Sunday, 7 December 2014

கொடிநாள் நிதிக்கு தமிழக மக்கள் தாராளமாக நிதி வழங்கிட வேண்டும்: முதல்வர்




கொடிநாள் நிதிக்கு தமிழக மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்கி உதவிட வேண்டுமென முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பரந்து விரிந்த நம் பாரதத் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்திடும் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.
நமது இந்திய தேசத்தைக் காத்திடும் தியாக உணர்வு மிக்க பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காப்பது நம் அனைவரின் சமுதாயக் கடமையாகும். இந்தச் சிறப்பான சமுதாயக் கடமையினை நிறைவேற்றிடும் வகையில், கொடி விற்பனை மற்றும் நன்கொடை மூலம் திரட்டப்படும் நிதி, படை வீரர் குடும்பத்தினரின் நல்வாழ்விற்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
முப்படைப் பணியில் உயிர்நீத்தோரின் வாரிசுதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட கருணைத் தொகை; கருணை அடிப்படையில் பணி நியமனம்; தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம் மூலம் பணிபுரியும் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட தொகுப்பூதியம்; முன்னாள் படைவீரர் மகள் திருமணத்திற்கு உயர்த்தப்பட்ட திருமண மானியம்; வீர தீரச் செயல்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்தமைக்கான விருது மற்றும் பதக்கம் பெறும் தமிழகத்தைச் சேர்ந்த படைவீரர்களுக்கு உயர்த்தப்பட்ட பணப் பயன்கள் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
முப்படைவீரர்களின் நலன் காத்திடுவதில் முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு அரசால் திரட்டப்படும் கொடிநாள் நிதிக்கு தமிழக மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்கி உதவிட வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment