Tuesday, 14 October 2014

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்


டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு உற்பத்தியாகாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
திருவாரூரில் வெள்ளிக்கிழமை டெங்கு காய்ச்சல் தடுப்புக் குறித்த முன்னேற்பாடு கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது:
ஏடிஸ் எஜிப்டை வகை கொசுக்காளால் டெங்கு காய்ச்சல் பரப்பப்படுகிறது. இக் காய்ச்சல் பிளேவி வகை வைரஸ் கிருமியால் ஏற்படுத்தப்படுகிறது. இந்த வைரஸ் கிருமிகள் டென்-1,2,3,4 என்ற நான்கு வகைகளாக காணப்படுகிறது.
கடுமையான காய்ச்சல் தலைவலி, கண்களின் பின்புறம் வலி, கடுமையான மூட்டுவலி மற்றும் உடல் வலி இக்காய்ச்சலின் அறிகுறிகள்.
மாவட்டத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் அனைத்து காய்ச்சல் உள்ள நோயாளிகளுக்கும் நிலவேம்பு கசாயம், மலைவேம்பு மற்றும் பப்பாளி இலைச் சாறு கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காய்ச்சல் உள்ள நோயாளிகளுக்கு வார்டு தனியாக அமைப்பதுடன், ஒவ்வொரு படுக்கையையும் கொசு வலை கொண்டு மூடி வைக்க வேண்டும். காய்ச்சல் வார்டில் ஜன்னல்கள் மூலம் கொசு நுழையாமல் வயர் மெஸ் வலை அமைக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மற்றும் சுற்றுப் புறங்களில் ஏடிஸ் கொசு உற்பத்தியாகாமல் இருக்க ஆட்டு உரல், தேங்காய் சிரட்டைகள், மண் பானை மற்றும் சட்டிகள், கண்ணாடி குடுவைகள், பாட்டில்கள், பிளாஸ்டிக் கலன்கள், குப்பிகள், குளிர்சாதனப் பெட்டியின் தட்டு, பூஞ்சாடிகள், டயர்கள்.
சிமெண்ட் தொட்டிகள், கிணறுகள், ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் டிரம்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த சுற்றுப்புறத்தை தூய்மைபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றார் மதிவாணன்.

No comments:

Post a Comment