்டுப் பாடு உடனடியாக நீக்குவதற்கான வாய்ப்பு குறைவு என வங்கி பணியாளர்கள் சங்கமும் தெரிவித் திருக்கிறது. பணம் வங்கிகளுக்கு எவ்வளவு வருகிறது என்பது அனை வருக்கும் தெரியும். அதனால் இப் போதைக்கு கட்டுப்பாடுகள் நீங்க வாய்ப்பு இல்லை என அனைத் திந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹர்விந்தர் சிங் கூறினார்.
பணமதிப்பு நீக்கம் செய்யப் பட்டதால் ரூ.15.4 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் மதிப்பிழந்தன. இதில் ரூ.12.4 லட்சம் கோடி நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.5.92 லட்சம் கோடி புதிய நோட்டுகளை ( நவம்பர் 9 முதல் டிசம்பர் 19 வரை) ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டுள்ளது.

Sunday 25 December 2016

வங்கிகளில் பணத்தட்டுப்பாடு: பரிதவிக்கும் பொதுமக்கள் களைகட்டாத பண்டிகைகள்

வங்கிகளில் நிலவும் பணத்தட்டுப்பாடு பிரச்சினையால் எதிர்வரும் நாட்களில் பண்டிகைகளை எவ்வாறு கொண்டாடப் போகிறோம் என்ற கவலை பொதுமக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியிட்டு 45 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நீங்கவில்லை. நாட்கள் செல்லச் செல்ல இப்பிரச்சினை தீரும் என பொதுமக்கள் நினைத்தனர். ஆனால், எதிர்பார்த்தபடி பிரச்சினை இன்னும் தீரவில்லை.
இந்நிலையில், வரும் நாட்களில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பணத் தட்டுப்பாடு பிரச்சினையால் பண்டிகை களை எவ்வாறு கொண்டாடப் போகிறோம் என்ற கவலை அவர்கள் மனதில் ஏற் பட்டுள்ளது.
இதுகுறித்து, பொதுமக்கள் சிலர் கூறியதாவது: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கு பத்து, பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே துணிமணிகள் உள்ளிட்டவற்றை வாங்குவோம். ஆனால், தற்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், புத்தாண்டு தினத்தன்று வீட்டுக்குத் தேவையான டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்கள் சிறப்புத் தள்ளுபடியில் கடைகளில் விற்பனை செய்யப்படும். வருடம்தோறும் இவ்வாறு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்குவோம். ஆனால், இந்த ஆண்டு இப்பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Saturday 24 December 2016

மலேசியாவில் பேருந்து விபத்து

...

ஜோஹேரிலிருந்து கோலாலாம்பூர் சென்ற பேருந்து மூவார் அருகே அதிவேகமாக சாலையில் உருண்டு பள்ளத்தில் விழந்ததில் 14 பேர்கள் உயிழிந்தார்கள். இதில் திருச்சியை சேர்ந்த அப்துல்லா ஹாதி அவர்களும் ஓருவர்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜூவூன்...

Friday 23 December 2016

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி


தமிழ்நாட்டின் திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 2017-2018-ஆம் ஆண்டிற்கான நிரப்பப்பட உள்ள 97 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 97

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Professor

1. English - 01
2. Life Sciences - 01
3. Media & Mass Communication - 01
4. Social Work - 1
5. Tamil - 01
6. Computer Science - 01
7. Epidemiology & Public Health - 01
8. Material Science - 01
9. Applied Psychology - 01
10. Commerce - 01
11. Geography - 01
12. History - 01
13. Library and Information Sciences - 01
14. Management - 01
15. Microbiology - 01
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தரஊதியம் ரூ.10,000
பணி: Associate Professor
1. Chemistry - 02
2. Economics - 01
3. Life Sciences - 02
4. Mathematics - 02
5. Media & Mass Communication - 02
6. Physics - 01
7. Social Work - 1
8. Tamil - 01
9. Computer Science - 02
10. Education - 01
11. Epidemiology & Public Health - 02
12. Hindi - 01
13. Material Science - 01
14. Applied Psychology - 02
15. Commerce - 02
16. Geography - 02
17. History - 02
18. Library and Information Sciences - 02
19. Management - 02
20. Microbiology - 02
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.9,000
பணி: Assistant Professor
1. Chemistry - 02
2. Economics - 03
3. English - 01
4. Life Sciences - 02
5. Mathematics - 02
6. Media & Mass Communication - 01
7. Physics - 03
8. Tamil - 02
9. Epidemiology & Public Health - 04
10. Material Science - 01
11. Applied Psychology - 04
12. Commerce - 04
13. Geography - 04
14. History - 04
15. Library and Information Sciences -04
16. Management - 04
17. Microbiology - 04

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000

தகுதி: இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்க

தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.500.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:


Recruitment Cell
Central University of Tamil Nadu
Neelakudi Campus, Kangalanchery Post
Thiruvarur – 610 005, Tamil Nadu

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2017

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேத

தமிழக அஞ்சல் வட்டத்தில் பணி: ஜனவரி 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையின் தமிழக அஞ்சல் வட்டத்தில் 2017-ஆம் ஆண்டிற்கான 8 ஸ்கில்டு பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் சான்றிதழ் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Copper & Tinsmith  (Skilled) - 02
பணி: M.V.Electrician(Skilled) - 02
பணி: M.V.Mechanic (Skilled) - 01
பணி: Upholsterer (Skilled) - 01
பணி: Welder  (Skilled) - 01
பணி: Carpenter (Skilled) - 01
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் சான்றிதழ், பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின் படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5400 - 20,200 + தர ஊதியம் ரூ.1900
தேர்வு செய்யப்படும் முறை: துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை இந்திய அஞ்சல் வில்லையாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Senior Manager, Mail Motor Service, No.37 (Old No.16/1) Greams Road, Chennai – 600 006”
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.01.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2017 பிப்ரவரி, மார்ச் மாதங்களில்
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tamilnadupost.nic.in/rec/SkilledTradesman.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Monday 19 December 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 19/12/2016

இன்னா லில்ஹாஹி வ இன்ன இலைஹி ராஜுஹீன் 52பணப் பகுதியில் k p சாகுல் ஹமீது தகப்பனார்  காதர் மெய்தீன் அவர்கள் மௌத்

Sunday 18 December 2016

ஹஜ் 2017- விண்ணப்பம் துவக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கும் நாள் *02-01-2017* முதல்  *24-01-2017* வறை நடைபெற உள்ளது. ஹஜ் கமிட்டியில் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து அல்லது ஆன்லைனில் வழங்கி பயணாளிகள் பயன்பெற வேண்டுகிறேன். மேழும் மற்றவர்களுக்கும் தெரியபடுத்தவும்.
*தகவல் தொடர்புக்கு:-*
செயலாளர்,
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி,
ரோசி டவர்,
13,மாஹாத்மா காந்திரோடு,
(நுங்காம்பாக்கம் ஹை ரோடு)
சென்னை-600 034.
Phone: 044-28227617
             044-28252519
Fax:      044-28276980

Email: tnhajji786@bsnl.in
tnshc.chennai@gmail.com
Web:  www.hajjtn.com



Saturday 17 December 2016

வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை வாய்ப்பு

வடகிழக்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம், ''தாய்லாந்து அருகே நேற்று மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி இருந்தது. இது மேலும் வலுப்பெற்று, மியான்மர் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவி வருகிறது. இது விரைவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது. இதன் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 'வார்தா' புயல் அரபிக் கடலுக்குச் சென்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த நிலையில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற வாய்ப்புள்ளது. இதன் போக்கும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில், வடகிழக்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை ஒருசில இடங்களில் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் இருக்கும்'' என்று தெரிவித்துள்ளது.

Friday 16 December 2016

10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை தேர்வுத் துறை இயக்ககம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது.
அதன்படி 10-ம் வகுப்புக்கு மார்ச் 8-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி மார்ச் 30-ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. அனைத்து தேர்வுகளும் காலை 9.15 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிக்கு முடிவடைகிறது. இதில் 9.15 மணி முதல் 9.25 மணி வரை மாணவர்களுக்கு வினாத்தாளை வாசிக்க நேரம் ஒதுக்கப்படுகிறது. 9.25 முதல் 9.30 மணி வரை மாணவர்கள் அடையாளம் சரிபார்க்கப்படுகிறது. 9.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி மார்ச் 31-ம் தேதி முடிவடைகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. இதில் காலை 10 மணி முதல் 10.10 மணி வரை மாணவர்கள் கேள்வித்தாளை படிக்க ஒதுக்கப்படுகிறது. காலை 10.10. முதல் 10.15 வரை மாணவர்களின் அடையாளங்கள் சரி பார்க்க ஒதுக்கப்பட்டுள்ளது. 10.15 மணி முதல் 1.15 வரை மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

+2 தேர்வுகள்
02.03.17 - வியாழன் - தமிழ் முதல் தாள்
03.03.17 - வெள்ளி -  தமிழ் இரண்டாம் தாள்
06.03.17 - திங்கள் - ஆங்கிலம் முதல் தாள்
07.03.17 - செவ்வாய்  -  ஆங்கிலம் இரண்டாம் தாள்
10.03.17 - வெள்ளி - வணிகவியல் /  மனையியல் / புவியியல்
13.03.17 - திங்கள் - வேதியியல் / கனக்குப் பதிவியியல்
17.03.17 - வெள்ளி - தகவல் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்) / இந்திய கலாச்சாரம் / கணிப்பொறி அறிவியல் / உயிர் வேதியியல் / மேம்படுத்தப்பட்ட மொழிப்பாடம் (அட்வான்ஸ்ட் லாங்க்வேஜ்க் தமிழ்)
21.03.17 - செவ்வாய் - இயற்பியல் / பொருளியல்
24.03.17 - வெள்ளி - தொழில் கல்வி தியரி / அரசியல் அறிவியல் /  செவிலியர் கல்வி (பொது) / புள்ளியியல்
27.03.17 - திங்கள் - கணிதம் / விலங்கியல் /  நுண்ணுயிரியியல் / ஊட்டச்சத்து மற்றும் உணவியல்
31.03.17 - வெள்ளி - உயிரியால் / வரலாறு / தாவரவியல் / வணிக கணிதம்
எஸ்.எஸ்.எல் சி
08.03.17 - புதன் - தமிழ் முதல் தாள்
09.03.17 - வியாழன் - தமிழ் இரண்டாம் தாள்
14.03.17 - செவ்வாய் - ஆங்கிலம் முதல் தாள்
16.03.17 - வியாழன் - ஆங்கிலம் இரண்டாம் தாள்
20.03.17- திங்கள் - கணிதம்
23.03.17 - வியாழன் - அறிவியல்
28.03.17 - செவ்வாய் - சமூக அறிவியல்
30.03.17 - வியாழன் - மொழி (விருப்பத் தேர்வு) 

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரூம் ,முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் உடல்நலம் பற்றி காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சளித் தொற்று மற்றும் நுரையீரல் செயல்பாட்டில் பாதிப்பு காரணமாகக் கருணாநிதிக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

எனினும் கருணாநிதியின் உடல்நலம் இயல்பாக உள்ளதென்றும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday 13 December 2016

மீலாது பெருவிழா


வர்தா புயல் வலுவிழந்து தருமபுரி அருகே 40 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது: வானிலை ஆய்வு மையம்

வர்தா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தருமபுரி அருகே நகர்ந்து 40 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான வர்தா புயலால், நேற்று மதியம் 11 மணி முதல் இரவு 8 மணி வரை பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக, பல கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் பிய்த்தெறியப்பட்டன. மேற்கூரைகள் காற்றில் பறந்தன. ஆயிரக்கணக்கில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. வீடுகளில், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, கார், வேன் போன்ற பல வாகனங்கள் மரங்கள் விழுந்ததால் நொறுங்கி சின்னாபின்மானது. மேலும் மரங்கள் கட்டடங்கள் மீது விழுந்ததில் சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுந்தன.வீடுகளில் இருந்த நீர்த்தேக்க தொட்டிகள், பழைய கட்டடங்கள் பலவும் பலத்த காற்றால் இடிந்து விழுந்தது.
192 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய கடுமையான சூறைக் காற்று காரணமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், மின்கம்பிகள் அறுந்தும், மின்மாற்றிகள் முறிந்து விழுந்தன. கம்பங்கள் விழுந்ததில் கேபிள் டிவி ஒயர்களும் அறுந்து நகரின் பல பகுதிகளில் சாலைகள், கட்டடங்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால், மின்சார சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்நிலையில், சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் 192 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய வர்தா புயல் நேற்று மாலை 6.30 மணியளவில் முழுவதுமாக கரையை கடந்து நிலப்பகுதியில் மேற்கு நோக்கி திருவண்ணாமலை மாவட்டம் வழியாக செல்லும் போது வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இவை தற்போது, தருமபுரி அருகே நகர்ந்து 40 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தருமபுரி, கிருஷணகிரி, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் தாழ்வு நிலையாக மாறி வலுவிழக்கும் என்று தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று (செவ்வாய்) அனேக இடங்களில் மழை பெய்யும்.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் மழை எதிர்பார்க்கலாம். சில நேரங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday 8 December 2016

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் மக்கள் அஞ்சலி


வெளியூர் மௌத் அறிவிப்பு 7/12/2016

 அடியக்கமங்கலம் பட்டக்கால்தெரு வெசார்த்தா வீட்டு லியாகத் அலி,  சிராஜ் இவர்களின் மூத்த சகோதரரும் தவ்ஃபீக், மக்பூல் இவர்களின் தகப்பனாருமாகிய சேட்டு என்கிற முஹம்மது பஷீர் அவர்கள் மேலசெட்டித்தெரு தனது வீட்டில் இன்று காலை 7/12/2016 வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ...

Tuesday 6 December 2016

ஜெயலலிதாவுக்கு பிரியாவிடை தரும் தமிழகம்

 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டு நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
>>> முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். ஜெயலலிதாவின் உடல் தங்கப்பேழையில் வைக்கப்பட்டு பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டது. தரைப்படை, கப்பற்படை, விமானப்படை வீரர்கள் மூலம் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கத்தில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் வரை எடுத்துச் செல்லப்பட்டது.
ஜெயலலிதா உடல் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டதும், முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். ஆளுநர் வித்யாசாகர் ராவ் இறுதி அஞ்சலி செலுத்தினார். மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சசிகலா, நடராஜன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அவரது தோழி சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் இறுதிச் சடங்குகளை செய்தனர். 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
>>> மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அஞ்சலி செலுத்தினார்.
>>> மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
>>> மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
>>> மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
>>> ஜெயலலிதா உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
>>> ஜெயலலிதாவின் உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா அஞ்சலி செலுத்தினார்.
>>> முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமான், "ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்துக்கும், பாரத தேசத்துக்கும் பேரிழப்பு" என்றார்.
>>> ஜெயலலிதா உடலுக்கு முன்னாள் பிரதமர் தேவே கவுடா அஞ்சலி செலுத்தினார்.
>>> முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார். "ஜெயலலிதா துணிச்சலானவர். ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தியவர். அரசியலில் அவர் ஏற்படுத்திய வெற்றிடத்தை யாரும் நிரப்ப முடியாது" என்றார்.
>>> ஜெயலலிதா உடலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அஞ்சலி செலுத்தினார். சந்திரபாபு நாயுடு பேசும்போது, "ஜெயலலிதாவின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் பாணியில் ஆந்திராவிலும் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன" என்றார்.

Monday 5 December 2016

முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார் என்று அப்போலோ மருத்துவமனை

மிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதை அப்போலோ மருத்துவமனை செய்திக்குறிப்பு மூலம் உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) ஓர் அறிக்கையை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் நிலை தொடர்ந்து சிக்கலாக இருக்கிறது. அவருக்கு எக்மோ கருவி மற்றும் பிற உயிர் காக்கும் கருவிகள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கூர்ந்து கண்காணித்து வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ய்ம்ஸ் மருத்துவக் குழு:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு சென்னைக்கு விரைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ மருத்துவமனை செய்தி குறிப்பு மூலம் தெரியப்படுத்தியது.
இதனையடுத்து அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்போலோ மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதய நோய் நிபுணர்கள், சுவாசயியல் நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு சென்னைக்கு விரைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் 3 மணியளாவில் எய்ம்ஸ் மருத்துவக் குழு சென்னை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் மேலும் கூறும்போது, "டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கில்நானி, நரங், தல்வார், மற்றும் மருத்துவர் த்ரிகா ஆகிய 4 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு சென்னைக்கு விரைந்துள்ளது. அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களுடன் இணைந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர்கள் சிகிச்சை அளிப்பர்.
தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களுடன் தொடர்ந்து முதல்வர் உடல்நிலை தொடர்பான விவரங்களை கேட்டறிந்து வருகிறோம்.
ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். தமிழக அரசுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
எக்மோ உதவியுடன் சிகிச்சை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிகாலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது இதயம் சீராக செயல்படுவதற்கான கருவி (extracorporeal membrane heart assist device) பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
’சட்டம் ஒழுங்கில் பாதிப்பில்லை’
''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பில்லை. தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக 1 லட்சம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை'' என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கோரினால்..
தமிழக அரசு கோரினால் மத்திய பாதுகாப்புப் படைகளை அனுப்ப தயாராக இருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலையை காக்க போதிய படைகள் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் இருந்து முறைப்படி கோரிக்கை வரவேண்டும். அவ்வாறு வராதபட்சத்தில் மத்திய அரசு தானாக தலையிட முடியாது. தமிழக அரசு கோரினால் மத்திய பாதுகாப்புப் படைகளை அனுப்ப தயாராக உள்ளது" என்றார்.
'முதல்வர் நலம்பெற காத்திருப்போம்'
''முதல்வர் சிக்கலான நிலையில் இருக்கிறார் என்பதை யூகிக்க வேண்டி இருக்கிறது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், ராஜ்நாத் சிங் சென்னைக்கு வர இருப்பது, சட்டம்- ஒழுங்கை பாதுக்காக போலீஸார் செய்துள்ள முன்னேற்பாடுகள் ஆகியவை முதல்வர் நலம் பெற வேண்டும் என்ற நம்பிக்கையை கரைத்துக் கொண்டிருக்கிறது.முதல்வர் நலம் பெற வேண்டும் என காத்திருப்போம்'' என்று விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். முழுமையான செய்திக்கு: | முதல்வர் நலம் பெறக் காத்திருப்போம்: திருமாவளவன் |
வெங்கய்யா சென்னை வருவதாக தகவல்:
மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தமிழகம் வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் வெங்கய்ய நாயுடு சென்னை வரவிருப்பதாகவும் அப்போலோ மருத்துவர்களிடம் முதல்வர் உடல்நிலை குறித்து விசாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழக - கேரள எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு:
தமிழகத்தை ஒட்டிய கேரள எல்லைப் பகுதிகளான திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, பாலக்காடு மாவட்டங்களில் அம்மாநில போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதையடுத்து பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
இதேபோல், சபரிமலை கோயிலில் சில இடங்களில் போலீஸார் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கிரண் பேடி நம்பிக்கை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண உடல்நலம் பெற தான் பிரார்த்தனை செய்வதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். அப்போலோ மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா மீது கோடிக்கணக்கான மக்கள் அன்பும், மரியாதையும் செலுத்தி வருவதாகக் கூறினார்.

Friday 2 December 2016

ரொக்கப் பண புழக்கம் இனி முன்புபோல் இருக்காது: ஜேட்லி

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதற்கு முன்னர் இருந்ததுபோல் இனி நாட்டில் ரொக்கப் பணப் புழக்கம் அதிகளவில் இருக்காது என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ரூ.500, 1000 செல்லாது என கடந்த மாதம் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மத்திய அரசின் இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளான நிலையில், கறுப்புப் பண ஒழிப்பு தாண்டியும் ரொக்கப்பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி முன்னேறவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தற்போது விளக்கங்கள் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், "நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது நடவடிக்கையால், அந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், ரொக்கப் பண புழக்கம் இனி நவம்பர் 8-ம் தேதிக்கு முன்பு இருந்ததுபோல் இருக்காது. அதேவேளையில் வர்த்தகத்தில் எவ்வித பாதிப்பும் இருக்காது. மத்திய அரசின் நடவடிக்கையால் வர்த்தகம் வளரும், ரொக்கப் பண புழக்கம் குறையும்" என்றார்.
தற்போது நிலவிவரும் பணத் தட்டுப்பாடு வரும் 31-ம் தேதிக்குள் சீராகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Thursday 1 December 2016

நடா புயல் :கரையை நாளைக்கு கடக்கிறது


பெட்ரோல் விலை 13 காசு உயர்வு; டீசல் விலை 12 காசு குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், டீசல் லிட்டருக்கு 12 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.
இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்த்தப்பட்டன. அதேசமயம், டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
புதிய விலை உயர்வின்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.66.10க்கு விற்பனை செய்யப்படும். அதேபோல் டீசல் விலை லிட்டர் ரூ.56.10க்கு விற்பனை செய்யப்படும்.