Tuesday 31 May 2016

ஓரிரு நாள்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும்


 
தமிழகம், புதுச்சேரியில் ஜூன் முதல் வாரத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் மே 4 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. கத்திரி வெயில் முடிந்தும் வெப்பத்தின் தாக்கம் நீடித்து வருகிறது. தமிழகம், புதுச்சேரியில் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, பத்து இடங்களில் 100 சதவீதத்துக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. 
 கோடை மழை: வெப்பச் சலனம் காரணமாக, சில இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 40 மி.மீ, பெரம்பலூர் வெண்பாவூரில் 20 மி.மீ., திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 10 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
 வெப்பம் நீடிக்கும்: கோடைக்காலம் என்பதால் வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும். கத்திரி வெயில் காலத்தில் இருந்ததைப்போல் அல்லாமல், அதிலிருந்து 1 அல்லது 2 டிகிரி வெப்பம் குறைந்து காணப்படும். சராசரி வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும்.
 இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
 கேரளத்தில் தென்மேற்கு பருவமழைக்கான காலநிலை உருவாகும்போது, தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைய வாய்ப்புள்ளது. ஜூன் முதல் வாரத்தில் கேரளத்தில் தென்மேற்கு பருவமழைக்கான காலநிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும். கேரள எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என்றனர்.
 திங்கள்கிழமை பதிவான வெப்ப அளவு(ஃபாரன்ஹீட்டில்):
 சென்னை, புதுச்சேரி, திருச்சி, வேலூர் 102
 மதுரை, கடலூர் 101
 கரூர் பரமத்திவேலூர், நாகப்பட்டினம் 100
 பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை 100

அரவக்குறிச்சி, தஞ்சையில் தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்: ராஜேஷ் லக்கானி தகவல்

சட்டப் பேரவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
 இரண்டு தொகுதிகளிலும் அரசின் நலத் திட்டங்களைச் செயல்படுத்தவும், தொடங்கவும் எந்தத் தடையும் இல்லை எனவும் அவர் கூறினார். இது குறித்து, செய்தியாளர்களுக்கு ராஜேஷ் லக்கானி திங்கள்கிழமை அளித்த பேட்டி:
 வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். தேர்தலை ஜூன் 1-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டுமென ஆளுநரும் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு முன்பாக இரண்டு மாநிலங்களில் இதுபோன்று தேர்தல் நடவடிக்கைகளில் ஆளுநர்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
 குஜராத் வன்முறையின் போதும், உத்தரப்பிரதேசத்தில் அதிகாரிகள் மாற்றத்தின் போதும் அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்கள் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியிருக்கின்றனர். இப்போது, தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக ஆளுநர் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
 ரத்துக்கான காரணங்கள்?: தேர்தலுக்கு வாக்குப் பெட்டிகளை பயன்படுத்திய போது அவற்றைக் கடத்துவது, கள்ள வாக்குகள் போடுவது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால், குறிப்பிட்ட அந்தத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யும் நடவடிக்கையை இந்திய தலைமைத் தேர்தல் முன்னாள் ஆணையாளர் டி.என்.சேஷன் கொண்டு வந்தார். இதன் பின், இந்த நடவடிக்கைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டது.
 இதேபோன்று, இப்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் போன்றவை விநியோகித்ததன் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், சட்டமாக்கப்பட்டால் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக யாரும் கேள்விகளை எழுப்ப முடியாது. 
 நடத்தை விதிகள்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, புதிதாக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, இரண்டு தொகுதிகளிலும் பின்பற்றப்பட்டு வந்த நடத்தை விதிகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டுள்ளன. புதிதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், அங்கு நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும்.
 மூன்று தொகுதிகள்: இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டிய சூழலில், திருப்பரங்குன்றம் சட்டப் பேரவை உறுப்பினர் சீனிவேல் மறைவு குறித்த தகவல் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின், அந்தத் தொகுதி காலியானதாக சட்டப் பேரவைச் செயலகத்தால் அறிவிக்கப்பட்டு அதற்கு இடைத் தேர்தல் நடத்தப்படும்.
 தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத் தேர்தலும் சேர்த்தே நடத்தப்படுமா என்பது குறித்து தேர்தல் ஆணையமே ஆலோசித்து முடிவெடுக்கும் என்றார் ராஜேஷ் லக்கானி.

அனைத்து வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்யக் கோரி காவிரி விவசாயிகள் சங்கம் மனு

அனைத்து வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்யக் கோரி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணனிடம் மனு அளித்தனர்.
அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்டா மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிப்பதென தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் காவிரி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ராஜேந்திரன், மாநில இணைச் செயலர் வரதராஜன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சங்க நிர்வாகிகள் ஆட்சியர் எம். மதிவாணனை சந்தித்து மனு அளித்தனர்.
மனு விவரம்: தமிழக அரசு விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையின்படி அனைத்து விவசாயிகளின், அனைத்து விதமான விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கி மட்டுமின்றி வணிக வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட கடன்களையும் தள்ளுபடி செய்து கடன் சுமையிலிருந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா, தமது தேர்தல் அறிக்கையில் கூறியபடி சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்றுள்ள வேளாண் கடன்களை தள்ளுபடி செய்து கையெழுத்திட்டுள்ளார். ஆனால் சிறு, குறு என்று பேதம் பார்க்காமல் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேலும் வணிக வங்கிகளிலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளளிலும் பெற்றுள்ள கடன்களையும் தள்ளுபடி செய்ய ஆவன செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழக முதல்வருக்கு தஞ்சை, நாகை, திருவாரூர் ஆட்சியர்களிடம் திங்கள்கிழமை (மே 30) விவசாயிகள் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
இதை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் எம். மதிவாணன், விவசாயிகளின் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.
 

Monday 30 May 2016

மீன்பிடி தடைக்காலம் நிறைவு: இன்று மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஏற்பாடு

மீன்பிடி தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதால், முத்துப்பேட்டை கடலோரப் பகுதி கிராமங்களில் உள்ள மீனவர்கள் திங்கள்கிழமை (மே 30) கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவுள்ளனர்.
தமிழக கடல் பகுதிகளில் இயற்கைவளம் அழிந்துவிடாமல் பாதுகாக்கும் வகையிலும், மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபட  ஏதுவகாவும் ஏப். 15 முதல் மே 29 வரை 45 நாள்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க அரசு தடைவிதித்துள்ளது.
இதன்படி, கடந்த 45 நாள்களாக முத்துப்பேட்டை, துரைக்காடு, ஜாம்பவானோடை, செங்கங்காடு, வீரன்வயல்,  கற்பகநாதர்குளம், தொண்டியக்காடு, முனங்காடு, மேலத்தொண்டியக்காடு உள்ளிட்ட கடலோர மீனவக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு  மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்த ஓய்வு காலத்தில் மீன்பிடி வலைகளை சீரமைத்தல்,  இயந்திரப் படகு மற்றும் கட்டுமரங்களை சீரமைக்கும் பணிகளையும் செய்து வந்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் அரசு அறிவித்த  மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதால், மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Sunday 29 May 2016

ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

 


 
திருவாரூர் மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ரா. மாரியப்பன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிப்பதற்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் இப்படிப்புக்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலும், மன்னார்குடி, மேலவாசலில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுப் பிரிவினருக்கான விண்ணப்பம் ரூ. 250-ஐ செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 10-ஆம் தேதி வரை அளிக்கலாம்.

Saturday 28 May 2016

திருவாரூர் மாவட்டத்தில் ஜூன் 3 முதல் ஜமாபந்தி தொடங்குகிறது



திருவாரூர் மாவட்டத்தில் ஜூன்.3-ம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற வுள்ளது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் வட்டத்தில் ஜூன்.3 முதல் 9-ம் தேதி வரை ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஜூன்.3 முதல் 15-ம் தேதி வரை வரை மாவட்ட வருவாய் அலுவலா் த. மோகன்ராஜ் தலைமையில், நன்னிலம் வட்டத்தில் ஜூன்.3 முதல் 15-ம் தேதி வரை கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி தலைமையில், மன்னார்குடி வட்டத்தில் ஜூன்.3 முதல் 23-ம் தேதி வரை கோட்டாட்சியர் செல்வசுரபி தலைமையில், நீடாமங்கலம் வட்டத்தில் ஜூன் 3 முதல் 14-ம் தேதி வரை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி யினா் நல அலுவலா் தலைமையில், வலங்கைமான் வட்டத்தில் ஜூன் 3 முதல் 15-ம் தேதி வரை மாவட்ட வழங்கல் அலுவலா் தலைமையில், குடவாசல் வட்டத்தில் ஜூன் 3 முதல் 21-ம் தேதி வரை உதவி ஆணையா் (கலால்) தலைமையில் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.
மேலும் அரசு விடுமுறை நாட்கள் (சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை நீங்கலாக   நாள்தோறும் காலை 9 மணிக்கு அந்தந்த இடத்தில் ஜமாபந்தி தொடங்கப்படும். எனவே  மக்கள் சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களில் நேரில் சென்று தங்களது கோரிக்கை மனுவை அளித்து பயன்பெறலாம்.

திருவாரூரில் இன்று மின்விநியோகம் இருக்காது


திருவாரூர் நகர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (மே.28) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பி. சந்திரசேகரன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் துணை மின்நிலையத்தில்  சனிக்கிழமை (மே.28) மாதாந்திர பராமாிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் திருவாரூர் துணை மின்நிலையம் மற்றும் கப்பல்நகா் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் திருவாரூர் நகா் ,விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், முகந்தனூர், திருப்பயத்தாங்குடி மற்றும் மாவூர். அடியக்கமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அடியக்கமங்கலம், காலணி, சிதம்பரநகா், பிலாவடி மூலை ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்பளாம்புலியூர், புதுபத்தூர், நீலப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது

Friday 27 May 2016

திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் முதல் நாளில் 82 விண்ணப்பங்கள் விற்பனை


திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் முதல் நாளான வியாழக்கிழமை 82 விற்பனையாகின.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை வியாழக்கிழமை (மே 26) தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல் நாளான வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 82 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் 47 விண்ணப்பங்கள் பொதுப் பிரிவிலும், 35 விண்ணப்பங்கள் இலவசமாகவும் விநியோகம் செய்யப்பட்டன.
மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். விண்ணப்பங்கள், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு ரூ. 500-க்கு விற்கப்பட்டன. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இலவசமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

Thursday 26 May 2016

திருவாரூர் மாவட்டத்தில் 10 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் திருவாரூர் மாவட்டத்தில் 10 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

கொரடாச்சேரி பள்ளி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் திருவாரூர் மாவட்ட அளவில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ராஜலெட்சுமி, கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பாத்திமா ஆகியோர் 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றனர். திருமக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கிருபாளினி, கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பவதாரனி ஆகியோர் 487 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் கவுரிசங்கர், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்தனா ஆகியோர் 486 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பெற்றனர்.

10 பள்ளிகள்

இதேபோல மாவட்ட அளவில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிணி, திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஹரிபிரசாத் ஆகியோர் 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யதர்ஷினி, கூத்தாநல்லூர் மன்ப உல் உலா மேல்நிலைப்பள்ளி மாணவன் விக்ரம்ஜவகர் ஆகியோர் 494 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யஜோதி, திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் துரைசெல்வம், கூத்தாநல்லூர் மன்ப உல் உலா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோகுலகிருஷ்ணன், பிரசாந்த்ராஜ் ஆகியோர் 493 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தை பிடித்தனர்.

திருவாரூர் மாவட்ட அளவில் 10 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. அதன் விவரம் வருமாறு:-

துளசேந்திரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, கரையாங்காடு அரசு உயர்நிலைப்பள்ளி, எடகீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி, ஜாம்பாவனோடை வடகாடு அரசு உயர்நிலைப்பள்ளி, திருவீழிமழலை அரசு உயர்நிலைப்பள்ளி, பாலையக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி, கட்டக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி, பூவனூர் அரசு உயர்நிலைப்பள்ளி, மாப்பிள்ளைகுப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 10 அரசு பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

Wednesday 25 May 2016

திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு


பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி, திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் வட்டாரப் போக்குவரத்துக்குள்பட்ட 64 வாகனங்களின் பதிவுச் சான்று, காப்புச் சான்று, அனுமதிச் சான்று, ஓட்டுநர், நடத்துநர் உரிமம், பள்ளி சிறப்பு விதிகள் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சியும் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் டி.என். வெங்கடேஷ் முன்னிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன், வட்டாரப் போக்குவரத்துக்கு வாகன ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், கோட்டாட்சியர் ரா. முத்துலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மன்னார்குடியில்...
மன்னார்குடியில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் தனியார் பள்ளிகளின் வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யும் பணி வ.உ.சி. சாலையில் உள்ள பின்லே மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் மன்னார்குடி வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த தனியார் பள்ளிகளின் 53 வாகனங்களின் தரம், தகுதி, அனுமதிச் சான்றுகள் சரிபார்க்கப்பட்டன. மேலும், வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் தகுதிச் சான்று, அனுமதிச் சான்று, கண் பரிசோதனை மருத்துவச் சான்றுகளும் தணிக்கை செய்யப்பட்டன.
வாகனங்களின் படிக்கட்டு, தரை தளம், இருக்கைகள், அவசர காலவழி, முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக்கருவி, குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த ஆய்வுகள் செய்யப்பட்டன. குறைபாடுகள் கண்டறியப்பட்ட இரண்டு வானங்களில் அவற்றை சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு வாகனங்களை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் ச. செல்வசுரபி, காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். ரவிச்சந்திரன், வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி ஆகியோர் இணைந்து பள்ளி வாகன ஆய்வு பணியை செய்தனர்.

Tuesday 24 May 2016

மேலும் 4 புதிய அமைச்சர்கள்: அமைச்சர்கள் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்தது

தமிழக அமைச்சரவை திங்கள்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. 4 புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அமைச்சர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது.
 இதுகுறித்து ஆளுநரின் முதன்மைச் செயலர் ரமேஷ்சந்த் மீனா திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 காதி கிராமத் தொழில்கள் துறை அமைச்சராக ஜி.பாஸ்கரன் (சிவகங்கை) நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் துறையானது, கைத்தறித் துறை அமைச்சரான ஓ.எஸ்.மணியனிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டிருந்தது.
 இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சராக சேவூர் எஸ்.ராமச்சந்திரன் (ஆரணி) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்தத் துறையானது, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டிருந்தது.
 தொழிலாளர் நலத் துறை அமைச்சராக நிலோபர் கபில் (வாணியம்பாடி), நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவிடம் இந்தத் துறை கூடுதலாக கொடுக்கப்பட்டிருந்தது.
 கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக பி.பாலகிருஷ்ணா ரெட்டி (ஓசூர்), நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தத் துறையானது, வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணுவிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டிருந்தது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 புதுமுகங்களின் எண்ணிக்கை உயர்வு: அமைச்சரவையில் புதிதாக 4 பேர் சேர்க்கப்பட்டதால், முதல்வருடன் சேர்த்து அமைச்சரவையில் உள்ளோரின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது.
 ஏற்கெனவே 13 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது மேலும் 4 புதியவர்கள் அமைச்சர்களாக சேர்க்கப்பட்டுள்ளதால், புதுமுகங்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.
 சரிக்குச் சமம்: 14-ஆவது சட்டப் பேரவையில் அமைச்சர்களாக இருந்தவர்களில் 12 பேரும், முன்னாள் அமைச்சர்கள் மூவரும் என அனுபவம் பெற்றவர்கள் 15 பேர் உள்ளனர். இப்போது புது முகங்கள் 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளதால், புதுமுகங்களின் எண்ணிக்கை 17-ஆக அதிகரித்துள்ளது. இதனால், அமைச்சரவையில் புதியவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள் சமமாக உள்ளனர்.
 நாளை பதவியேற்பு: புதிய அமைச்சர்கள் 4 பேரும் புதன்கிழமை இரவு 7 மணிக்கு பதவியேற்க உள்ளனர். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

100 யூனிட் இலவச மின்சாரம், 500 மதுக்கடைகள் மூடல்: பதவியேற்றதும் 5 திட்டங்களில் கையெழுத்திட்டார் ஜெயலலிதா


டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு, 500 மதுக்கடைகள் மூடல், 100 யூனிட் கட்டணமில்லாத மின்சாரம், விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி, தாலிக்கு ஒரு பவுன் தங்கம் உள்பட ஐந்து முக்கியத் திட்டங்களுக்கான கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை கையெழுத்திட்டார்.
 முதல்வராக ஜெயலலிதா ஆறாவது முறையாக பதவியேற்றதும் தலைமைச் செயலகத்துக்கு திங்கள்கிழமை வந்தார். இதைத் தொடர்ந்து, ஐந்து முக்கிய திட்டங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். அதன் விவரம்:
 கூட்டுறவுக் கடன்கள்: கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க் கடன், நடுத்தர காலக் கடன், நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இதனை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து கடந்த மார்ச் 31 வரையில் பெறப்பட்ட அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். இதனால், அரசுக்கு ரூ.5,780 கோடி செலவு ஏற்படும்.
 100 யூனிட் மின்சாரம்: இப்போதைய கணக்கீட்டு முறைப்படி, 100 யூனிட் மின்சாரம் கட்டணம் இல்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனை நிறைவேற்றும் வகையில், அதற்கான கோப்பில் முதல்வர் கையெழுத்திட்டார். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,607 கோடி மின் வாரியத்துக்கு மானியமாக அரசு வழங்கும். இந்தச் சலுகை மே 23-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
 ஒரு பவுன் தங்கம்: இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரமும், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் இப்போது வழங்கப்பட்டு வருகிறது. படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.25 ஆயிரம் நிதியுதவிடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
 இப்போது தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி அனைத்து திருமண நிதி உதவித் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியுடன் திருமாங்கல்யத்துக்கென அளிக்கப்படும் தங்கம் 4 கிராமில் இருந்து ஒரு பவுன் (8 கிராம்) என உயர்த்தி கொடுக்கப்படும். இதற்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
 நெசவாளர்களுக்கு மின்சாரம்: கைத்தறி நெசவாளர்களுக்கு இப்போது கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்டுகள் எனவும், விசைத்தறிக்கு அளிக்கப்படும் கட்டணமில்லாத மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்தியும் அளிக்கும் கோப்பில் முதல்வர் கையெழுத்திட்டார்.
 டாஸ்மாக் மதுபானக் கடைகள்: தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் இதுவரை காலை 10 மணி முதல் இரவு 10 வரை செயல்பட்டு வந்தன. 
 செவ்வாய்க்கிழமை முதல் (மே 24) சில்லறை மதுபானக் கடைகள்-பார்கள் அனைத்தும் நண்பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மேலும், 500 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மூடப்படும். இதற்கான உத்தரவுகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
 

Monday 23 May 2016

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பொது நுழைவுத்தேர்வை 1,056 மாணவ-மாணவிகள் எழுதினர்


திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொது நுழைவுத்தேர்வை 1,056 மாணவ-மாணவிகள் எழுதினர். 

மத்திய பல்கலைக்கழகம்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. இதில் 1,056 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 24 பாடப்பிரிவுகளுக்கான படிப்புகள் நடைபெற்று வந்தன. வரும் கல்வியாண்டில் புதிதாக 6 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன. அதன்படி பொருளியல், இந்தி மொழி, கணினிஅறிவியல், பொருள்தொழில்நுட்பவியல் ஆகிய 4 முதுகலை பாடங்களும், பி.எஸ்சி. டெக்ஸ்டைல்ஸ், இசை சம்பந்தமான 2 பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகின்றன.

பொது நுழைவுத்தேர்வு

இதனை தொடர்ந்து தமிழ்நாடு, அரியானா, ஜம்மு, காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 9 மத்திய பல்கலைக்கழகங்கள் இணைந்து வரும் கல்வியாண்டிற்கு மாணவர்கள் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு நடத்திட திட்டமிடப்பட்டது. இந்த நுழைவுத்தேர்வு தமிழகத்தில் திருவாரூர், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 5 இடங்களில் நடைபெறுகிறது. அதன்படி திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. இதில் 1,056 மாணவ-மாணவிகள் தேர்வுகளை எழுதினர். இந்த நுழைவுத்தேர்வு 21/05 மற்றும் 22/05 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி பொது நுழைவுத்தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடடப்படும். 

Sunday 22 May 2016

ஜெயலலிதா தலைமையில் 28 அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: 13 புதுமுகங்களுக்கு வாய்ப்பு; 3 பேர் பெண்கள்


முதல்வர் ஜெயலலிதா தலைமையில் புதிதாக அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் இடம்பெறவுள்ள புதிய அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை சனிக்கிழமை வெளியிட்டது. முன்னதாக, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்கான கடிதத்தையும், புதிய அமைச்சர்களின் பட்டியலையும் 
 ஜெயலலிதா அளித்தார். இந்தப் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து அதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டது.
 இதன்படி, முதல்வர் ஜெயலலிதா, 28 அமைச்சர்களும் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர்.
 13 பேர் புதுமுகங்கள்: கடம்பூர் சி.ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், வி.சரோஜா, கே.சி.கருப்பண்ணன், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.துரைக்கண்ணு, பி.பெஞ்சமின், வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, வி.எம்.ராஜலட்சுமி, எம்.மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 13 புதுமுகங்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கின்றனர்.
 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு: 
 14-ஆவது சட்டப் பேரவையில் அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி, செல்லூர் கே.ராஜு, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.சண்முகநாதன், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி ஆகிய 12 பேர் மீண்டும் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர்.
 முன்னாள் அமைச்சர்கள்: கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர்களாக இருந்த டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகிய 3 பேர் அமைச்சர்களாகவுள்ளனர்.
 3 பேர் பெண்கள்: வி.சரோஜா (ராசிபுரம்), எஸ்.வளர்மதி (ஸ்ரீரங்கம்), வி.எம்.ராஜலட்சுமி (சங்கரன்கோவில்) ஆகிய 3 பெண்கள் அமைச்சர்களாகவுள்ளனர். 14-ஆவது சட்டப் பேரவையில் அதிமுக அமைச்சரவையில் இரண்டு பெண் அமைச்சர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 மேற்கும்-தெற்கும்: அதிமுகவின் வெற்றிக்கு மேற்கு மண்டலத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளும், தென் மாவட்டத்தில் சில தொகுதிகளும் பெரிதும் கை கொடுத்தன. 
 இதனால், மேற்கு, தென் மாவட்டங்களில் இருந்து தலா 5 பேர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், பிற மாவட்டங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
 தமிழகத்தின் 15-ஆவது சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 134 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இதையடுத்து, சட்டப் பேரவையின் அதிமுக குழுத் தலைவராக ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாளை 12 மணிக்கு பதவியேற்பு
 முதல்வர் ஜெயலலிதா, 28 அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் திங்கள்கிழமை (மே 23) நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இவர்களுக்கு ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
7 அமைச்சர்களுக்கு அதே துறைகள் ஒதுக்கீடு
 கடந்த பேரவையில் அமைச்சர்களாக இருந்த 7 பேருக்கு அவர்கள் வகித்த அதே துறைகளே புதிய 15-ஆவது சட்டப்பேரவையிலும் ஒதுக்கப்பட்டுள்ளன.
 நிதித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரம்-குடும்ப நலத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உணவு-இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு அதே துறைகள் இப்போதும் ஒதுக்கப்பட்டுள்ளன.
 நெடுஞ்சாலைகள்-சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி 
 கே.பழனிசாமிக்கு, அந்தத் துறையுடன் கூடுதலாக பொதுப்பணித் துறையும் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை அமைச்சரான செல்லூர் கே.ராஜுவுக்கு, தொழிலாளர் நலத் துறை கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

Saturday 21 May 2016

4 தொகுதிகளில் நோட்டாவுக்கு 7,879 வாக்குகள்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு அடுத்த இடத்தில் நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருவாரூர் பேரவைத் தொகுதியில் திமுக தலைவர் மு. கருணாநிதி, அதிமுக சார்பில் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பி.எஸ். மாசிலாமணி உள்ளிட்ட 15 பேர், நன்னிலம் தொகுதியில் ஆர். காமராஜ் (அதிமுக ), எஸ்.எம்.பி. துரைவேலன்(காங்), ஜி. சுந்தரமூர்த்தி (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட 14 பேர்.
திருத்துறைத்துறைப்பூண்டி தொகுதியில் ஆடலரசன் (திமுக ),
உமாமகேஸ்வரி (அதிமுக), கே. உலகநாதன்(இந்திய கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட 11 பேர், மன்னார்குடியில் எஸ். காமராஜ் (அதிமுக),
டி.ஆர்.பி.ராஜா( திமுக ), சிவக்குமார்( பாஜ), முருகையன்பாபு( தேமுதிக ) உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 52 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு அடுத்த நிலையில் நோட்டாவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருவாரூர் தொகுயில் 2,177, நன்னிலத்தில் 2,166, திருத்துறைப்பூண்டியில் 1,762, மன்னார்குடியில் 1,774 என மொத்தம் 7,879 வாக்குகள் நோட்டாவில் பதிவாகியுள்ளன. தபால் வாக்குகளில் மட்டும் 38 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன. 4 தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளர்களைப் பின்னுக்கு தள்ளி நோட்டா சிறப்பிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday 20 May 2016

மீண்டும் அதிமுக ஆட்சி: ஆறாவது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா


தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது அதிமுக. இதன் மூலம், அந்தக் கட்சியின் பொதுச் செயலரான ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.
 சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்ற 232 தொகுதிகளில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. அதேசமயம், 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப் பெரிய எதிர்க்கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது.
 மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக-தமாகா, பாஜக, பாமக ஆகிய கூட்டணிகளின் சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளைத் தவிர்த்து 232 சட்டப் பேரவைத் தொகுதிகளில் கடந்த 16-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குகளை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதே வேளையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.
 திமுக-அதிமுக இடையே கடும் போட்டி: முதல் சில சுற்றுகளில் அதிமுக-திமுக இடையே கடும் போட்டி நிலவியது. இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிக சொற்ப அளவிலேயே இருந்தன. சம அளவிலான தொகுதிகளிலேயே இரு கட்சிகளும் முன்னிலை பெற்றிருந்தன.
 இந்த நிலையில், இரு கட்சிகளும் 70 தொகுதிகள் வரை இணையாக பெற்றிருந்த வேளையில் அதிமுகவுக்கு அதிக தொகுதிகளில் முன்னிலை கிடைக்கத் தொடங்கின.
 கை கொடுத்த மேற்கு: அதிமுகவின் வெற்றிக்கு மேற்கு மண்டலத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளே அதிகளவு கைகொடுத்துள்ளன. ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடங்கிய 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 40 தொகுதிகள் வரை அதிமுக வென்றது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது.
 இந்தத் தொகுதிகளில் கிடைத்த வெற்றிகளே அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தன. 232 தொகுதிகளில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
 98 இடங்களை கைப்பற்றிய திமுக அணி சட்டப் பேரவையில் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது. 
 முக்கிய பிரமுகர்களின் வெற்றி: சில முக்கிய பிரமுகர்கள் வெற்றியும், சிலர் அதிர்ச்சித் தோல்வியும் அடைந்துள்ளனர். சென்னை ஆர்.கே.நகரில் மீண்டும் போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதாவும், திருவாரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட கருணாநிதியும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
 அதிமுகவைச் சேர்ந்த மூத்த அமைச்சர்களான நத்தம் ஆர்.விசுவநாதன், ஆர்.வைத்திலிங்கம், பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட 5 பேர் தோல்வியைத் தழுவியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி உள்பட 14 அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
 அதிர்ச்சித் தோல்வி: உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாமக சார்பில் முதல்வர் பதவி வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டு பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தோல்வியடைந்தனர். இதேபோல், பாஜக சார்பில் போட்டியிட்ட முக்கிய தலைவர்களான தமிழிசை செüந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா ஆகியோரும் தோல்வியைத் தழுவினர்.
 ஆறாவது முறையாக முதல்வர்: 
 தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள அதிமுக ஆட்சி அமைக்க ஆளுநர் கே.ரோசய்யாவிடம் ஓரிரு நாள்களில் உரிமை கோர உள்ளது.
 இதற்காக, தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.அப்போது கட்சியின் பொதுச் செயலரான ஜெயலலிதா, சட்டப் பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
 இதைத் தொடர்ந்து, ஆறாவது முறையாக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்கவுள்ளார்.
 சிறப்புப் பெருமை: தமிழகத்தில் இதுவரை ஆறு முறை எந்தத் தலைவரும் முதல்வராகப் பொறுப்பேற்கவில்லை. இந்த சிறப்புப் பெருமையை ஜெயலலிதா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கு சதவீதம் என்ன?
 அதிமுக 40.8%
 திமுக 31.6%
 மற்றவை 17.1%
 காங்கிரஸ் 6.4%
 பாஜக 2.8%
 நோட்டா 1.3%
இறுதி முடிவுகள்
 மொத்த தொகுதிகள் 234
 தேர்தல் நடந்தவை 232 
 முடிவு 
 அறிவிக்கப்பட்டவை 232
 அதிமுக 134
 திமுக 89
 காங்கிரஸ் 8
 இந்திய யூனியன்
 முஸ்லிம் லீக் 1
 23- இல் பதவியேற்பு
 ஆறாவது முறையாக முதல்வராக ஜெயலலிதா மே ó23-ஆம் தேதி காலை 11 மணிக்கு பதவியேற்கிறார். இதற்காக, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

திருவாரூர் தொகுதியில் தி மு க வேட்பாளர் கருணாநிதி வெற்றி

,









திருவாரூர் தொகுதியில் கருணாநிதி 68 ஆயிரத்து 366 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை வீழ்த்தினார்.

திருவாரூரில் கருணாநிதி போட்டி
தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் கடந்த 16-ந்தேதி நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வம் உள்பட 14 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி 68 ஆயிரத்து 366 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வத்தை வீழ்த்தினார்.

வாக்கு எண்ணிக்கை விவரம்
மொத்த வாக்குகள்- 2,53,030

பதிவானவை- 1,96,948

கருணாநிதி

(தி.மு.க.)-1,21,473

பன்னீர்செல்வம்

(அ.தி.மு.க.)- 53,107

மாசிலாமணி (இந்திய

கம்யூனிஸ்டு, மக்கள் நல

கூட்டணி)- 13,158

சிவகுமார் (பா.ம.க.)-1,787

தென்றல் சந்திரசேகரன்

(நாம் தமிழர் கட்சி)-1,427

ரெங்கதாஸ்

(பா.ஜனதா)-1,254

பத்மநாபன்

(பகுஜன் சமாஜ்)-591

மீனாட்சிசுந்தரம்

(சுயே)-481

சரவணன்(சுயே)-349

கணேசன்(தமிழக மக்கள்

முன்னேற்ற கழகம்)- 281

ராஜேந்திரன் (சுயே)-200

பன்னீர்செல்வம்

(சுயே)-198

தேவகுமார்(சுயே)-148

சுபாஷ்பாபு (அன்பு

உதயம் கட்சி)- 92

செல்வராஜ் (சுயே)-72

நோட்டா -2,177

கடந்த தேர்தலை விட கூடுதல்
தி.மு.க. தலைவர் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை 68 ஆயிரத்து 366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட 18,117 வாக்குகளை கூடுதலாக பெற்றிருக்கிறார். மேலும் கருணாநிதி, 13-வது முறையாக சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டிருப்பதும், அவரை எதிர்த்து போட்டியிட்ட 14 பேரில் அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வத்தை தவிர மற்ற 13 பேரும் டெபாசிட்டை இழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Thursday 19 May 2016

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் வெங்கடேஷ் ஆய்வு


திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும் திரு.வி.க. கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் வெங்கடேஷ் ஆய்வு செய்தார். 

வாக்கு எண்ணும் மையம்

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 1,152 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்போடு கடந்த 16-ந் தேதி நள்ளிரவு திருவாரூரை அடுத்த கிடாரங்கொண்டான் திரு.வி.க. கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட கட்டிடத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. தொடர்ந்து மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான வெங்கடேஷ், தேர்தல் பார்வையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் அறைக்கு சீல் வைத்தனர். இந்த செயல்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைக்கு வெளியே ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மைய பகுதியில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் இடத்தை சுற்றி பாதுகாப்பு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகள் 14 சுற்றுகளில் எண்ணப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒரு மேஜைக்கு ஒரு கண்காணிப்பாளர், ஒரு நுண்பார்வையாளர், ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குகள் எண்ணப்படும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் வெங்கடேஷ் நேற்று ஆய்வு செய்தார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்றின் முடிவில் கட்சி வாரியாக பெற்ற வாக்குகள் விவரம் அறிக்கப்படும். இன்று மதியத்துக்குள் வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்போன் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

Wednesday 18 May 2016

திருவாரூர் மாவட்டத்தின் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் 84.18

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் 105 பள்ளிகளைச் சேர்ந்த 5,839 மாணவர்களும், 8,082 மாணவிகள் என 13,921 பேர் தேர்வு எழுதினர். இதில் 4,566 மாணவர்கள், 7,153 மாணவிகள் என மொத்தம் 11,719 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 84.18 ஆகும்.
மாநில அளவில் திருவாரூர் கல்வி மாவட்டம் 31-வது இடத்தில் 84.18 சதவீதம் பெற்றுள்ளது. கடந்த கல்வியாண்டில் 83.08 சதவீதம் பெற்று மாநில அளவில் 32-வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மாவட்ட அளவில் முத்துப்பேட்டை ரஹமத் மெட்ரிக்பள்ளி மாணவி எஸ். காவியா 1,181 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், திருவாரூர் சேந்தமங்கலம் தி மெரிட் மேல் நிலைப்பள்ளி மாணவர் ஜெ. வெங்கடேஷ்வரன் 1,178 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மன்னார்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக்பள்ளி மாணவி ஆர். ஐஸ்வர்யா 1,175 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.
மாவட்ட அளவில் அரசு மேல்நிலைப்பள்ளிகளைப் பொருத்தவரை 65 பள்ளிகளில், ராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியும், பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், அரசு உதவிப் பெறும் பள்ளியில் திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
100 சத தேர்ச்சி பெற்ற மெட்ரிக் பள்ளிகள்: கூத்தாநல்லூர் ரஹமத் மெட்ரிக் பள்ளி, உள்ளிக் கோட்டை நவபாரத் மெட்ரிக்பள்ளி, நீடாமங்கலம் நீலன் மெட்ரிக்பள்ளி, செயின்ஜூட் மெட்ரிக்பள்ளி, திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிக்பள்ளி, செயின்ட் ஆண்டனி மெட்ரிக் பள்ளி, முத்துப்பேட்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்பள்ளி, மன்னார்குடி ஸ்ரீபாரதிதாசன் மெட்ரிக்பள்ளி, சண்முகா மெட்ரிக்பள்ளி, வலங்கைமான் ஸ்ரீமகாதேவ குருஜீ மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.
இதே போல் மாவட்ட அளவில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதல் மூன்று இடம் பெற்றோர் விவரம்: பூந்தோட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஐ. ஜானகி 1,146 மதிப்பெண்களும், உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எம். முகிலன் 1,126 மதிப்பெண்களும், கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கே. பிரேமி 1,101 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் முதல் மூன்று இடங்கள் பெற்றோர்: திருவாருர் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ். ரெங்கநாயகி 1,171 மதிப்பெண்களும், மன்னார்குடி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹர்சினி 1,162 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், திருவாரூர் சீதாலட்சுமி 1,161 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.

மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள்


திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் விவரம்.
முதலிடம்: முத்துப்பேட்டை ரஹமத் மெட்ரிக் பள்ளி மாணவி எஸ். காவியா. இவர் தமிழ் 189, ஆங்கிலம் 194, பொருளியல் 199, கணிதம் 200, கணக்குப்பதிவியல் 199, வணிககணிதம் 200 என 1181 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவரது தந்தை சேகர் ஸ்டவ் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். தாய் முத்துக்குமாரி இல்லத்தரசியாக உள்ளார். இவர் எதிர்காலத்தில் ஐஏஎஸ் ஆக விருப்பம் தெரிவித்துள்ளார். இரண்டாமிடம்: சேந்தமங்கலம் தி மெரிட் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜெ. வெங்கடேஸ்வரன். இவர் தமிழ் 196, ஆங்கிலம் 196, இயற்பியல் 194, வேதியியல் 196, உயிரியல் 197, கணிதம் 199 என 1178 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் தந்தை வி.வி. ஜெயராமன் அச்சகம் வைத்துள்ளார். தாய் சாந்தி நன்னிலத்தில் மகாஜனசபா பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர் எதிர்காலத்தில் மருத்துவராகப் படித்து இருதய நோய் சிகிச்சை நிபுணராக வரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
மூன்றாமிடம்: மன்னார்குடி சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர். ஐஸ்வர்யா. இவர் தமிழ் 197, ஆங்கிலம் 192, இயற்பியல் 193, வேதியியல் 197, உயிரியல் 197, கணிதம் 199 என 1175 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் எதிர் காலத்தில் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்வதே தனது விருப்பம் என்றார்.

Tuesday 17 May 2016

கொட்டிய மழையில் ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்


திருவாரூரில் திங்கள்கிழமை கொட்டிய மழையில் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினர் வாக்காளர்கள்.
தமிழகத்தின் 15-வது பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 9,70,413 வாக்காளர்கள், 1,152 வாக்குச்சாவடிகளில் 1,325 வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களித்தனர். பதற்றமான 52 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 325 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டன.
4 தொகுதிகளிலும் 114 நுண்பார்வையாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்களிக்க ஏதுவாக 384 சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 14 பேர் போட்டியிடு கின்றனர்.
வாக்குப்பதிவு:
திங்கள்கிழமை காலை 6 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடந்த பிறகு, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை இரவில் தொடங்கிய மழை திங்கள்கிழமை காலையிலும் தொடர்ந்தது.
இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. காலை 7.30 மணியிலிருந்து தொடர்ந்து மிதமான மழை பெய்து கொண்டிருந்ததால் வாக்காளர் வீட்டை விட்டு வெளியே செல்ல தயங்கி வீட்டுக்குள் முடங்கினர். ஆனாலும் மழையைப் பொருட்படுத்தாமல் பல வாக்காளர்கள் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயகக் கடமையாற்றினர்.
மதியம் 12 மணி வரை நீடித்த மழை அதன்பிறகு சற்று குறையத் தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 5 சதவீதம் வாக்குப்பதிவான நிலையில் 11 மணி நிலவரப்படி 16 சதவீதத்தை அடைந்தது. அதன்பிறகு லேசான மழை பெய்து கொண்டிருந்த தால் வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற குடையுடன் வந்து வாக்களித்தனர். மதியம் 1 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 42 சதவீதமும், மதியம் 3 மணி நிலவரப்படி 62.73 வாக்குப்பதிவு நடைபெற்றது.
திருவாரூர் தொகுதிக்குள்பட்ட புதூர் என்ற ஊர் வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. இதனால் அங்கு திட்டமிட்டபடி சரியான நேரமான காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவில்லை. பிறகு தொடர்புடைய அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு பிறகு ஒரு மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் சுமார் 15 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாகி பிறகு சரிசெய்யப்பட்டு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
கொரடாச்சேரி அருகே கமுகக்குடியில் காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் மின்தடை ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்காளர்கள் மெழுகுவர்த்தி வெளிச் சத்தில் வாக்களித்தனர். தொகுதியில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் அந்த இடங்களில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
திருவாரூர் ஜிஆர்எம் பெண்கள் பள்ளியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அங்கு வாக்களிக்க ஏதுவாக தன்னார்வலர்கள் வழிகாட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மீனாட்சி உதவி பெறும் பள்ளி முன்பு தேங்கிய மழைநீரில் நடந்து, குடை பிடித்தவாறு வரிசையில் நின்று வாக்களித்தனர்.
கொடிக்கால்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் இஸ்லாமியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மழை, வெயிலுக்காக பந்தல் அமைக்கப்பட்டிருந்தும், பெண்கள் பந்தலுக்கு கீழே குடைபிடித்தவாறு வரிசையில் நின்றனர். புதுத்தெருவில் உள்ள நியூபாரத் பள்ளியில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து வாக்களித்தனர். தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் கேட்டுகொண்டதையடுத்து வணிக நிறுவனங்கள், உணவகங்கள், சிறுசிறு வணிகக் கடைகள் மூடப்பட்டிருந்தது.

திருவாரூர் மாவட்டத்தில் 78.04 சதவீத வாக்குப் பதிவு



திருவாரூர் மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தலில் 78.04 சதவீதம் வாக்குகள் பதிவானது.
தொகுதிகள் வாரியான வாக்குப்பதிவு விவரம்:
திருவாரூர் தொகுதி: ஆண்கள் - 1,25,356. பெண்கள் -1,27,661,
மற்றவர்கள்- 13, மொத்தம்- 2,53,030. பதிவான வாக்குகள்:
ஆண்கள்- 93,854. பெண்கள்- 1,01,288. மொத்தம் -1,95,142
வாக்குப்பதிவு சதவீதம்- 77.12.
திருத்துறைப்பூண்டி தொகுதி: ஆண்கள் -1,10,918.
பெண்கள் -1,11,820. மற்றவர்கள்- 1 மொத்தம் - 2,22,739
பதிவான வாக்குகள்: ஆண்கள் -83,127. பெண்கள்- 91,221.
மொத்தம் - 1,74,348. வாக்குப்பதிவு சதவீதம் - 78.27.
மன்னார்குடி தொகுதி: ஆண்கள் - 1,18,926. பெண்கள் - 1,22,318.
மற்றவர்கள்- 3. மொத்தம்: 2,41,247. பதிவானவை- ஆண்கள் - 86,620.
பெண்கள் - 98,042. மற்றவர் - 1. மொத்தம்- 1,84,663.
வாக்குப்பதிவு சதவீதம் 76.55.
நன்னிலம் தொகுதி: ஆண்கள் -1,28,064. பெண்கள்- 1,24,832
மற்றவர்-1. மொத்தம் - 2,52,897.
பதிவானவை: ஆண்கள்-99,325. பெண்கள் 1,03,840.
மொத்தம்- 2,03,840.
வாக்குப்பதிவு சதவீதம் 80.17.
மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் சேர்த்து சராசரியாக 78.04 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Monday 16 May 2016

தஞ்சாவூர் தொகுதி தேர்தல் ஒத்திவைப்பு: மே 23-இல் வாக்குப்பதிவு


தேர்தல் விதிமீறல் புகார்களைத் தொடர்ந்து. தமிழகத்தில் தஞ்சாவூர் தொகுதிக்கு திங்கள்கிழமை (மே 16) நடைபெறவிருந்த தேர்தலை வரும் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு திங்கள்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தல் விதிமீறல் புகாரைத் தொடர்ந்து, அரவக்குறிச்சியில் தேர்தல் தேதியை வரும் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சனிக்கிழமை (மே 14) தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, மற்றொரு தொகுதியான தஞ்சாவூரிலும் தேர்தல் விதி மீறல் புகார்களைத் தொடர்ந்து, தேர்தல் தேதியை மே 23-ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் தள்ளிவைத்து ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 25-ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணைய உயரதிகாரி தெரிவித்தார்.
மாவட்டத் தேர்தல் அதிகாரி, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோர் அனுப்பிய பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
தஞ்சாவூர் தொகுதியில் முக்கியக் கட்சிகள் வரிசையில் அதிமுக சார்பில் ரங்கசாமி, திமுக சார்பில் அஞ்சுகம் பூபதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் அதிமுக-திமுக இடையேதான் நேரடி போட்டி காணப்படுகிறது.