Wednesday 29 November 2017

திருவாரூர் மாவட்டத்தில் 3-வது நாளாக பலத்த மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி திருவாரூரில் கடந்த 26-ந் தேதி மழை பெய்ய தொடங்கியது. நேற்று 3-வது நாளாக பலத்த மழை பெய்தது.

நேற்று காலையிலேயே மழை பெய்ய தொடங்கியதால் பள்ளி மாணவ-மாணவிகள் சிரமப்பட்டனர். சாலையில் இருந்த பள்ளங்களில் தேங்கிய மழை நீர் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல மணிநேரம் பெய்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருவாரூரில் அதிகபட்சமாக 31 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தின் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- மன்னார்குடி-14, பாண்டவையாறு தலைப்பு-14, நன்னிலம்-13, வலங்கைமான்-9, முத்துப்பேட்டை-8, குடவாசல்-6, நீடாமங்கலம்-5, திருத்துறைப்பூண்டி-3. 

Tuesday 28 November 2017

மாணவரின் தலை முடியை வெட்டியதாக புகார்: அரசு பள்ளி ஆசிரியை கைது

திருவாரூர் அருகே குளிக்கரையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சுந்தர் மகன் சுரேந்தர் (வயது 13) என்பவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சுரேந்தர் தலையில் அதிகமாக முடி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் 8-ம் வகுப்பு ஆசிரியை விஜயா என்பவர், ஏன் முடி அதிகமாக வைத்திருக்கிறாய் என சுரேந்தரை கேட்டு கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் ஆசிரியை விஜயா கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேந்தரின் தலை முடியை, சக மாணவர் மூலம் பிளேடால் வெட்டினார். இதற்கு மாணவரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முடி வெட்டப்பட்ட மாணவனின் புகைப்படம் சமூக வலைதலங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த பலரும், மாணவரின் தலைமுடியை வெட்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன் தலைமையில் விசாரணை குழு அமைத்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் மாணவனின் தலைமுடியை வெட்டியது ஆசிரியை விஜயா தான் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆசிரியை விஜயா உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனிடையில் மாணவனின் தந்தை சுந்தர், கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், குழந்தைகள் நலச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை விஜயாவை கைது செய்தனர். மாணவரின் தலைமுடியை வெட்டிய ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Saturday 25 November 2017

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ-மின்சார ரெயில்களில் பயணம்


சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் மூலம் நகரில் போக்குவரத்தை மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் சென்னை சர்வதேச மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது. கருத்தரங்கில் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கலந்துகொண்டு பேசியதாவது:-

சென்னை நகரில் ‘ஷேர் ஆட்டோ’வில் பயணம் செய்வதற்கும், மெட்ரோ ரெயிலில் பயணிப்பதற்கும் ஒரே கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால் மெட்ரோ ரெயிலில் ஏ.சி.வசதி உள்ளது. சுற்றுச்சுழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக பயணிக்க முடிகிறது.

சென்னையில் 2015-ம் ஆண்டு வெள்ளம் பாதித்தபோதும் மெட்ரோ ரெயில் எந்த தடையுமின்றி இயங்கியது. அப்போது மின்தடை ஏற்பட்டிருந்தாலும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டது.

அண்ணாசாலையில், சைதாப்பேட்டை முதல் டி.எம்.எஸ். வரையிலான சுரங்கம் அமைக்கும் பணி மார்ச் மாதம் நிறைவடையும். மெட்ரோ ரெயில் 2-வது கட்ட திட்டப்பணிகள் மாதவரம்-சிறுசேரி, ஆயிரம்விளக்கு-கோயம்பேடு, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 107.55 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டது.

வருகிற நிதி ஆண்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். அதன்பின்னர் கடன் வாங்குதல், டெண்டர் விடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். 2025-ம் ஆண்டுக்குள் இந்த திட்டப்பணிகள் முடிவடையும் என்று நம்புகிறோம்.

சென்டிரல் ரெயில் நிலையம், வால்டாக்ஸ் சாலை, பல்லவன் பாலம் உள்ளிட்ட இடங்களில் தினசரி 6 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதசாரிகள் கடக்கிறார்கள். எனவே அவர்கள் சாலையை கடப்பதற்கு வசதியாக ரிப்பன் மாளிகையில் இருந்து ஒருங்கிணைந்த நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளது.

சென்டிரல் ரெயில் நிலையத்தில் வணிக வளாகத்துடன் கூடிய மிகப்பெரிய சுரங்கப்பாதை வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகர பஸ்கள், மின்சார ரெயில்கள், மெட்ரோ ரெயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிப்பதற்கு ஏற்றவகையில் தொழில்நுட்ப பணிகள் நடந்துவருகிறது. வெகுவிரைவில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது.

வடசென்னை பகுதியில் 2 ஆண்டுகளில் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்துவிடும். அதன்பின்னர் வடசென்னையை நோக்கி மக்கள் நகர தொடங்குவார்கள்.

Thursday 23 November 2017

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றியது எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க. இரண்டு அணியாக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் என செயல்பட்டு வந்தன. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆனார். இந்த நேரத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தேர்தல் கமிஷனில் முறையிட்டன.

வேறு வழியில்லாமல், அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது. இதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் வெவ்வேறு சின்னங்களிலேயே இரு அணிகளும் போட்டியிட தயாராகின. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக வெளியான புகாரை தொடர்ந்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின்னர், இரு அணிகளும் கட்சி மற்றும் சின்னத்தை பெறுவதில் முனைப்பு காட்ட தொடங்கின. லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை இரு அணியினரும் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தனர். ஆனால், ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யும் முன், ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றாக இணைந்தன.

சசிகலா சிறை சென்றதால் அ.தி.மு.க. (அம்மா) அணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வந்தது. அதன்பிறகு இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. இந்த இணைப்பை விரும்பாத அ.தி.மு.க. (அம்மா) அணியைச் சேர்ந்த துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் அவரது தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.

இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய அணியினரும், டி.டி.வி.தினகரன் அணியினரும் தேர்தல் கமிஷனில் தங்கள் தரப்பிலான லட்சகணக்கான ஆவணங்களை தாக்கல் செய்தனர். இருதரப்பிலும் பல்வேறு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது.

 இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவது தொடர்பாக ஒருங்கிணைந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும், சசிகலா அணியினருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இன்று இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணைய உத்தரவை அடுத்து அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சிக் கொடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக் கொள்ளத் தடை இல்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் உறுதிபடுத்தப்படவில்லை.  என்றாலும் தேர்தல் கமிஷன் அறிவிப்பு  பற்றிய தகவல் காரணமாக எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் அவர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

சின்னம் தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ராஜேஷ் மல்கோத்ரா தகவல் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து கருத்து தெரித்த முதல் அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை எங்கள் வசம் வந்துள்ளது.  விசாரணையை மேற்கொண்டு நியாயமான தீர்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது என கூறினார்.

Tuesday 21 November 2017

வட கொரியாவை தீவிரவாத ஆதரவு நாடாக அமெரிக்கா அறிவித்தது


திங்களன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வட கொரியாவை பயங்கரவாதத்தின்  ஆதரவுநாடாக  அறிவித்தார், டிரம்ப் நிர்வாகம் அதன் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்காக வடகொரியா  மீது கூடுதல் தடைகளை விதிக்க   நடவடிக்கை  போகிறது.டிரம்ப் அமைஅச்சரவை கூட்டத்தின் போதை இட்ய்ஹனை அறிவித்தார்.

அவர் கூறியதாவது:-

இன்று, அமெரிக்கா வட கொரியாவை பயங்கரவாதத்தின் அரசு  ஆதரவாளராக  அறிவிக்கிறது. இது ஒரு நீண்ட காலத்திற்கு முன்பு நடந்திருக்க வேண்டும். இது தற்போது தான் நடந்து உள்ளது. அணு ஆயுத பேரழிவு மூலம் உலக அச்சுறுத்தலகா உள்ளது.   வெளிநாட்டு மண்ணில் படுகொலைகள் உட்பட,வட கொரியா பலமுறை சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்துள்ளது.

இன்று இந்த நடவடிக்கை எடுக்கும்போது,   நமது  எண்ணங்கள் ஓட்டோ வார்பீயர் குறித்து போகிறது. அவன் ஒரு அற்புதமான இளைஞன் வட கொரிய ஒடுக்கு முறையால் கொடூரமாக பாதிக்கப்பட்டான்.

வட கொரியா மற்றும் தொடர்புடையவர்கள்  மீது இன்னும் கூடுதலான தடைகள் மற்றும் அபராதம் விதிக்கப்படும்.  கொலைகார ஆட்சியை தனிமைப்படுத்த அதிகபட்ச அழுத்தம்கொடுக்கப்படும்.செவ்வாயன்று கருவூலத் துறை வட கொரியா மீது மிகப்பெரிய ஒரு கூடுதல் சுற்று தடைகளை அறிவிக்கும். 

 வட கொரிய ஆட்சி சட்டபூர்வமானதாக இருக்க வேண்டும். வட  தனது சட்டவிரோதமான அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அபிவிருத்தியை முடிவுக்கு கொண்டு, சர்வதேச பயங்கரவாதத்திற்கு அனைத்து ஆதரவையும் நிறுத்த வேண்டும். இல்லாவிடால் அடுத்த 2 வாரங்கள் பொருளாதார தடைகள் அதிக அளவில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க வெளியுறவுக் குழு இந்த நடவடிக்கையை வரவேற்று உள்ளது.

Monday 20 November 2017

1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டம்; முதல் அமைச்சர் வெளியிட்டார்

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில், தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளுக்கு தமிழக மாணவர்கள் தயாராகும் வகையில் வரைவு பாடத்திட்டம் உருவாக்கப்படும் என அரசு அறிவித்தது.
இந்த நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டத்தினை இன்று வெளியிட்டார்.
புதிய பாடத்திட்டம் 200 ஆசிரியர்கள் அடங்கிய குழுவினரால் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாடத்திட்டம் வரும் ஜனவரியில் இறுதி செய்யப்பட்டு அடுத்த கல்வியாண்டு முதல் படிப்படியாக நடைமுறைக்கு வரவுள்ளது.
1 முதல் 10 வகுப்புகளுக்கு 7 ஆண்டுகளுக்கு பின்னரும், 11 மற்றும் 12வது வகுப்புகளுக்கு 14 ஆண்டுகளுக்கு பின்னரும் புதிய பாடம் இருக்கும்.
புதிய வரைவு பாடத்திட்டங்கள் பற்றி 15 நாளில் பெற்றோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துகளை கூறலாம்.
www.tnscert.org

Sunday 19 November 2017

திருவாரூர் அருகே கோதுமை ஏற்றி சென்ற லாரி, பள்ளத்தில் கவிழ்ந்தது


காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நேற்று அதிகாலை 20 டன் கோதுமை ஏற்றி கொண்டு லாரி திண்டுக்கலை நோக்கி சென்றது. இந்த லாரியை கரூர் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் மகன் ரத்தினாசலம் (வயது 42) என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த மாற்று டிரைவர் ராஜேஷ் (42) என்பவரும் சென்றுள்ளார். இந்த லாரி திருவாரூர் மாவட்டம் அம்மையப்பனை அடுத்த கீழமுகுந்தனூர் என்ற இடததில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற அரசு பஸ்சுக்கு வழிவிட முயன்றபோது எதிர்பாராதவிதமாக லாரி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த கோதுமை தரையில் கொட்டியது. இந்த விபத்தில் டிரைவர்கள் 2 பேரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், தஞ்சை-நாகை சாலை இருவழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டுள்ள சாலையில் அதி வேகமாக வாகனங்கள் செல்கின்றன. இதில் குறுகிய சாலையில் எதிரே வாகனத்திற்கு வழி விடமுடியாமல் விபத்துகள் ஏற்படுகின்றது. கடந்த மாதம் இதே இடத்தில் கோதுமை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலை பணிகள் நடைபெறும் இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

Saturday 18 November 2017

அடுத்த வாரம் வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் இதுவரை வங்கக்கடலில் 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவானது. முதலில் இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் சுமார் 10 நாட்கள் மழை பெய்தது. பின்னர் 3 நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. ஆனால் இதனால் எதிர்ப்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. பின்னர் இந்த காற்றழுத்த தாழ்வுநிலை வடதிசையில் நகர்ந்து ஒடிஷா நோக்கி சென்று விட்டது.

இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை சராசரியை விட குறைந்த அளவே பெய்துள்ளதால் கலக்கமடைந்த மக்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியளித்துள்ளது.

வரும் 21ம் தேதி வட அந்தமான் அருகேயும், தென்கிழக்கு வங்க கடலில் வரும் 27ம் தேதியும் அடுத்தடுத்து 2 புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்தத்தை பொறுத்தவரை பெரும்பாலும் அது தமிழகம் நோக்கி வர வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் காற்றின் சுழற்சியை பொறுத்து தென் மாவட்டங்களுக்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய அதிகம் வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Friday 17 November 2017

ஜிம்பாப்வே அதிபர் பத்திரமாக வெளியேற அனுமதியா

ஜிம்பாப்வேவில் கடந்த 37 ஆண்டுகளாக அந்த நாட்டின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக திகழ்ந்து வந்தவர் ராபர்ட் முகாபே (வயது 93).
அவர் வயோதிகம், உடல்நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை சமீப காலமாக குறைத்துக்கொண்டார். அவருக்கு பின்னர் அவரது இடத்தை கைப்பற்றுவதற்கு துணை அதிபராக இருந்த எமர்சன் மனன்காக்வா திட்டமிட்டார்.
ஆனால் ராபர்ட் முகாபேயின் மனைவி கிரேஸ் முகாபே (52) அதிகார போட்டியில் குதித்தார். ராபர்ட் முகாபே, மனைவிக்கு ஆதரவாக செயல்பட்டார். துணை அதிபர் மனன்காக்வாவை பதவி நீக்கம் செய்தார். இது ராணுவத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) ஜிம்பாப்வே அரசு தொலைக்காட்சி நிலையத்தை ராணுவம் கைப்பற்றியது. தலைநகரில் ராணுவம் களம் இறங்கியது.
 ராபர்ட் முகாபே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதிபரின் மனைவி கிரேஸ் என்ன ஆனார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இதற்கிடையே ராபர்ட் முகாபே பத்திரமாக வெளியேறுவது தொடர்பாக ராணுவ தலைமையுடன் கத்தோலிக்க பாதிரியார் பிடெலிஸ் முகோனோரி பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது.

Wednesday 15 November 2017

Kodikkalpalayam -மத்லபுல் கைராத் பள்ளியில் குழந்தைகள் தினவிழா







நமதூர் மௌத் அறிவிப்பு 15/11/17

இன்னாலில்லஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன் மர்ஹூம் A. பஜ்லுர்ரஹ்மான், A.ஹபீபுர்ரஹ்மான் ஆகியோரின் தந்தை வெ.ப.மு.அபதுல் வஹாப் அவர்கள் காட்டுபள்ளித்தெருவில் மௌத் அன்னாரின் நல்லடக்கம் காலை 11.30 மணிக்கு நடைபெறும்

Sunday 12 November 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 12/11/17

நமதூர் காயிதே மில்லத் தெரு முதலைகுட்டி வீட்டு மர்ஹூம் அய்யூப் அவர்களின் மனைவியும் சாகுல் ஹமீது அவர்களின். தாயாருமான ஜன்னத்நிஷா அவர்கள் மௌத்.

இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை வானிலை மையம் அறிவிப்பு


தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் வட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. வழக்கத்தை விட ஒரு வாரம் காலதாமதாக பருவமழை தொடங்கினாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த வட கிழக்கு பருவமழை தொடங்கிய ஓரிரு நாட்களில் குறைவான மழை பெய்தாலும், கடந்த 31-ந் தேதி முதல் பருவமழை அதன் உக்கிரத்தை காட்டியது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல குடியிருப்பு பகுதிகள் மழை நீரில் மூழ்கின. சென்னையில் வழக்கத்தை விட அதிகமாக பெய்த கனமழையால் மாநகரமே ஸ்தம்பித்தது. பல குடியிருப்புகள் நீரில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இருந்தபோதும், சென்னை மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மழை சற்று ஓய்ந்ததால் சென்னையில் தாழ்வான பகுதிகள் மற்றும் பள்ளி வளாகங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடிய தொடங்கியது. சில நாட்களாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்டன.

சென்னையில், நேற்று முன்தினமும், நேற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் லேசான சாரல் மழை பெய்தது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் அடுத்த 48 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் அடுத்து வரும் 2 தினங்களில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தமட்டில் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்த வரையில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் இதுவரைக்கும் வழக்கமாக தமிழகத்தில் 44 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை 25 செ.மீ மழை தான் பெய்து உள்ளது. இந்த மழைப் பொழிவானது இயல்பான மழை அளவைவிட மிகவும் குறைவு.

சென்னையை பொறுத்தமட்டில் இதுவரை 34 செ.மீ மழை தான் பெய்திருக்க வேண்டும். ஆனால் 67 செ.மீ. மழை பெய்து உள்ளது. இது இயல்பை விட 66 சதவீதம் அதிகம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Saturday 11 November 2017

திருவாரூரில் கனமழையால் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் இறுதியில் தொடங்கியது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது.
தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. பள்ளி செல்லும் மாணவ மாணவியர் அதிக சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மழையால் விடுமுறை அறிவிப்பும் வெளியானது.
இந்நிலையில் சில நாட்களாக இயல்பு வாழ்க்கை திரும்பி வந்த நிலையில் திருவாரூரில் பெய்து வரும் கனமழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

178 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 23-வது கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் நேற்று நடந்தது. கவுன்சிலின் தலைவரான மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமை தாங்கினார். ராஜாங்க நிதி மந்திரி சிவபிரசாத் சுக்லா, மத்திய வருவாய் மற்றும் நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா அனைத்து மாநில நிதிமந்திரிகள், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி (நிதிமந்திரி) ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

28 சதவீத வரிப் பட்டியலில் உள்ள 228 பொருட்களின் எண்ணிக்கை 50 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது 178 பொருட்களின் மீதான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் துணைக்குழு பரிந்துரை செய்திருந்ததை விட கூடுதலாக 12 பொருட்கள் மீது வரி குறைக்கப்பட்டு இருக்கிறது.

இதுபற்றி நிதிமந்திரி அருண்ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது:-

28 சதவீத வரி பட்டியலில் இருக்கும் பல்வேறு பொருட்களின்  எண்ணிக்கையையும், வரி விகிதத்தை 18 சதவீதமாக குறைக்க கூட்டத்தில் ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அதன்படி 178 பொருட் கள் 18 சதவீத வரி வளையத்துக்குள் செல்கின்றன. எஞ்சிய 50 பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரி பட்டியலில் உள்ளன.

வரி குறைப்பு செய்யப்பட்ட முக்கிய பொருட்களில் குக்கர்கள், ஸ்டவ்கள், வாட்டர் ஹீட்டர், பேட்டரிகள், மூக்கு கண்ணாடிகள் காபி, விவசாய டிராக்டருக்கான சில பிரத்யேக பாகங்கள், சுவிங்கம், சாக்லெட்டுகள், பற்பசை, ஷாம்பு, முகச்சவரத்துக்கு பின் பயன்படுத்தும் திரவங்கள், குளியல் சோப்பு, சலவைத்தூள், சலவை சோப்பு, பெண்களுக்கான அழகு சாதன மூலப்பொருட்கள், ஷேவிங் சோப் மற்றும் கிரீம்கள், சத்து பானங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மெத்தை, சூட்கேஸ், காகிதம், எழுதுபொருட்கள், கைக்கெடிகாரங்கள், இசைக்கருவிகள், கிரானைட், மார்பிள், குளியல் அறை பீங்கான் பொருட்கள், தோல் ஆடைகள், செயற்கை முடி, டோப்பா, வாகன மற்றும் விமான உதிரிபாகங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த வரி குறைப்பு வருகிற 15-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

அதேநேரம் புகையிலை பொருட்கள், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏர்கண்டிஷனர், வாகுவம் கிளனர் பெயிண்ட் மற்றும் சிமெண்ட், கார்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றின் மீதான வரி தொடர்ந்து 28 சதவீதமாகவே நீடிக்கும்.

13 பொருட்களின் வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், 5 பொருட்களின் வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மேலும் தற்போது 5 சதவீத வரி விதிக்கப்பட்டு வரும் 6 பொருட்கள் பூஜ்ய வரி நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்கள் மீதான வரி 18 லிருந்து 5 சதவீதமாக குறைக் கப்படுகிறது. வெட் கிரைண்டர்கள், கவச வாகனங்கள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

நட்சத்திர ஓட்டல்களின் உணவகங்களில் வரி 18 சதவீதமாக இருக்கும். இதற்கும் குறைவான அந்தஸ்து கொண்ட ஏசி வசதி கொண்ட மற்றும் ஏசி வசதி இல்லாத உணவகங்களில் இது ஒரே சீராக இருக்கும் விதத்தில் 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அறை வாடகை ரூ.7,500க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே இந்த 5 சதவீத வரி பொருந்தும்.

இந்த வரிகுறைப்பால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

வர்த்தகர்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை வரி கணக்கு தாக்கல் செய்வதில் உள்ள சுமையை எளிதாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது வர்த்தகர்களுக்கு மிகவும் உதவும்.

Friday 10 November 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 10/11/2017


நமதூர் நடுத்தெரு கா.செ.மு. தாஜூதீன் அவர்களின் மகளார் ஜபுருத்நிசா அவர்கள் மௌத்.


Thursday 9 November 2017

பாரம்பரிய இசை நகரமாக சென்னை தேர்வு பாராட்டு தெரிவித்த பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி


‘யுனெஸ்கோ’ அமைப்பின் பாரம்பரிய இசை நகரங்களின் பட்டியலில் சென்னை நகரம் இடம் பிடித்து இருப்பதை பிரதமர் மோடி பாராட்டினார். அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை தேர்வு

கலாசாரத் துறையில் சிறந்து திகழும் உலக நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான ‘யுனெஸ்கோ’ நேற்று வெளியிட்டது. இதில் உலகின் தலைசிறந்த 64 நகரங்களின் வரிசையில் இந்தியாவில் இருந்து சென்னை நகரமும் தேர்வாகி உள்ளது.

தென்னிந்தியாவின் கலாசார தலைநகர் என்னும் சிறப்பு அடைமொழியை கொண்டுள்ள சென்னை, பாரம்பரிய இசையில் செறிந்த வளத்தை கொண்ட நகரம் என்பதற்காகவும், இசைக்கு மிகுந்த ஊக்கம் அளித்து வருவதற்காகவும் இந்த பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் வாழ்த்து

இதற்காக சென்னை நகர மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “யுனெஸ்கோவின் இசை பாரம்பரியம் மிக்க உலக நகரங்களின் பட்டியலில் சென்னையும் சேர்க்கப்பட்டு இருப்பதற்காக உங்களை வாழ்த்துகிறேன். நமது வளமையான கலாசாரத்துக்கு சென்னை நகரம் ஆற்றிவரும் பங்களிப்பு மிகவும் மதிப்பு மிகுந்தது. இத் தருணம் இந்தியாவிற்கு பெருமை தருவதும் ஆகும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

முதல்-அமைச்சர்

இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “இந்த செய்தியை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக யுனெஸ்கோ அமைப்பிற்கு எனது மனமார்ந்த நன்றி. இசைத்துறையில் சென்னையின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் யுனெஸ்கோ அமைப்பு பாராட்டி அங்கீகரித்திருப்பது நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயம். சென்னை வாழ் மக்களுக்கும், அனைத்து இசைத்துறை கலைஞர்களுக்கும், இத்தருணத்தில் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், “இசைக்காக உலக அளவில் சேர்க்கப்பட்ட 64 நகரங்களில் சென்னையும் ஒன்றாக உள்ளது. பல்வேறு படைப்புகளுக்காக யுனெஸ்கோ தேர்வு செய்துள்ள மொத்த நகரங்களின் எண்ணிக்கை 180 ஆகும். சென்னை மக்கள் இசையை மிகவும் நேசிப்பவர்கள். அவர்களின் கலாசாரம், பாரம்பரியத்தில் இசை ஒன்றாக உள்ளது. இந்த தருணத்தில் சென்னைக்கு கிடைத்துள்ள தனிச் சிறப்புக்காக சென்னை மக்களுக்கு, நீங்கள் தெரிவித்த பாராட்டுக்காக சென்னை மக்கள் சார்பாகவும், எனது சார்பிலும் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டு இருந்தது.

Monday 6 November 2017

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை: சட்ரசங்கேணி குளக்கரையின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது


திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. மழை காரணமாக ஆணைவடபாதி, நெம்மேலி ஆகிய 2 இடங்களில் நிவாரண முகாம் திறக்கப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சம்பா நடவு செய்த வயல்களில் மழைநீர் சூழ்ந்தது. இதில் நன்னிலம், திருத்துறைப்பூண்டி கோட்டூர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பல இடங்களில் வடிகால்கள் தூர்வாராததால் வயல்களில் தேங்கி நின்ற தண்ணீரை வடிய வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று காலை முதல் மழை சற்று ஓய்ந்தது. ஒரு வாரத்திற்கு பின்னர் வெயில் அடிக்க தொடங்கியது. இதனால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். பொக்லின் எந்திரத்தின் மூலம் வடிகால்கள் தூர்வாரப்பட்டு வருவதால் மழை நீர் வடிந்து வருகிறது. மேலும் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிய தொடங்கி உள்ளதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

குளக்கரையின் தடுப்புச்சுவர் இடிந்தது

திருவாரூர் அருகே உள்ள அடியக்கமங்கலத்தில் சட்ரசங்கேணி குளம் உள்ளது. இந்த குளக்கரையின் தடுப்புச்சுவர் பழுதடைந்த நிலையில் இருந்தது. தொடர் மழையின் காரணமாக நேற்றுமுன்தினம் திடீரென தடுப்புசுவர் இடிந்து விழுந்தது. இதனால் குளக்கரையின் தடுப்புச்சுவரை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:

திருவாரூர்-68, நன்னிலம்-55, குடவாசல்-51, வலங்கைமான்-47, பாண்டவையாறு தலைப்பு-50, மன்னார்குடி-51, நீடாமங்கலம்-48, திருத்துறைப்பூண்டி-93, முத்துப்பேட்டை-25.

அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டி-93 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் மழைநீரில் மூழ்கின. மேலும் நடவு மற்றும் நேரடி நெல்விதைப்பு மூலம் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின. இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அரசடி தெரு, நரிக்குறவர் காலனி வீரன்நகர், மீனாட்சிவாய்க்கால், ரொக்ககுத்தகை, சண்முகசெட்டித்தெரு, வானகாரத்தெரு, அபிஷேககட்டளை தெரு ஆகிய குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இதனால் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல கோட்டூர் பகுதியில் தொடர் மழை பெய்தது. இதனால் கோட்டூர் அருகே திருக்களார், அக்கரைக்கோட்டகம், அழகிரிகோட்டகம், சிதம்பரகோட்டகம், ஆண்டிகோட்டகம், செல்லபிள்ளையார்கோட்டகம், காடுவாகுடி, சோழங்கநல்லூர், கீழபுழுதுக்குடி, மாவட்டக்குடி, குலமாணிக்கம், அண்ணுக்குடி, களப்பால், சோலைக்குளம், மாணங்காத்தான்கோட்டம், பாலையூர், நொச்சியூர், பாலவாய், தேவதானம்பட்டி, புத்தகரம், காரைத்திடல் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

Saturday 4 November 2017

சென்னையில் மீண்டும் விட்டு விட்டு தொடரும் மழை: தேர்வுகள் ஒத்திவைப்பு


வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. கனமழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இதையடுத்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். 

சென்னையில் இன்று காலை முதல் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சென்னை பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 தரமணியில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தில் சிறப்பு பள்ளியில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேவேளையில், அண்ணா பல்கலைகழகத்தில் திட்டமிட்டபடி இன்று அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Friday 3 November 2017

பாக்கெட் செய்த உணவு பொருளுடன் இருந்த சிறிய பொம்மையை விழுங்கிய 4 வயது சிறுவன் பலி



ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலூரு நகரத்தில் வசித்து வந்த சிறுவன் மீசலா நிரீக்ஷன் (வயது 4).
இவன் தனது வீட்டில் இருந்தபொழுது பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருளை பிரித்து சாப்பிட்டுள்ளான். சிறுவர்கள் வாங்க வேண்டும் என்பதற்காக இந்த பாக்கெட்டிற்குள் அவர்களை கவரும் வகையிலான மிக சிறிய பிளாஸ்டிக்கினால் ஆன விளையாட்டு பொம்மை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. இதனை அறியாத அந்த சிறுவன் உணவு பொருளுடன் சேர்த்து பொம்மையை தவறுதலாக கடித்து தின்றுள்ளான்.
இதனை அடுத்து அவனுக்கு வாந்தி வந்துள்ளது. வாய் வழியே அதனை வெளியே துப்ப முயற்சித்துள்ளான். இதனை அவனது தாய் கவனித்துள்ளார். அந்த பொம்மை தொண்டைக்குள் சிக்கியுள்ளது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதனை வெளியே எடுக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
உடனடியாக அவனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவன் இறந்து விட்டான் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
உணவு பொருள் தயாரிப்பாளர் மீது போலீசில் சிறுவனின் பெற்றோர் புகார் பதிவு செய்துள்ளனர்.

Thursday 2 November 2017

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட பள்ளிகளுக்கு மழையால் விடுமுறை: ஆட்சியர்


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நேற்றும் கன மழை பெய்தது.

கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ.4ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது என ஆட்சியர் அறிவித்து உள்ளார்.  பள்ளி மாணவர்களின் சிரமம் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Wednesday 1 November 2017

மாநில செய்திகள் தென் கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்

மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் கடலோர ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழையும், சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நேற்றும் கன மழை பெய்து வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார்வளைகுடாவையொட்டிய பகுதியில் நிலைகொண்டு உள்ளது.
இதன் காரணமாக 31–ந்தேதி காலை 8.30மணி நிலவரப்படி அதிகபட்சமாக சீர்காழியில் 31 செ.மீ.மழையும், பரங்கிப்பேட்டையில் 26 செ.மீ.மழையும் பதிவாகி உள்ளது.
இன்று (புதன்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும்.
தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிக கன மழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும். உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.,
எப்படியும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை உண்டு.
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.