Tuesday, 31 May 2016

அரவக்குறிச்சி, தஞ்சையில் தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்: ராஜேஷ் லக்கானி தகவல்

சட்டப் பேரவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
 இரண்டு தொகுதிகளிலும் அரசின் நலத் திட்டங்களைச் செயல்படுத்தவும், தொடங்கவும் எந்தத் தடையும் இல்லை எனவும் அவர் கூறினார். இது குறித்து, செய்தியாளர்களுக்கு ராஜேஷ் லக்கானி திங்கள்கிழமை அளித்த பேட்டி:
 வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். தேர்தலை ஜூன் 1-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டுமென ஆளுநரும் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு முன்பாக இரண்டு மாநிலங்களில் இதுபோன்று தேர்தல் நடவடிக்கைகளில் ஆளுநர்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
 குஜராத் வன்முறையின் போதும், உத்தரப்பிரதேசத்தில் அதிகாரிகள் மாற்றத்தின் போதும் அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்கள் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியிருக்கின்றனர். இப்போது, தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக ஆளுநர் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
 ரத்துக்கான காரணங்கள்?: தேர்தலுக்கு வாக்குப் பெட்டிகளை பயன்படுத்திய போது அவற்றைக் கடத்துவது, கள்ள வாக்குகள் போடுவது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால், குறிப்பிட்ட அந்தத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யும் நடவடிக்கையை இந்திய தலைமைத் தேர்தல் முன்னாள் ஆணையாளர் டி.என்.சேஷன் கொண்டு வந்தார். இதன் பின், இந்த நடவடிக்கைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டது.
 இதேபோன்று, இப்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் போன்றவை விநியோகித்ததன் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், சட்டமாக்கப்பட்டால் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக யாரும் கேள்விகளை எழுப்ப முடியாது. 
 நடத்தை விதிகள்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, புதிதாக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, இரண்டு தொகுதிகளிலும் பின்பற்றப்பட்டு வந்த நடத்தை விதிகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டுள்ளன. புதிதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், அங்கு நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும்.
 மூன்று தொகுதிகள்: இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டிய சூழலில், திருப்பரங்குன்றம் சட்டப் பேரவை உறுப்பினர் சீனிவேல் மறைவு குறித்த தகவல் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின், அந்தத் தொகுதி காலியானதாக சட்டப் பேரவைச் செயலகத்தால் அறிவிக்கப்பட்டு அதற்கு இடைத் தேர்தல் நடத்தப்படும்.
 தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத் தேர்தலும் சேர்த்தே நடத்தப்படுமா என்பது குறித்து தேர்தல் ஆணையமே ஆலோசித்து முடிவெடுக்கும் என்றார் ராஜேஷ் லக்கானி.

No comments:

Post a Comment