Wednesday, 3 August 2016

துபாயில் தரையிறங்கிய 777 போயிங் ரக எமிரேட்ஸ் விமானத்தில் தீ

திருவனந்தபுரத்தில் இருந்து இன்று துபாய் நகரை நோக்கி சென்ற விமானம் அவசரமாக தரையிறங்கியபோது விமானத்தின் பின்பகுதியில் தீபிடித்தது.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ’போயிங் 777-300 A6-EMW’ ரக விமானம் இன்று துபாய் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 282 பேர் பயணம் செய்தனர். துபாய் விமான எல்லைக்குள் நுழைந்ததும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார்.
அனுமதி கிடைத்ததும் வேகமாக இறங்கிவந்த விமானம் துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் பயங்கர சப்தத்துடன் மோதி தரையிறங்கியது. அப்போது அந்த விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீபிடித்தது.
உடனடியாக அந்த விமானத்தை சூழ்ந்துகொண்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து கட்டுப்படுத்தியதாகவும், இச்சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் துபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து துபை சர்வதேச விமான நிலையம் தாற்காலிகமாக மூடப்பட்டது.

No comments:

Post a Comment