Thursday, 25 August 2016

சிறுபான்மையின பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு பொருந்தாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத சிறுபான்மையின  பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்ற அரசின் உத்தரவு பொருந்தாது  மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ்,  தமிழக அரசு கடந்த 2011 நவம்பர் 15-இல் அரசாணை பிறப்பித்தது.
அதன்படி,அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக புதிதாக நியமிக்கப்படுபவர்கள், தமிழக அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதே போன்று, 2010-ஆம் ஆண்டு ஆகஸ்டு 28-ஆம் தேதிக்கு பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களும், 5 ஆண்டுகளுக்குள் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உத்தரவிட்டது.இந்த அரசாணை சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர்கள் சேவியர் அருள்ராஜ், அஜ்மல்கான், காட்சன் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:  ஆசிரியர்களி்ன் தகுதியை உயர்த்துவதற்காக, இந்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது என்றும், இதுபோன்ற தேர்வுகளை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், அரசின் தலைமை வழக்குரைஞர் தனது வாதத்தின் போது எடுத்துரைத்தார்.
ஆனால், உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமை சட்டம், சிறுபான்மையின பள்ளிகளுக்கு பொருந்தாது  என்று மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.இதேபோன்று, உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகளை கருத்தில் கொள்ளும் போது, பொது நலனை கருத்தில் கொண்டு சிறுபான்மை கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விதிகளை கொண்டு வரலாம்.அதற்காக, அந்த பள்ளிகளின் தன்மையை பாதிக்கும் விதமாக உத்தரவு பிறப்பிக்க முடியாது.
மேலும் ஆசிரியர்களை நியமனம் செய்யும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரத்தில் வேறு யாரும் தலையிட முடியாது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.எனவே, அரசு உதவி பெறும், உதவி பெறாத சிறுபான்மையின  பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வி்ல் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அவர்களுக்கு பொருந்தாது. மேலும் 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, ஆசிரியர்களுக்கு  ஊதியத்தை அரசு வழங்காமல் உள்ளது. அந்த ஊதியத் தொகையை 2 மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
தமிழக அரசைப்போல, புதுச்சேரி அரசும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து, கடந்த 2015-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையும், புதுச்சேரியி்ல் உள்ள சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொருந்தாது.ஆசிரியரின் தரத்தை மேம்படுத்துவதை உறுதிப்படுத்த, சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் ஆண்டு விடுமுறை காலங்களில் புத்தாக்க பயிற்சிகள், விவாதங்களையும் நடத்திக் கொள்ளலாம் என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment