Wednesday 31 August 2016

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகத்தில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  நடத்தும் குரூப் 4 தேர்வில் இளநிலை உதவியாளர்,  வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர்,  தட்டச்சர், சுருக்கெழுத்தர்  என 5,451 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இத்தேர்வுக்கு இணையவழி மூலம் செப். 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நவ. 6-ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் செப். 2-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. பயிற்சியின் போது இலவசமாக பாடக் குறிப்புகள் முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்படும்.  மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகிறது.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேர்வுக்கு விண்ணப்பித்த நகலுடன் செப். 2-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.

Tuesday 30 August 2016

நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கலாம்: சட்டத் திருத்த மசோதா தாக்கல்

மாநகராட்சியைத் தொடர்ந்து, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்களையும் மன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரவையில் தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மன்றங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடத்தப்படுகின்றன. இதில், தலைவர்கள் நேரடியாகத் தேர்தல் முறையின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
சில சூழ்நிலைகளில், தலைவர், மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும், மன்ற உறுப்பினர்கள் தலைவரின் ஒத்துழைப்பையும் பெறுவதில்லை.
தலைவர், மன்ற உறுப்பினர் ஆகிய இருவரும் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதால், பொது மக்களுக்கு பணிகளைச் செய்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதிலும், மன்ற நடவடிக்கைகளில் கருத்தொற்றுமை ஏற்படுவதற்கும் தடைகளாக இருக்கின்றன.
இது, அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
மாநகராட்சி மன்றங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து மன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு இடையேயிருந்து ஒருவரை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுப்பதற்காக மன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தம் இயற்றப்பட்டது.
ஒரே சீரான தேர்தல் நடைமுறைகளுக்காக...: மாநிலத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒரே சீரான தேர்தல் நடைமுறைகளைக் கொண்டிருக்கும் வகையில், நகராட்சிகள், பேரூராட்சிகளின் தலைவரையும் மன்ற உறுப்பினர்களால் அவர்களுக்கு உள்ளேயிருந்து நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது என கூறப்பட்டிருந்தது.
குரல் வாக்கெடுப்பால் நிறைவேறும்: இந்த மசோதா பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (செப். 2) குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறும்.
இதன் வாயிலாக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்கள் மறைமுகத் தேர்தல் முறையில் மன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவர்.

Monday 29 August 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 29/08/2016

நமதூர் புதுமனை தெரு ஷெரீப் காலனி இனயத்துல்லாஹ்( டீக்கடை ) அவர்களின் சகோதரி மௌத் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


Sunday 28 August 2016

திருவாரூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்'

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 76 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக தமிழக உணவு, நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மன்னார்குடி அருகே பாமணியில் மத்திய அரசுக்கு சொந்தமான 10 சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. இதில்  50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு இருப்பு வைக்கலாம். இதை  தமிழக அரசு வாடகைக்கு எடுத்து அதில் பொது விநியோகத் திட்டத்திற்கான அரிசி மூட்டைகளை இருப்பு வைத்துள்ளது.
இந்த சேமிப்புக் கிடங்கை வெள்ளிக்கிழமை மாலை திடீர் ஆய்வு செய்த பின் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியது: விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மின்னணு நெல் கொள்முதல் திட்டத்தை தமிழக முதல்வர்  அறிவித்துள்ளார்.
கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து குறைகள், புகார்கள் பெறப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொள்முதலுக்கான தொகையினையும் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக தரமான நெல்  கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதை பின்பற்றாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பு கொள்முதல் பருவத்தில் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.70-ம், பொது ரக நெல்லுக்கு ரூ.50-ம் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் 434 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 5 லட்சத்து 18 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லுக்கு ரூ.31 கோடியே 45 லட்சம் ஊக்கத் தொகையாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நெல் அறுவடை காலங்களில் தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியருக்கும், முதுநிலை மண்டல மேலாளரும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றார் அமைச்சர்.
அமைச்சருடன் ஆய்வின்போது, தஞ்சை தொகுதி எம்பி கு.பரசுராமன், நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் கா.பாலச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் எல்.நிர்மல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Saturday 27 August 2016

அக்டோபர் மாதம் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்கு 1-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; 23-ந் தேதி வரை பெயர்களை சேர்க்கலாம்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது. தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளும், 125 நகராட்சிகளும், 529 பேரூராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளும் உள்ளன. இதுவரை மாநகராட்சி மேயர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். இனி தேர்ந்து எடுக்கப்படும் கவுன்சிலர்கள் ஓட்டுப் போட்டு, மாநகராட்சி மேயரை தேர்ந்து எடுக்கும் வகையில் சமீபத்தில் தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது.

ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் தலைமையில் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் பெ.சீத்தாராமன் தேசிய தகவல் மையத்துக்கு சென்று, இணையதளத்தில் வாக்குச்சாவடி மையங்கள், தெருக்களின் பெயர்கள் மற்றும் வார்டு வாரியாக விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணியை பார்வையிட்டார்.

அதன் பின்னர் பெ.சீத்தாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

1-ந் தேதி வாக்காளர் பட்டியல்

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், பெயர் நீக்கம், இரட்டை பதிவு நீக்கம் போன்ற பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்ததும் வருகிற 31-ந் தேதிக்குள் தேசிய தகவல் மையத்தில் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்படும். உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. அதன் பின்னர் 23-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக்கொள்ளலாம். அதன் பின்னர் இணைப்பு பட்டியல் வெளியிடப்படும். அதில் பெயர் இருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம்.

அடிப்படை வசதிகள்

உள்ளாட்சி தேர்தலில் ஒரு வாக்காளர் குறைந்தபட்சம் 4 வாக்குகள் பதிவு செய்ய உள்ளதால் பல வண்ண வாக்காளர் பதிவு சீட்டு பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் அதற்காக வாக்குப்பதிவு அதிகாரிகளும் தேவையான அளவில் பணி அமர்த்தப்பட உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு அன்று வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடியில் பந்தல் அமைக்கவும், மாற்றுத்திறனாளி, முதியோர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சக்கர நாற்காலிகள் வசதி செய்து கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் உள்ளாட்சி அலுவலர்கள் மட்டுமல்லாமல் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு பெ.சீத்தாராமன் கூறினார்.

திருப்பூர்

பின்னர் திருப்பூர் சென்ற அவர், அங்குள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் உள்ளதால், புதிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். தற்போது முதற்கட்டமாக கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர்கள் பட்டியலை அடிப்படையாக கொண்டு வார்டு வாரியாக வாக்காளர்களை பிரிக்கும் பணி நடந்து வருகிறது.

ஊரக பகுதிகளில் வாக்குச்சீட்டு

நகர்ப்புற பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்பட இருப்பதால் வாக்குப்பதிவுக்கு தேவையான எந்திரங்கள் குறித்த விவரங்களை தயார் செய்ய வேண்டும். அத்துடன், அந்த மின்னணு எந்திரங்கள் பழுது இன்றி சரியாக பயன்படுத்தும் நிலையில் உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

ஊரக பகுதிகளை பொறுத்தவரை வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க இருப்பதால், அதற்கு தேவையான வாக்குப்பெட்டிகளை கணக்கெடுத்து அவற்றில் உள்ள பழுதுகளை நீக்கி தயார் நிலையில் வைக்க வேண்டும்.

இவ்வாறு மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் கூறினார்.

Friday 26 August 2016

10, 12-ம் வகுப்பு காலாண்டுத் தேர்வுகள்: செப்டம்பர் 8-ல் தொடக்கம்

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 8-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சிறப்பிடம் பெறவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கிலும், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, இயக்குநரகத்தில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களில் வினாத்தாள் அச்சிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும்.
இந்நிலையில், 2016-17 கல்வியாண்டுக்கான 10, 12-ஆம் வகுப்புகளின் காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்குநரகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். வினாத்தாளைப் படிக்க 10 நிமிஷங்களும், விடைத்தாளில் விவரங்களை நிரப்ப 5 நிமிஷங்களும் வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 12.45 மணி வரையிலும் நடைபெறும். இவர்களுக்கும் கூடுதலாக 15 நிமிஷங்கள் வழங்கப்படும்.
பிளஸ் 2 பொதுப் பிரிவு, தொழிற்கல்வி பிரிவு, தட்டச்சு (தமிழ் - ஆங்கிலம்) உள்ளிட்ட பாடப் பிரிவினருக்கான செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கும் முன்னதாகவே நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.



Thursday 25 August 2016

சிறுபான்மையின பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு பொருந்தாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத சிறுபான்மையின  பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்ற அரசின் உத்தரவு பொருந்தாது  மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ்,  தமிழக அரசு கடந்த 2011 நவம்பர் 15-இல் அரசாணை பிறப்பித்தது.
அதன்படி,அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக புதிதாக நியமிக்கப்படுபவர்கள், தமிழக அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதே போன்று, 2010-ஆம் ஆண்டு ஆகஸ்டு 28-ஆம் தேதிக்கு பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களும், 5 ஆண்டுகளுக்குள் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உத்தரவிட்டது.இந்த அரசாணை சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர்கள் சேவியர் அருள்ராஜ், அஜ்மல்கான், காட்சன் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:  ஆசிரியர்களி்ன் தகுதியை உயர்த்துவதற்காக, இந்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது என்றும், இதுபோன்ற தேர்வுகளை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், அரசின் தலைமை வழக்குரைஞர் தனது வாதத்தின் போது எடுத்துரைத்தார்.
ஆனால், உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமை சட்டம், சிறுபான்மையின பள்ளிகளுக்கு பொருந்தாது  என்று மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.இதேபோன்று, உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகளை கருத்தில் கொள்ளும் போது, பொது நலனை கருத்தில் கொண்டு சிறுபான்மை கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விதிகளை கொண்டு வரலாம்.அதற்காக, அந்த பள்ளிகளின் தன்மையை பாதிக்கும் விதமாக உத்தரவு பிறப்பிக்க முடியாது.
மேலும் ஆசிரியர்களை நியமனம் செய்யும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரத்தில் வேறு யாரும் தலையிட முடியாது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.எனவே, அரசு உதவி பெறும், உதவி பெறாத சிறுபான்மையின  பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வி்ல் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அவர்களுக்கு பொருந்தாது. மேலும் 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, ஆசிரியர்களுக்கு  ஊதியத்தை அரசு வழங்காமல் உள்ளது. அந்த ஊதியத் தொகையை 2 மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
தமிழக அரசைப்போல, புதுச்சேரி அரசும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து, கடந்த 2015-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையும், புதுச்சேரியி்ல் உள்ள சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொருந்தாது.ஆசிரியரின் தரத்தை மேம்படுத்துவதை உறுதிப்படுத்த, சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் ஆண்டு விடுமுறை காலங்களில் புத்தாக்க பயிற்சிகள், விவாதங்களையும் நடத்திக் கொள்ளலாம் என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Wednesday 24 August 2016

ஆக.26-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆக.26-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று நிறை குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என்றார்.

Tuesday 23 August 2016

தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பணிகளை சிறந்த முறையில் செய்து வரும் இளைஞர்கள், தேசிய இளைஞர் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆண்டுதோறும் ஜனவரி 12-ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி தேசிய அளவிலான இளைஞர் விழாவில் மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளைச் சிறப்பாக செய்து வரும் இளைஞர்கள் (15 முதல் 29 வயது வரையுள்ள) மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புக்களுக்கு தேசிய இளைஞர்  விருது வழங்கப்படுகிறது.
 அதன்படி 1.4.2015 முதல் 31.3.2016 வரையிலான காலத்தில் செய்த இளைஞர் நல பணி களுக்காக விருதுகள் நிகழாண்டில் வழங்கப்படுகிறது.
தகுதி: இளைஞர் (தனி நபர்):  குறிப்பிட்டுள்ள நிதியாண்டில் 15 முதல் 29 வயதுக்குள் இருக்க வேண்டும். தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறாமல் தொண்டு செய்திருக்க வேண்டும். இதற்கு முன் விருது பெற்றவர்கள் இந்த ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.
மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. தேசிய விருது ரூ. 40,000 மற்றும் பதக்கம் 25 நபர்களுக்கு மட்டும்.
 தன்னார்வத் தொண்டு நிறுவனம்: சங்கப்பதிவு சட்டப்படி தொண்டு நிறுவனம் பதிவு செய்திருக்க வேண்டும். நிர்வாகக் குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். எவ்வித லாப நோக்கத்துடன் தொண்டு பணிகள் ஆற்றியிருக்க கூடாது.
 குறிப்பிட்ட சாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. இதற்குமுன் இவ்விருது பெற்ற தொண்டு நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது.
 சமுதாய நலப்பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றிய புகைப்படம் மற்றும் செய்திக்குறிப்பு மற்றும் இதர ஆவணங்களுடன் சான்றொப்பம் இட்ட ஆதாரங்கள் இணைக்க வேண்டும். தேசிய விருது ரூ.2 லட்சம் பட்டயம் மற்றும் பதக்கம்.
இவ்விருதுக்கான விண்ணப்பம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.
பெற்ற விண்ணப்பம் 3 நகல்களுடன் கருத்துருக்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் ஆக. 25-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Monday 22 August 2016

வெளிநாடு மௌத் அறிவிப்பு 22/08/2016

 நமதூர் மலாயத் தெரு சூப் நானா வீட்டு மர்ஹும் முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகனாரும் முகம்மது யூசூப் ,முஹம்மது இக்பால் இவர்களின் சகோரதருமான முஹம்மது ஜெஹபர் அவர்கள் குவைத் நாட்டில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.



நமதூர் மௌத் அறிவிப்பு 22/08/2016



நமதூர் மேலத்தெரு பட்டரை வீட்டு மர்ஹும் அப்துல் காதர் அவர்களின் மனைவியும் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் முஹம்மது கஸ் சாலி அவர்களின் தாயார் மௌத் .

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா 23/08/2016 செவ்வாய் காலை 10 மணிக்கு கொடிக்கால்பாளையம் மேலத்தெரு பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம் செய்யப்படும்.

நமதூர் நிக்காஹ் தகவல் 22/08/2016








நமதூர்  ராம்கே ரோடு  எஸ்  செய்யது ஜெஹபர் சாதிக் அவர்களின் மகனார்  செய்யது நூர் முகம்மது  அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ்  ஹிஜ்ரி 1437 துல் காயிதா பிறை 18  (22/08/2016) திங்கள்கிழமை   அன்று பகல் 12 மணிக்கு நமதூர் மணமகன் இல்லத்தில்  நடை பெற உள்ளது .



மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)


بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .


நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது


... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...


பொருள்அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக

Sunday 21 August 2016

நமதூர் நிக்காஹ் தகவல் 21/08/2016







நமதூர் புதுமனைத் தெரு மர்ஹும் அப்துல்  வதூது - க இ  தாஜூன்னிஷா அவர்களின் மகனார் கப்பத்தம்பி என்கிற அப்துல் சலீம் பகதூர்ஷா அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ்  ஹிஜ்ரி 1437                   துல்காயிதா பிறை 17  (21/08/2016) ஞாயிற்றுக்கிழமை  அன்று பகல் 1:30 மணிக்கு அடியக்கமங்கலம் ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில்  நடை பெற உள்ளது .



மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)


بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .


நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது


... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...


பொருள்அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக

ஆக.24-இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆக.24-ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் எரிவாயு இணைப்புகள் பெறுவதில் நுகர்வோருக்கு சேவை ஆற்றுவதற்கான ஆலோசனைகள் பற்றி விவாதிப்பது மற்றும் காஸ் சிலிண்டர் பெறுவதில் உள்ள இடர்பாடுகளைக் களைவது மற்றும் நுகர்வோர்களின் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு காஸ் சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்துவது குறித்து ஆக.24-ஆம் தேதி, மாலை 4 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என்றார்.

Saturday 20 August 2016

ஒலிம்பிக் பாட்மிண்டன்: பி.வி.சிந்துவுக்கு வெள்ளி

ரியோ ஒலிம்பிக் மகளிர் பாட்மிண்டன் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். அரையிறுதிப் போட்டியில் நொஸோமி ஒகுஹாராவை 21-19, 21-10 என்ற நேர் செட்களில் அபாரமாக ஆடி வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார் பி.வி.சிந்து.
இதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளி உறுதியாகியுள்ளது. தங்கப்பதக்க போட்டியில் உலகின் முதல் நம்பர் வீராங்கனை கரோலினா மாரினைச் சந்திக்கிறார் சிந்து.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 10-ம் நிலை வீராங்கனை இந்தியாவின் பி.வி.சிந்துவும், தரவரிசையில் முதலிடம் வகிக்கும் கரோலினா மரினும் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப் போட்டி முதல் செட்டை பிவி சிந்து 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
2-வது செட்டில் சிந்து சிறிது தடுமாறினார். முதலிலிருந்தே புள்ளிகளைக் குவித்த மரின், இறுதியில் 21-12 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றி சம நிலைக்குக் கொண்டு சென்றார். தற்போது வெற்றியை நிர்ணயிக்கும் 3வது செட் தொடங்கியுள்ளது.
மூன்றாவது சுற்றிலும் மரினின் கை ஓங்கியது. இருவரும் சரிசமமாக மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனர். என்றாலும் மரினின் கையே ஓங்கியது. கடைசியில் 21-15 என்ற கணக்கில் மரினிடம் போராடி தோற்றார் சிந்து.

Friday 19 August 2016

ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008-ஆம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு- தர நிர்ணய சட்டத்தின்படி, இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்குகளின் பெயர் பட்டியலில் ஒட்டகத்தின் பெயர் இல்லை. இருப்பினும், பக்ரீத் பண்டிகைக்காக தமிழகத்துக்கு கொண்டுவந்து ஒட்டகங்கள் வெட்டப்படுவது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின்படியும், மத்திய அரசு சட்டத்தின்படியும் குற்றம் என்பதால், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் பிறப்பித்த உத்தரவு:-
ஆடுகளை வெட்டுவது போல ஒட்டகங்களுக்கும் பிரத்யேக அறுவைக் கூடங்கள் இருந்தால் மட்டுமே அதை அனுமதிக்க முடியும். தமிழகத்தில் ஒட்டகங்களை வெட்டுவதற்கென தனியாக அறுவைக்கூடங்கள் இல்லாததால், வெட்ட அனுமதிக்க முடியாது.
இந்த வழக்கில் மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் என அனைவரும் தங்களது வாத, பிரதிவாதங்களை 3 பக்கத்திற்கு மிகாமல் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையடுத்து, வழக்கின் விசாரணை அக்டோபர் 17-க்கு தள்ளிவைக்கப்பட்டது.

Thursday 18 August 2016

குரூப்-1 தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

மத்தியத் தேர்வாணையத்தால் நடத்தப்படும் முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சிக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால் நுழைவுத் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலைய நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் இந்திய குடிமைப்பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, சீர்மரபினர் மற்றும் இதர இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
மத்தியத் தேர்வாணையம் நடத்தும் முதல் நிலைத்தேர்வுக்கான பயிற்சிக்கு மாணவர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் நவ.13-ம் தேதியன்று நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில், முதல் நிலைத் தேர்வு பயிற்சி பெற விரும்பும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவர்கள் ஆக.28 முதல் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திருவாரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பத்தை செப்.22-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
குறைந்தபட்ச கல்வி தகுதியாகிய பட்டப்படிப்பு பிஏ, பிஎஸ்சி, பிகாம் மற்றும் தொழிற்பட்டப் படிப்பான பிஈ, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிவிஎஸ்சி, பிஎஸ்சி (வேளாண்மை) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகள் அனைத்தும்) முடித்த விண்ணப்பதாரர்களின் கல்வி, வயது, இருப்பிடம் ஆகிய சான்றிதழ்களின் நகல்களை சரிபார்த்து வரிசை எண்படி விண்ணப்பம் வழங்கப்படும் (எக்காரணத்தைக் கொண்டும் குறிப்பிட்ட கல்வித் தகுதி பெறாத மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது).
விண்ணப்பதாரர் 1.8.2017 அன்று 21 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட உச்ச வயது வரம்பிலிருந்து ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர்களுக்கு 5 ஆண்டு, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 3 ஆண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு விலக்களிக்கப்படுகிறது. தமிழக மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். புதுச்சேரி மற்றும் பிற மாநில மாணவர்களுக்கு
விண்ணப்பம் வழங்கப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு முதல் பதக்கம்; மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்றார் சாக்ஷி

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது.

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை ‛பிரீ ஸ்டைல்' பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதலில் 0-5 என பின் தங்கியிருந்த சாக்ஷி கடைசி நிமிடத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு அடுத்தடுத்து புள்ளிகள் பெற்றார். முடிவில் 8-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற சாக்ஷி வெண்கலப் பதக்கம் வென்றார். இது ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம்.
முன்னதாக காலிறுதியில் ரஷ்ய வீராங்கனை விளிரியா கொலாகோவா உடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்ததால் ரெபிசாஜ் சுற்றில் விளையாடிய சாக்ஷி மாலிக், அச்சுற்றில் மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ்ஜை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றார். இந்தியா சார்பில் மல்யுத்த போட்டியில் பதக்கம் பெற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் சாக்ஷி.
மக்களை மதிக்கிறேன்:

தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த சாக்ஷி கூறியதாவது: என் மீது அன்பும், நம்பிக்கையும் வைத்த நாட்டு மக்களை மதிக்கிறேன். அனைவருக்கும் இந்தருணத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Wednesday 17 August 2016

"அரசின் நலத் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும்'

அரசின் நலத்திட்டங்களை அறிந்து பொதுமக்கள் பயன்பெற வேண்டுமென்றார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
திருவாரூர் அருகே பெருங்குடி ஊராட்சியில் திங்கள்கிழமை சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியது:
ஊராட்சிகளில் வெளிப்படையான நிர்வாகம் நடைபெற வழிவகை செய்வதற்காகத்தான் இன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
ஜனநாயகத்தின் முக்கிய பங்கு கிராமசபை. ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு பெண் கல்வி அவசியம். ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்துக்கும் பெண் கல்வி இன்றியமையாதது.
எனவே நாம் அனைவரும் பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். அனைவரும் வீடுகளிலும், பொது இடங்களிலும் நீர் தேங்காதவாறு, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க வேண்டுமென்றார் ஆட்சியர்.
கூட்டத்தில், கோட்டாச்சியர் இரா.முத்துமீனாட்சி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ். ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tuesday 16 August 2016

திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூ.69.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 70-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தேசியக்கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சமாதானத்தைக் குறிக்கும் வகையில் வெண்புறாக்களை பறக்கவிட்ட ஆட்சியர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் 11 பேரை கௌரவித்தார். மேலும், சிறப்பாக பணியாற்றிய 22 காவல் துறை அலுவலர்கள் மற்றும் 86 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
விழாவில் புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் 55 பேருக்கு ரூ.62.90 லட்சம் மதிப்பிலான காசோலைகள், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் பிளஸ்-2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற இருவருக்கு ரூ.8,000 மதிப்பிலான காசோலை என 116 பயனாளிகளுக்கு ரூ.69.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடமும், வேப்பந்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இரண்டாமிடமும், மணவாள நல்லூர் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும், முத்துப்பேட்டை கே.ஏ.பி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி நான்காமிடமும், திருவாரூர் டிரினிட்டி பள்ளி 5-ஆவது இடமும் பிடித்தன.விழாவில், மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.சிவஞானம், குற்றவியல் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் த.மோகன்ராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தரசு, நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம், கோட்டாட்சியர்கள் இரா.முத்துமீனாட்சி (திருவாரூர்), செல்வசுரபி
( மன்னார்குடி) மற்றும் அலுவலர்கள், மாணவ, மாணவிகள்,  பொதுமக்கள் பங்கேற்றனர்.

Monday 15 August 2016

BSNL லேண்ட்லைன் அனைத்து அழைப்புகளையும் இலவசமாக அழைக்கலாம்

சுதந்திர தின சிறப்பு சலுகையாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரைவழி இணைப்புகளில் (லேண்ட்லைன்) இருந்து அனைத்து அழைப்புகளையும் திங்கள்கிழமை (ஆக.15) இலவசமாக மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பிஎஸ்என்எல் தரைவழி இணைப்பில் இருந்து, எந்த நிறுவனத்தின் செல்லிடப் பேசி, மற்றும் தரைவழி இணைப்புகளுக்கு திங்கள்கிழமை இலவசமாக எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி இலவசமாக அழைக்கலாம்.
ஞாயிறுதோறும் இலவசம்: இதே வசதியை ஞாயிற்றுக்கிழமை தோறும் பெறலாம் என்று மனோஜ் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிஎஸ்என்எல் தலைமை மேலாண் இயக்குநர் அனுபம் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "அனைத்து பிஎஸ்என்எல் இணைப்புகளுக்கும் இந்த இலவச அழைப்பு வசதி பொருந்தும்; இதுதவிர, இரவு நேரத்தில் தரைவழி இணைப்பில் இருந்து இலவசமாக அழைப்புகளும் மேற்கொள்ளும் வசதியும் தொடர்ந்து அமல்படுத்தப்படும்' என்றார்.

Sunday 14 August 2016

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முகவாய் சீரமைப்பு சிகிச்சை

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முகவாய் சீரமைப்பு முதன்முறையாக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தவர் சிங்காரவேலன். இவரது மனைவி செல்வி(58). இவருக்கு தாடை எலும்பு முறிவு ஏற்பட்டு நாகை அரசு மருத்துவமனையிலிருந்து திருவாரூர் மருத்துவக்கல்லூரிக்கு பரிந்துரை செய்யப்பட்டார். வாயை திறக்க முடியாமல், மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட அவருக்கு தாடை எலும்பின் முன்பகுதியில் 2 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மருத்துவக்கல்லூரியில் மருத்துவர்கள் மனோகரன், ராஜசேகர், சகாய இன்பசேகர், உதவி மருத்துவர் ஜின்ரீவ் டேனியல், மயக்க மருத்துவர் இளவரசன் ஆகியோர் கொண்ட குழுவினரால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தாடை சீரமைக்கப்பட்டது.
திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முகவாய் சீரமைப்பு முதன்முறையாக செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறையில் பிளவுபட்ட உதடு மற்றும் அன்னப்பிளவு சரிசெய்தல், தசை நார்களைச் சேர்த்தல், ஒட்டுத்தோல் பொருத்துதல், தீக்காயப் புண் சிகிச்சை ஆகியவை செய்யப்பட்டு வருகின்றன என்றார் மீனாட்சிசுந்தரம்.

வங்கிப் பணிக்கு இலவச பயிற்சி

வங்கி அலுவலர் பணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது என வேலைவாய்ப்பு அலுவலர் செல்லதுரை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுப்பணித்துறை வங்கிகளில்  அலுவலர் பணிகளுக்கான பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு மூலம் 8,922 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 1.7.2016 தேதிப்படி 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வெழுத ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
இத்தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் மையத்தின் மூலம் ஆக.16 முதல்  இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் பங்கேற்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்த கம்ப்யூட்டர் ஜெராக்ஸ், வேலைவாய்ப்பு  அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு ஆக.16-ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு வந்து பதிவு செய்து பயன்பெறலாம்

Saturday 13 August 2016

சுதந்திர தினத்தில் 430 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

சுதந்திர தின விழாவையொட்டி மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என  ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கூட்டத்தில் ஊராட்சி மற்றும் பொது விநியோகத்திட்ட ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். தவிர ஜனவரி 2016 முதல் ஜூலை 2016 வரையுள்ள காலத்தில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர்,
மின்சாரம் மூலதனப்பணிகள், நிர்வாகம் மீதான செலவினங்கள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் படித்துக் காண்பிக்கப்படும். 2016-17 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் ஊராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கான திட்ட அறிக்கை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும். இதுதவிர ஊராட்சியின் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு உள்ளிட்ட சுகாதாரம் குறித்து பேசி முடிவெடுக்கப்படும்.  எனவே, கூட்டத்தில் பங்கேற்று நிறைகுறைகளைத் தெரிவித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.


Friday 12 August 2016

தமிழக அரசில் 5451 பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு அறிவிப்பு

2015-16 ஆண் ஆண்டிற்கான தொகுதி -IV பணியில் அடங்கிய 5451 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு -3, நிலஅளவர், வரைவாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்விற்கு செப்டம்பர் 8 வரை இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிக்கை எண்: 15/2016
விளம்பர எண்: 445/2016
தேதி: 09.08.2016
பணி: Junior Assistant (Non - Security) - 2345
பணி: Junior Assistant (Security) - 121
பணி: Bill Collector, Grade-I - 08
பணி: Field Surveyor - 532
பணி: Draftsman - 327
பணி: Typist - 1714
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Steno-Typist, Grade-III - 404
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.50-ஐ செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவு மூலமாக கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் (பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது)
தேர்வுக் கட்டணம்: ரூ.75. நிரந்தரப் பதிவு முறையில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள். தேர்வுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும். 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசி வகுப்பி னருக்கு வயது வரம்பு 32 ஆகவும், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், குறைந்தபட்ச கல்வித் தகுதியான எஸ்எஸ்எல்சி படிப்புக்கு மேல் அதாவது பிளஸ் 2, பட்டப் படிப்பு, முதுநிலை படித்திருந்தால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு எதுவும் கிடையாது.
தகுதி: குறைந்தபட்ச பொதுக்கல்வித் தகுதி அதாவது பள்ளியிறுதி வகுப்பு (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப்பள்ளிக் கல்வி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில் தேர்வதற்கான தகுதி, பட்டம் பெற்றிருத்தல், அரசு தொழில்நுட்பத் தட்டச்சுத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை, இளநிலை தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.net/www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.09.2016
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.09.2016
தேர்வு நடைபெறும் தேதி: 06.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.tnpsc.gov.in/notifications/2016_15_not_tam_grp_iv_services.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள அறிக்கைக்கான லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சவுதி மன்னர் அதிரடி உத்தரவால் வெளிநாட்டு தொழிலாளர்கள் மகிழ்ச்சி

சவுதி அரேபியாவில் கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 2500 பேர் வேலை இழந்துள்ளனர்.
மேலும் சில நிறுவனங்களின் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த 16000 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்ததால், இவர்கள் அனைவரும் அங்குள்ள முகாம்களில் தங்கவைக்கபட்டு உள்ளனர்..

சம்பள பாக்கி உள்ளதால் அவர்களால் தங்கள் சொந்த நாட்டிற்கு கூட செல்ல முடியாமல் இருந்ததை கண்ட சவுதி அரேபியா மன்னர் அவர்கள் அனைவருக்கும் சம்பள பாக்கியை திருப்பி செலுத்தும் படி தனியார் நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தொகை செலுத்த முடியாத நிறுவனங்களுக்கு சவுதி அரசு சார்பில் 100 மில்லியன் சவுதி ரியால் கடனாகவும் கொடுத்துள்ளார்.அதை அவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளார்.

மேலும் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த வெளிநாட்டவர்கள் சொந்த நாட்டிற்கு செல்வதற்கு சவுதி ஏர்லைன்ஸ் மூலம் அனுப்பி வைக்ககவும், அவர்கள் விருப்பப்பட்டால் Final Exit விசா கூட வழங்குமாறும் அதற்கான கட்டணத்தை அந்நிறுவனங்களே செலுத்துமாறும் உத்திரவிட்டுள்ளார்.

இவ்வாறு சவுதி மன்னர் அதிரடி உத்தரவால் வெளிநாட்டு தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன் மன்னருக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

Thursday 11 August 2016

போராட்டத்தில் வெற்றி பெறும் வரை தாயை சந்திக்க விரும்பாத இரோம் ஷர்மிளா

மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் நிறைவேறும் வரை தனது தாயை சந்திப்பதில்லை என்றும், நகங்களை வெட்டுவதில்லை என்றும், தலைமுடியை வாரி விடுவதில்லை என்றும் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா உறுதி கொண்டுள்ளார்.
ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்ட இரோம் ஷர்மிளா, செவ்வாய்க்கிழமை இம்பால் நீதிமன்றத்தில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
மேலும் தனது கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள தான் மணிப்பூர் முதல்வராவதே ஒரே தீர்வு என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், போராட்டத்தில் வெற்றி காணும் வரை தனது 84 வயது தாயை சந்திப்பதில்லை என்று தீர்மானித்துள்ளார். மேலும் விரல் நகங்களை வெட்டுவதில்லை என்றும், தலைமுடியை வாரி விடுவதில்லை என்றும் உறுதியாக உள்ளார்.
சிறைப்படுத்தப்பட்ட மருத்துவமனையில் இருந்து விடுதலையான பின்பும், இம்பாலில் உள்ள தனது வீட்டுக்கு அவர் செல்லவில்லை.
ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் நிறைவேறி இரோம் வெற்றியடையும் நாளுக்காக அவரது தாயும் அதே உறுதியுடன் காத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மருத்துவர்கள் கண்காணிப்பில்...: நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட இரோம் ஷர்மிளா, திட உணவு உட்கொள்ளத் தொடங்கும் வரை மருத்துவமனையில் தங்க வேண்டும் என ஏற்கெனவே அவரை கண்காணித்த மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த 16 ஆண்டுகளாக இரோம் ஷர்மிளா திட உணவை எடுத்துக் கொள்ளாததால் அவர் உண்ணாவிரதத்தை கைவிட்ட நிலையில், திட உணவு உட்கொண்டால் அது அஜீரணத்துக்கு வழி வகுக்கும்.
எனவே, அவருக்கென தயாரிக்கப்படும் சிறப்பு திரவ உணவையே அவர் உட்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
யோகாசனப் பயிற்சியே காரணம்: கடந்த 16 ஆண்டுகளாக திட உணவு உண்ணாதபோதிலும் இரோம், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு அவரது மன உறுதியும், அவர் மேற்கொண்ட யோகாசனப் பயிற்சியுமே காரணமாகும்.
உலகின் மிக நீண்ட கால உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளத் தொடங்குவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1998-ஆம் ஆண்டு அவர் யோகாசனக் கலையைக் கற்றுக் கொண்டார்.
இந்தப் பயிற்சியை அவர் தினந்தோறும் செய்து வருகிறார்.
"பர்னிங் பிரைட்' என்ற இரோம் ஷர்மிளாவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில், அவர் கூறுகையில், "யோகா என்பது கால்பந்து விளையாட்டல்ல. ஒருவர் யோகாசனத்தைத் தொடர்ந்து மேற்கொண்டால் அவரால் 100 ஆண்டுகள் வாழமுடியும்' என்று கூறியுள்ளார்.

Wednesday 10 August 2016

திருவாரூர் திருவிக கல்லூரி ஆக.12-ஆம் தேதி திறக்கப்படும்

திருவாருரில் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திங்கள்கிழமை கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப்  பேச்சுவார்த்தையில் கல்லூரி ஆக.12-ஆம் தேதி திறப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 இந்த மோதல் தொடர்பாக திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை
நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளின் தஞ்சை மண்டல இணை இயக்குனர் பியாட்ரி ஸ்மார்க்ரெட், கல்லூரி முதல்வர் பொறுப்பு வகிக்கும் சிவராமன் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான பேராசிரியர்கள் ராமு, சண்முகசுந்தரம் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
 கூட்டத்தில் ஆக. 12-ஆம் தேதி கல்லூரி மீண்டும் திறப்பதென்றும் அன்று முதல் இருதரப்பினரும் சமாதானத்தில் செல்ல வேண்டுமென்றும், மீண்டும் பிரச்னையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்வதென்றும் இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த 15 நாள்கள் கழித்து மீண்டும் ஒரு அமைதி பேச்சுவார்த்தையை  நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Tuesday 9 August 2016

ஜிஎஸ்டி மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்: அதிமுக வெளிநடப்பு

திருத்தங்களுடன் கூடிய சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா, மக்களவையில் திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேறியது. அவையில் இருந்த 443 உறுப்பினர்களும் அந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், அதிமுக எம்.பி.க்கள் வாக்கெடுப்புக்கு முன்னதாக வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியதால், அடுத்த நிதியாண்டு முதல் நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்புக்கு வித்திடும் ஜிஎஸ்டி சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது இந்திய ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
ஊழலையும், கருப்புப் பணப் புழக்கத்தையும் வேரறுப்பதற்கு ஜிஎஸ்டி மசோதா துணை நிற்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜிஎஸ்டி மசோதா, எதிர்க்கட்சிகளின் ஆதரவு இன்றி கடந்த 10-ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் முடங்கியிருந்தது. இந்த நிலையில், மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசு, அதனை நிறைவேற்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது.
அதன் தொடர்ச்சியாக மக்களவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்து மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால், மாநிலங்களவையில் ஆளுங்கட்சிக்கு போதிய உறுப்பினர் எண்ணிக்கை இல்லாததால், அங்கு அதனை நிறைவேற்ற இயலவில்லை.
இதையடுத்து, ஜிஎஸ்டி மசோதாவில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பொருள்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களின் நலனுக்காக கூடுதலாக 1 சதவீத வரி விதிக்க வகை செய்யும் அம்சத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த ஷரத்து நீக்கப்பட்டது. மேலும், ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்படுவதன் மூலம் மாநிலங்களுக்கு ஏதேனும் வருவாய் இழப்பு ஏற்பட்டால், முதல் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு 100 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் ஏற்கப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களவையில் கடந்த வாரம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தெரிவித்த திருத்தங்களுடன் கூடிய புதிய ஜிஎஸ்டி மசோதாவை மக்களவையின் ஒப்புதலுக்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா அமலாகும் பட்சத்தில், வரி ஏய்ப்புகள் குறையும் என்று அப்போது தெரிவித்த ஜேட்லி, இதன் மூலம் நாட்டில் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நடந்த விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி.க்கள், ஜிஎஸ்டி சட்டம் அமலாக்கப்பட்டால் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் ரூ.9 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என கவலை தெரிவித்தனர். அதன்பிறகு பேசிய காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மசோதாவை ஆதரித்து கருத்து தெரிவித்தனர். விவாதத்தில் இறுதியாக பேசிய மோடி, அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற உறுதுணை அளித்த அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
இதுகுறித்து அவையில் அவர் மேலும் பேசியதாவது:
"வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் மூலம் இந்திய தேசத்தின் விடுதலை வேள்வியை கடந்த 1942-ஆம் ஆண்டில் அண்ணல் காந்தியடிகள் தொடங்கியது இதே நாளில்தான் (ஆக.8). வரலாற்றில் மறக்க முடியாத இந்த தினத்தில் மற்றொரு சிறப்பு நிகழ்வாக ஜிஎஸ்டி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது மத்திய அரசுக்கோ, குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கோ கிடைத்த வெற்றியல்ல. இது அனைவருக்குமான வெற்றி. குறிப்பாக இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி.
மாற்றத்தை நோக்கி இந்த தேசம் செல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகவும், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாகவும் ஜிஎஸ்டி மசோதா அமைந்துள்ளது.
இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், மக்கள் வாங்கும் பொருள்கள் அனைத்துக்கும் ரசீது கொடுக்க வேண்டிய நிர்பந்தம் வர்த்தகர்களுக்கு ஏற்படும். இதனால் கருப்புப் பணப் பதுக்கல் தடுக்கப்படுவதுடன் ஊழலும் வேரறுக்கப்படும். நாட்டின் பொருளாதார நிலை மேலும் வலுவடையும்.
ஜிஎஸ்டி சட்டத்தால் கடுமையான வரி விதிப்புகள் இனி காணாமல் போகும் என்றார் பிரதமர் மோடி.
இதைத் தொடர்ந்து மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதற்கு சற்று முன்னதாக, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பிறகு மக்களவையில் இருந்த 443 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து வாக்களித்ததை அடுத்து திருத்தப்பட்ட ஜிஎஸ்டி மசோதா ஒருமனதாக நிறைவேறியது.