எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் காளிதாஸ் சுட்டதில் இளைஞர் சையது முகமது உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவியல் நீதிமன்ற நடுவர் விசாரணைக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சையது முகமது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் 14.10.2014 அன்று எஸ்.பி.பட்டினம் மேலத் தெருவைச் சேர்ந்த சையது முகமது, பழுது நீக்கும் கடையில் விடப்பட்டிருந்த தனது நண்பரின் இரு சக்கர வாகனத்தை திரும்ப கேட்டிருக்கிறார்.
அப்போது ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உதவி ஆய்வாளர் காளிதாஸ் விசாரணை மேற்கொண்டபோது, சையது முகமது துப்பாக்கியால் சுடப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து குற்றவியல் நீதிமன்ற நடுவர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சையது முகமது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment