Thursday, 18 December 2014

நேரடி காஸ் மானியம் பெற புதிய படிவம்: 21-ம் தேதி சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு




நேரடி காஸ் மானிய திட்டத்தில் இணைய புதிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த 4 படிவங்களுக்கு பதிலாக தற்போது ஒரே படிவத்தை பூர்த்தி செய்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 21-ம் தேதி சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் செயல் இயக்குநர் யு.வி.மன்னுர், பிபிசிஎல் நிறுவனத்தைச் சேர்ந்த சோமசேகர், எச்பிசிஎல் நிறுவனத்தைச் சேர்ந்த வினோத்குமார் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
நேரடி காஸ் மானியம் பெற ஏற்கெனவே இருந்த முறைப்படி ஆதார் அட்டை இருப்பவர்கள் படிவம் 1, 2-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். ஆதார் அட்டை இல்லாதவர்கள் படிவம் 3, 4-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால், தற்போது அனைத்து வாடிக்கையாளர்களும் ஒரே படிவத்தை (படிவம் எண். V 1.0) பூர்த்தி செய்யலாம். அந்தப் படிவத்தில் ஆதார் அட்டை உள்ளவர்கள் பகுதி ஏ மற்றும் பி-யும் ஆதார் இல்லாதவர்கள் பகுதி ஏ மற்றும் சி-யும் பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்தப் படிவங்கள் காஸ் ஏஜென்சியிடம் கிடைக்கும். ஆன்லைனில் www.mylpg.in என்ற இணையதளத்திலும் பெற்றுக்கொள்ளலாம். பழைய படிவங்களும் ஏற்றுக் கொள்ளப்படும். புதிய படிவத்தை பூர்த்தி செய்து பெறுவது குறித்து காஸ் ஏஜென்சிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேரடி மானிய திட்டத்தில் சேர மார்ச் வரை அவகாசம் தரப்பட்டிருக்கிறது. அதுவரை மானிய விலையிலேயே காஸ் சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம். ஏப்ரல் முதல் ஜூன் வரை இத்திட்டத்தில் சேருபவர்கள், சந்தை விலையில் காஸ் வாங்கினாலும், ஜூன் வரையிலான மானியத் தொகையை திட்டத்தில் இணைந்தபிறகு பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதத்துக்குப் பிறகு திட்டத்தில் சேருபவர்களுக்கு, அவர்கள் எப்போது திட்டத்தில் சேருகிறார்களோ அப்போதிருந்து மட்டுமே மானியம் வழங்கப்படும்.
இதுகுறித்து யு.வி.மன்னுர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் 85 சதவீதம் பேருக்கு காஸ் இணைப்பு உள்ளது. ஆனால், 30 சதவீதத்துக்கும் குறைவானவர்கள்தான் இதுவரை நேரடி காஸ் மானிய திட்டத்தில் சேர்ந்துள்ளனர். ஜனவரிக்குள் பெருவாரியானவர்களுக்கு நேரடி மானிய கிடைக்க வேண்டும் என்ற மிகப் பெரிய சவால் எங்கள் முன் இருக்கிறது’’ என்றார்.
சிறப்பு முகாம்கள்
சென்னையில் இதுவரை 13.09 சதவீதம் பேர் மட்டுமே இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். எனவே, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் கொளத்தூர், அண்ணா நகர், போரூர், பல்லாவரம், மீஞ்சூர், காஞ்சிபுரம், பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் 2 இடங்களில் 21-ம் தேதி காலை 10 முதல் மாலை 3 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 20-ம் தேதி சிறப்பு முகாம் நடக்கும். மதுரை, திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

No comments:

Post a Comment