காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் காயிதே மில்லத் பெயரில் ஆண்டுதோறும் புதிய விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் எம்.ஜி.தாவூத் மியாகான் நேற்று வெளியிட்ட அறிக்கை: சிறுபான்மை சமூகத்தின் தலைவராக அங்கீகரிக்கப்பட்டாலும் அரசியலில் அனைத்து மக்களின் ஆதரவையும் காயிதே மில்லத் பெற்றிருந்தார். 1946 முதல் 52 வரை சென்னை ராஜதானியின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும், 3 முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்வு பெற்று சிறப்பான பணியாற்றியுள்ளார். அவரது அர்ப்பணிப்பை வருங்கால தலைமுறையினர் அறிந்துகொள்ளவும் அங்கீகரிக்கவும் காயிதே மில்லத் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்க காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை தீர்மானித்துள்ளது.

அரசியல் மற்றும் பொதுவாழ்வில் உயர்ந்த ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் கோட்பாடுகளுக்கான விருதாக இது வழங்கப்படும். கடந்த 1974-ம் ஆண்டு தொடங்கப்பட்ட காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் 40-ம் ஆண்டு நிறைவு விழா, ஜனவரியில் நடத்தப்படுகிறது. அந்த விழாவில் விருது வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.