Wednesday, 25 May 2016

திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு


பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி, திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் வட்டாரப் போக்குவரத்துக்குள்பட்ட 64 வாகனங்களின் பதிவுச் சான்று, காப்புச் சான்று, அனுமதிச் சான்று, ஓட்டுநர், நடத்துநர் உரிமம், பள்ளி சிறப்பு விதிகள் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சியும் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் டி.என். வெங்கடேஷ் முன்னிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன், வட்டாரப் போக்குவரத்துக்கு வாகன ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், கோட்டாட்சியர் ரா. முத்துலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மன்னார்குடியில்...
மன்னார்குடியில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் தனியார் பள்ளிகளின் வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யும் பணி வ.உ.சி. சாலையில் உள்ள பின்லே மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் மன்னார்குடி வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த தனியார் பள்ளிகளின் 53 வாகனங்களின் தரம், தகுதி, அனுமதிச் சான்றுகள் சரிபார்க்கப்பட்டன. மேலும், வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் தகுதிச் சான்று, அனுமதிச் சான்று, கண் பரிசோதனை மருத்துவச் சான்றுகளும் தணிக்கை செய்யப்பட்டன.
வாகனங்களின் படிக்கட்டு, தரை தளம், இருக்கைகள், அவசர காலவழி, முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக்கருவி, குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த ஆய்வுகள் செய்யப்பட்டன. குறைபாடுகள் கண்டறியப்பட்ட இரண்டு வானங்களில் அவற்றை சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு வாகனங்களை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் ச. செல்வசுரபி, காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். ரவிச்சந்திரன், வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி ஆகியோர் இணைந்து பள்ளி வாகன ஆய்வு பணியை செய்தனர்.

No comments:

Post a Comment