திருவாரூர் நகராட்சியில் 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நகராட்சி ஆணையர் நியமிக்கப்படாததால் நிர்வாகம் சுணக்கத்தில் இருந்து வருகிறது.
தமிழகத்தில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிக மக்கள்தொகையுடன் அதிக வருவாய் உடைய ஊர்கள் நகராட்சிகளாக செயல்படுகிறது. நகராட்சிக்கு அரசு அலுவலர்கள் நகராட்சி ஆணையர்களாக செயல்படுகிறார்கள்.
மக்களால் நேரடித் தேர்தல் மூலம் நகராட்சித் தலைவரும், வார்டு உறுப்பினர்களால்
துணைத் தலைவர் தேர்ந்தெடுத்து, நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஆணையரின் ஒப்புதலுடன் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. நகராட்சிகள் சிறப்புநிலை, தேர்வுநிலை, முதல்நிலை, இரண்டாம்நிலை, மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.
நகராட்சியில் சுகாதாரம், பிறப்பு, இறப்பு சான்றிதழ், நிலஅளவை, வீட்டுவரி, புதைச் சாக்கடை வரி, குடிநீர்வரி, கட்டட வடிவமைப்பு, மனைஅங்கீகாரம் உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறது. மேற்குறிப்பிட்டுள்ள பணிகள் குறித்த காலத்தில் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் நகராட்சி ஆணையர் அனுமதி வழங்க வேண்டும்.
ஆனால், திருவாரூர் நகராட்சியில் 2014-ஆம் ஆண்டில் சுமார் 3 மாதம் வரை உமாமகேஷ்வரி ஆணையராக இருந்தார். அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகு பொறுப்பு ஆணையராக என்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்த தர்மராஜ் செயல்பட்டு வந்தார். தற்போது அவரை பணியிட மாற்றம் செய்த பிறகு கங்காதரன் என்பவர் பொறுப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆணையர் இல்லாத காரணத்தினால் பொறுப்பில் இருப்பவர்கள் எல்லாவற்றுக்கும் ஒதுங்கியே இருப்பதால், நகராட்சிப் பணிகள் முடங்கியே கிடக்கிறது.
நகராட்சி ஊழியர்களின் அலட்சியப் போக்கு காரணமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பிறப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து சில நாள்களுக்குப் பிறகு நகராட்சியை அணுகினால் உங்கள் விண்ணப்பம் காணவில்லை, மீண்டும் ஒரு விண்ணப்பம் கொடுங்கள் என்று அலட்சியமாகப் பதில் கூறுகின்றனர். இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அண்மையில் திருவாரூரைச் சேர்ந்த ஜம்பு என்பவர் பிறப்புச் சான்றிதழில் திருத்தம் கோரி மனுவை வழங்கியுள்ளார். 15 தினங்கள் கழித்து வருமாறு பணியாளர்கள் தெரிவித்துள்ளர். அதன்படி மனுதாரர் 15 தினங்களுக்குப் பிறகு சென்றபோது, உங்களது மனுவைத் தேடி வைக்கிறோம், பின்னர் வாருங்கள் எனக் கூறியுள்ளனர்.
அவரும் ஒரு வாரம் நடையாய் நடந்துள்ளார். பின்னர் உங்களது மனு தொலைந்துவிட்டது, நீங்கள் புதிதாக ஒரு அபிடவிட்டும், விண்ணப்பமும் வழங்குங்கள். திருத்தம் செய்கிறோம் எனக் கூறியுள்ளனர். இப்படி நகராட்சி பணியாளர்கள் பொறுப்பற்றத் தன்மையில் பணியாற்றுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் நகரில் குடிநீர் பிரச்சினை, புதை சாக்கடையில் அடைப்பு, தெருமின்விளக்கு எரிவ தில்லை எனப் புகார் செய்தாலும் பணியாளர்கள் யாரும் அதனை சீரமைப்பதில்லை. பொது மக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தும் திருவாரூர் நகராட்சிக்கு உடனடியாக ஆணையரை நியமித்தாலாவது பணிகள் நடைபெறும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய துறை இதுகுறித்து கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது திருவாரூர் நகர மக்களின் கோரிக்கையாகும்.
No comments:
Post a Comment