Sunday 14 December 2014

ஆட்டோ மீட்டரில் முத்திரை பெற அழைப்பு



திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் ஆட்டோக்களில் பொருத்தியுள்ள மீட்டரில் முத்திரை பெறலாம் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து ஆட்டோக்களுக்கும் அரசு உத்தரவின்படி திருத்திய கட்டணம் கடந்த அக்டோபர் 17-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச கட்டணம் 1.8 கிலோ மீட்டர் வரை ரூ. 25, ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கும் ரூ. 12 மட்டும் வசூலிக்க வேண்டும். வாகனக் காத்திருப்பு கட்டணமாக ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ரூ. 3.50 மட்டும் வசூலிக்க வேண்டும். இரவு நேர சேவையாக இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை உரிய கட்டணத்துடன் ரு. 50 கூடுதலாக சேர்த்து வசூலிக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ உரிமையாளர்கள் தற்போதைய மீட்டர் காண்பிக்கும் கட்டணத்துக்கு உரிய திருத்தி அமைக்கப்பட்ட ஆட்டோ கட்டண மீட்டர் கார்டை திருவாரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதி அலுவலகங்களில் வேலைநேரத்தில் நடப்பு அசல் ஆவணங்களுடன் சென்று பெற்று கொள்ளலாம்.
மேலும், ஆட்டோவில் உள்ள மீட்டரை தற்போதைய கட்டண விகிதத்துக்கு திருத்தி பெற்று அதற்கு திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மீட்டரில் உரிய முத்திரையை பெற்று கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment