Tuesday 3 May 2016

பதற்றமான 52 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் புதிதாக பதவி ஏற்ற கலெக்டர் பேட்டி


திருவாரூர் மாவட்டத்தில் பதற்றமான 52 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என புதிதாக பதவி ஏற்ற கலெக்டர் வெங்கடேஷ் கூறினார். 

பதவி ஏற்பு

திருவாரூர் மாவட்ட கலெக்டராக மதிவாணன் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சில மாவட்ட கலெக்டரை தேர்தல் ஆணையம் மாறுதல் செய்து உத்தரவிட்டது. அதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் இடம் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க (கோ-ஆப்டெக்ஸ்) நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வந்த டி.என்.வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து நேற்று திருவாரூர் புதிய கலெக்டராக டி.என்.வெங்கடேஷ் பதவி ஏற்றார். அவர் 2001-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அரசு பணியில் சேர்ந்தார். வணிக வரித்துறை இணை ஆணையராகவும், கரூர் மாவட்ட கலெக்டராகவும், சென்னை மாநகராட்சி உதவி ஆணையராகவும், தமிழ்நாடு சிமெண்டு மேலாண்மை இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார்.

திருவாரூரில் நேற்று புதிதாக பதவி ஏற்ற கலெக்டர் டி.என்.வெங்கடேஷ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடத்திட அனைத்து முன்ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,152 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 52 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் துணை ராணுவ படையினரும் வரவழைக்கப்படும்.

சாய்வு தள வசதி

வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தள வசதி செய்யப்பட்டுள்ளது. முதியோருக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் வாக்காளர் பூத் சிலீப் வழங்கப்பட உள்ளது. தற்போது வேட்பாளர்கள் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களது சின்னங்கள் மின்னனு வாக்கு எந்திரத்தில் பதிவு செய்யப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வாக்குச்சாவடி மையங்களில் தேவையான நிழல் வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிபவர்களுக்கு தேவையான கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் உள்பட பலர் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment