தேர்தல் பிரசார இறுதி நாளான சனிக்கிழமை அதிமுக, திமுக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் மு. கருணாநிதி 2-வது முறையாகப் போட்டியிடுகிறார். ஏப்.25-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த கருணாநிதி அன்றிரவு தெற்கு வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று தனக்கும், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரித்தார்.
அதன் பிறகு கருணாநிதிக்காக திமுக பொருளர் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் மற்றும் முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். மேலும் கருணாநிதியின் மகன் தமிழரசு, மகள் செல்வி ஆகிய இருவரும் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக திருவாரூரிலேயே தங்கி தந்தைக்காக தொகுதி முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மே. 11, 12 ஆகிய தேதிகளில் மீண்டும் திருவாரூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட கருணாநிதி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வேன் மூலம் தனக்கு வாக்குச் சேகரித்தார். இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை திருவாரூர் ஐயனார் கோயில் தெருவில் மு.க. தமிழரசு தனது தந்தை கருணாநிதிக்காக கட்சியினர் அணிவகுப்புடன் வாக்கு சேகரித்தார். கீழவீதியில் கருணாநிதி மகள் செல்வி தனது தந்தைக்காக வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
அதிமுக வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் வேட்புமனுத்தாக்கல் செய்த நாளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் தொண்டர்களும் தொகுதி முழுவதும், அதிமுகவின் சாதனைகளை விளக்கிக் கூறி, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டுமென்றும் வாக்காளர்களிடத்தில் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்குச் சேகரிப்பு இறுதி நாளான சனிக்கிழமை காலை பெரும்பண்ணையூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து விட்டு இறுதியாக திருவாரூர் புதுத்தெருவிலுள்ள எம்ஜிஆர் சிலை அருகில் பிரசாரத்தை முடித்தார்.
சிபிஐ வேட்பாளர் பி.எஸ். மாசிலாமணி, சனிக்கிழமை காலை புலிவலத்தில் தொடங்கி விளமல், மாங்குடி, கமலாபுரம், கூத்தாநல்லூர், அத்திக்கடை, கொரடாச்சேரி, கண்கொடுத்தவனிதம், குளிக்கரை, அம்மையப்பன், காப்னாமங்கலம், பவித்திரமாணிக்கம் வழியாக பிரசாரம் செய்து பிறகு திருவாரூர் வந்து நகராட்சி அலுவலகத்திலிருந்து கீழவீதி, நேதாஜி சாலை வழியாக பேருந்து நிலையத்தில் வாக்குச் சேகரித்து நிறைவு செய்தார். இதே போல் பாமக வேட்பாளர் சிவக்குமார், பாஜக வேட்பாளர் நா. ரெங்கதாஸ் திருவாரூரில் பிரசாரம் செய்து முடித்துக்கொண்டனர். நாம்தமிழர் கட்சி வேட்பாளர் தென்றல் சந்திரசேகர் திருவாரூரில் பிரசாரம் தொடங்கி நிறைவு செய்தார். சுயேச்சை வேட்பாளர் தேவக்குமார் ஆட்டோவில் பிரசாரம் செய்து நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment