Sunday 14 August 2016

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முகவாய் சீரமைப்பு சிகிச்சை

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முகவாய் சீரமைப்பு முதன்முறையாக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தவர் சிங்காரவேலன். இவரது மனைவி செல்வி(58). இவருக்கு தாடை எலும்பு முறிவு ஏற்பட்டு நாகை அரசு மருத்துவமனையிலிருந்து திருவாரூர் மருத்துவக்கல்லூரிக்கு பரிந்துரை செய்யப்பட்டார். வாயை திறக்க முடியாமல், மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட அவருக்கு தாடை எலும்பின் முன்பகுதியில் 2 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மருத்துவக்கல்லூரியில் மருத்துவர்கள் மனோகரன், ராஜசேகர், சகாய இன்பசேகர், உதவி மருத்துவர் ஜின்ரீவ் டேனியல், மயக்க மருத்துவர் இளவரசன் ஆகியோர் கொண்ட குழுவினரால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தாடை சீரமைக்கப்பட்டது.
திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முகவாய் சீரமைப்பு முதன்முறையாக செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறையில் பிளவுபட்ட உதடு மற்றும் அன்னப்பிளவு சரிசெய்தல், தசை நார்களைச் சேர்த்தல், ஒட்டுத்தோல் பொருத்துதல், தீக்காயப் புண் சிகிச்சை ஆகியவை செய்யப்பட்டு வருகின்றன என்றார் மீனாட்சிசுந்தரம்.

No comments:

Post a Comment