Saturday, 25 November 2017

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ-மின்சார ரெயில்களில் பயணம்


சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் மூலம் நகரில் போக்குவரத்தை மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் சென்னை சர்வதேச மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது. கருத்தரங்கில் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கலந்துகொண்டு பேசியதாவது:-

சென்னை நகரில் ‘ஷேர் ஆட்டோ’வில் பயணம் செய்வதற்கும், மெட்ரோ ரெயிலில் பயணிப்பதற்கும் ஒரே கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால் மெட்ரோ ரெயிலில் ஏ.சி.வசதி உள்ளது. சுற்றுச்சுழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக பயணிக்க முடிகிறது.

சென்னையில் 2015-ம் ஆண்டு வெள்ளம் பாதித்தபோதும் மெட்ரோ ரெயில் எந்த தடையுமின்றி இயங்கியது. அப்போது மின்தடை ஏற்பட்டிருந்தாலும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டது.

அண்ணாசாலையில், சைதாப்பேட்டை முதல் டி.எம்.எஸ். வரையிலான சுரங்கம் அமைக்கும் பணி மார்ச் மாதம் நிறைவடையும். மெட்ரோ ரெயில் 2-வது கட்ட திட்டப்பணிகள் மாதவரம்-சிறுசேரி, ஆயிரம்விளக்கு-கோயம்பேடு, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 107.55 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டது.

வருகிற நிதி ஆண்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். அதன்பின்னர் கடன் வாங்குதல், டெண்டர் விடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். 2025-ம் ஆண்டுக்குள் இந்த திட்டப்பணிகள் முடிவடையும் என்று நம்புகிறோம்.

சென்டிரல் ரெயில் நிலையம், வால்டாக்ஸ் சாலை, பல்லவன் பாலம் உள்ளிட்ட இடங்களில் தினசரி 6 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதசாரிகள் கடக்கிறார்கள். எனவே அவர்கள் சாலையை கடப்பதற்கு வசதியாக ரிப்பன் மாளிகையில் இருந்து ஒருங்கிணைந்த நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளது.

சென்டிரல் ரெயில் நிலையத்தில் வணிக வளாகத்துடன் கூடிய மிகப்பெரிய சுரங்கப்பாதை வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகர பஸ்கள், மின்சார ரெயில்கள், மெட்ரோ ரெயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிப்பதற்கு ஏற்றவகையில் தொழில்நுட்ப பணிகள் நடந்துவருகிறது. வெகுவிரைவில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது.

வடசென்னை பகுதியில் 2 ஆண்டுகளில் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்துவிடும். அதன்பின்னர் வடசென்னையை நோக்கி மக்கள் நகர தொடங்குவார்கள்.

No comments:

Post a Comment