Tuesday 28 November 2017

மாணவரின் தலை முடியை வெட்டியதாக புகார்: அரசு பள்ளி ஆசிரியை கைது

திருவாரூர் அருகே குளிக்கரையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சுந்தர் மகன் சுரேந்தர் (வயது 13) என்பவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சுரேந்தர் தலையில் அதிகமாக முடி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் 8-ம் வகுப்பு ஆசிரியை விஜயா என்பவர், ஏன் முடி அதிகமாக வைத்திருக்கிறாய் என சுரேந்தரை கேட்டு கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் ஆசிரியை விஜயா கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேந்தரின் தலை முடியை, சக மாணவர் மூலம் பிளேடால் வெட்டினார். இதற்கு மாணவரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முடி வெட்டப்பட்ட மாணவனின் புகைப்படம் சமூக வலைதலங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த பலரும், மாணவரின் தலைமுடியை வெட்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன் தலைமையில் விசாரணை குழு அமைத்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் மாணவனின் தலைமுடியை வெட்டியது ஆசிரியை விஜயா தான் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆசிரியை விஜயா உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனிடையில் மாணவனின் தந்தை சுந்தர், கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், குழந்தைகள் நலச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை விஜயாவை கைது செய்தனர். மாணவரின் தலைமுடியை வெட்டிய ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

No comments:

Post a Comment