Tuesday 24 May 2016

மேலும் 4 புதிய அமைச்சர்கள்: அமைச்சர்கள் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்தது

தமிழக அமைச்சரவை திங்கள்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. 4 புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அமைச்சர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது.
 இதுகுறித்து ஆளுநரின் முதன்மைச் செயலர் ரமேஷ்சந்த் மீனா திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 காதி கிராமத் தொழில்கள் துறை அமைச்சராக ஜி.பாஸ்கரன் (சிவகங்கை) நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் துறையானது, கைத்தறித் துறை அமைச்சரான ஓ.எஸ்.மணியனிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டிருந்தது.
 இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சராக சேவூர் எஸ்.ராமச்சந்திரன் (ஆரணி) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்தத் துறையானது, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டிருந்தது.
 தொழிலாளர் நலத் துறை அமைச்சராக நிலோபர் கபில் (வாணியம்பாடி), நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவிடம் இந்தத் துறை கூடுதலாக கொடுக்கப்பட்டிருந்தது.
 கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக பி.பாலகிருஷ்ணா ரெட்டி (ஓசூர்), நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தத் துறையானது, வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணுவிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டிருந்தது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 புதுமுகங்களின் எண்ணிக்கை உயர்வு: அமைச்சரவையில் புதிதாக 4 பேர் சேர்க்கப்பட்டதால், முதல்வருடன் சேர்த்து அமைச்சரவையில் உள்ளோரின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது.
 ஏற்கெனவே 13 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது மேலும் 4 புதியவர்கள் அமைச்சர்களாக சேர்க்கப்பட்டுள்ளதால், புதுமுகங்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.
 சரிக்குச் சமம்: 14-ஆவது சட்டப் பேரவையில் அமைச்சர்களாக இருந்தவர்களில் 12 பேரும், முன்னாள் அமைச்சர்கள் மூவரும் என அனுபவம் பெற்றவர்கள் 15 பேர் உள்ளனர். இப்போது புது முகங்கள் 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளதால், புதுமுகங்களின் எண்ணிக்கை 17-ஆக அதிகரித்துள்ளது. இதனால், அமைச்சரவையில் புதியவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள் சமமாக உள்ளனர்.
 நாளை பதவியேற்பு: புதிய அமைச்சர்கள் 4 பேரும் புதன்கிழமை இரவு 7 மணிக்கு பதவியேற்க உள்ளனர். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment