Saturday 27 August 2016

அக்டோபர் மாதம் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்கு 1-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; 23-ந் தேதி வரை பெயர்களை சேர்க்கலாம்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது. தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளும், 125 நகராட்சிகளும், 529 பேரூராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளும் உள்ளன. இதுவரை மாநகராட்சி மேயர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். இனி தேர்ந்து எடுக்கப்படும் கவுன்சிலர்கள் ஓட்டுப் போட்டு, மாநகராட்சி மேயரை தேர்ந்து எடுக்கும் வகையில் சமீபத்தில் தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது.

ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் தலைமையில் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் பெ.சீத்தாராமன் தேசிய தகவல் மையத்துக்கு சென்று, இணையதளத்தில் வாக்குச்சாவடி மையங்கள், தெருக்களின் பெயர்கள் மற்றும் வார்டு வாரியாக விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணியை பார்வையிட்டார்.

அதன் பின்னர் பெ.சீத்தாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

1-ந் தேதி வாக்காளர் பட்டியல்

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், பெயர் நீக்கம், இரட்டை பதிவு நீக்கம் போன்ற பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்ததும் வருகிற 31-ந் தேதிக்குள் தேசிய தகவல் மையத்தில் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்படும். உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. அதன் பின்னர் 23-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக்கொள்ளலாம். அதன் பின்னர் இணைப்பு பட்டியல் வெளியிடப்படும். அதில் பெயர் இருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம்.

அடிப்படை வசதிகள்

உள்ளாட்சி தேர்தலில் ஒரு வாக்காளர் குறைந்தபட்சம் 4 வாக்குகள் பதிவு செய்ய உள்ளதால் பல வண்ண வாக்காளர் பதிவு சீட்டு பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் அதற்காக வாக்குப்பதிவு அதிகாரிகளும் தேவையான அளவில் பணி அமர்த்தப்பட உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு அன்று வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடியில் பந்தல் அமைக்கவும், மாற்றுத்திறனாளி, முதியோர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சக்கர நாற்காலிகள் வசதி செய்து கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் உள்ளாட்சி அலுவலர்கள் மட்டுமல்லாமல் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு பெ.சீத்தாராமன் கூறினார்.

திருப்பூர்

பின்னர் திருப்பூர் சென்ற அவர், அங்குள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் உள்ளதால், புதிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். தற்போது முதற்கட்டமாக கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர்கள் பட்டியலை அடிப்படையாக கொண்டு வார்டு வாரியாக வாக்காளர்களை பிரிக்கும் பணி நடந்து வருகிறது.

ஊரக பகுதிகளில் வாக்குச்சீட்டு

நகர்ப்புற பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்பட இருப்பதால் வாக்குப்பதிவுக்கு தேவையான எந்திரங்கள் குறித்த விவரங்களை தயார் செய்ய வேண்டும். அத்துடன், அந்த மின்னணு எந்திரங்கள் பழுது இன்றி சரியாக பயன்படுத்தும் நிலையில் உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

ஊரக பகுதிகளை பொறுத்தவரை வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க இருப்பதால், அதற்கு தேவையான வாக்குப்பெட்டிகளை கணக்கெடுத்து அவற்றில் உள்ள பழுதுகளை நீக்கி தயார் நிலையில் வைக்க வேண்டும்.

இவ்வாறு மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் கூறினார்.

No comments:

Post a Comment