Tuesday 31 May 2016

அனைத்து வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்யக் கோரி காவிரி விவசாயிகள் சங்கம் மனு

அனைத்து வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்யக் கோரி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணனிடம் மனு அளித்தனர்.
அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்டா மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிப்பதென தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் காவிரி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ராஜேந்திரன், மாநில இணைச் செயலர் வரதராஜன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சங்க நிர்வாகிகள் ஆட்சியர் எம். மதிவாணனை சந்தித்து மனு அளித்தனர்.
மனு விவரம்: தமிழக அரசு விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையின்படி அனைத்து விவசாயிகளின், அனைத்து விதமான விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கி மட்டுமின்றி வணிக வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட கடன்களையும் தள்ளுபடி செய்து கடன் சுமையிலிருந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா, தமது தேர்தல் அறிக்கையில் கூறியபடி சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்றுள்ள வேளாண் கடன்களை தள்ளுபடி செய்து கையெழுத்திட்டுள்ளார். ஆனால் சிறு, குறு என்று பேதம் பார்க்காமல் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேலும் வணிக வங்கிகளிலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளளிலும் பெற்றுள்ள கடன்களையும் தள்ளுபடி செய்ய ஆவன செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழக முதல்வருக்கு தஞ்சை, நாகை, திருவாரூர் ஆட்சியர்களிடம் திங்கள்கிழமை (மே 30) விவசாயிகள் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
இதை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் எம். மதிவாணன், விவசாயிகளின் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment