Sunday 28 August 2016

திருவாரூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்'

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 76 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக தமிழக உணவு, நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மன்னார்குடி அருகே பாமணியில் மத்திய அரசுக்கு சொந்தமான 10 சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. இதில்  50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு இருப்பு வைக்கலாம். இதை  தமிழக அரசு வாடகைக்கு எடுத்து அதில் பொது விநியோகத் திட்டத்திற்கான அரிசி மூட்டைகளை இருப்பு வைத்துள்ளது.
இந்த சேமிப்புக் கிடங்கை வெள்ளிக்கிழமை மாலை திடீர் ஆய்வு செய்த பின் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியது: விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மின்னணு நெல் கொள்முதல் திட்டத்தை தமிழக முதல்வர்  அறிவித்துள்ளார்.
கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து குறைகள், புகார்கள் பெறப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொள்முதலுக்கான தொகையினையும் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக தரமான நெல்  கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதை பின்பற்றாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பு கொள்முதல் பருவத்தில் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.70-ம், பொது ரக நெல்லுக்கு ரூ.50-ம் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் 434 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 5 லட்சத்து 18 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லுக்கு ரூ.31 கோடியே 45 லட்சம் ஊக்கத் தொகையாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நெல் அறுவடை காலங்களில் தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியருக்கும், முதுநிலை மண்டல மேலாளரும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றார் அமைச்சர்.
அமைச்சருடன் ஆய்வின்போது, தஞ்சை தொகுதி எம்பி கு.பரசுராமன், நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் கா.பாலச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் எல்.நிர்மல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment