Saturday, 13 December 2014

போதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்க என்ன நடவடிக்கை?

மத்திய, மாநில அரசுகளுக்கு கேள்வி; உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்கு பதிவு

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடையாறு எல்.பி. சாலையில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில், மது அருந்திவிட்டு பைக்கில் வந்த 2 பேர், அரசு பேருந்து மோதி பலியாயினர். நிவாரண உதவியில் திருப்தியடையாத அவர்களது குடும்பத்தினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் கடந்த 3-ம் தேதி விசாரித்தார். மதுவால் பலி எண்ணிக்கை அதிகரிப்பதை புள்ளி விவரங்களுடன் சுட்டிக் காட்டிய அவர், ‘பூரண மதுவிலக்கு கொண்டுவருவது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஏன் பரிசீலிக்கக் கூடாது? அரசே மதுக்கடைகளை திறக்கலாமா? விபத்துகளை தடுக்க பார்களையாவது மூடலாமே. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை ஏன் கைது செய்யக்கூடாது?’ என்று பல கேள்விகளை எழுப்பினார்.
இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில், மத்திய அரசு, தமிழக வருவாய்த் துறை செயலாளர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோரை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்துள்ளதாகவும், அனைத்து கேள்விகளுக்கும் 11-ம் தேதிக்குள் பதில் அளிக்கவேண்டும் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்துள்ளது. இதுகுறித்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் நேற்று பிறப்பித்த உத்தரவு:
குடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற பூரண மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஏன் பரிசீலிக்கக்கூடாது என்று கேட்டு உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருபாகரன் கடந்த 3-ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மதுவிலக்கை அமல்படுத்துவதா, வேண்டாமா என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது. அதே நேரம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து, உயிரிழப்பு ஏற்படுவதுதான் இங்குள்ள உண்மையான பிரச்சினை. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.) சில விதிமுறைகள், கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறைக்கும் அதுபோன்ற கட்டுப்பாடுகள் தேவை.
மேலும், இந்த பொதுநல வழக்கில் மேலும் பல எதிர்மனுதாரர்களை சேர்க்கவேண்டி யுள்ளது. மத்திய போக்குவரத்து அமைச்சக செயலர், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக காவல்துறைத் தலைவர், மாநில நெடுஞ்சாலைத் துறை செயலர், மாநில போக்குவரத்துத் துறை செயலர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர்.
மத்திய அரசுக்காக உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன், மாநில அரசுக்காக அரசு வழக்கறிஞர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, டாஸ்மாக்குக்காக அரசு வழக்கறிஞர் எஸ்.முத்துராஜ் ஆகியோர் நோட்டீஸ் பெற்றுக் கொண்டனர்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன என்பது பற்றியும், இப்பிரச்சினை தொடர்பாக நீதிமன்றம் அவ்வப்போது பிறப்பித்த உத்தரவுகள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கின்றன என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2015 பிப்ரவரி 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். பலியான 2 பேருக்கான நிவாரணம் குறித்த மேல்முறையீட்டு வழக்கை தனி நீதிபதி கிருபாகரன் விசாரிப்பார். தாமாக முன்வந்து எடுக்கப்பட்டுள்ள பொதுநல வழக்கை முதல் டிவிஷன் பெஞ்ச் விசாரிக்கும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

No comments:

Post a Comment