Monday, 20 October 2014

இனி பாலைவனமாகும் பூமி!


நம் நாட்டைப் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் உள்ள மழைக் காடுகளில் தான் பல்லுயிரியம் செழித்துக் காணப்படுகிறது.தமிழகத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பாலுாட்டி வகைகள், 400-க்கும் மேற்பட்ட பறவை வகைகள், 160-க்கும் மேற்பட்ட ஊர்வன வகைகள், 12,000-க்கும் மேற்பட்ட பூச்சி வகைகள், 5,000-க்கும் மேற்பட்ட தாவர வகைகள், 10,000-க்கும் மேற்பட்ட சங்கு, சிப்பி, கடல் வாழ் உயிரின வகைகள் உள்ளன.

தேவைக்கு இயற்கையைப் பயன்படுத்தாமல் பேராசைக்கு இயற்கையைச் சுரண்ட ஆரம்பித்த பிறகுதான், உணவைக் கொஞ்சமாகவும், மாத்திரைகளை அதிகமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை உருவானது. இயற்கை ஒரு சிலந்தி வலையைப் போன்றது. ஒரு இழையைத் தட்டினாலும், மொத்த இடத்திலும் அதிர்வுகள் எதிரொலிக்கும்.உலகெங்கும் பல்லுயிரியத்தைக் காக்க பல்வேறு அமைப்புகள் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. பல்லுயிரியப் பகுதிகள் என அறிவிக்கப்பட்டு அதிமுக்கியத்துவம் தரப்படுகிறது. ஐ.யு.சி.என்., எனும் அமைப்பு, ஆண்டுதோறும் அழியும் நிலையில் உள்ள உயிரிகளைப் பற்றி 'ரெட் டேட்டா' எனும் புத்தகத்தை வெளியிடுகிறது.வெப்ப நாடான இந்தியாவின் சிறப்பே 'பல்லுயிரியம்' என்கிற 'பயோடைவர்சிட்டி' தான். மரங்கள், செடி கொடிகள், பாலுாட்டிகள், ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன, நீர்-நிலை வாழ்வன, பூச்சிகள், வளர்ப்புப் பிராணிகள் போன்ற பல்வேறு உயிரினங்களும் வாழத் தகுதியான பூமி நம்முடையது.நம்மைச் சுற்றி நன்மை மட்டுமே செய்யும் நண்பர்களைப் பற்றி தெரிந்து கொண்டால் தான், எதிர்கால சந்ததியினராவது அவற்றை காப்பாற்ற முன்வருவர்.


பாம்புகள் :


பூமியில் 3000 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள 275 இனங்களில், நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகியவை மட்டுமே விஷத்தன்மையுடையன. நமது சுற்றுப்புறச்சூழலின் உணவுச்சங்கிலியில் முக்கிய இடம் வகிப்பவை பாம்புகள். மண்புழுவைப் போலவே விவசாயிகளின் நண்பர்கள்.விவசாயிகளின் வயலில் விளைந்தவற்றை அழிப்பது எலிகள் தான். ஒரு ஜோடி எலிகள் மூலம் ஆண்டுக்கு 800க்கும் மேற்பட்ட குட்டிகள் உருவாகின்றன. இவற்றை பாம்புகள் பிடித்து உண்பதால், பயிர்ச்சேதம் தவிர்க்கப்படுகிறது.


தேனீக்கள் :



தேனீக்கள் காணாமற் போனால் என்ன குடி முழுகிபோய்விடும் என்று கேட்பவர்கள், அடிப்படை அறிவியலை பள்ளிக்கூடத்திலேயே தவற விட்டவர்களாகத் தானிருக்க முடியும். மகரந்தச் சேர்க்கை மூலம்தான் இனப்பெருக்கமும், பயிர்கள் விளைவதும் நடக்கின்றன. மகரந்தச் சேர்க்கையின் 'மன்மத துாதர்கள்' தேனீக்கள்தான். விவசாயத்தில் மூன்றில் ஒரு பங்கு பயிர்வகைகள் தேனீக்கள் வந்து, மகரந்தச் சேர்க்கையை செயல்படுத்துவதையே நம்பியிருக்கின்றன.தேனீக்கள் அழிந்து கொண்டிருப்பது அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா என்று மேலை நாடுகளில் மட்டுமல்ல. விவசாயத்தையே நம்பியிருக்கக்கூடிய இந்தியாவிலும்தான். இவற்றின் எண்ணிக்கை குறைந்து போனால், அயல் மகரந்த சேர்க்கையும் குறைந்து போகும். உணவு உற்பத்தி குறைந்து மனித இனமும் அழியத் துவங்கும். சத்தில்லாத உணவுகளால் உடல்நலம் பாதிக்கும். தொற்றுநோய்கள் மனிதர்களை எளிதாகத் தாக்கும். பிறகு மானிட குலத்தின் கதி?தேனீக்கள் மட்டும் மண்ணிலிருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது என்கிறார், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். தேனீக்கள் மட்டுமல்ல, இந்தியாவின் பெரு நகரங்கள், சிறு நகரங்களிலும் சிட்டுக்குருவிகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. இவை அழிவதற்குக் காரணம், பயிர்களைப் பாதுகாக்க தெளிக்கப்படும் பூச்சிமருந்துகள் தான்.சிட்டுக்குருவிகள் போன்ற பறவையினங்கள் இருந்தாலே, பயிர்களை அழிக்கும் பூச்சியினங்களை உண்டு, அவற்றைக் கட்டுப்படுத்திவிடும். ஆனால் பறவைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி, நம் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.


கொசுக்களின் எமன் :



தண்ணீர்ப் பூச்சிகள், வவ்வால், தட்டான், தலைப்பிரட்டைகளின் தலையாய பணி என்ன தெரியுமா? சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களின் லார்வாக்களை உணவாகக் கொள்வது தான். பூச்சிக்கொல்லிகள் நமக்கு கெடுதல் தரும் பூச்சிகளை மட்டுமல்ல... நன்மை செய்யும் பூச்சிகளையும் அழிப்பது தான், சுற்றுச்சூழலுக்கு தீங்காகிறது.தரையிலும் தண்ணீரிலும் வாழக்கூடிய இயல்பு படைத்த தவளைகள் குறைந்து போனதே, கொசுக்கள் பெருகுவதற்கு காரணம். தண்ணீர் தேங்கும் இடங்களில் தான் கொசுக்கள் முட்டையிட, அவற்றை தலைப்பிரட்டைகள் உணவாக்கிக் கொள்கின்றன. கொசுக்கள் பிறப்பதற்கு முன்பே அவற்றின் கருவை அழிக்கும் தவளைகள், ஏறக்குறைய அழிவின் விளிம்பில் நிற்கின்றன.


வவ்வால்கள் :



மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் பூச்சி, கொசு, வண்டு மற்றும் ஈக்களை வவ்வால்கள் உணவாக உட்கொள்கின்றன. சிறிய பழுப்பு நிற வவ்வால்கள், ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்கள் வரைப் பிடித்து உண்ணும். வாழை, மாம்பழம், கொய்யா, பேரீச்சை, அத்தி ஆகியவற்றை உண்பதன் மூலம் அயல் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகிறது. இவற்றின் கழிவுகளில் மிக அதிக நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால், சிறந்த உரமாகிறது. பல நாடுகளில் வவ்வால் கழிவுகள் சேகரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகின்றது.வவ்வால்களில் சில வகைகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழ்கின்றன. காடுகள் அழிக்கப்படுவதாலும் உலக அளவில் தற்போதுள்ள பருவநிலைக் கோளாறுகளினால் கோடிக்கணக்கான எக்டேர்களில் ஏற்படும் காட்டுத்தீயாலும், வவ்வால் இனங்கள் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றன.''இந்த உலகம் மனிதனுடையது மட்டும் அல்ல. மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே. அதைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும்''. இந்த மகத்தான வாழ்வியல், வலையாகப் பின்னப்பட்டிருக்கிறது. இந்த வலையை மனிதன் பின்னவில்லை. மனிதன் இந்த வலையில் உள்ள சிறிய நுாலிழை மட்டுமே. மனிதனின் பேராசைமிக்க செயல்கள், வெறும் புதைகுழிகள் நிறைந்த பாலைவனமாக, ஒருநாள் பூமியை மாற்றிவிடும்.
-எம்.ராஜேஷ்,
உதவி பேராசிரியர்,
அமெரிக்கன் கல்லுாரி,

No comments:

Post a Comment