Friday, 31 October 2014

மத்திய அரசுத் துறைகளில் புதிய பணி நியமனங்களுக்குத் தடை


அரசுத் துறைகளில் புதிய பணி நியமனங்களுக்குத் தடை, திட்டம் சாராத செலவினங்கள் 10 சதவீதக் குறைப்பு, அரசு அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு முதல் வகுப்பு விமானப் பயணம் மேற்கொள்ளத் தடை உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டில் (2014-2015) நிதிப் பற்றாக்குறையை, தற்போதுள்ள 4.5 சதவீதத்தில் இருந்து 4.1 சதவீதமாகக் குறைக்கும் நோக்கில், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அரசுத் துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள காலியிடத்தை நிரப்பவும் தடை விதிக்கப்படுகிறது. எனினும், மிக அத்தியாவசியமான சூழ்நிலைகளில் மட்டும் காலியிடத்தை நிரப்ப அனுமதி அளிக்கப்படும்.

மத்திய அரசு அதிகாரிகள், 5 நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. இதேபோல், அரசு அதிகாரிகள் தங்களது வெளிநாட்டுப் பயணங்களின்போது, விமானங்களில் முதல் வகுப்பில் செல்லவும் தடை விதிக்கப்படுகிறது. குறைந்த கட்டணத்திலான பிற வகுப்புகளில்தான் அவர்கள் பயணம் செய்ய வேண்டும். உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ அதிகாரிகள் பயணம் செய்யும்போது, உடன் வருகின்ற ஒருவருக்கு இலவசப் பயணச்சீட்டு வழங்குவதும் ரத்து செய்யப்படுகிறது.
அரசுத் துறைகள் சார்பில் மிகவும் அத்தியாவசியமான கருத்தரங்குகள், மாநாடுகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும். முடிந்தவரையில், கருத்தரங்குகள், மாநாடுகளுக்குப் பதிலாக காணொலி நிகழ்ச்சியாக, சிக்கனமாக நடத்த வேண்டும். வர்த்தக ஊக்குவிப்புக் கண்காட்சிகள் தவிர, வெளிநாடுகளில் இதர வகைக் கண்காட்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது.

ராணுவம், துணை ராணுவப் படைகள், பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான புதிய வாகனங்கள் வாங்க மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மற்ற துறைகளுக்குப் புதிய வாகனங்கள் வாங்க விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது.

திட்டம் சாராத செலவினங்கள் 10 சதவீதம் குறைக்கப்படுகிறது. எனினும், வட்டி செலுத்துதல், கடனைத் திருப்பிச் செலுத்துதல், பாதுகாப்புச் செலவினங்கள், ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல், மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு இந்தக் குறைப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்புகளுக்கும் சிக்கன நடவடிக்கைகள் பொருந்தும். ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைத் தவிர புதிதாக எவ்விதச் சலுகைகளும் தன்னாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படமாட்டாது. அரசின் செயல்பாட்டுத் திறனுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாமல், நிதி நிர்வாகத்தில் ஒழுங்குமுறையைப் பேணுவதை ஊக்குவிக்கும் நோக்கில், இந்தச் சிக்கன நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் 2015-2016-ஆம் நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறையை 3 சதவீதமாகக் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று அந்தக் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாப்பிட்ட திருப்தியைப் பறிக்கும் புளித்த ஏப்பம்


 
  •  

எனக்கு எந்த உணவு சாப்பிட்டாலும் புளிப்புத் தன்மையுடன் மேலே ஏப்பம் வருகிறது. இதை acid reflux என்கிறார்கள். இதிலிருந்து விடுபட ஆலோசனை தருகிறீர்களா?
கணேசன், திருமீயச்சூர்.
நவீன மருத்துவத்தில் இதை GERD என்று குறிப்பிடுவார்கள். உணவுக் குழாய்க்கும் வயிற்றுக்கும் இடையே உள்ள தடுப்பானில் வரும் பிரச்சினையால் இப்படி ஏற்படுகிறது. உணவுக் குழாயின் கீழ் உள்ள வளையமானது மிகவும் நெகிழ்ந்து போய் இருக்கும் நிலையில் இப்படி நடக்கும்.
இந்தத் தடுப்பான் பித்தம் மேலே வருவதைத் தடுக்கிறது. வயிற்றின் மேல் பகுதியை இறுக மூடி வைக்கிறது. இது சரியாக மூடும்போது gastric reflux disease என்ற பித்த ஏப்பம் அல்லது மேல்முகப் பித்தம் வருவதில்லை. சில நேரங்களில் இப்படி மூடாமல் போனால் பித்தம் மேலே வருகிறது. வாயில் பித்தம் ஊறுதல், கசப்பு, வயிறு எரிச்சல், எச்சில் ஊறுதல், வாந்தி எடுக்கும் உணர்வு, நெஞ்சு வலி, இருமல் போன்றவை காணப்படும்.
ஒரு சிலருக்கு உணவுக் குழாயில் புண்ணும், உணவுக் குழாய் சுருங்குதலும் காணப்படும். Barrett’s esophagus என்றொரு நிலை உண்டு. இது புற்றுநோயாக மாறலாம். அபூர்வமாக உணவுக் குழாயில் புற்றுநோயும் வரலாம்.
குழந்தைகளுக்கு
நிறைய குழந்தைகளுக்கு இந்த நோய் உள்ளது. கண்டுபிடிப்பதற்குச் சற்றுச் சிரமமானது. Barrett’s esophagus என்று சொல்லப்படுவது புற்றுநோய்க்கு முந்தைய நிலை. உடல் பருமன் அதிகரிக்க அதிகரிக்க, பித்தம் மேல்முகமாக வரும் தன்மையும் அதிகரிக்கும். Hiatal hernia என்று உண்டு.
அதுவும் பித்தம் மேல்முகம் வரும் GERD-யை அதிகரிக்கும். இந்த GERD-யில் தொண்டை கரகரப்பு, இருமல் போன்றவையும் காணப்படும். குறட்டை நோயும் வரலாம். Hiatal hernia என்பது வயிறானது diaphragm வழியாக மார்புப் பகுதிக்குள் நுழையும் நிலை. இதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. எடை ஒரு காரணம். 50 வயதுக்கு மேல் இது வருகிறது. பித்தம் மேல்முகமாக வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.
சில குழந்தைகளுக்குப் பிறவியிலேயே இது காணப்படுகிறது. நெஞ்சு வலி, வயிறு எரிச்சல், விழுங்குவதற்குச் சிரமம் போன்றவை இதில் காணப்படலாம். குறியீடுகளை வைத்து நாம் கண்டு பிடித்தாலும் வெறும் வயிற்றில்தான் endoscopy செய்கிறார்கள். H-pylori என்ற கிருமி வயிற்றுப்புண்ணுக்குக் காரணமாகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆயுர்வேத மருந்துகள்
பித்தத்துக்குக் கசப்புள்ள மருந்துகளை முதலில் கொடுக்க வேண்டும்.
# சிற்றமிர்து சேர்ந்த குடூச்சியாதி கஷாயம், நன்னாரி கஷாயம் ஆகியவற்றை முதலில் கொடுக்க வேண்டும்.
# பின்பு பேதிக்கு மருந்து கொடுக்க வேண்டும். கல்யாணக குடம் 20 கிராம், திரிவிருத் லேகியம் 20 கிராம் கொடுக்க வேண்டும்.
# அதற்குப் பிறகு இந்துகாந்த கிருதம், டாடி மாதி கிருதம் போன்ற நெய் மருந்துகளை நிலைமையை அனுசரித்துக் கொடுக்க வேண்டும்.
# உடனடி நிவாரணத்துக்குக் காம தூக ரஸம், அவிபத்தி மாத்திரை, யஷ்டிமது மாத்திரை, அம்ல பித்தாந்தக லோக வடி, ஸப்தாம்ருத லோக வடி போன்றவற்றைக் கொடுக்கலாம்.
கைவைத்திய முறைகள்
இனி அனுபவ மருத்துவமான பாட்டி வைத்தியம், கை வைத்திய மருந்துகளைப் பார்ப்போம்.
# வெந்தயப் பொடியை மோரில் கலந்து சாப்பிடலாம். வெந்தயக் கீரையுடன் பயத்தம் பருப்பு சேர்த்துக் கூட்டு செய்தும் சாப்பிடலாம்.
# சாம்பார் செய்யும்போது வெந்தயத்தையும், துவரம்பருப்பையும் சேர்த்து வேக வைத்துக் கடைந்து சாப்பிடலாம்.
# அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாயுக்கள் சீற்றம் அடைந்து குடல் சுவரைப் புண்ணாக்கி விடுகின்றன. உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்க வைத்துக் கஷாயம் செய்து குடிக்கலாம்.
# மஞ்சளைத் தணலில் இட்டு, சாம்பல் ஆகும்வரை எரிக்க வேண்டும். எரிந்த கரி மஞ்சள் சாம்பலை ஒரு கிராம் தேனில் கலந்து சாப்பிடலாம்.
# கேரட் ஜூஸைக் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
# சோம்பை வெயிலில் காயவைத்து, இடித்துச் சலித்து 5 கிராமும், வல்லாரைத் தூள் 10 கிராமும் சேர்த்துக் கலந்து, காலை மாலை தேக்கரண்டி அளவு தூளுடன் அதே அளவு பசு வெண்ணெயைச் சேர்த்து மூன்று நாள் தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறிவிடும்.
# எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய பால், முட்டையின் வெள்ளைக்கரு, வெண்ணெய் போன்றவற்றைத் தேவையான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
# காபி, டீ, குளிர்பானம், மது, புகை, போதை தரும் பானங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். அதிகக் காரமான உணவு வகைகளையும், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகளையும் சாப்பிடக் கூடாது.
# அதிக நார்ச்சத்து உள்ள உணவு வகைகள், முழு தானிய உணவு வகைகளைத் தவிர்க்கவும்.
# கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகள், இறைச்சி, எண்ணெய் வறுவல் போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது.
# எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது. பூண்டு, இஞ்சி, காலிஃபிளவர், பூசணிக்காய், வெங்காயம் போன்றவற்றைக் கொஞ்சமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
# நெல்லிக்கனி, கடுக்காய், தான்றிக்காய், நிலவேம்பு, மஞ்சள், பாதாம் பிசின், காவிக்கல், அம்மான் பச்சரிசி ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 5 கிராம் அளவுக்கு 21 நாள்கள் இதைச் சாப்பிடலாம்.
# அத்திக்காயை சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் புளித்த ஏப்பம் குறையும்.
# 10 கிராம் ஆலம் விழுது, 10 கிராம் ஆலம் விதை இரண்டையும் நன்றாக அரைத்துப் பாலுடன் சேர்த்துக் குடிக்கலாம்.
# மணத்தக்காளி கீரையுடன் பருப்பு சேர்த்துக் கடைந்து, தொடர்ந்து 15 நாட்களுக்குச் சாப்பிடலாம்.
# துத்தி இலையை அரைத்துச் சாப்பிட்டால் அல்சர் குணமாகும்.
# 100 கிராம் மாம்பருப்பை மேல் தோல் நீக்கிப் பொடி செய்து கொள்ளவும். பிறகு தேவையான அளவு மணத்தக்காளி கீரையைப் பிழிந்து சாறு எடுத்து, அதில் மாம்பருப்புப் பொடியைக் கலந்து வெயிலில் காயவைத்து மீண்டும் பொடி செய்துகொள்ளவும். தினமும் காலை மாலை இரு வேளையும் ஒன்று அல்லது இரண்டு கிராம் பொடியை மோர் அல்லது வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
# காலையில் இறக்கிய பதநீரில் அரை ஸ்பூன் மஞ்சள் தூளைக் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
# சோற்றுக் கற்றாழையின் சோற்றுடன் புளிக்காத எருமைத் தயிரைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
# 5 அல்லது 6 பூண்டை ஒரு டம்ளர் பசும்பாலில் போட்டு நன்றாகக் காய்ச்சி வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
# மாசிக்காயின் தூள் 1 ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் குழைத்துத் தினமும் காலை, மாலை இரண்டு வேளை சாப்பிடலாம்.
# ஒரு கைப்பிடி கசகசாவைத் தண்ணீர் விட்டு அரைத்து, காய்ச்சிய பசும்பாலில் கலந்து இரவில் படுக்கும் முன் குடிக்கலாம். அத்தி இலையுடன் வேப்ப இலையைச் சம அளவு சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடிக்கலாம்.
# அத்தி இலைக் கொழுந்து, அவரை இலைக் கொழுந்து, குப்பை மேனிக் கீரை இம்மூன்றையும் சம அளவு சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடிக்கலாம்.
# மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், வயிற்றுப்புண் மட்டுமல்லாமல் வாய்ப்புண்ணும் குணமாகும்.
# அகத்திக் கீரை இலைகளை வெங்காயம் சேர்த்து வேகவைத்து நன்றாகப் பிழிந்து, அதில் கிடைக்கும் சாற்றைக் குடித்து வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
# அத்தி மரப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, சம அளவு பசும்பால் கலந்து சிறிது கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

கருப்பு பணம் பதுக்கிய 627 பேர் பட்டியல்

வெளிநாட்டு வங்கியில் கருப்புப் பணம் பதுக்கிவைத்திருந்த 627 இந்தியர்களின் கணக்கு விவரங்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது.
 
இதன்மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்பது குறித்த வழக்கில் மத்திய அரசிடம் உள்ள பட்டியலை சமர்ப்பிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் ரஞ்சனா பி.தேசாய், மதன் லோக்கூர் ஆகியோர் அடங் கிய அமர்வு முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கருப்புப் பணம் வைத்திருப் பவர்களின் பட்டியலை சமர்ப்பித் தார். அதில், வெளிநாட்டு வங்கி யில் கணக்கு வைத்துள்ள இந்தி யர்கள் 627 பேரின் விவரங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் வாதிடும்போது, “கருப்புப் பண விவகாரம் தொடர்பாக வெளிநாடுகளுடன் இந்திய அரசு மேற்கொண்ட கடிதப் பரிமாற்றம், அதற்கு அவர்கள் அளித்த பதில் விவரம் ஆகியவையும் சமர்ப்பிக் கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுடன் வங்கிக் கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ள வகை செய்யும், இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம், அதன் விதிமுறைகள் ஆகியவையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இப்பட்டியலை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், “இதைப் பிரித்துப் பார்த்து யார், யாரெல்லாம் கணக்கு வைத்துள்ளார்கள் என்பதை அறிய நீதிமன்றம் விரும்பவில்லை. இப்பட்டியல் அப்படியே கருப்புப் பணத்தை மீட்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கருப்புப் பணத்தை மீட்க தேவை யான நடவடிக்கை எடுப்பார்கள்” என்று தெரிவித்தனர்.
 
எச்எஸ்பிசி வங்கி
அப்போது முகுல் ரோத்கி, “இது ஜெனீவாவில் உள்ள எச்எஸ்பிசி வங்கி கிளையில் உள்ள கணக்குகளின் பட்டியல். இவை பிரான்ஸ் அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இதில், பெரும்பான்மை கணக்குகள் இந்தியர்களுடையது. மற்றவை வெளிநாடு வாழ் இந்தியர்களுடையது. இந்திய வரிச் சட்டத்தின்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீது வழக்கு தொடர முடியாது.
வங்கி கணக்கு ரகசியங்களை வெளியிடுவதால், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மீறப்பட்டு அதன்மூலம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதுகுறித்து சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் முறையிட எனக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்று கோரினார்.
அதற்கு நீதிபதிகள், “சிறப்பு புலனாய்வுக் குழுவில் முன்னாள் நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு நடைமுறை பிரச்சினைகள் அனைத்தும் தெரியும். எனவே, மத்திய அரசுக்கு உள்ள சிரமங்களை புலனாய்வுக் குழுவிடம் அட்டர்னி ஜெனரல் தெரிவிக்கலாம். மனுதாரர் ராம் ஜெத்மலானியும் தனது தரப்பு கருத்தை அங்கு தெரிவிக்கலாம்” என்று அனுமதி அளித்தனர்.
அடுத்தமாதம் அறிக்கை
இப்பட்டியலை ரகசியமாக பாதுகாத்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் அல்லது துணைத் தலைவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், கருப்புப் பணத்தை மீட்க தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை அக்குழு எடுக்க வேண்டும் என்றும், அதுகுறித்த அறிக்கையை நவம்பர் இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Thursday, 30 October 2014

நகரமன்ற கூட்டம் மூன்று மாதங்களுக்கு பிறகு நேற்று நடைபெற்றது .

திருவாரூர் நகராட்சியின் சாதாரண நகரமன்ற கூட்டம் மூன்று மாதங்களுக்கு பிறகு தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது

திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, மு. கருணாநிதி மற்றும் டாக்டர் அம்பேத்கர் படங்களை வைக்க வேண்டுமென்று புதன்கிழமை நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்றதால், அரசு அலுவல கங்களில் ஜெயலலிதா படத்தை அப்புறப்படுத்த வேண்டுமென்று திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன

பின்னர் திமுக மற்றும் சுயேட்சை உறுப்பினர் நகராட்சி அலுவலக ஊழியர் சிவசங்கரன் என்பவரிடம் படங்களை ஒப்படைத்தனர்.
இன்னும் ஒரு வாரத்தில் உரிய அனுமதி பெற்று தலைவர்களின் படங்கள் கூட்டரங்கில் வைக்க முயற்சி மேற்கொள்வதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து கூட்டம் நிறைவு பெற்றது.

Wednesday, 29 October 2014

எதிரி எனக்குள்ளே இருக்கிறானா?

ஒருவர் தனது குணநலன்களை வளர்த்துக்கொள்வது முடிவற்ற ஒரு செயல்முறை. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும், இந்த நொடியில்கூட உங்கள் குணநலன் பரிணமிக்கிறது. தற்போதும், இந்தச் செயல்முறையை நிறுத்துவது சாத்தியம் அல்ல. நீங்கள் பார்ப்பது, முகர்வது, கேட்பது, ருசிப்பது அல்லது தொடுவது எல்லாமே உங்கள் குணநலன்களை, உங்கள் ஆதாரமான இயல்பை மாற்றிக்கொண்டிருக்கின்றன. அன்றாட அனுபவங்கள் உங்கள் குணநலனை உருவாக்குகின்றன. உங்களால் இந்த மாற்றத்தை நிறுத்த முடியாவிட்டாலும் அதைக் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் பார்க்கும் அனைத்து விஷயமும், நீங்கள் பழகும் மனிதர்களும், நீங்கள் செல்லும் இடங்களும் உங்களது குணநலனை உருவாக்குகின்றன.
உண்மையான குணம்
நீங்கள் அனைவராலும் விரும்பப்படுபவராக இருக்கலாம். அருமையான பண்புடையவர் என்று உங்களைப் பற்றி மக்கள் கூறலாம். அவர்கள் பார்வையில் படுவதை வைத்து அப்படிச் சொல்கிறார்கள். அது நல்லதுதான். ஆனால் ஒருவரின் உண்மையான குணம் அல்லது இயல்பு என்பது யாரும் இல்லாதபோது அவர் எப்படி இருக்கிறார் என்பதைப் பொறுத்ததே. நீங்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது, உங்களை எடைபோட யாருமே இல்லாதபோது நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? தெருவில் தனிமையில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு போகும் போது, நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள்? என்ன பதில் சொல்கிறீர்களோ, அதுதான் உண்மையிலேயே நீங்கள். உங்கள் பதில் உங்களுக்குத் திருப்தி தருகிறதா? அப்படியானால் நீங்கள் அருமையானவர். அப்படி இல்லையென்றால் அது தொடர்பாக என்ன செய்ய விரும்புகிறீர்கள்?
நீங்கள் எதை உள்வாங்குகிறீர்களோ, உங்களை எது உள்வாங்குகிறதோ அதைப் பொறுத்ததே உங்கள் இயல்பு அமையும்.
சுய பரிசோதனை
நீங்கள் தொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறீர்கள்? என்ன இசை கேட்கிறீர்கள்? யாரைக் கேட்கிறீர்கள்? உங்களுக்கு ஆரோக்கியமான சமூகப் பழக்க வழக்கங்கள் இருக்கின்றனவா? இந்தக் கேள்விகளை எல்லாம் நீங்கள் உங்களிடமே கேட்டுக்கொள்ள வேண்டும். (அதற்குப் பதிலளிக்கவும் வேண்டும்) இது ஒரு சுய கணக்கெடுப்பு. சுய பரிசோதனை.
உங்களை எந்த விஷயங்கள் மகிழ்விக்கின்றனவோ, எந்த விஷயங்களை நீங்கள் அதிகம் வெறுக்கிறீர்களோ, அவைதான் நீங்கள். நான் ஒரு உதாரணம் தருகிறேன்.
எதிர்மறையான எண்ணம் கொண்டவர்கள் அல்லது எதற்கெடுத் தாலும் புகார் சொல்பவர்களுடன் இருப்பதை நான் வெறுக்கிறேன். எப்போதும் குறைபட்டுக்கொள்பவர்கள்
பேசுவதைக் கேட்கும்போது எனது தசை சுருங்குகிறது. ஏன் தெரியுமா?
நான் என்னவாக இருக்கிறேன்
என்பதே இதற்கான காரணம். நான் நேர்மறையான எண்ணம் கொண்டவன். நேர்மறையான நபர்கள் சூழ இருப்பதை விரும்புபவன். நான் ஊக்கப்படுத்துபவன். என்னைச் சுற்றியுள்ளவர்களை ஊக்கப்படுத்த விரும்புபவன். ஆனால் எதிர்மறையான எண்ணமும் புகார் சொல்வதில் நாட்டமும் உள்ளவர்கள் தங்கள் துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். எதிர்மறையான நபர்கள் எனக்கு ஆயாசமூட்டுகிறார்கள்.
சமரசம் வேண்டாம்
என்னைப் பற்றி நான் புரிந்துகொண்ட பிறகும் நான் எதிர்மறையான நபர்களை ஊக்குவிக்கிறேன் என்றால் எதிரி என்னிடம் இருக்கிறான் என்று பொருள்.
நான் வளருவதற்கு உதவும் விஷயங்களுக்கும், என்னைப் பிய்த்துப் போடும் விஷயங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நான் புரிந்துகொள்வது என் பொறுப்பு. இந்த உண்மையைப் புரிந்துகொள்வது, நான் ஊக்குவிக்கும் நபர்கள், இடங்கள் குறித்து என்னைப் பொறுப்பாக நடக்கவைக்கும்.
உங்கள் வாழ்க்கையில் உள்ள எதிரியைப் போன்ற அம்சங்களை நீங்கள் அடையாளம் கண்டுவிட்டால், அவற்றைத் துண்டிக்கும் முடிவையும் சமரசமின்றி உடனடியாக எடுத்துவிடுங்கள். யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் பயப்பட மாட்டேன் என்று விரட்டுங்கள். இந்த முடிவில் சமரசம் செய்துகொண்டுவிட்டீர்கள் என்றால் அந்தக் கணமே உங்களுக்கு நீங்களே எதிரியாகிவிடுகிறீர்கள்.
 
யார் எதிரி?
 
நீங்கள் கேட்கலாம். “நான் மிகவும் பிரியம் வைத்துள்ளவர் அல்லது குடும்ப உறுப்பினர் அப்படிப்பட்டவராக இருந்தால் என்ன செய்வது?” நான் அப்படிச் சொல்லவில்லை. நீங்கள் அவர்களைத் தூரத்தில் வைத்து நேசிக்கலாம் என்பதுதான் என் பதில். (இது உங்களது வாழ்க்கைத் துணைக்குப் பொருந்தாது. அவர்தான் உங்கள் எதிரி என்றால், அது இன்னொரு புத்தகத்திற்கான விஷயம் .)
இது உங்களுக்கான பருவம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களை மேலும் சிறந்தவராக்குவதற்கான நேசத்தை வளர்த்துக்கொள்ள இதுதான் சிறந்த தருணம். உங்களது நல்வாய்ப்புக்கு இதைப் பயன்படுத்திக்கொள்ள நீங்கள் இந்தப் பருவம் முழுவதையும் கடக்க வேண்டும். உங்களுக்கானவர் யார் உங்களுக்கு எதிரி யார் என்பதை உண்மையிலேயே மதிப்பிடுவதற்கான சமயம் இது.
 
அமெரிக்க தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஜானி டி விம்ப்ரே எழுதி சக்சஸ் ஞான் வெளியிட்டுள்ள From the HOOD to doing GOOD எனும் நூலிலிருந்து தொகுப்பு- நீதி

Tuesday, 28 October 2014

இந்தியவும், ஜப்பானும் நட்புறவில் வழுவாக உள்ளது: கோஜி சுகியாமா


இந்தியாவும், ஜப்பானும் நட்புறவில் வழுவாக உள்ளது என்றார் சென்னையிலுள்ள ஜப்பான் தூதரக துணை தூதர் கோஜி சுகியாமா.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடியில் பத்மா நரசிம்மன் தொழிற் பள்ளி செயல்பட்டு வருகிறது. இத்தொழிற் பயிற்சி பள்ளி நிலையத்துக்கு ஜப்பான் நாட்டு மக்கள் மற்றும் ஜப்பான் அரசு சார்பில் ரூ. 65 லட்சம் வழங்கப்பட்டு, புதியக் கட்டடம் கட்ட ப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை புதியக் கட்டடத்தை திறந்து வைத்து மேலும் அவர் பேசியதாவது:
சென்னையிலுள்ள ஜப்பான் துணைத்தூதரகம் மூலம் 1990 முதல் 2014 வரை தென்னிந்தி யாவில் 117 நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. ஆண்டுக்கு சுமார் 4 நிறுவனங் களுக்கு நிதியுதவி செய்யப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் செயல்படும் சுவாமி தயானந்த சரஸ்வதி கல்விச் சங் கம் மூலம் ஆண்டுதோறும் 100 ஏழை, எளிய மாணவர்கள் குளிர்சாதன மெக்கானிக், வீட்டு உபயோகப் பொருள்கள் பழுதுபார்த்தல், வீடுகளில் வயரிங் மற்றும் பிளம்பிங் பணி செய்ய தகுதி பெறுவர். இதன் மூலம் சிறந்த வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்களது சமூகப் பொருளாதார நிலையை வலுப்படுத்த முடியும்.
ஜப்பானும், இந்தியாவும் நீண்ட நாள்களாக நட்புறவைக் கொண்டுள்ளது. கடந்த ஜனவரியில் ஜப்பான் பிரதமர் அபே இந்திய குடியரசுத் தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இ ந்தியா வந்து சென்றார். அதேபோல் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கடந்த செப்டம்பர் மா தம் ஜப்பான் சென்றார். இதன்மூலம் இருநாட்டு நட்புறவு உறுதியாகவுள்ளது என்பது அனை வருக்கும் தெரிந்ததே.
இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்த உயர்மட்ட அரசியல் ஒத்துழைப்பு எப்படி முக்கியமான தோ அதேபோல் அடிமட்ட ஒத்துழைப்பும் மிக அவசியம். மாணவர்கள் பள்ளியை மிகவும் சுத்தமாக வைத்துக்கொண்டு நன்கு பராமரித்து நீண்ட காலம் பயன்படும்படி பார்த்துக்கொள் ள வேண்டும். என்றாவது ஒரு நாள் இப்பள்ளியில் படித்த மாணவர்கள் நம் இரு நாடுகளுக் கும் இடையே நட்புக்கு பாலமாக இருப்பார்கள் என நம்புகிறேன் என்றார் கோஜிசுகியாமா.
விழாவில், சுவாமி தயானந்தா சரஸ்வதி கல்விக்குழுத் தலைவர் டி.டி. ஜெகன்நாதன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். கல்விக்குழுச் செயலர் டாக்டர் சாந்தி ரெங்கநாதன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் க. பாஸ்கர் நன்றி கூறினார். கல்விக்குழு உறுப்பினர் ராதிகா சீனிவாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

வெளிநாடு வாழ் இந்தியருக்காக மாற்று நபர் வாக்களிக்க அனுமதி: தேர்தல் ஆணையம் பரிசீலனை

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், மாற்று நபர் மூலம் வாக்களிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தெரிவித்துள்ளார்.
 
மக்களவை, சட்டசபை, உள்ளாட்சித் தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க வகை செய்யும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத் திருத்தம் 2010-ம் ஆண்டில் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அவர்கள் இந்தி யாவுக்கு வந்து வாக்களிப்பது சிரமம் என்பதால் அவர்கள் வசிக்கும் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள், ஆன் லைன் மூலம் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப் பட்டு வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி யிருப்பதாவது:
 
பல்வேறு நாடுகளில் உள்நாட்டு மக்கள் தொகைக்கு இணையாக இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்தியத் தூதரகத்தில் வாக்குப் பதிவை நடத்த முடியாது.
 
அதற்குப் பதிலாக ராணுவ வீரர்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது போன்று மாற்று நபர் மூலம் வாக்களிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். அதாவது வெளிநாடுவாழ் இந்தியரின் பிரதிநிதியாக வேறொருவர் வாக்களிக்கலாம்.இதேபோல் ‘இ-வோட்டிங்’ முறை குறித்தும் பரிசீலித்து வருகிறோம். ‘இ-வோட்டிங்’ நடைமுறையில் சம்பந்தப்பட்ட வாக் காளர்களுக்கு இணையம் வாயிலாக வாக்குச் சீட்டு அனுப்பி வைக்கப்படும். அதில் அவர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்து தபாலில் அனுப்ப வேண்டும். இதற்காக சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
 
வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம், சட்ட அமைச்சகம், வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை ஆகியவற்றின் பிரதி நிதிகள் அடங்கிய 12 பேர் குழு ஆய்வு நடத்தி தனது பரிந் துரைகளை தெரிவித்துள்ளது அந்தப் பரிந்துரைகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. மத்திய சட்ட அமைச் சகத்தின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

Monday, 27 October 2014

நமதூர் மௌத் அறிவிப்பு 28/10/14

 
 
   நமதூர் காட்டுப்பள்ளி தெரு குட்டா   வீட்டு மர்ஹும் அப்துல் ரஹ்மான் அவர்களின் மனைவியும் , அஹமது , அபூபக்கர், அப்துல்லாஹ் ,சுல்தான் அப்துல் காதர் இவர்களின் தாயாருமான முத்தாச்சி என்கிற ஆசியம்மாள் அவர்கள் மௌத் .அன்னாரின் ஜனாஸா 28/10/2014 செவ்வாய்  முற்பகல் 11 மணிக்கு நமது முஹையத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்

ஆன்லைன் ஷாப்பிங் நுகர்வோரை பாதுகாக்க சட்டதிருத்த மசோதா மக்களவையில் விரைவில் தாக்கல்

 

    ஆன்லைன் ஷாப்பிங் நுகர்வோர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் அதற்கான திருத்தம் கொண்டு வரப்பட்டு விரை வில் மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. நுகர்வோர் தாங்கள் விரும்பும் பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து வாங்கும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கையும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, ஆன்லைன் ஷாப்பிங் நுகர்வோர்களுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்றும், ஆன்லைனில் தவறான விளம்பரங்களை கொடுப்பதை தடுக்க வேண்டும் என்றும், இவற்றை சட்டரீதியாக உறுதி செய்ய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் உரிய திருத்த கொண்டு வரவேண்டும் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் சமீபகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்த கோரிக்கையை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலித்து வந்த நிலையில், தற்போதுள்ள நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில், ஆன்லைன் ஷாப்பிங் நுகர்வோர்களை பாதுகாக்க வகை செய்யும் புதிய அம்சங்களை சேர்க்க முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sunday, 26 October 2014

முதல்முறையாக பால் விலை அதிகபட்ச உயர்வு

பொதுமக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் முக்கியமானது பால். இது அனைத்து தரப்பினருக்கும் தடையில்லாமல் கிடைக்கும் நோக்கில் தமிழக அரசு கடந்த 1981 ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களைக் கொண்டு ‘ஆவின்’ என்ற பெயரில் பால் நிறுவனத்தை உருவாக்கியது. இதன்மூலம், தமிழக மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பால் கிடைக்க அரசு வழிவகை செய்தது. பால் விற்பனை நல்ல லாபம் தரும் சந்தையாக இருப்பதால் தனியார் நிறுவனங்களும் 1990-களில் பால் பாக்கெட் விற்பனையில் இறங்கின.
 
திருமலா, டோட்லா, ஹெரிட் டேஜ், ஜெர்சி ஆகிய முன்னணி தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.40-க்கு மேல் இருக்கிறது. தனியார் பால் நிறுவனத்தின் சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.44, நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.40, முற்றிலும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் ரூ.36, கொழுப்பு செறிவூட்டப்பட்ட பால் ரூ.48-க்கு தற்போது விற்பனை ஆகிறது. சராசரியாக 3 மாதத்துக்கு ஒருமுறை பால் விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்துகின்றன. தனியார் பால் பாக்கெட் விலை கடந்த 2 ஆண்டுகளில் 7 முறை உயர்த்தப்பட்டுள்ளது.
 
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு காரணமாக 2001-ம் ஆண்டு டிசம்பரில் சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் லிட்டர் ரூ.11.44-ல் இருந்து ரூ.1.06 உயர்ந்து ரூ.12.50 ஆனது. 2004-ல் கொள்முதல் விலை மட்டும் ரூ.1 உயர்த்தப்பட்டது. விற்பனை விலை உயர்த்தப்படவில்லை. 2007-ல் சமன்படுத்தப்பட்ட பால் ரூ.12.50-ல் இருந்து ரூ.1.50 உயர்ந்து ரூ.14 ஆனது. 2008-ல் லிட்டருக்கு ரூ.2 ம், 2011-ல் அதிரடியாக லிட்டருக்கு ரூ.6.25-ம் உயர்த்தப்பட்டு லிட்டர் ரூ.24 என்ற விலையை எட்டியது. ஒரேயடியாக லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியிருப்பது ஆவின் வரலாற்றில் இதுதான் முதல்முறை.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு மூலம், ஆவின் நிறுவனத்தின் 4 வகையான பால் பாக்கெட்களும் லிட்டருக்கு ரூ.10 உயர்கிறது.
 
சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்) சில்லறை விலை ரூ.27-ல் இருந்து ரூ.37 ஆகவும், அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.24-ல் இருந்து ரூ.34 ஆகவும் உயர்கிறது. நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) சில்லறை விலை ரூ.31-ல் இருந்து ரூ.41 ஆகவும், அட்டைகளுக்கு ரூ.29-ல் இருந்து ரூ.39 ஆகவும் உயர்கிறது. நிறைகொழுப்பு பால் (ஆரஞ்சு) சில்லறை விலை ரூ.35-ல் இருந்து ரூ.45 ஆகவும், அட்டைகளுக்கு ரூ.33-ல் இருந்து ரூ.43 ஆகவும், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (இளம்சிவப்பு) சில்லறை விலை ரூ.24-ல் இருந்து ரூ.34 ஆகவும், அட்டைகளுக்கு ரூ.23-ல் இருந்து ரூ.33 ஆகவும் உயர்கிறது.
இந்த விலை உயர்வுக்கு முன்பு, ஆவினைவிட தனியார் பால் பாக்கெட் விலை சராசரியாக ரூ.13 அதிகம் இருந்தது. விலை உயர்வுக்குப் பிறகு, தனியார் பால் பாக்கெட் விலை ஆவினைவிட ரூ.3 அளவுக்கு அதிகம் உள்ளது.

ஆதார் அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு

கோப்புப் படம்

 
ஆதார் அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
 
அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், "ஆதார் அடையாள அட்டை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஓர் அடையாள எண் வழங்கப்படுகிறது. இதனால், எங்கும் எப்போதும் ஒருவரின் அடையாளத்தை எளிதாக சரிபார்க்க முடியும்.
 
குறிப்பாக, நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மக்கள், அரசின் பல்வேறு சேவைகளைப் பெற வசதியாகவே இது இருக்கும்.
பயோமெட்ரிக் அடிப்படையில் தகவல்கள் சேகரிக்கப்படுவதால், இந்த அடையாள அட்டையில் மோசடி செய்வதற்கு வாய்ப்பில்லை.
ஆதார் அட்டை மூலம் பல்வேறு பயன்களைப் பெறலாம். வங்கியில் கணக்கு தொடங்க இந்த அட்டையை பயன்படுத்தலாம். அதோடு, பாஸ்போர்ட் பெறுவதற்கும் இதை அடையாள ஆவணமாக காட்டலாம். அரசின் பல்வேறு திட்டங்களை ஆதாருடன் இணைத்து செயல்படுத்தவுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2010-ம் ஆண்டு ஆதார் திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை 67.38 கோடி பேருக்கு ஆதார் எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்கு இதுவரை ரூ.4,906 கோடி செலவிடப்பட்டுள்ளது.
முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சுஷீல் குமார் ஷிண்டே, ப.சிதம்பரம் ஆகியோர் ஆதார் திட்டத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
 
இந்நிலையில், தற்போதைய பாஜக தலைமையிலான ஆட்சியில் அத்திட்டத்தை முழுமையாக ஆதரித்திருப்பது கவனிக்கத்தக்கது.

Saturday, 25 October 2014

பராமரிப்பு, பாதுகாப்பின்மையால் தொடர்ந்து இடிந்து வரும் கமலாலயக் குளக்கரை


 
 
திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலயக் குளக்கரை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறைவு காரணமாக குளக்கரைகள் தொடர்ந்து இடிந்து வருகிறது.
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் மேற்கு பகுதியில் வரலாற்று பெருமை கொண்ட கமலாயம் குளம் உள்ளது. கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்ற கருத்து உண்டு. குளத்தின் நடுவில் பழமையான நாகநாதசுவாமி கோயில் உ ள்ளது. குளத்தைச் சுற்றி சுமார் 20 அடி உயரத்துக்கு செங்கல் கட்டடம் கட்டப்பட்டு, அதன் மீது இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் நகருக்கு பிரதான சாலையாக கமலாலயக் குளக்கரை இருந்து வருவதால் காரைக்கால், மயிலாடுதுறை, கும்பகோணத்துக்கு போக்குவரத்து சாலையாக உள்ளது. பழங்கால கட்டடம் என்பதால் டன் கணக்கில் எடையுள்ள கனரக வாகனங்கள் செல்லும் போது குளக்கரை பாதிப்புக்குள்ளாகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த மழையில் குளக்கரை ஈரமாகி மண் தன்னுடைய கடினத் தன்மையை இழந்து இருந்தது. குளக்கரை அதிக பாரத்தை தாங் காது என்ற கருத்து நிலவிய போதும் அரசு நிர்வாகம் அவ்வழியே செல்லும் கனரக வாகனங்களின் இயக்கத்தை தடுக்கவில்லை.
இதனால் 2012 அக்.23-ம் தேதி குளத்தின் வடகரை முதலில் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கும், அடுத்து தொடர்ச்சியாக அக்.31-ம் தேதி மேலும் 100 அடி தூரத்துக்கு குளக்கரை இடிந்து விழுந்தது. குளக்கரை இடிந்து பின்பே அவ்வழியில் பேருந்து, கனரக போக்கு வரத்து நிறுத்தப்பட்டு கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டன.

கரை இடிந்து நாள்கள் கடந்ததே தவிர தியாகராஜர் கோயில் நிர்வாகமோ, மாவட்ட நி ர்வாகமோ கரையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளலாத நிலையில், பத்திரிகைகளும், பொதுநல அமைப்புகள் கரை சீரமைப்புக்காக குரலெழுப்பியது.

வரலாற்று சிறப்பு மிக்கது கமலாலயக் குளம் என்பதும், இக்கோயில் உலக பிரசித்திப் பெற்றதுஎன்பதும் அரசு நிர்வாகத்துக்கு தெரிந்தும் ஏனோ காரணத்தினால் கரை சீரமை ப்பு பணியை தொடங்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது.

பொது நல அமைப்புகளின் குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தால் மெல்ல மாவட்ட நிர்வாகம் கரை சீரமைப்பைத் தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு, முதலில் சுமார் ரூ. 53 லட்சமும் இது போதாதென்று பிறகு ரூ. 93 லட்சம் என நிதியை பெற்றது. கரை இடிந் து 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையிலும், பராமரிப்புக்கு நிதி பெற்று பல மாதங்க ள் கடந்தும் அண்மையில் தான் குளக்கரை சீரமைப்புப் பணித் தொடங்கின.

ஏற்கெனவே இடிந்து விழுந்த குளக்கரை சீரமைப்பு பணியே தற்போதுதான் தொடங்கியுள்ளது என்ற நிலையில், குளத்தின் மேற்கு பகுதியில் சனிக்கிழமை சுமார் 150 அடி நீளத்துக்கு கரை இடிந்து விழுந்தது. இதில் பாதிப்பு எதுவும் இல்லை.

கரை இடிந்தப் பகுதியில் இருந்த மின்கம்பமும் சாய்ந்து விழுந்தது. இதனால் மின்வ யர்கள் தரையில் கிடந்தது. திருவாரூர் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சனிக்கிழ மை மின்தடை செய்யப்பட்டிருந்ததால் மின்சாரத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மின்சாரம் இருந்திருந்தால் அதிகப் பாதிப்புகள் நிகழ்ந்திருக்கும். ஏனெனில் தற்போது குளத்தின் மேற்குகரை தான் பிரதான வழிச்சாலையாக உள்ளது.

தற்போது தொடர்ந்து மழைப் பெய்து வருவதால் குளத்தின் கரை வழுவிழந்துள்ளது. எனவே அவ்வழியாக பேருந்து, லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல சாலை தகுதி யானதா என்பதை ஆய்வு செய்து இயக்க வேண்டும். இல்லையென்றால் குளக்கரைக்கு ம் பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவது உறுதி. தொடர்புடைய நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் முறையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒளிக்க முடியாத தகவல்: இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம் 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அரசு, அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. காஷ்மீருக்கு இச்சட்டம் பொருந்தாது.

இன்று மக்களிடம் இச்சட்டம் பரவலாக சென்று சேர்ந்துள்ளது. ஏராளமான அதிர்ச்சியூட்டும், வியக்கவைக்கும் தகவல்கள் இதன் மூலம் பெறப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் தகவல் பெறலாம். இச்சட்டம் ஜனநாயகத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.

எப்போது தொடங்கியது:2005 மே 11ல் லோக்சபாவிலும், மே 12ல் ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜூன் 15ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். ஜூன் 21ல் அரசிதழில் வெளியிடப்பட்டு, அக்.12ம் தேதி விஜயதசமி அன்று நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும், அறிய விரும்பும் தகவல்களை பெற உரிமை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் வெளிப்படையாக இருப்பதும், யார் கேட்டாலும் அவர்களுக்கு தகவல்களை தெரிவிப்பதும் அரசின் கடமை என இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை தாமாக முன் வந்து தெரிவிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.


எப்படி பெறுவது:தகவலை பெற விரும்புவோர் அது குறித்து எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்போர் பெயர், முகவரி மற்றும் கையெழுத்துடன் அனுப்பப்படும் விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவசரத் தகவலுக்கு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர்யுக்தி போன்ற சில பிரிவின் கீழ்வரும் தகவல்களை அரசு தெரிவிக்க தேவையில்லை. நாடாளுமன்ற, சட்டசபைக்கோ மறுக்கப்படாத தகவல்கள், தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பது இச்சட்டத்தின் நோக்கம் குறித்த நேரத்தில் தகவல் தராமலும், தவறான தகவலை தருவதும் குற்றம். இதன்படி தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தண்டிக்கவும், அபராதம் வழங்கவும் மத்திய, மாநில தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இச்சட்டத்தை மக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் லஞ்சம், ஊழலை தடுக்கலாம். பயனற்ற தகவல்களை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசு எந்திரம் சரியாக செயல்படவும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது.

Friday, 24 October 2014

மின்-ஆளுமை திட்ட சிறப்பு மேலாளர்கள் விரைவில் நியமனம்: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

தமிழக அரசில் மின்-ஆளுமை திட்டத்தை சிறப்பாகச் செயல் படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட் டத்திலும் விரைவில் சிறப்பு மேலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
சாதி சான்று, இருப்பிடச் சான்று, வருமான சான்று, முதல் தலை முறை பட்டதாரி சான்று, கணவனால் கைவிடப்பட்ட பெண் களுக்கு சான்று உள்பட அரசு வழங்கும் பல்வேறு விதமான சான் றிதழ்களை பொதுமக்கள் ஆன் லைனில் விண்ணப்பித்து விரை வாக பெறும் வகையில் மின்-ஆளுமை (இ-கவர்னன்ஸ்) திட்டத்தை தமிழக அரசு செயல் படுத்தியுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கி வரும் மாவட்ட மின்- ஆளுமை சங்கம் மூலமாக இத்திட்டம் நடைமுறைப்படுத் தப்பட்டு வருகிறது. இந்த நிலை யில் மின்-ஆளுமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற் கென மின்-ஆளுமை மேலாளர் களை நியமிக்க அரசு முடிவுசெய் துள்ளது.
ஆன்லைன் தேர்வு மற்றும் கல்வித்தகுதி மதிப்பெண் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினீ யரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பில் பிஇ அல்லது பிடெக் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், எம்சிஏ பட்டதாரிகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக் னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினீயரிங் படிப்பில் எம்.எஸ்சி பட்டம் பெற்றோரும் விண்ணப்பிக்க தகுதியுடைவர் ஆவர்.
நவம்பர் 15 ஆன்லைன் தேர்வு
எஸ்எஸ்எல்சி தொடங்கி அனைத்து கல்வித் தகுதிகளிலும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப் பெண் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். வயது 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். ஆன்லைன் தேர்வுக்கு 50 மதிப்பெண்ணும், கல்வித் தகுதி களுக்கு 50 மதிப்பெண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வில், கம்ப் யூட்டர் தொடர்பான அடிப்படை விஷயங்கள், சி, சி பிளஸ் பிளஸ், ஜாவா, நெட்வொர்க்கிங், இன்டர்நெட் தொழில்நுட்பம், ஹார்ட்வேர், டேட்டா பேஸ் மேனேஜ்மென்ட் மற்றும் ஐ.டி. துறையின் அண்மைக்கால வளர்ச்சி ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஆன்லைன் தேர்வு நவம்பர் 15-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணிக்கு சொந்த மாவட்டத்தில்தான் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் அல்லது தபால் மூலம் நவம்பர் 5-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில மின்-ஆளுமை முகமை அறிவித்துள்ளது. மின்-ஆளுமை மாவட்ட மேலாளர் பணிக்கு தொகுப்பூதியமாக ரூ.23,500 வழங்கப்படும். ஆண்டுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 23 October 2014

40 வயது கடந்த பெண்களுக்கு ஆண்டு தோறும் மார்பக பரிசோதனை அவசியம்


நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் தங்கள் மார்பகங்களை பரிசோதை செய்து கொள்ள வேண்டும் என மகப்பேறு மருத்துவர் டாக்டர் சங்கீதா கூறினார்.
அப்பல்லோ செவிலியர் கல்லூரியின் சார்பில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் டாக்டர் சங்கீதா பேசியது:
இந்தியாவில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். உடன் பருமன், வாழ்க்கை முறை மாற்றம், மரபணு போன்ற காரணங்களினால் பெண்கள் மார்பகப் புற்றுநோய் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் அதிகப்படியாக பாதிக்கப்படுவது மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகும்.
இந்தியாவைப் பொருத்தவரை கிராமப்புறங்களில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில் பத்து பேருக்கும், நகரங்களில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில் 25 முதல் 30 பெண்களும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்ப நிலையிலேயே இந்த நோயைக் கண்டறிதால் எளிதில் குணப்படுத்திவிடலாம். 40 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் மார்பகங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மூப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள், இளம்பெண்கள் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் மார்பகங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
மார்பகப் புற்றுநோய் குறித்த அறிகுறி, கண்டறிதல், ஆரம்ப நிலையிலேயே அதனை நீக்குதல் ஆகியவை குறித்த விடியோக் காட்சிகளை அப்பல்லோ செவிலியர் கல்லூரி மாணவிகளால் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது.

ரியல் எஸ்டேட் தொழில் தேக்கநிலை: குறைந்து வரும் பத்திரப் பதிவு வருவாய்

ரியல் எஸ்டேட் தொழிலில் நிலவும் தேக்க நிலையால் நடப்பு நிதியாண்டில், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட அசையா சொத்துகளுக்கான பத்திரப் பதிவு, ஆவணங்கள் அடிப்படையில் கணிசமாக குறைந்துள்ளது என பதிவுத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
 வீடு, நிலம், பண்ணை வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்ற அசையா சொத்துக்களை வாங்குபவர்கள், அவற்றுக்கான பத்திரப் பதிவை செய்யும்போதுதான்  தாங்கள் வாங்கிய சொத்துக்களுக்கு அவர்கள் சட்டரீதியான பாதுகாப்பை பெறுகின்றனர். அரசுக்கும் இதன்மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது.
தமிழகத்தில் தற்போது புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, அவை கட்டப்பட்டுள்ள நிலத்தில் ஒவ்வொரு உரிமையாளருக்கும் உள்ள பிரிக்கப்படாத பங்கின் (யுடிஎஸ்)வழிகாட்டி மதிப்பில் 8 சதவீதமும், பழைய அடுக்குமாடி குடியிருப்புகள், தனிவீடுகள், பண்ணை வீடுகள் போன்றவற்றுக்கு, அவை கட்டப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு மற்றும் வீட்டின் மொத்த கட்டுமான மதிப்பில் 8 சதவீதமும் பத்திரப் பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வீட்டுமனைகளுக்கு இதே அளவு கட்டணம் பெறப்படுகிறது. இதில் 7 சதவீதம் முத்திரைத்தாள் தீர்வையாகவும், 1 சதவீதம் பதிவுக் கட்டணமாகவும் பெறப்படுகிறது.
இது குறித்து பத்திரப் பதிவு துறை அலுவலர் ஒருவர் கூறியது:
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில், அசையா சொத்துக்கள் தொடர்பாக மொத்தம் 12.85 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழக அரசுக்கு மொத்தம் ரூ 4,001 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.1,500 கோடி மதிப்புக்கு பத்திரப் பதிவு நடந்துள்ளது. கடந்த 2013 -14 நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் மொத்தம் 13.36 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அவற்றின் மூலம் மொத்தம் 4,002 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
 ஆவணங்களின் எண்ணிக்கை அடிப்படையில், கடந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களை ஒப்பிடுகையில், நிகழாண்டில் 51 ஆயிரம் பத்திரப் பதிவுகள் குறைந்துள்ளன. வருவாய் அடிப்படையில் 1 கோடி ரூபாய்தான் குறைந்துள்ளது. எனினும், ரியல் எஸ்டேட் தொழிலில் நிலவும் தொடர் தேக்க நிலையால் நிகழாண்டில் இதுவரை பத்திரப் பதிவு வருவாய் அதிகரிக்கவில்லை என்றார் அவர்.

Wednesday, 22 October 2014

வெளியூர் மௌத் அறிவிப்பு 22/10/2014


நமதூர் வா .மெ .மு முகம்மது அபூபக்கர் அவர்களின் சகலரும் ,காயிதே மில்லத் தெரு சூபி வீட்டு ஜெஹபர் சே க்  அலாவுதீன் அவர்களின் மாமனாரும் , அடியக்கமங்கலம் ஹாஜா சௌகத் அலி அவர்களின் தகப்பனருமாகிய அப்துல் ரெஜாக் அவர்கள் அடியக்கமங்கலம் பட்டக்கால் தெருவில் உள்ள தனது இல்லத்தில் மௌத் . அன்னாரின் ஜனாஸா 22/10/2014 புதன் மாலை 4.15 மணிக்கு அடியக்கமங்கலம் ஜாமியுள் மஸ்ஜித் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .

நமதூர் மௌத் அறிவிப்பு 22/10/2014


நமதூர் காட்டுப்பள்ளி தெரு குட்டா வீட்டு சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மாமியாரும் , திட்டச்சேரி மைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியுமான மசுதா அவர்கள் மௌத் .

  அன்னாரின் ஜனாஸா 22/10/2014 புதன் முற்பகல் 11 மணிக்கு நமது முஹையத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .

Tuesday, 21 October 2014

தமிழகத்தில் கனமழை நீடிக்கும்: பருவ மழை அதிகரிக்க வாய்ப்பு


தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்துள்ளதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதனால் கடந்த 4 நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அத்துடன், வடகிழக்கு பருவ மழையும் தொடங்கிவிட்டதாக வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது, தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து, இலங்கை மற்றும் கடலோர தமிழகத்தில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.
 
மேற்கு நோக்கி நகர்ந்துள்ள காற்றழுத்த தாழ்வுநிலை, மன்னார் வளைகுடா பகுதி அருகே வந்தால் தமிழகத்தில் அதிக மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறினார். நேற்று காலை 8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் 13 செ.மீ., திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 12 செ.மீ., நாகை மாவட்டம் மயிலாடுதுறை, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 4 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
 
குறைந்த பருவ மழை
தமிழகத்துக்கு நீர் ஆதாரமாக விளங்கும் வடகிழக்கு பருவ மழை, கடந்த 2 ஆண்டுகளாக சராசரியைவிட குறைவாகவே பெய்துள்ளது என்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.
 
ஆண்டுதோறும் அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்யும். இங்கு ஓராண்டில் பெய்யும் மொத்த மழை அளவில் 44 சதவீதம், வடகிழக்கு பருவமழை காலத்திலேயே கிடைக்கிறது. இந்த காலத்தில் பொதுவாக கடலோர மாவட்டங்களுக்கு 60 சதவீதமும், மற்ற மாவட்டங்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரையும் மழை பெய்யும்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியபோது வங்கக்கடலில் தொடர்ந்து புயல் சின்னங்கள் உருவாகின. பைலின்,ஹெலன், லெஹர், மாதி புயல்களால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சராசரியைவிட (44 செ.மீ.) 33 சதவீதம் குறைவாகவே பெய்தது. அதேபோல் 2012-ம்ஆண்டும் 16 சதவீதம் குறைவாகவே வடகிழக்கு பருவ மழை பெய்தது.
 
புயலால் மழை கிடைக்காது
இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறும்போது, ‘‘பொதுவாக புயல் உருவானால் அதிக அளவில் மழை பெய்யும் என்ற கருத்து மக்களிடம் உள்ளது. புயல்கள் கரையை கடக்கும்போது மேகக் கூட்டங்களில் இருக்கும் ஈரப்பதத்தையும் கொண்டுசென்றுவிடும். இதனால் மழை அளவு குறைந்துவிடும். இதனால்தான் கடந்த ஆண்டுகளில் தமிழகத்துக்கு வடகிழக்கு பருவமழை அளவு குறைந்தது’’ என்றார்.
இந்த ஆண்டு சரியான நேரத்தில் பருவ மழை தொடங்கி இருக்கிறது. புயல் சின்னங்கள் உருவாகாமல் காற்றழுத்த தாழ்வு நிலையாக இருந்தால் இந்த ஆண்டு பருவ மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Monday, 20 October 2014

இனி பாலைவனமாகும் பூமி!


நம் நாட்டைப் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் உள்ள மழைக் காடுகளில் தான் பல்லுயிரியம் செழித்துக் காணப்படுகிறது.தமிழகத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பாலுாட்டி வகைகள், 400-க்கும் மேற்பட்ட பறவை வகைகள், 160-க்கும் மேற்பட்ட ஊர்வன வகைகள், 12,000-க்கும் மேற்பட்ட பூச்சி வகைகள், 5,000-க்கும் மேற்பட்ட தாவர வகைகள், 10,000-க்கும் மேற்பட்ட சங்கு, சிப்பி, கடல் வாழ் உயிரின வகைகள் உள்ளன.

தேவைக்கு இயற்கையைப் பயன்படுத்தாமல் பேராசைக்கு இயற்கையைச் சுரண்ட ஆரம்பித்த பிறகுதான், உணவைக் கொஞ்சமாகவும், மாத்திரைகளை அதிகமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை உருவானது. இயற்கை ஒரு சிலந்தி வலையைப் போன்றது. ஒரு இழையைத் தட்டினாலும், மொத்த இடத்திலும் அதிர்வுகள் எதிரொலிக்கும்.உலகெங்கும் பல்லுயிரியத்தைக் காக்க பல்வேறு அமைப்புகள் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. பல்லுயிரியப் பகுதிகள் என அறிவிக்கப்பட்டு அதிமுக்கியத்துவம் தரப்படுகிறது. ஐ.யு.சி.என்., எனும் அமைப்பு, ஆண்டுதோறும் அழியும் நிலையில் உள்ள உயிரிகளைப் பற்றி 'ரெட் டேட்டா' எனும் புத்தகத்தை வெளியிடுகிறது.வெப்ப நாடான இந்தியாவின் சிறப்பே 'பல்லுயிரியம்' என்கிற 'பயோடைவர்சிட்டி' தான். மரங்கள், செடி கொடிகள், பாலுாட்டிகள், ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன, நீர்-நிலை வாழ்வன, பூச்சிகள், வளர்ப்புப் பிராணிகள் போன்ற பல்வேறு உயிரினங்களும் வாழத் தகுதியான பூமி நம்முடையது.நம்மைச் சுற்றி நன்மை மட்டுமே செய்யும் நண்பர்களைப் பற்றி தெரிந்து கொண்டால் தான், எதிர்கால சந்ததியினராவது அவற்றை காப்பாற்ற முன்வருவர்.


பாம்புகள் :


பூமியில் 3000 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள 275 இனங்களில், நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகியவை மட்டுமே விஷத்தன்மையுடையன. நமது சுற்றுப்புறச்சூழலின் உணவுச்சங்கிலியில் முக்கிய இடம் வகிப்பவை பாம்புகள். மண்புழுவைப் போலவே விவசாயிகளின் நண்பர்கள்.விவசாயிகளின் வயலில் விளைந்தவற்றை அழிப்பது எலிகள் தான். ஒரு ஜோடி எலிகள் மூலம் ஆண்டுக்கு 800க்கும் மேற்பட்ட குட்டிகள் உருவாகின்றன. இவற்றை பாம்புகள் பிடித்து உண்பதால், பயிர்ச்சேதம் தவிர்க்கப்படுகிறது.


தேனீக்கள் :தேனீக்கள் காணாமற் போனால் என்ன குடி முழுகிபோய்விடும் என்று கேட்பவர்கள், அடிப்படை அறிவியலை பள்ளிக்கூடத்திலேயே தவற விட்டவர்களாகத் தானிருக்க முடியும். மகரந்தச் சேர்க்கை மூலம்தான் இனப்பெருக்கமும், பயிர்கள் விளைவதும் நடக்கின்றன. மகரந்தச் சேர்க்கையின் 'மன்மத துாதர்கள்' தேனீக்கள்தான். விவசாயத்தில் மூன்றில் ஒரு பங்கு பயிர்வகைகள் தேனீக்கள் வந்து, மகரந்தச் சேர்க்கையை செயல்படுத்துவதையே நம்பியிருக்கின்றன.தேனீக்கள் அழிந்து கொண்டிருப்பது அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா என்று மேலை நாடுகளில் மட்டுமல்ல. விவசாயத்தையே நம்பியிருக்கக்கூடிய இந்தியாவிலும்தான். இவற்றின் எண்ணிக்கை குறைந்து போனால், அயல் மகரந்த சேர்க்கையும் குறைந்து போகும். உணவு உற்பத்தி குறைந்து மனித இனமும் அழியத் துவங்கும். சத்தில்லாத உணவுகளால் உடல்நலம் பாதிக்கும். தொற்றுநோய்கள் மனிதர்களை எளிதாகத் தாக்கும். பிறகு மானிட குலத்தின் கதி?தேனீக்கள் மட்டும் மண்ணிலிருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது என்கிறார், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். தேனீக்கள் மட்டுமல்ல, இந்தியாவின் பெரு நகரங்கள், சிறு நகரங்களிலும் சிட்டுக்குருவிகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. இவை அழிவதற்குக் காரணம், பயிர்களைப் பாதுகாக்க தெளிக்கப்படும் பூச்சிமருந்துகள் தான்.சிட்டுக்குருவிகள் போன்ற பறவையினங்கள் இருந்தாலே, பயிர்களை அழிக்கும் பூச்சியினங்களை உண்டு, அவற்றைக் கட்டுப்படுத்திவிடும். ஆனால் பறவைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி, நம் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.


கொசுக்களின் எமன் :தண்ணீர்ப் பூச்சிகள், வவ்வால், தட்டான், தலைப்பிரட்டைகளின் தலையாய பணி என்ன தெரியுமா? சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களின் லார்வாக்களை உணவாகக் கொள்வது தான். பூச்சிக்கொல்லிகள் நமக்கு கெடுதல் தரும் பூச்சிகளை மட்டுமல்ல... நன்மை செய்யும் பூச்சிகளையும் அழிப்பது தான், சுற்றுச்சூழலுக்கு தீங்காகிறது.தரையிலும் தண்ணீரிலும் வாழக்கூடிய இயல்பு படைத்த தவளைகள் குறைந்து போனதே, கொசுக்கள் பெருகுவதற்கு காரணம். தண்ணீர் தேங்கும் இடங்களில் தான் கொசுக்கள் முட்டையிட, அவற்றை தலைப்பிரட்டைகள் உணவாக்கிக் கொள்கின்றன. கொசுக்கள் பிறப்பதற்கு முன்பே அவற்றின் கருவை அழிக்கும் தவளைகள், ஏறக்குறைய அழிவின் விளிம்பில் நிற்கின்றன.


வவ்வால்கள் :மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் பூச்சி, கொசு, வண்டு மற்றும் ஈக்களை வவ்வால்கள் உணவாக உட்கொள்கின்றன. சிறிய பழுப்பு நிற வவ்வால்கள், ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்கள் வரைப் பிடித்து உண்ணும். வாழை, மாம்பழம், கொய்யா, பேரீச்சை, அத்தி ஆகியவற்றை உண்பதன் மூலம் அயல் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகிறது. இவற்றின் கழிவுகளில் மிக அதிக நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால், சிறந்த உரமாகிறது. பல நாடுகளில் வவ்வால் கழிவுகள் சேகரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகின்றது.வவ்வால்களில் சில வகைகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழ்கின்றன. காடுகள் அழிக்கப்படுவதாலும் உலக அளவில் தற்போதுள்ள பருவநிலைக் கோளாறுகளினால் கோடிக்கணக்கான எக்டேர்களில் ஏற்படும் காட்டுத்தீயாலும், வவ்வால் இனங்கள் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றன.''இந்த உலகம் மனிதனுடையது மட்டும் அல்ல. மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே. அதைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும்''. இந்த மகத்தான வாழ்வியல், வலையாகப் பின்னப்பட்டிருக்கிறது. இந்த வலையை மனிதன் பின்னவில்லை. மனிதன் இந்த வலையில் உள்ள சிறிய நுாலிழை மட்டுமே. மனிதனின் பேராசைமிக்க செயல்கள், வெறும் புதைகுழிகள் நிறைந்த பாலைவனமாக, ஒருநாள் பூமியை மாற்றிவிடும்.
-எம்.ராஜேஷ்,
உதவி பேராசிரியர்,
அமெரிக்கன் கல்லுாரி,

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை: ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், அனைத்து விவசாய நிலங்கள், குளங்கள் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்தேங்கியுள்ளது. தொடர் மழையால் யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, கங்களாஞ்சேரி வெட்டாறில் மழைநீர் வடிவதை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மதிவாணன், மழையால் கரைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நன்னிலம் பேரூராட்சி பேரூந்து நிலையத்தில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து வெளியேற்ற பேரூராட்சி அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து கடகக்குடி, அதம்பார், அச்சுதமங்கலம் பகுதிகளில் ஆறு, குளம், வாய்க்கால், விளை நிலங்களில் மழை நீர் தேங்காதவாறும், பொதுமக்களுக்கு மழையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கைவுடன் செயல்பட வேண்டும் என வெüóளத் தடுப்பு கண்காணிப்பு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

Sunday, 19 October 2014

முத்துப்பேட்டையில் 84 மி.மீ. மழை

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அதிகபட்சமாக 84 மில்லி மீட்டர் மழைப் பதிவானது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதியக் காற்றழுத்தத் தாழ்வு மையத்தின் காரணமாக தமிழகத்தில் மழைப் பெய்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் விட்டுவிட்டும், சனிக்கிழமை காலையில் இருந்து தொடர்ந்தும் மழை பெய்தது.
இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை லேசாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழைப் பெய்ததால் பலர் வீட்டைவிட்டு வெளியே செல்லவில்லை. மாலை நேரத்தில் மழை சற்று ஓய்ந்திருந்தது.

திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் முத்துப்பேட்டையில் 84 மில்லி மீட்டர் மழை பதிவானது. பிற இடங்களில், நீடாமங்கலம் - 59, குடவாசல் - 49.80, மன்னார்குடி - 37, பாண்டவையாறு தலைப்பு - 35, திருத்துறைப்பூண்டி - 28.60, நன்னிலம் - 25.30, வலங்கைமான் - 24.30, திருவாரூர் - 14.60 என்ற அளவில் மழை பதிவானது.

திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணிகளை கண்காணிக்க குழு


திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை வெள்ளத் தடுப்புப் பணிகளை கண்காணிக்க வட்ட அளவில் துணை ஆட்சியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் எம். மதிவாணன்.
திருவாரூர், நன்னிலம், குடவாசல் ஆகியப் பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர் மேலும் கூறியது:

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ளத்தை தடுக்கும் பணிகளை கண்காணிக்க கோட்ட மற்றும் வட்ட அளவில் துணை ஆட்சியாóகள் நியமிக்கபட்டுள்ளனாó. மன்னார்குடி கோட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன், திருவாரூர் கோட்டத்திற்கு தமிழ்நாடு நுகாóபொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அ. அழகிரிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வட்ட அளவில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் செல்வசுரபி, நீடாமங்கலம் சிறப்பு திட்டங்கள் தனி துணை ஆட்சியர் சதிதேவி, வலங்கைமான் மாவட்ட வழங்கல் அலுவலர் மனோகரன், குடவாசல் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஜயலெட்சுமி, நன்னிலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் எஸ். மாலா, திருத்துறைப்பூண்டி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் எஸ். அசோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அனைத்து வட்டாட்சியர்களும் தலைமையிடத்தில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தை கண்காணிக்க அந்தந்த வட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் மதிவாணன்.

நேரடி மானிய திட்டம் நவ., 10 முதல் மீண்டும் அமல்: மத்திய அமைச்சரவை முடிவுமுந்தைய மத்திய அரசு அறிமுகப்படுத்திய, நேரடி மானிய திட்டத்தை, நவம்பர், 10ம் தேதி முதல் மீண்டும் அமல்படுத்த, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின், நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது:பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே, சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக செலுத்தும் திட்டத்தை, மீண்டும் திறமையான வகையில் செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியமானது, நவம்பர், 10ம் தேதி முதல், பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும்.டில்லியில் உள்ள அரசு பங்களாக்கள் எதுவும், இனி, தலைவர்களின் நினைவகங்களாக மாற்றப்படாது.குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில், முதல்கட்டமாக, 35.9 கி.மீ., துாரத்திற்கு, 10 ஆயிரத்து, 773 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட உள்ள, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மகாநகர் டெலிபோன் நிகாம் நிறுவனத்திற்கு, ஒரே கட்டமாக நிதி உதவி அளிக்கவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், உரத்தொழிற்சாலைகளுக்கு, 14 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் மானியம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, நவம்பர், 1ம் தேதி முதல், புதிய விலை நடைமுறை அமலுக்கு வரும். அதன்பின், ஏப்ரல், 1ம் தேதி மற்றும் அக்டோபர், 1ம் தேதி என்ற ரீதியில், ஆண்டுக்கு இரண்டு முறை, எரிவாயு விலை மாற்றி அமைக்கப்படும்.எரிவாயுவுக்கான புதிய விலையானது, யூனிட் ஒன்றுக்கு, 5.61 டாலராக (340 ரூபாய்) இருக்கும். இந்த புதிய விலை அறிவிப்பு, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு, தற்போதைக்கு பொருந்தாது.

ஒடிசாவில், 133 கி.மீ., துாரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த, 1,477 கோடி ரூபாய் வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.
இவ்வாறு, அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

நடந்தது என்ன?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அறிமுகம் செய்யப்பட்ட, நேரடி மானியத் திட்டம், 18 மாநிலங்களில் உள்ள, 289 மாவட்டங்களில், அமல்படுத்தப்பட்டிருந்தது. பயனாளிகளின் வங்கிக் கணக்கில், காஸ் சிலிண்டருக்கான மானியத் தொகை, நேரடியாக செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், ஆதார் அட்டை பெறாதவர்களும், வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டையை இணைத்து, சமையல் எரிவாயு ஏஜன்சிகளில் கொடுக்காதவர்களும், மானியத் தொகை பெற முடியவில்லை. இதையடுத்து, ஐ.மு., கூட்டணி அரசு நேரடி மானிய திட்டத்தை, ஜனவரி, 30ம் தேதி நிறுத்திவைத்தது. 'அரசின் மானிய உதவி பெறுவோர், ஆதார் அட்டையை பெற வேண்டும் என, கட்டாயப்படுத்தக் கூடாது' என, ஆதார் அட்டை தொடர்பான வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுவும், நேரடி மானிய திட்டத்தை, மத்திய அரசு நிறுத்தி வைக்க ஒரு காரணம்.ஆனால், அந்த நேரடி மானிய திட்டத்தை ஆய்வு செய்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அதை மீண்டும் முழுவீச்சில் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

Saturday, 18 October 2014

ஜெயலலிதாவுக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதேபோல, ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
மேலும், நால்வரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வசதியாக, அவர்களுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இது தொடர்பாக ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.
அப்போது, ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்குரைஞர் ஃபாலி எஸ். நாரிமன் ஆஜராகி முன் வைத்த வாதம்: மகாராஷ்டிரம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஊழல் புரிந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மேல்முறையீடு செய்ய வசதியாக, அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சில மேல்முறையீடு வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்படும் வரை சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீனில் விடுதலை செய்ய நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன. அந்த வழக்குகளை முன்னுதாரணமாகக் கருதி ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்' என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அப்போது, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கூறியதாவது: "ஒருவேளை தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டால், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை முடிக்க இருபது ஆண்டுகளானால் என்ன செய்வது? எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது, குறுக்கிட்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, "ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து
ஃபாலி நாரிமன் கூறியதாவது: "மேல் முறையீட்டு வழக்கை விரைவில் முடிக்க ஜெயலலிதா தரப்பில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன். உடல் நலக் குறைபாடுகளுக்கு சிகிச்சை பெற வேண்டும் என்பதால்தான், அவர் ஜாமீனில் தன்னை விடுதலை செய்யும்படி கோருகிறார். ஜாமீனில் விடுதலையாகும் காலத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டால், அவர் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயேகூட தங்கியிருப்பார். இதை உறுதிப்படுத்தும் உத்தரவாதத்தை அவரது சார்பில் நானே அளிக்கத் தயார். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வழக்கு தொடர்புடைய 5,000 பக்க ஆவணங்களைப் படிக்கவும், மேல்முறையீட்டு மனுவைத் தயாரிக்கவும் குறைந்தபட்சம் ஆறு வாரங்களாவது அவகாசம் தேவை. அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
இதேபோல, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர்களின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கே.டி.எஸ். துளசி கேட்டுக் கொண்டார்.
உத்தரவு: அனைவரது வாதங்களையும் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி தத்து பிறப்பித்த உத்தரவு: ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் மேல்முறையீடு செய்ய வசதியாக அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை தாற்காலிகமாக நிறுத்தி வைத்து, அனைவரையும் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம். இதன்மூலம் விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்துவிட்டதாகக் கருதக் கூடாது. மேல்முறையீடு செய்யும் உரிமை மனுதாரர்களுக்கு இருப்பதால், அதைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பிக்கிறோம்.
ஜாமீனில் விடுதலை செய்யப்படும் காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பது போன்ற அசாதாரணமான உத்தரவை நாங்கள் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு வன்முறைச் செயலிலும் ஈடுபடக் கூடாது என்று கட்சித் தொண்டர்களை மனுதாரர் (ஜெயலலிதா) கேட்டுக் கொள்ள வேண்டும்.
மனுதாரர்கள் நால்வரும் மேல்முறையீடு தொடர்புடைய ஆவணங்களை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கிறோம். அதற்கு மேல் ஒரு நாள் தாமதித்தாலும் இப்போது பிறப்பிக்கும் உத்தரவை நாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.
மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதும் அவை எப்போது விசாரிக்கப்படும் என்ற தேதியை அறிவித்து, அவற்றின் விசாரணையை கர்நாடக உயர் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படும். இந்த மனுக்கள் மீதான அடுத்த விசாரணை டிசம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று தலைமை நீதிபதி தத்து குறிப்பிட்டார்.
இன்று சென்னை திரும்ப வாய்ப்பு
உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் விவரங்கள் அடங்கிய நகல், பெங்களூரில் உள்ள சிறைத் துறைக்கு அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், ஜெயலலிதா உள்பட நால்வருக்கு தலா இரண்டு பேர் உத்தரவாதம் அளித்து, அந்த உத்தரவாதங்கள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவுக்கு திருப்தி தரும் வகையில் இருக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனவே, உச்ச நீதிமன்றத்தின் அந்த உத்தரவை நிறைவேற்றும் பணிகளில் அதிமுகவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சனிக்கிழமை அந்த உத்தரவாதங்களை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அளிக்கப்படும்பட்சத்தில், சனிக்கிழமை மாலையே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினமே அவர் சென்னை திரும்பக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Friday, 17 October 2014

திருவாரூரில் 5-வது நாளாக தொடர்ந்து மழை

திருவாரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை (அக்டோபர் 13) ம் தேதி தொடங்கி மழை வெள்ளிக்கிழமை 5-வது நாள்களாக நீடித்தது.

ஹுட்ஹுட் புயலால் ஆந்திரம் மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த புயலின் தாக்கம் தமிழ்நாட்டிலும் இருந்தது. கடந்த திங்கள்கிழமை முதல் தமிழகத்தில் பல இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழைப் பெய்து வருகிறது. இதே போல் திருவாரூர் மாவட்டத்திலும் திங்கள்கிழமை முதல் மழை பெய்து வருகிறது.

நாள்தோறும் மதியம் மற்றும் மாலை வேளைகளில் மழை பெய்து வந்தது. வெள்ளிக்கிழமை காலையில் மழைப் பெய்தது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக திருத்துறைப்பூண்டியில் 11.8 மில்லி மீட்டர் மழைப் பதிவானது.

இதே போல் பிற இடங்களில் நீடாமங்கலம் - 10, மன்னார்குடி - 9.8, முத்துப் பேட்டை - 9.3, பாண்டவையாறு தலைப்பு - 2.8, திருவாரூர் - 1.8 என்ற அளவில் மழைப் பதிவானது. வெள்ளிக்கிழமை மாலையும் விட்டு விட்டு மழைத் தொடர்ந்து பெய்தது.

நமதூர் மௌத் அறிவிப்பு 17-10-2014

             நமதூர் தாஜ் பிரகாஷா தெரு  ம.மு. வீட்டு M.M.K. முகம்மது காலித், M.M.K. முகம்மது கியாசுதீன் ஆகியோரின்    தகப்பனாரும், கொடிக்கால் பாளையத்தின் முதல் அறிவியல் பட்டதாரியுமான   திருவாரூர் அமீர் தங்க மாளிகை  ம.மு. மு . கமாலுதீன் அவர்கள் மௌத்.அன்னாரின் ஜனாஸா (17-10-2014) வெள்ளிக்கிழமை மாலை சனி இரவு 8 மணியளவில் மேலத்தெரு பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்  நல்லடக்கம் செய்யப்படும் .

Thursday, 16 October 2014

வீணாகும் வக்பு வாரிய சொத்துகள்: மதிப்பீட்டுக் குழு அறிக்கையில் தகவல்

 

நாடு முழுவதும் வக்பு வாரிய சொத்துகள் வீணாகப் போய் கொண்டிருப்பதாகவும், அதை முறையாகப் பயன்படுத்தினால் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் கிடைக்கும் எனவும் இது குறித்து ஆய்வு செய்த மதிப்பீட்டுக் குழு சமீபத்தில் மத்திய அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி சச்சார் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, முஸ்லிம்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தி அளித்த பரிந்துரை யில், நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் குறிப் பிட்டிருந்தது.
இதற்காக, டெல்லி ஜவாஹர் லால் நேரு பல்கலைக்கழக பேரா சிரியர் அமிதாப் குண்டு தலைமை யில் இதுதொடர்பாக குழு அமைக் கப்பட்டது. இந்த மதிப்பீட்டுக் குழு, தனது அறிக்கையை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்ச ரான நஜ்மா ஹெப்துல்லாவிடம் சமர்ப்பித்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் சிறுபான்மை நலத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்ச கத்திடம் உள்ள ஆவணங்களின்படி, மத்திய அரசு மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள், 1,053 தனியார்களால் 18,388 சொத்துகள் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஒரு வருடத் தில் சுமார் ஏழு சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துக்களில் பெரும்பா லானவை மீது நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இவை களை விரைந்து முடிப்பதுடன், அந்த சொத்துகளை முறையாகப் பயன்படுத்தினால் வக்பு வாரியத் துக்கு கோடிக்கணக்கான வரு மானம் கிடைக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுமார் இரண்டு லட்சம் எண்ணிக்கையில் சொத்துகள் இருந்த போதும் சுமார் 160 சொத்துகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அறிக்கை வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் சம்பவம்: குற்றவியல் நீதிமன்ற நடுவர் விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் காளிதாஸ் சுட்டதில் இளைஞர் சையது முகமது உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவியல் நீதிமன்ற நடுவர் விசாரணைக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சையது முகமது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் 14.10.2014 அன்று எஸ்.பி.பட்டினம் மேலத் தெருவைச் சேர்ந்த சையது முகமது, பழுது நீக்கும் கடையில் விடப்பட்டிருந்த தனது நண்பரின் இரு சக்கர வாகனத்தை திரும்ப கேட்டிருக்கிறார்.
அப்போது ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உதவி ஆய்வாளர் காளிதாஸ் விசாரணை மேற்கொண்டபோது, சையது முகமது துப்பாக்கியால் சுடப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து குற்றவியல் நீதிமன்ற நடுவர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சையது முகமது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, 15 October 2014

வாக்காளர் பட்டியல் வெளியீடு


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் புதன்கிழமை (அக். 15) வெளியிடப்படவுள்ளது என
மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்திலுள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட அனைத்து வட்டாட்சியர், நகராட்சி
அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் திருவாரூர், மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகங்களில் புதன்கிழமை முதல் பொதுமக்கள் பார்வைக்கு வாக்காளர்
பட்டியல் வைக்கப்படுகிறது. தவிர, அக். 17, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்திலும் வாக்காளர் பட்டியல் வைக்கப்படுகிறது.

www.election.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் வாக்காளர் பட்டியலை காணலாம். எனவே, பொதுமக்கள் தங்களுடைய பெயர் வாக்காளார் பட்டியலில்
இடம்பெற்றுள்ளதா என்பதை வாக்காளர் வரைவுப் பட்டியலை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
அக்டோபர் 15-ம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ள இந்திய தேர்தல்
ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் 1.1.2015 அன்று தகுதியடைந்து, வாக்காளர் பட்டியலில் பெயார் இடம்பெறாத 18 வயது
நிறைவடைந்தவார்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க அக். 15 முதல் நவ. 10-ம் தேதி வரை தொடர்புடைய வாக்குச்சாவடிகளில் விண்ணப்பிக்கலாம்.
புதிதாக பெயர் சேர்ப்பவர்கள் படிவம் 6-ஐ மார்பளவு புகைப்படம், இருப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான ஆதாரத்துடன் இணைத்து கொடுக்க வேண்டும். வாக்காளார்
பட்டியலில் உள்ள பெயரை நீக்க படிவம்-7, திருத்தங்கள் மேற்கொள்ள படிவம் -8 மற்றும் ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள் இடம் மாறியிருந்தால் படிவம் 8 ஆகியவற்றை
நிறைவு செய்துகொடுத்து பயன்பெறலாம். நவ. 10-ம் தேதி வரை சேர்க்கப்படும் 18 வயது நிரம்பியவர்களுக்கு 25.1.2015 அன்று நடைபெறவுள்ள தேசிய வாக்காளர் தினத்தில்
வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

கடந்த நூற்றாண்டில் வரலாறு காணாத கடல் நீர்மட்ட உயர்வு: புதிய ஆய்வில் தகவல்

புயல் காற்றின் விளைவாக லூசியானா நெடுஞ்சாலையில் பாய்ந்த கடல். | கடல் நீர்மட்ட அதிகரிப்பை அறிவுறுத்தும் படம்: என்.ஓ.ஏ.ஏ.

புயல் காற்றின் விளைவாக லூசியானா நெடுஞ்சாலையில் பாய்ந்த கடல். | கடல் நீர்மட்ட அதிகரிப்பை அறிவுறுத்தும் படம்: என்.ஓ.ஏ.ஏ.
கடந்த 6,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் கடல் நீர்மட்டம் அதிகரித்துள்ளது என்று ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 6,000 ஆண்டுகால கடல் நீர்மட்ட வரலாற்றில் கடந்த நூற்றாண்டினைப் போல் கடல் நீர்மட்டம் அதிகரித்ததாக தெரியவில்லை என்று அவர்கள் அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.

20-ஆம் நூற்றாண்டு தொடங்கியது முதல் கடல் நீர்மட்டம் 20 செ.மீ. அதிகரித்துள்ளது. புவி வெப்பமயமாதல் மற்றும் துருவப் பனிமுகடுகள் உருகுதல் ஆகியவற்றால் இந்த அபாய நீர்மட்ட உயர்வு ஏற்பட்டுள்ளது என்று இந்த ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

கடல் நீர்மட்ட ஆய்வு வரலாற்றுப் பதிவேடுகளின் படி 20 செ.மீ உயர்வு என்பது வழக்கத்திற்கு மாறானது.

இந்த ஆய்வுக்காக, பிரிட்டன், வட அமெரிக்கா, கீரீன்லாந்து, ஆகிய நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான படிவு மாதிரிகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இதனைக் கொண்டு முந்தைய கடல் மட்டம் பற்றிய தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடலில் நீர்மட்டம் அதிகரிப்பினால் கடல் அடித்தளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய ஆய்வுகளும் இதனை உறுதி செய்துள்ளன என்று இந்த ஆய்வுக்குழு தலைவர் கர்ட் லாம்பெக் கூறுகிறார். எனவே கடல் நீர்மட்டம் 20 செ.மீ. அளவு கடந்த நூற்றாண்டில் உயர்ந்துள்ளது என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்ட உண்மை என்று அடித்துக் கூறுகிறார் அவர்.

கரியமில வாயு வெளியேற்றத்தை இப்போது வைத்திருக்கும் நிலையில் பராமரித்தால் கூட கடல் நீர்மட்ட அதிகரிப்பை இனி கட்டுப்படுத்த முடியாது, எந்த அளவு நீர்மட்டம் உயரும் என்று கூற முடியாது எனினும் இனி இந்த நிலையை மாற்றியமைக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

Tuesday, 14 October 2014

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்


டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு உற்பத்தியாகாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
திருவாரூரில் வெள்ளிக்கிழமை டெங்கு காய்ச்சல் தடுப்புக் குறித்த முன்னேற்பாடு கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது:
ஏடிஸ் எஜிப்டை வகை கொசுக்காளால் டெங்கு காய்ச்சல் பரப்பப்படுகிறது. இக் காய்ச்சல் பிளேவி வகை வைரஸ் கிருமியால் ஏற்படுத்தப்படுகிறது. இந்த வைரஸ் கிருமிகள் டென்-1,2,3,4 என்ற நான்கு வகைகளாக காணப்படுகிறது.
கடுமையான காய்ச்சல் தலைவலி, கண்களின் பின்புறம் வலி, கடுமையான மூட்டுவலி மற்றும் உடல் வலி இக்காய்ச்சலின் அறிகுறிகள்.
மாவட்டத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் அனைத்து காய்ச்சல் உள்ள நோயாளிகளுக்கும் நிலவேம்பு கசாயம், மலைவேம்பு மற்றும் பப்பாளி இலைச் சாறு கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காய்ச்சல் உள்ள நோயாளிகளுக்கு வார்டு தனியாக அமைப்பதுடன், ஒவ்வொரு படுக்கையையும் கொசு வலை கொண்டு மூடி வைக்க வேண்டும். காய்ச்சல் வார்டில் ஜன்னல்கள் மூலம் கொசு நுழையாமல் வயர் மெஸ் வலை அமைக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மற்றும் சுற்றுப் புறங்களில் ஏடிஸ் கொசு உற்பத்தியாகாமல் இருக்க ஆட்டு உரல், தேங்காய் சிரட்டைகள், மண் பானை மற்றும் சட்டிகள், கண்ணாடி குடுவைகள், பாட்டில்கள், பிளாஸ்டிக் கலன்கள், குப்பிகள், குளிர்சாதனப் பெட்டியின் தட்டு, பூஞ்சாடிகள், டயர்கள்.
சிமெண்ட் தொட்டிகள், கிணறுகள், ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் டிரம்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த சுற்றுப்புறத்தை தூய்மைபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றார் மதிவாணன்.

அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க சான்றொப்பம் தேவையில்லை: தமிழக அரசு உத்தரவு

அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க இனி சான்றொப்பம் (அட்டெஸ் டேஷன்) தேவையில்லை என தமிழக அரசு உத்தரவிட் டுள்ளது.

அரசுப் பணிக்கான விண்ணப்பங்களில் அரசு பதிவுபெற்ற கெசட்டட் அதிகாரி அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் சான்றொப்பம் பெற வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இது மாணவர்கள் முதல் வேலை தேடும் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கடும் சிரமமாக இருந்தது.

சான்றொப்பம் அளிக்கும் அதிகாரிக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை கொடுக்கவேண்டி இருந்தது. இதனால் கிராமப் புற மக்கள் பெரிதும் அவதிக் குள்ளாகின்றனர். குறிப்பாக பழங்குடியின மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
கடைசி தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப் பிக்க முடிவதில்லை. அத்துடன், அரசு அலுவலகங்களில் தேவையின்றி விண்ணப்பங்கள் குவிவதை தடுக்கவும், எளிய நடைமுறைகளை பின்பற்றும் நோக்கிலும், இனிமேல் விண்ணப்பிக்கும் நபரே தனது விண்ணப்பத்தில் சான்றொப்ப கையெழுத்தை போட்டுக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நேர்முகத் தேர்வுக்கு வரும்போது மட்டும் அசல் சான்றிதழை சமர்ப்பித்தால் போதும்.
இதற்கான உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை முதன்மைச் செயலாளர் டேவிதார் கடந்த மாதம் 23-ம் தேதி பிறப்பித்த அரசாணையில் தெரிவித் துள்ளார்.

Monday, 13 October 2014

சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினம் 13.10.14


திருவாரூர் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது.
தீயணைப்பு துறை சார்பிலான இந்த நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். பேரிடர் காலங்களில் அதாவது, வெள்ளத்தில் சிக்கிக் கொண்டால், தீ விபத்து ஏற்பட்டால், மின்சாரம் தாக்கினால் அதிலிருந்து எப்படி தப்பிப்பது, மீட்பது, முன்னெச்சரிக்கை குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
ஆட்சியர் எம். மதிவாணன், கோட்டாட்சியர்கள் முத்துமீனாட்சி (திருவாரூர்), வே. சுப்பு (மன்னார்குடி), உதவி தீயணைப்பு அலுவலர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, திருவாரூர் ரயில் நிலையத்தில் பேரிடர் இன்னல்கள் குறைப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வேலுடையார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். பேரணி பேருந்து நிலையம், பனகல் சாலை, தெற்குவீதி வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
Sunday, 12 October 2014

அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் வேலைக்கு வழிகாட்டும் மையங்களாக மாற்ற முடிவு


தமிழ்நாட்டில் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் விரைவில் வேலைக்கு வழிகாட்டும் மையங்களாக மாற்றப்பட இருக்கின்றன.
முதல்கட்டமாக கோவை, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மாதிரி மையங்களாக மத்திய அரசால் தேர்வுசெய்யப் பட்டுள்ளன.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து முடிப்பவர்கள் அரசு வேலை வேண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்வது வழக்கம், பட்டப் படிப்பு வரையிலான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், முதுகலை பட்டம் மற்றும் மருத்துவம், பொறியியல், விவசாயம், சட்டம் உள்ளிட்ட தொழில் கல்வித் தகுதிகளை மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவுசெய்ய வேண்டும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை மாவட்ட தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் சென்னை, மதுரையில் உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள் ளவர்களின் எண்ணிக்கை 85 லட்சத்தை தாண்டிவிட்டது.
 
வேலைக்கு வழிகாட்டும் மையம் ஆகிறது
அரசுப் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படும்போது, ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் பதிவுதாரர்களை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் பரிந்துரை செய்யும். அதிலிருந்து தகுதியான நபர்கள் அரசு வேலைக்கு தேர்வுசெய்யப்படுவர்.
இந்த நிலையில், வேலை வாய்ப்பு அலுவலகங்களின் பணியை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்காக தேசிய வேலை வழிகாட்டி பணி என்ற சிறப்பு திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நாடு முழுவதும் விரைவில் செயல்படுத்த உள்ளது. இதைத் தொடர்ந்து, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வேலைக்கான வழிகாட்டி மையங்களாக மாற்றப்படும்.
மாதிரி மையங்கள்
இந்த மையங்களில் பதிவுதாரர் களின் திறமை, ஆர்வம், மனோபாவம் ஆகியவை கண்டறியப்பட்டு அதற்கேற்ற படிப்பை படிக்கவோ, தொழில் பயிற்சியை பெறவோ உளவியல் ரீதியாக கல்வி ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்காக, தனியார் நிறுவனங்களைப் போன்று உளவியல் பரிசோதனை (சைக்கோமெட்ரிக் டெஸ்ட்) திறனாய்வு சோதனை (ஆப்டிடியூடு டெஸ்ட்) போன்ற பரிசோதனைகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு பயிற்சி பெற்ற வேலைவாய்ப்பு அதிகாரிகள், பதிவுதாரர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவார்கள். தேசிய வேலை வழிகாட்டி பணி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களை மாதிரி மையங்களாக மாற்ற மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் வேலூர், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மாதிரி மையங்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன.
சிறப்புப் பயிற்சி முடித்து திரும்பிய அதிகாரிகள்
இதற்காக அந்த மாவட்டங்களைச் சேர்ந்த வேலைவாய்ப்பு அதிகாரிகள் ஹைதராபாத்தில் முதல்கட்ட சிறப்பு பயிற்சியை முடித்துவந்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.