மளிகைக் கடைகளில் 5 கிலோ சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) உருளை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை, குறிப்பிட்ட சில நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சமையல் எரிவாயு முகமை மையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மட்டுமே 5 கிலோ சமையல் எரிவாயு உருளை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது அந்தத் திட்டத்தை அனைத்துப் பெருநகரங்களிலும் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள், பெரிய மளிகைக் கடைகளுக்கும் மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது.
மேலும், 5 கிலோ எரிவாயு உருளைகள் சந்தை விலையில் மட்டுமே இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது மானிய விலையிலும் 5 கிலோ எரிவாயு உருளைகள் விற்பனை செய்யப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. அவை, எரிவாயு முகவர்களிடம் மட்டுமே கிடைக்கும். அதன்படி, ஆண்டுக்கு 34 உருளைகள், ரூ.155 வீதம் (தில்லியில்) மானிய விலையில் ஒரு குடும்பத்துக்கு விநியோகிக்கப்படும்.
வழக்கமான நடைமுறைகளைப் போல 5 கிலோ சமையல் எரிவாயு உருளைகளை முன்பதிவு செய்து மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.
இதைத் தவிர பெட்ரோல் விற்பனை நிலையங்கள், குறிப்பிட்ட மளிகைக் கடைகளில் சந்தை விலையில் (ரூ.351) எரிவாயு உருளை விற்பனை செய்யப்படும். நல்லாட்சி தினத்தை முன்னிட்டு தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் இந்தத் திட்டத்தை பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
இது புதிய திட்டம் அல்ல. அதேவேளையில், நல்லாட்சி தினத்தையொட்டி, இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதன் அடிப்படையில் மளிகைக் கடைகளிலும் எரிவாயு உருளை விற்பதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு நாடு முழுவதும், 610 பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எரிவாயு உருளை விற்கப்பட்டு வந்தது. தற்போது அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிராமப் பகுதிகளில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு சலுகை விலையில் எரிவாயு இணைப்பு தரும் திட்டம் அமலில் உள்ளது. தற்போது அந்தச் சேவை நகர்ப்புறத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment