மாநிலங்களவை | கோப்புப் படம்: பிடிஐ
ஆக்ராவில் உள்ள முஸ்லிம்களை கட்டாயப்படுத்தி இந்து மதத்துக்கு மாற்றம் மாற்றம் செய்யப்படுவதாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
அதேவேளையில், இந்த விவகாரம் குறிப்பிட்ட மாநிலத்தின் சட்டம் - ஒழுங்குக்கு உட்பட்டது என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, ஆக்ராவில் உள்ள முஸ்லிம் மக்களை வலுக்கட்டாயமாக இந்து மதத்துக்கு மாற்றுவதற்கு, அங்குள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளையான பஜ்ரங் தளம் செயலாற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் பேசும்போது, "மதமாற்றம் செய்துகொள்ள ஏழை மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். இதேபோல அலிகாரிலும் கிருஸ்துவர்களை இந்து மதத்துக்கு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டில் மிகப் பெரிய மத மோதல்களும் கலவரங்கள் ஏற்படும். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ளது. இதற்குத் தக்க பதிலை பிரதமர் அளிக்க வேண்டும்" என்றார் மாயாவதி.
இந்த விவகாரத்தில் தலையிட்டு, பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் ஷர்மாவும் வலியுறுத்தினார்.
மாயாவதியின் கருத்தை காங்கிரஸ், திரிணமூல், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளும் ஆதரித்து, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவையில் எழுந்து நின்று கோஷமிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட அவையின் துணைத் தலைவர் பி.ஜே.குரியன், இதுதொடர்பாக இணை அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி பதில் அளிக்க அனுமதித்தார்.
தொடர்ந்து பேசிய நக்வி, "இந்த விவகாரம் குறித்து உத்தரப் பிரதேச மாநில அரசு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த பிரச்சினை மாநில சட்டம் - ஒழுங்குக்கு உட்பட்டது. உரிய நடவடிக்கையை மாநில அரசுதான் எடுக்க வேண்டும். இதில் மத்திய அரசுக்கு பங்கு இல்லை" என்றார் அவர்.
No comments:
Post a Comment