Tuesday, 16 December 2014

ரேஷன் அட்டையில் உள்தாள் ஒட்ட சிரமமா?- வழிகாட்டுகிறார்கள் அதிகாரிகள்


கிழிந்த நிலைமையில் உள்ள பழைய ரேஷன் அட்டைகளில் 2015-ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2005-ம் ஆண்டில் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டன. கடந்த 9 ஆண்டுகளில் 4 முறை உள்தாள் ஒட்டப்பட்டு இதே ரேஷன் அட்டைகளைத்தான் நுகர்வோர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பலரது ரேஷன் அட்டைகள் கிழிந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
பழைய முறையில் ரேஷன் அட்டைகளை வழங்குவதற்கு பதிலாக நவீன பயோமெட்ரிக் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்று 2011-ம் ஆண்டில் அரசு அறிவித்தது. இதன் மூலம் போலி ரேஷன் அட்டைகளை தடுக்க முடியும் என்று அரசு கருதுகிறது. பயோமெட்ரிக் ரேஷன் அட்டை குறித்து உணவு பொருள் வழங்கல் துறை சார்பாக அரசுக்கு 5 அம்ச பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே
2015-ம் ஆண்டில் நுகர்வோர் களுக்கு நவீன பயோமெட்ரிக் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்டும் பணி மாநிலம் முழுவதும் நேற்று தொடங்கியது. மொத்தம் 23,355 முழுநேர ரேஷன் கடைகளில் இந்த பணி நடைபெற்று வருகிறது. 1.96 கோடி கார்டுகளுக்கு உள்தாள் ஒட்டப்படவுள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருப்பதால் பலரது ரேஷன் அட்டைகள் கிழிந்துள்ளன. இதனால் பலரால் உள்தாளை ஒட்டிக்கொள்ள முடியவில்லை.
இது குறித்து தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''பழைய ரேஷன் கார்டு மிகவும் கிழிந்து அத்தியாவசியமாக மாற்று ரேஷன் அட்டை தேவைப்பட்டால் நுகர்வோர்கள் தாங்கள் ஏற்கெனவே வைத்துள்ள கிழிந்த ரேஷன் அட்டையை சம்பந்தப்பட்ட கடையில் ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் மாதிரி ரேஷன் அட்டை வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலர்கள் யாராது மாதிரி ரேஷன் அட்டை வழங்க பணம் கேட்டால் உணவு பொருள் வழங்கல் துறையில் புகார் தெரிவிக்கலாம்“ என்றார்.

No comments:

Post a Comment