Sunday 26 October 2014

முதல்முறையாக பால் விலை அதிகபட்ச உயர்வு

பொதுமக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் முக்கியமானது பால். இது அனைத்து தரப்பினருக்கும் தடையில்லாமல் கிடைக்கும் நோக்கில் தமிழக அரசு கடந்த 1981 ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களைக் கொண்டு ‘ஆவின்’ என்ற பெயரில் பால் நிறுவனத்தை உருவாக்கியது. இதன்மூலம், தமிழக மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பால் கிடைக்க அரசு வழிவகை செய்தது. பால் விற்பனை நல்ல லாபம் தரும் சந்தையாக இருப்பதால் தனியார் நிறுவனங்களும் 1990-களில் பால் பாக்கெட் விற்பனையில் இறங்கின.
 
திருமலா, டோட்லா, ஹெரிட் டேஜ், ஜெர்சி ஆகிய முன்னணி தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.40-க்கு மேல் இருக்கிறது. தனியார் பால் நிறுவனத்தின் சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.44, நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.40, முற்றிலும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் ரூ.36, கொழுப்பு செறிவூட்டப்பட்ட பால் ரூ.48-க்கு தற்போது விற்பனை ஆகிறது. சராசரியாக 3 மாதத்துக்கு ஒருமுறை பால் விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்துகின்றன. தனியார் பால் பாக்கெட் விலை கடந்த 2 ஆண்டுகளில் 7 முறை உயர்த்தப்பட்டுள்ளது.
 
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு காரணமாக 2001-ம் ஆண்டு டிசம்பரில் சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் லிட்டர் ரூ.11.44-ல் இருந்து ரூ.1.06 உயர்ந்து ரூ.12.50 ஆனது. 2004-ல் கொள்முதல் விலை மட்டும் ரூ.1 உயர்த்தப்பட்டது. விற்பனை விலை உயர்த்தப்படவில்லை. 2007-ல் சமன்படுத்தப்பட்ட பால் ரூ.12.50-ல் இருந்து ரூ.1.50 உயர்ந்து ரூ.14 ஆனது. 2008-ல் லிட்டருக்கு ரூ.2 ம், 2011-ல் அதிரடியாக லிட்டருக்கு ரூ.6.25-ம் உயர்த்தப்பட்டு லிட்டர் ரூ.24 என்ற விலையை எட்டியது. ஒரேயடியாக லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியிருப்பது ஆவின் வரலாற்றில் இதுதான் முதல்முறை.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு மூலம், ஆவின் நிறுவனத்தின் 4 வகையான பால் பாக்கெட்களும் லிட்டருக்கு ரூ.10 உயர்கிறது.
 
சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்) சில்லறை விலை ரூ.27-ல் இருந்து ரூ.37 ஆகவும், அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.24-ல் இருந்து ரூ.34 ஆகவும் உயர்கிறது. நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) சில்லறை விலை ரூ.31-ல் இருந்து ரூ.41 ஆகவும், அட்டைகளுக்கு ரூ.29-ல் இருந்து ரூ.39 ஆகவும் உயர்கிறது. நிறைகொழுப்பு பால் (ஆரஞ்சு) சில்லறை விலை ரூ.35-ல் இருந்து ரூ.45 ஆகவும், அட்டைகளுக்கு ரூ.33-ல் இருந்து ரூ.43 ஆகவும், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (இளம்சிவப்பு) சில்லறை விலை ரூ.24-ல் இருந்து ரூ.34 ஆகவும், அட்டைகளுக்கு ரூ.23-ல் இருந்து ரூ.33 ஆகவும் உயர்கிறது.
இந்த விலை உயர்வுக்கு முன்பு, ஆவினைவிட தனியார் பால் பாக்கெட் விலை சராசரியாக ரூ.13 அதிகம் இருந்தது. விலை உயர்வுக்குப் பிறகு, தனியார் பால் பாக்கெட் விலை ஆவினைவிட ரூ.3 அளவுக்கு அதிகம் உள்ளது.

No comments:

Post a Comment