Monday 22 December 2014

குடும்ப அட்டையில் உள்தாள் இணைக்க காலக்கெடு இல்லை: அமைச்சர் தகவல்




குடும்ப அட்டையில் உள்தாளை இணைத்து பெறுவதற்கு காலக்கெடு ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
குடும்ப அட்டைகளில் உள்தாள்கள் ஒட்டும் பணி முன்னேற்றம் மற்றும் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களின் மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர், "குடும்ப அட்டையில் உள்தாளை இணைத்து பெறுவதற்கு காலக்கெடு ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை. மீதமுள்ள குடும்ப அட்டைகளில் உள்தாள்கள் ஒட்டும் பணியினை துரிதப்படுத்தி, பொது மக்களுக்கு எவ்வித சிரமமுமின்றி, இதனை விரைந்து முடிக்க வேண்டுமென்று அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ளை நிறமுடைய எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகவரி ஆதாரத்திற்காக வழங்கப்படும் மஞ்சள் நிறமுடைய தக்கல் குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுடைய "N" குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்ள www.consumer.tn.gov.in என்ற இணைய தளத்தில் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இவ்வசதி 31.3.2015 வரை செயல்பாட்டில் இருக்கும். இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணையதளத்தில் குடும்ப அட்டையை புதுப்பித்துக் கொள்ள இயலாத வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடைய எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்களில் அவர்களுடைய குடும்ப அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.
குடும்ப அட்டை கோரி மனு செய்தவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லையெனில்
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலக இ-மெயில் முகவரிக்கு கோரிக்கை அனுப்பலாம். அலுவலர்களின் செல்லிடை பேசி மற்றும் இ-மெயில் முகவரிகள் இத்துறையின் இணைய தளத்தில் (www.consumer.tn.gov.in) அளிக்கப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டம் மற்றும் குடும்ப அட்டைத்தாரர்களின் குறைபாடுகளைக் களைவதற்கு, "குறைதீர் முகாம்கள்" சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், மாதந்தோறும் 2-ம் சனிக்கிழமையன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது.
இம்முகாம்களில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்படும் குடும்ப அட்டை கோரும் மனுக்கள், அட்டைகளின் நகல் கோருதல், குடும்ப அட்டைகளில் உறுப்பினர்களின் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், எரிவாயு இணைப்புகள் மற்றும் இவை தொடர்பான திருத்தங்கள் குறித்த மனுக்கள் பிற்பகல் வரை பெறப்பட்டு, உரிய பரிசீலனைக்குப் பிறகு அன்று மாலைக்குள் அவற்றுக்கு தீர்வு காணப்படுகிறது.
இக்குறைதீர் முகாம்களில் மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். ஜூன் 2011 முதல் 13.12.2014 வரையில் இம்முகாம்களில் 3 இலட்சத்து 7 ஆயிரத்து 70 மனுதாரர்கள் பயனடைந்துள்ளனர்" என அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment