Sunday 28 December 2014

இந்தோனேசியாவில் 161 பேருடன் ஏர்ஏசியா விமானம் மாயம்




கோப்புப் படம்: ஏ.பி.
இந்தோனேசியாவில் இருந்து 155 பயணிகள் உட்பட 161 பேருடன் சிங்கப்பூர் புறப்பட்ட 'ஏர்ஏசியா' விமானம் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் தொடர்பான விவரங்களை காலை 7.42 மணியளவிலிருந்து விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளால் சேகரிக்க முடியவில்லை.
இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்பட்ட விமானம் பயணம் தொடங்கிய 42 நிமிடங்களில் சரியாக காலை 7.42 மணிக்கு கட்டுப்பாட்டு தொடர்பிலிருந்து திடீரென மாயமானதாக சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
சுரபயா விமான நிலைய மேலாளர் திரிகோரா ரஹார்ஜியோ, "மாயமான A320-200 என்ற பயணிகள் விமானத்தில் சிங்கப்பூர், பிரிட்டன், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6 சிறுவர்கள், ஒரு குழந்தை உட்பட 155 பயணிகள் மற்றும் 6 பேர் கொண்ட விமானப் பணிக்குழு இருந்ததனர். விமானத்தை கட்டுப்பாட்டு அறை கவனத்துக்கு கொண்டு வருவதற்கான தேடல் பணி தொடங்கியுள்ளது" ஏ.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட தகவலில், அந்த விமானம் ஜாவா தீவுகள் மற்றும் கலிமந்தன் அருகே ஜாவா கடற் பகுதியில் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான சிக்னல், கட்டுப்பாட்டு அமைப்புக்கு வந்தடையாததைத் தொடர்ந்து, அடுத்த அரை மணி நேரத்தில் சிங்கப்பூர் விமான போக்குவரத்து கழகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தேடல் நடவடிக்கை குறித்து மேலாளர் திரிகோரா மேலும் கூறும்போது, "இந்தோனேசிய அதிகாரிகள் தேடலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நாட்டின் கடற்படை அதிகாரிகளும் விமானப் படை அதிகாரிகளும் சி-130 ரக போர் விமானங்கள் மூலம் மாயமான விமானத்தை தேடி வருகின்றனர்.
தற்போதைய நிலை வரை விமானம் குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் உள்ளது கவலை அளிப்பதாக இருக்கிறது. தேடும் பணிக்கு ஏர்ஏசியா அதிகாரிகளும் ஒத்துழைத்து வருகின்றனர். தகவல்கள் கிடைக்கும் நிலையில், அதனை நாங்கள் உடனுக்குடன் ஊடகங்கள் வழியாகவும், பயணிகளின் குடும்பத்தினருக்கும் தெரிவிப்போம்" என்றார் அவர்.
ஏர்ஏசியா விமான நிறுவனம், பயணிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தகவல் தொடர்பு வசதிக்காக+622129850801 என்ற உதவி மைய எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment