Tuesday, 16 December 2014

கல்வி உதவித்தொகை கிடைக்காமல் 6,695 மாணவர்கள் அவதி: 8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்றும் பயனில்லை




எட்டாம் வகுப்பு திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்றும் கல்வி உதவித்தொகை கிடைக்காமல் 6,695 மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
திறனாய்வுத்தேர்வு
கல்வியில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் கல்வி உதவி திட்டத்தின்கீழ் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்துக்கு உட்பட்ட மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத முடியும்.
அதில் தேர்ச்சி பெறும் தமிழகத்தைச் சேர்ந்த 6,695 மாணவ-மாணவிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 முடிக்கும் வரை மாதம்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்கும். 2013-ம் ஆண்டுக்கான 8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வு தாமதமாக கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. ஏறத்தாழ 57 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர். அவர்களின் கல்வி உதவித் தொகைக்காக 6,695 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
உதவித்தொகை வழங்குவதில் தாமதம்
கடந்த ஆண்டுக்கான தேர்வு தாமதமாக நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் இன்னும் மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், அடுத்த தேர்வு (2014-ம் ஆண்டுக்கான தேர்வு) வருகிற 27-ம் தேதி நடத்தப்பட உள்ளது என்பதுதான். இந்த திறனாய்வுத் தேர்வை மத்திய அரசு சார்பில் தமிழக தேர்வுத்துறைதான் நடத்தி வருகிறது.
மத்திய அரசுதான் காரணம்
திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காதது குறித்து அரசு தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த உதவித் தொகையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்தான் அளிக்கிறது. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலை பள்ளிக் கல்வித்துறையிடம் ஒப்படைத்துவிட்டோம். மத்திய அரசிடமிருந்து இன்னும் பணம் வரவில்லை. உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஆகிவிட்டதால் ஓராண்டுக்குரிய மொத்த உதவித் தொகையையும் ஒரேநேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படவும் வாய்ப்பிருக்கிறது” என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment