Friday, 20 May 2016

மீண்டும் அதிமுக ஆட்சி: ஆறாவது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா


தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது அதிமுக. இதன் மூலம், அந்தக் கட்சியின் பொதுச் செயலரான ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.
 சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்ற 232 தொகுதிகளில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. அதேசமயம், 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப் பெரிய எதிர்க்கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது.
 மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக-தமாகா, பாஜக, பாமக ஆகிய கூட்டணிகளின் சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளைத் தவிர்த்து 232 சட்டப் பேரவைத் தொகுதிகளில் கடந்த 16-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குகளை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதே வேளையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.
 திமுக-அதிமுக இடையே கடும் போட்டி: முதல் சில சுற்றுகளில் அதிமுக-திமுக இடையே கடும் போட்டி நிலவியது. இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிக சொற்ப அளவிலேயே இருந்தன. சம அளவிலான தொகுதிகளிலேயே இரு கட்சிகளும் முன்னிலை பெற்றிருந்தன.
 இந்த நிலையில், இரு கட்சிகளும் 70 தொகுதிகள் வரை இணையாக பெற்றிருந்த வேளையில் அதிமுகவுக்கு அதிக தொகுதிகளில் முன்னிலை கிடைக்கத் தொடங்கின.
 கை கொடுத்த மேற்கு: அதிமுகவின் வெற்றிக்கு மேற்கு மண்டலத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளே அதிகளவு கைகொடுத்துள்ளன. ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடங்கிய 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 40 தொகுதிகள் வரை அதிமுக வென்றது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது.
 இந்தத் தொகுதிகளில் கிடைத்த வெற்றிகளே அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தன. 232 தொகுதிகளில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
 98 இடங்களை கைப்பற்றிய திமுக அணி சட்டப் பேரவையில் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது. 
 முக்கிய பிரமுகர்களின் வெற்றி: சில முக்கிய பிரமுகர்கள் வெற்றியும், சிலர் அதிர்ச்சித் தோல்வியும் அடைந்துள்ளனர். சென்னை ஆர்.கே.நகரில் மீண்டும் போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதாவும், திருவாரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட கருணாநிதியும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
 அதிமுகவைச் சேர்ந்த மூத்த அமைச்சர்களான நத்தம் ஆர்.விசுவநாதன், ஆர்.வைத்திலிங்கம், பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட 5 பேர் தோல்வியைத் தழுவியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி உள்பட 14 அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
 அதிர்ச்சித் தோல்வி: உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாமக சார்பில் முதல்வர் பதவி வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டு பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தோல்வியடைந்தனர். இதேபோல், பாஜக சார்பில் போட்டியிட்ட முக்கிய தலைவர்களான தமிழிசை செüந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா ஆகியோரும் தோல்வியைத் தழுவினர்.
 ஆறாவது முறையாக முதல்வர்: 
 தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள அதிமுக ஆட்சி அமைக்க ஆளுநர் கே.ரோசய்யாவிடம் ஓரிரு நாள்களில் உரிமை கோர உள்ளது.
 இதற்காக, தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.அப்போது கட்சியின் பொதுச் செயலரான ஜெயலலிதா, சட்டப் பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
 இதைத் தொடர்ந்து, ஆறாவது முறையாக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்கவுள்ளார்.
 சிறப்புப் பெருமை: தமிழகத்தில் இதுவரை ஆறு முறை எந்தத் தலைவரும் முதல்வராகப் பொறுப்பேற்கவில்லை. இந்த சிறப்புப் பெருமையை ஜெயலலிதா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கு சதவீதம் என்ன?
 அதிமுக 40.8%
 திமுக 31.6%
 மற்றவை 17.1%
 காங்கிரஸ் 6.4%
 பாஜக 2.8%
 நோட்டா 1.3%
இறுதி முடிவுகள்
 மொத்த தொகுதிகள் 234
 தேர்தல் நடந்தவை 232 
 முடிவு 
 அறிவிக்கப்பட்டவை 232
 அதிமுக 134
 திமுக 89
 காங்கிரஸ் 8
 இந்திய யூனியன்
 முஸ்லிம் லீக் 1
 23- இல் பதவியேற்பு
 ஆறாவது முறையாக முதல்வராக ஜெயலலிதா மே ó23-ஆம் தேதி காலை 11 மணிக்கு பதவியேற்கிறார். இதற்காக, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment