மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் நிறைவேறும் வரை தனது தாயை சந்திப்பதில்லை என்றும், நகங்களை வெட்டுவதில்லை என்றும், தலைமுடியை வாரி விடுவதில்லை என்றும் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா உறுதி கொண்டுள்ளார்.
ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்ட இரோம் ஷர்மிளா, செவ்வாய்க்கிழமை இம்பால் நீதிமன்றத்தில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
மேலும் தனது கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள தான் மணிப்பூர் முதல்வராவதே ஒரே தீர்வு என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், போராட்டத்தில் வெற்றி காணும் வரை தனது 84 வயது தாயை சந்திப்பதில்லை என்று தீர்மானித்துள்ளார். மேலும் விரல் நகங்களை வெட்டுவதில்லை என்றும், தலைமுடியை வாரி விடுவதில்லை என்றும் உறுதியாக உள்ளார்.
சிறைப்படுத்தப்பட்ட மருத்துவமனையில் இருந்து விடுதலையான பின்பும், இம்பாலில் உள்ள தனது வீட்டுக்கு அவர் செல்லவில்லை.
ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் நிறைவேறி இரோம் வெற்றியடையும் நாளுக்காக அவரது தாயும் அதே உறுதியுடன் காத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மருத்துவர்கள் கண்காணிப்பில்...: நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட இரோம் ஷர்மிளா, திட உணவு உட்கொள்ளத் தொடங்கும் வரை மருத்துவமனையில் தங்க வேண்டும் என ஏற்கெனவே அவரை கண்காணித்த மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த 16 ஆண்டுகளாக இரோம் ஷர்மிளா திட உணவை எடுத்துக் கொள்ளாததால் அவர் உண்ணாவிரதத்தை கைவிட்ட நிலையில், திட உணவு உட்கொண்டால் அது அஜீரணத்துக்கு வழி வகுக்கும்.
எனவே, அவருக்கென தயாரிக்கப்படும் சிறப்பு திரவ உணவையே அவர் உட்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
யோகாசனப் பயிற்சியே காரணம்: கடந்த 16 ஆண்டுகளாக திட உணவு உண்ணாதபோதிலும் இரோம், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு அவரது மன உறுதியும், அவர் மேற்கொண்ட யோகாசனப் பயிற்சியுமே காரணமாகும்.
உலகின் மிக நீண்ட கால உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளத் தொடங்குவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1998-ஆம் ஆண்டு அவர் யோகாசனக் கலையைக் கற்றுக் கொண்டார்.
இந்தப் பயிற்சியை அவர் தினந்தோறும் செய்து வருகிறார்.
"பர்னிங் பிரைட்' என்ற இரோம் ஷர்மிளாவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில், அவர் கூறுகையில், "யோகா என்பது கால்பந்து விளையாட்டல்ல. ஒருவர் யோகாசனத்தைத் தொடர்ந்து மேற்கொண்டால் அவரால் 100 ஆண்டுகள் வாழமுடியும்' என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment