Thursday 23 October 2014

ரியல் எஸ்டேட் தொழில் தேக்கநிலை: குறைந்து வரும் பத்திரப் பதிவு வருவாய்

ரியல் எஸ்டேட் தொழிலில் நிலவும் தேக்க நிலையால் நடப்பு நிதியாண்டில், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட அசையா சொத்துகளுக்கான பத்திரப் பதிவு, ஆவணங்கள் அடிப்படையில் கணிசமாக குறைந்துள்ளது என பதிவுத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
 வீடு, நிலம், பண்ணை வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்ற அசையா சொத்துக்களை வாங்குபவர்கள், அவற்றுக்கான பத்திரப் பதிவை செய்யும்போதுதான்  தாங்கள் வாங்கிய சொத்துக்களுக்கு அவர்கள் சட்டரீதியான பாதுகாப்பை பெறுகின்றனர். அரசுக்கும் இதன்மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது.
தமிழகத்தில் தற்போது புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, அவை கட்டப்பட்டுள்ள நிலத்தில் ஒவ்வொரு உரிமையாளருக்கும் உள்ள பிரிக்கப்படாத பங்கின் (யுடிஎஸ்)வழிகாட்டி மதிப்பில் 8 சதவீதமும், பழைய அடுக்குமாடி குடியிருப்புகள், தனிவீடுகள், பண்ணை வீடுகள் போன்றவற்றுக்கு, அவை கட்டப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு மற்றும் வீட்டின் மொத்த கட்டுமான மதிப்பில் 8 சதவீதமும் பத்திரப் பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வீட்டுமனைகளுக்கு இதே அளவு கட்டணம் பெறப்படுகிறது. இதில் 7 சதவீதம் முத்திரைத்தாள் தீர்வையாகவும், 1 சதவீதம் பதிவுக் கட்டணமாகவும் பெறப்படுகிறது.
இது குறித்து பத்திரப் பதிவு துறை அலுவலர் ஒருவர் கூறியது:
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில், அசையா சொத்துக்கள் தொடர்பாக மொத்தம் 12.85 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழக அரசுக்கு மொத்தம் ரூ 4,001 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.1,500 கோடி மதிப்புக்கு பத்திரப் பதிவு நடந்துள்ளது. கடந்த 2013 -14 நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் மொத்தம் 13.36 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அவற்றின் மூலம் மொத்தம் 4,002 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
 ஆவணங்களின் எண்ணிக்கை அடிப்படையில், கடந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களை ஒப்பிடுகையில், நிகழாண்டில் 51 ஆயிரம் பத்திரப் பதிவுகள் குறைந்துள்ளன. வருவாய் அடிப்படையில் 1 கோடி ரூபாய்தான் குறைந்துள்ளது. எனினும், ரியல் எஸ்டேட் தொழிலில் நிலவும் தொடர் தேக்க நிலையால் நிகழாண்டில் இதுவரை பத்திரப் பதிவு வருவாய் அதிகரிக்கவில்லை என்றார் அவர்.

No comments:

Post a Comment