வீட்டு மாடித் தோட்டங்களிலும் பால்கனிகளிலும் செடி வளர்ப்பது வீட்டிற்கு அழகை மட்டுமல்ல வீட்டில் வசிப்பவர்களுக்கு நல் ஆரோக்கியத்தை வழங்கும். நகர நெருக்கடிகளுக்குள் தோட்டம் அமைத்துச் செடி வளார்ப்பது சாத்தியமான காரியமல்ல. மேலும் செடி வளர்ப்பதற்குச் சிலர் தயங்குவதுண்டு. காரணம் என்னவென்றால் செடி வளர்ப்பதால் சிறிய சிறிய பூச்சிகள், மரவட்டை, கொசுக்கள் வரக்கூடும் என நினைப்பார்கள். ஆனால் உண்மையிலேயே கொசுக்களை விரட்டும் இயற்கை வேதிப் பொருள்கள் நம் பாரம்பரியச் செடிகளில் நிறைந்துள்ளன.
உதாரணமாக நொச்சி, வேம்பு போன்ற செடிகளில் இந்தப் பண்புகள் மிகுந்துள்ளன. சாமந்தி, நொச்சி, வேம்பு போன்ற தாவரங்களுக்கு இந்தக் குணம் உண்டு. இவை அல்லாது ரோஸ்மேரி, சிட்ரோநெல்லா, ஏஜ்ரேடம் போன்ற செடிகளிலும் இந்தக் குணம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆக பயப்படாமல் இந்தச் செடிகளை வளர்ப்பதால் நமக்கு இருவிதமான பயன்கள் கிடைக்கும். வீட்டிற்கு அழகும் கிடைக்கும்.
அதேசமயம் கொசுக்களை விரட்டவும் முடியும். கொசுக்களை விரட்ட நாம் பலவிதமான வேதிப் பொருள்களை நாடுவது பயனளிக்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஆரோக்கியத்திற்குக் கேடாகும்.
சென்னை மாநகராட்சியே சென்ற ஆண்டு கொசுக்களை விரட்ட நொச்சிச் செடிகளைத் தரும் திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தை அரசே முன்னெடுத்தது ஓர் முன்னுதாரணம் ஆகும். இனி நாமே முன்வந்து இந்தச் செடிகளை நட்டு ஆரோக்கியம் பேணுவோம்.
No comments:
Post a Comment