Saturday, 17 December 2016

வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை வாய்ப்பு

வடகிழக்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம், ''தாய்லாந்து அருகே நேற்று மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி இருந்தது. இது மேலும் வலுப்பெற்று, மியான்மர் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவி வருகிறது. இது விரைவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது. இதன் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 'வார்தா' புயல் அரபிக் கடலுக்குச் சென்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த நிலையில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற வாய்ப்புள்ளது. இதன் போக்கும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில், வடகிழக்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை ஒருசில இடங்களில் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் இருக்கும்'' என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment