Friday, 13 May 2016

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம்

திருவாரூர் பேருந்து நிலையத்தில் பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களிடத்தில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வியாழக்கிழமை வழங்கினார் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான டி.என். வெங்கடேஷ்.
பேருந்து நிலையத்தில் பயணிகள் ஆட்டோ மற்றும் பேருந்துகளில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி, பொது மக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கியபோது அவர் பேசியது:
மே 16 பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் விடுபடாமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். வாக்காளர்கள் தங்களது வாக்குகளை விற்காமல் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும்.
இந்தியத் தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் வாக்களிக்க ஏதுவாக மாவட்டத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றார் வெங்கடேஷ்.
முன்னதாக பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் (திருவாரூர்) ராஜேந்திரன், (மன்னார்குடி) வெங்கிடுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment