நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில், இணையதளங்களை முடக்குவது, ஆபாசக் கருத்துக்களை வெளியிடுவது, கடன் அட்டை, வங்கி தொடர்பான மோசடிகள் போன்ற கணினி வழிக் குற்றங்கள், ஆண்டுக்கு 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அவற்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2012, 2013 -ஆம் ஆண்டுகளில் தேசிய அளவில் நிகழ்ந்த கணினி வழிக் குற்றங்களின் எண்ணிக்கை முறையே 22,060, 71,780 ஆகும். ஆனால், நிகழாண்டில் ஜூன் மாதம் வரை மட்டுமே நிகழ்ந்துள்ள இந்த வகைக் குற்றங்களின் எண்ணிக்கை 62,189 ஆகும். உலகெங்கும் பரவியுள்ள இணையதள மோசடிக் கும்பல்களால், கடந்த ஆண்டு 28,481 இந்திய இணையதளங்கள் முடக்கப்பட்டன. கடந்த 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை முறையே 21,699, 27,605 ஆக இருந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
எளிதாக நிகழ்த்தப்படும் இந்தக் குற்றங்களைத் தடுப்பது, வேகமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் நம் நாட்டுக்கு அவசியமாகும். ஆனால், உலகின் எந்த மூலையில் இருந்தும் மிகவும் நுட்பமாக நிகழ்த்தப்படும் இந்தக் குற்றங்களுக்கு காரணமாக உள்ளவர்களைக் கண்டறிவது கடினமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தேசிய இணையதள ஆவணப் பிரிவின் புள்ளிவிவரப்படி இந்தியாவில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ், கடந்த 2011, 2012, 2013-ஆம் ஆண்டுகளில் முறையே, 1,791; 2,876; 4,356 வழக்குகளும், கணினி வழிக் குற்றங்கள் தொடர்பான இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின்கீழ் முறையே 422; 601; 1,337 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
கணினி வழிக் குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் அமைத்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment