Wednesday, 17 December 2014

கர்நாடக அரசு காவிரியில் அணை கட்ட எதிர்ப்பு: டெல்லியில் தமிழக விவசாயிகள் உண்ணாவிரதம்


காவிரியில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி டெல்லியில் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள். படம்: ஷிவ்குமார் புஷ்பாகர்.  

காவிரியில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி டெல்லியில் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள். 
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணைகட்டும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினர் டெல்லியில் நேற்று தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசால் நியமிக்கப்படவேண்டும். இந்த வாரியத்துக்கு நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த முழு அதிகாரம் வழங்கி காவிரி மேலாண்மை வாரியத்துக்கு உதவ ஒழுங்குமுறை குழு அமைக்கப்படவேண்டும்’ எனக் கோரி தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இதில், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், சிவகங்கை, திருச்சி உட்பட 12 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு டெல்லியில் நடுங்கும் குளிரில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி உள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் போரட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, “தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியில் 40% காவிரி டெல்டாவில் விளைகிறது. காவிரி ஆற்றுப் படுகையில் தமிழகத்தின் 12 மாவட்டங்கள் உள்ளன. தலைநகர் சென்னை உட்பட 20 மாவட்டங்கள் குடிநீர் தேவைக்கு காவிரி ஆற்றை நம்பியுள்ளன. எனவே, 48 டிஎம்சி நீரைத் தேக்கும் விதத்தில் கர்நாடகம் புதிய அணை கட்டினால் தமிழகத்தின் உணவு உற்பத்தியும், குடிநீர்த் தேவையும் பாதிக்கப்படும்” என்றார்.
பிரதமருக்கு கடிதம்
இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் உண்ணாவிரதத்தை தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், ‘ஆற்றுப் படுகை பாசன மாநிலங்களின் பாசனம், பொருளாதாரம் மற்றும் சமூகத் தேவைகளைப் பாதிக்கும்விதத்தில், ஏதாவது ஒரு பாசன மாநிலம் தண்ணீரைத் திருப்பிவிடக்கூடாது என்று காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் (பக்கம் 4- பாகம் 5) கூறப்பட்டுள்ளது.

வாஜ்பாய் அமைச்சரவையில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தேசிய நீர் மின்சார கழகத்தின் கீழ் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் தலா இரண்டு நீர் மின் உற்பத்தி திட்டங்களுக்கான திட்டத்தை உருவாக்கியிருந்தார். தற்போது கர்நாடகா ‘நீர் மின் திட்டம்’ என்ற போர்வையில் 48 டிஎம்சி நீரை குடிநீர்த் தேவைக்காக திருப்பிவிட மத்திய அரசின் அனுமதியைப் பெறத் திட்டமிட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பேச வலியுறுத்தல்
தற்போது டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மூன்று நாட்களுக்கு மட்டும் அனுமதி பெற்று இந்த உண்ணாவிரதம் தொடங்கப்பட்டுள்ளது. எனினும், போராட்டக்காரர்களை பிரதமர் மோடி அழைத்து பேசும்வரை உண்ணாவிரதம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர்கள் நெல் ஜெயராமன், டி.பி.கே.ராஜேந்திரன், எஸ்.ஜெயக்குமார், பி.சுரேஷ், எம்.தனசேகரன், வடூவூர் கார்த்திகேயன், பி.முகேஷ், எம்.ஜெயமணி, கணேசமூர்த்தி உட்பட 200 பேர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் வந்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்றார்.

No comments:

Post a Comment