கோப்புப் படம்
சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தை பெறுவதில் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க டிச.31ம் தேதி இறுதி நாள் கிடையாது என்பதால் பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மத்திய அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் எரிவாயு விநியோகஸ்தர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கான விண்ணப்ப படிவங்களை பெறுவதற்காகவும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிப்பதற்காகவும் வங்கிகள் மற்றும் எரிவாயு விநியோக மையங்களில் நாள்தோறும் கூட்டம் அலைமோதுகிறது. சமையல் எரிவாயு மானியம் பெறுவது தொடர்பாக தெளிவான தகவல்களை தெரிவிக்காததே இதற்குக் காரணம் என்ற புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலரான தரணிதரன் என்பவர் கூறும்போது, “எரிவாயு மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை டிச.31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கட்டாயப் படுத்துகின்றனர். ஆனால், எண்ணெய் நிறுவனங்கள், 2015 மார்ச் 31ம் தேதி வரை இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், விண்ணப்பங்களை நகல் அல்லது பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில விநியோகஸ்தர்கள் தங்கள் அலுவலகத்திற்கு வந்துதான் விண்ணப்பங்களைப் பெற வேண்டும் என்றும் ஆதார் அட்டையை நகல் எடுத்து (ஜெராக்ஸ்) இணைப்பதற்கு பதிலாக, அதை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றனர். மேலும், படிவங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால், பாமர மக்கள் அதைப் பூர்த்தி செய்ய பெரும் சிரமப்படுகின்றனர்’’ என்றார்.
இப்பிரச்சினை குறித்து, திருவல்லிக்கேணியில் உள்ள பாரத் எரிவாயு விநியோகஸ்தர் ஒருவர் கூறும்போது, “எரிவாயு மானியம் பெறுவதற்கு அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் உள்ளது. ஆனால், எங்களுக்கு தினசரி வேலையை பார்ப்பதற்கே நேரம் போதவில்லை. இந்நிலையில், எரிவாயு மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறும் பணியும் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. எனவே, விரைவாக இப்பணியை முடிப்பதற்காக நாங்கள் டிச.31ம் தேதிக்குள் படிவங்களை சமர்ப்பிக்கும்படி வாடிக்கையாளர்களிடம் கூறுகிறோம்” என்றார்.
வங்கிக் கணக்கு துவங்குவதில் குழப்பம்
இதனிடையே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு தொடங்கினால்தான் மானியம் கிடைக்கும் என்று கூறப்படுவதால் குறிப்பிட்ட சில வங்கிகளில் மட்டும் கூட்டம் அலைமோதுகிறது. இதுகுறித்து, திருவல்லிக்கேணியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் மேலாளர் கூறும்போது, “எரிவாயு மானியம் பெற வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் அவர்களின் ஆதார் அட்டை எண்ணை நாங்கள் பதிவு செய்து தருகிறோம். டிச.31ம் தேதிக்குள் அவற்றை பதிவு செய்ய வேண்டும் என எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. மேலும், பொதுமக்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் என்ற உடன் இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளுக்கு மட்டுமே வருகின்றனர்.
இந்த மானியம் பெற அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கணக்கு தொடங்கலாம். மேலும், இந்த மானியம் பெற பிரதமரின் ‛ஜன்தான்’ திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கவேண்டும் என்ற தவறான தகவலும் மக்கள் மத்தியில் பரவியுள்ளது. இதனால், சிலர் ஒரு சேமிப்புக் கணக்கு இருக்கும் நிலையில், மற்றொரு கணக்கை துவக்கித் தரும்படி கூறுகின்றனர். இது எங்கள் பணிச்சுமையை அதிகரித்துள்ளது’’ என்றார்.
அதிகாரிகள் விளக்கம்
இப்பிரச்சினைகள் குறித்து, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தை பெற நான்கு வகையான படிவங்கள் விநியோகிக்கப்படுகிறது. இவற்றைப் பூர்த்தி செய்து எரிவாயு விநியோகஸ்தர்களிடம் அளிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது. மேலும்,http://petroleum.nic.in/dbt/index.php என்ற இணையதளம் மூலமாகவும் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை வைத்துள்ளவர்கள் www.rasf.uiadai.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 1800-2333-555 என்ற கால் சென்டர் மற்றும் ஐவிஆர்எஸ் எஸ்எம்எஸ் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை இல்லாதவர்கள் www.MyLPG.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
2015, மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்தால் மானியம் கிடைக்கும். அப்படியும் தவறும்பட்சத்தில், ஏப்.1ம் தேதி முதல் ஜுன் 31ம் தேதி வரை இறுதி கெடு வழங்கப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு பிறகு விண்ணப்பிப்பவர்களுக்கு மானியத் தொகை கிடைக்காது. அவர்கள் சந்தை மதிப்பில்தான் எரிவாயுவை வாங்க வேண்டும். ஆதார் அட்டை இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்தால் போதும். மேலும், டிச.31க்குள் பதிவு செய்ய வேண்டும் என எவ்வித காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை.
No comments:
Post a Comment