பான் கி-மூன்
தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து போரிட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சிறுபான்மையினர், அகதிகள், அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீவிரவாதத்துக்கு எதிராக தீரமாக போரிட வேண்டும்.
வரும் 2015-ம் ஆண்டு செயல் ஆண்டாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் வாழும் மக்கள் செழுமை அடைய வேண்டும், ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற வேண்டும். அதை இலக்காக கொண்டு ஐ.நா. சபை செயல் படும்.
பாகிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை சகித்துக் கொள்ளவே முடியாது. ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா உட்பட பல்வேறு பகுதிகளில் தீவிரவாத பிரச்சினை தலைதூக்கியுள்ளது. அதனை அடியோடு வேரறுக்க வேண்டும்.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ. புலனாய்வு பிரிவினர் நடத்திய சோதனை முறைகள் மனித உரிமைகளை மீறும் வகையில் உள்ளன. இதுபோன்ற தவறுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் மனித உரிமைக்கு முன்னுரிமை, முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment