Sunday, 31 December 2017

நினைவுகள் 2017...


நமதூர் மௌத் அறிவிப்பு 31/12/2017

நமதூர் தெற்கு தெரு நாகூர் மீரான் வீட்டு மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் மகனாரும் சேக் அலாவுதீன் அவர்களின் சகோதருமான சுல்தான் அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Thursday, 28 December 2017

முத்தலாக் மசோதாவில் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் விதிக்கு, அஇஅதிமுக எம்பி எதிர்ப்பு

 முஸ்லிம்களிடையே முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் நடைமுறை இருந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தடுக்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது. 

இதையடுத்து பாராளுமன்றத்தில் இன்று முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் இதை தாக்கல் செய்தார். 

இதற்கு அ.தி.மு.க. இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அன்வர்ராஜா   முத்தலாக் மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என  மக்களவையில் கோரிக்கை வைத்தார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அன்வர்ராஜா எம்.பி பாராளுமன்றத்தில் பேசியதாவது:-

இஸ்லாம் பெண்களுக்கு பல உரிமைகளை வழங்கியுள்ளது. ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இஸ்லாம் மார்க்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. யாரோ போராடி முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை வாங்கித்தரும் நிலையில் அந்த பெண்கள் கிடையாது.

எந்த சமூக மாற்றங்கள் என்றாலும் அதே சமூகத்தினரிடமிருந்தே வர வேண்டும். உதாரணத்திற்கு, தேவதாசி, உடன்கட்டை ஏறுதல் வழக்கத்தின் தீமைகளை நமது முன்னோர்கள் சிந்தித்தார்கள். அதன் விளைவாக அந்த வழக்கங்களை நீக்கும் முயற்சியை அதே சமூகம்தான் முன் எடுத்தது. எனவே அது வெற்றி பெற்றுள்ளது.

முத்தலாக் விஷயத்திலும், தவறுகள் நடைபெறுமானால், முஸ்லிம் சட்ட வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும். முத்தலாக் சட்டம் என்பது ஷரியத் சட்டத்திற்கு எதிரானது.
முத்தலாக் சட்டத்தால், இஸ்லாமிய பெண்களுக்கு தீமைதான். தலாக் செய்யும்போது ஒருமுறை கிடைக்கும் 'செட்டில்மென்ட்' பணமும் இதனால் கிடைக்காது. இந்த சட்டம், முஸ்லிம் பெண்கள், ஆதரவற்றவர்களாக, தெருவில் பிச்சைக்காரர்களாக அலையும் நிலையை ஏற்படுத்தும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே சட்டமாக்க வேண்டும். அதனை கிரிமினல் குற்றமாக மாற்றுவதை ஏற்க முடியாது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. சிறைத் தண்டனையை நீக்கி மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும்

பாஜக தனது வகுப்புவாத அரசியலை செயல்படுத்த நினைக்கிறது. 3 முறை தலாக் கூறுவது தவறுதான். ஆனால் இதில் கிரிமினல் பிரச்சினை எங்கிருந்து வருகிறது? முத்தலாக் மசோதாவில் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் விதிக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. இவ்வாறு அன்வர் ராஜா பேசினார்.

பல்வேறு உறுப்பினர் கள் பேசிய பின்னர் குரல் வாக்கடுப்பு முலமாக மசோதா மக்களவையில் நிறைவேறியது.

Wednesday, 27 December 2017

பொருளாதார சரிவைப் போக்க திட்டம் : UAE சுற்றுலா பயணிகளுக்கு புத்தாண்டு முதல் 5% VAT வரி விதிப்பு

 சுற்றுலா பயணிகளுக்கு எதிர்வரும் புத்தாண்டு முதல் வாட் எனப்படும் மதிப்புக்கூட்டு வரியை ஐக்கிய அரபு நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன. அரபு நாடுகளில் எண்ணை வளம் குன்றிவருவதன் எதிரொலியாக பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் சரிவை சமாளிக்க UAE திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஓட்டல்கள், சுற்றுலா விடுதிகள், வாகன வாடகை ஆகியவற்றிற்கு 5 சதவீதம் வாட் வரி விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் துபாய் உள்ளிட்ட நாடுகளில் பயணிப்போர்களின் செலவினத்தை 6 முதல் 7 விழுக்காடு அதிகரிக்கும் என்று சுற்றுலா முகவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து மட்டும் 10 லட்சம் பேர் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, 25 December 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 25/12/2017

நமதூர் நடுத்தெரு குள்ளகத்தரிகாய் வீட்டு மர்ஹூம் செய்யது அகமது அவர்களின் மகளார் சமீமா பேகம் அவர்கள் மௌத்.


அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் அமோக வெற்றி!

ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு 21-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலை எந்தவித முறைகேடும் இல்லாமல் நேர்மையாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன் ஆகியோரும், சுயேட்சை வேட்பாளராக சசிகலா உறவினர் டி.டி.வி. தினகரன் உள்பட 59 பேர் தேர்தல் களத்தில் நின்றனர்.

கடந்த முறை பணப்பட்டுவாடா புகார் விஸ்வரூபம் எடுத்தது போன்று இந்த முறையும் பணப்பட்டுவாடா புகார் எழுந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுக்கள் அளித்தன. பணப்பட்டுவாடா புகார் காரணமாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் இடைத்தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற சூழ்நிலை ஏற்பட்டது. பரபரப்பான சூழ்நிலையில் 21-ந்தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. 

இந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. 

இது ஒட்டு மொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும். தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். அடுத்த இடத்தை பிடித்த அதிமுகவால் அடுத்தடுத்த சுற்றுகளில் மீண்டும் முன்னேறி வரமுடியவில்லை. டிடிவி தினகரன் இரண்டாம் இடத்தில் நீடித்த மதுசூதனன் எட்டாத அளவு வித்தியாசத்தில் வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்தார். டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 

 14 சுற்றுகள் முடிவில் 32,091 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையிலும் முன்னிலையில் நீடித்தார். 18-வது சுற்று முடிவில் டிடிவி தினகரன் 86,472 வாக்குகள் பெற்று இருந்தார்.  அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 47,115 வாக்குகளை பெற்று இருந்தார். திமுகவின் மருதுகணேஷ் 22,962 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி 3,645 வாக்குகளையும், பாஜக 1,236 வாக்குகளையும் பெற்றது. 19-வது சுற்று முடிவில் டிடிவி தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் 50.32 சதவித வாக்குகளை பெற்று வெற்றியை தனதாக்கி உள்ளார். அவருடைய ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். 

சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகளை பெற்றார். அதிமுகவை சேர்ந்த மதுசூதனன் 48,306 வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் மருது கணேஷ் 24,581 வாக்குகளை பெற்றது. இதற்கு அடுத்த இடங்களை நாம் தமிழர், பாரதீய ஜனதா பிடித்தது. திமுக, பாரதீய ஜனதா மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 57 வேட்பாளர்கள் தேர்தலில் டெப்பாசிட்டை இழந்தனர். தேர்தலில் பாரதீய ஜனதாவிற்கு விழுந்த வாக்குகளைவிடவும் அதிகமான வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்து உள்ளது. 

19-வது சுற்று முடிவு விபரம்:- 

டிடிவி தினகரன் (சுயேச்சை) - 89,013 
மதுசூதனன் (அதிமுக) - 48,306
மருதுகணேஷ் (திமுக) - 24,581
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 3,802
கரு. நாகராஜன் (பாஜக)- 1,368
நோட்டா 2,348

ஜெயலலிதாவைவிட கூடுதல் வாக்கு வித்தியாசம் 

தமிழகத்தில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும், மறைந்த முதல்-அமைச்சருமான ஜெ.ஜெயலலிதா போட்டியிட்டு, திமுக வேட்பாளர் சிம்லா முத்து சோழனை விட 39,545 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிப்பெற்றார். ஜெயலலிதா 97218 வாக்குகளை பெற்று இருந்தார். ஜெயலலிதா வாக்கு வித்தியாசத்தைவிடவும் 1,162 வாக்குகள் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றியை தனதாக்கி உள்ளார் டிடிவி தினகரன். இதே தொகுதியில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 1,50,722 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2006-க்கு பின்னர் சுயேட்சை

2006-ம் ஆண்டுக்கு பின்னர் தமிழக சட்டசபையில் சுயேட்சை எம்.எல்.ஏ.வாகி உள்ளார் டிடிவி தினகரன். கடந்த 2006-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக தளி தொகுதியில் களமிறங்கிய ராமச்சந்திரன்தான் வெற்றி பெற்று இருந்தார். அதற்கு பின்னர் இப்போது டிடிவி தினகரன் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி எம்.எல்.ஏ. ஆகிஉள்ளார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சுயேட்சை என்ற பெயரை தனதாக்கி உள்ளார் டிடிவி தினகரன், அவருடைய வெற்றியை அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

Friday, 22 December 2017

ஜெருசலேம் விவகாரத்தில் ஐநா வாக்கெடுப்பு 128 நாடுகளுடன் இணைந்தது இந்தியாஜெருசலேம் நகருக்கு இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வந்தன. இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. இதற்கு முஸ்லிம் நாடுகள் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் என்று ஐ.நா. சபை கேட்டுக்கொண்டது. ஆனால் அமெரிக்கா அதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டது.

இந்நிலையில் ஜெருசலேம் அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா. பொதுச்சபையில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா உள்பட 128 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்காவுக்கு ஆதரவாக வெறும் 9 நாடுகள் மட்டும் வாக்களித்தன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதையடுத்து ஐ.நா. சபை கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 35 நாடுகள் நழுவி விட்டன. 

 கூட்டாளிகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றின் மகத்தான அழுத்தம் இருந்தபோதிலும்  பாலஸ்தீனத்துடன் உறுதியுடன் நிற்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம்   நியூயார்க்கில் நடந்தஐ.நா. பொது அமர்வின் போது அணி சேரா நாடுகளின் அமைச்சரவை  கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது 

பாலஸ்தீனிய மக்களுக்கு இந்தியாவின் உறுதிப்பாடு மற்றும் பாலஸ்தீனிய மக்களுடன் நமது ஒற்றுமை ஒருபோதும் படுமோசமானதாக இருக்க முடியாது.அனைத்து நாடுகளிலுமுள்ள இந்தியாவின் பரந்த உறவு பாலஸ்தீனிய நட்பை பலப்படுத்தும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்"என கூறினார்

Tuesday, 19 December 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 19/12/2017

நமதூர் தாஜ்பிராக்ஷா தெரு மர்ஹூம் ஜலாலுதீன் அவர்களின் மகனாரும்,மர்ஹூம் டீக்கடை குத்புதீன், உதுமான் அலி,முஹம்மது ஹுசைன் ,ஜெகபர் சாதிக் ,சபுருதீன், முஹம்மது ஷாபி, முஹம்மது ரியாஜுதீன் ஆகியோர் களின் சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.

அன்னாரின் ஜனாசா மாலை 3:30 மணிக்கு மேலத்தெரு வில் நல்லடக்கம் செய்யப்படும்.Monday, 18 December 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 18/12/2017

நமதூர் வடக்கு தெரு சிறுவாமணியார் வீட்டு  ஹாஜா மைதீன் அவர்களின் தகப்பனார் முஹம்மது பாஸ் அவர்கள் இ.வி.எஸ் நகர் தனது இல்லத்தில் மௌத்.

இன்று 19/12/2017 காலை 10 மணிக்கு நமதூர் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

நமதூர் மௌத் அறிவிப்பு 18/12/2017

நமதூர் நடுத்தெரு முதலைகுட்டி வீட்டு முஹம்மது தமீம் அவர்களின் மகளாரும் ஹாஜா நஜூபுதீன்  சுல்தான் ஆரிபின் இவர்களின் சகோதரியுமான மொஹராஜ் நிசா அவர்கள் மௌத்.

அன்னாரின் ஜனாசா காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Friday, 15 December 2017

ஆதார் எண் இணைக்க மார்ச்-31 ஆம் தேதி வரை அவகாசம்: உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரும் ஜனவரி மாதம் 17-ந் தேதி முதல் விசாரிக்க உள்ளது.

இதற்கிடையே அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயம் ஆக்கி இருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு பல்வேறு தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடுத்துள்ளனர். இந்த வழக்குகளும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வின் முன் விசாரிக்கப்பட்டு வந்தன.

இந்த அமர்வின் முன் மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, வங்கிக்கணக்குகள் உள்ளிட்டவற்றில் ஆதார் எண் இணைப்பதற்கு டிசம்பர் 31-ந் தேதி கடைசி நாள் என்பதை 2018-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட இருப்பதாக தெரிவித்தார். அதன்படி நேற்றுமுன்தினம் இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. 

இந்நிலையில்,  இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம், ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர். செல்போன் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளில் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவும் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்த கூடாது என மத்திய அரசுக்கு அரசியல் சாசன அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. 

Tuesday, 12 December 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 12/12/2017

நமதூர் தெற்கு தெரு  மலர் ஷாப்பிங் சென்டர் புதுத்தெரு  - ஜெஹபர் சாதீக், ஜாஹீர் உசேன் இவர்களின் தகப்பனார் மு.ப .முஹம்மது பாஸ் அவர்கள் மெளத்.

 (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுவூன்)

Sunday, 10 December 2017

காஸா நகரில் இருந்து ராக்கெட் வீச்சுக்கு பதிலடி: இஸ்ரேல் வான்தாக்குதல்; 2 பாலஸ்தீனர்கள் பலி


இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நகராக ஜெருசலேம் திகழ்ந்து வருகிறது. யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் அங்கு புனித தலங்கள் உள்ளன.

இந்த ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அங்கீகரித்து வாஷிங்டன் வெள்ளை மாளிகையில், கடந்த 6-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உலகளாவிய எதிர்ப்பு

டிரம்ப் முடிவுக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கி உள்ளன.

மலேசியா, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தோனேசியா என பல நாடுகளிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, கண்டன போராட்டங்கள் நடத்தி உள்ளனர்.

டிரம்பின் அறிவிப்பால் பெருத்த சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று முன்தினம் அவசரமாக கூடி விவாதித்தது. இந்த கூட்டத்தின்போது அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக உறுப்பு நாடுகள் அனைத்தும் ஏகோபித்த குரல் எழுப்பின. அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி மட்டும் தனித்து நின்று, டிரம்பின் முடிவை நியாயப்படுத்தி பேசினார்.

டிரம்பின் முடிவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, சுவீடன் ஆகிய நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டன.

பாலஸ்தீனத்தில் கொந்தளிப்பு

இதற்கிடையே டிரம்ப் அறிவிப்பால் பாலஸ்தீனத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல்- பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கு இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு தங்களுடைய தூதரகத்தை மாற்றும் எவரும் பாலஸ்தீனர்களின் எதிரிகள் என்று ஹமாஸ் மூத்த தலைவர் பாத்தி ஹம்மாத் ஆவேசத்துடன் அறிவித்தார்.

ராக்கெட் வீச்சும், வான்தாக்குதலும்

காஸா நகரில் இருந்து இஸ்ரேலை நோக்கி பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தினர் நேற்று முன்தினம் 3 ராக்கெட் வீச்சு நடத்தி உள்ளனர். இந்த ராக்கெட்டுகளில் ஒன்று, ஸ்டேராட் நகரில் விழுந்ததாகவும், மற்ற இரண்டு ராக்கெட்டுகளை இஸ்ரேல் தனது அயர்ன் டோம் ராக்கெட் தடுப்பு அமைப்பின்மூலம் இடைமறித்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த ராக்கெட் தாக்குலை தொடர்ந்து உடனடியாக இஸ்ரேலும் பதிலடியில் ஈடுபட்டது. ஹமாஸ் தளங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நேற்று அதிகாலையும் தொடர்ந்தது. குறிப்பாக ஹமாஸ் இயக்கத்தினரின் ஆயுத உற்பத்தி சாலைகள், ஆயுத கிடங்குகள், ராணுவ வளாகம் ஆகியவற்றை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தியது.

2 பாலஸ்தீனர்கள் பலி

இந்த தாக்குதல்களில் 2 பாலஸ்தீனர்கள் சிக்கி உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த உயிரிழப்பை ஹமாஸ் சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இறந்தவர்கள் அப்துல்லா அல் அட்டல், முகமது அல் சப்தி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர்களது உடல்கள் பல மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் இயக்கத்தினர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளனர்.

டிரம்ப் அறிவிப்பை தொடர்ந்து இஸ்ரேல் படையினருடனான மோதலில் ஏற்கனவே 2 பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர். இப்போது இஸ்ரேல் வான்தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 

Saturday, 9 December 2017

ஏ.டி.எம்.கார்டை மாற்றி கொடுத்து ஓய்வு பெற்ற நூலகர் வங்கி கணக்கில் ரூ.24 ஆயிரம் மோசடி


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் வடகாடு பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் (வயது 68). ஓய்வு பெற்ற நூலகர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓய்வூதிய தொகையை எடுப்பதற்காக முத்துப்பேட்டையில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு வந்தார். அப்போது அருகில் நின்ற வாலிபரிடம், கண்ணையன் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.24 ஆயிரம் பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். கார்டை வாங்கிய வாலிபர் உங்களது வங்கி கணக்கில் பணம் இல்லை என கூறியுள்ளார். பின்னர் கண்ணையனின் ஏ.டி.எம். கார்டை கொடுப்பதற்கு பதிலாக தனது ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்துள்ளார். மறுநாள் கண்ணையன் பணம் எடுப்பதற்கு ஏ.டி.எம். வந்துள்ளார். அப்போது பணம் எடுக்க முடியவில்லை. உடனே வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அப்போது வங்கி அதிகாரி ஏ.டி.எம். கார்டை வாங்கி பார்த்தபோது இது உங்களுடைய கார்டு அல்ல வேறு ஒருவருடைய கார்டு என கூறியுள்ளார்.

இதுகுறித்து கண்ணையன் முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூர் சங்கேந்தி சோத்திரியம் ரோட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜதுரை (23), கண்ணையனின் ஏ.டி.எம். கார்டை நூதன முறையில் மோசடி செய்து ரூ.24 ஆயிரம் பணத்தை எடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்தனர். பின்னர் அவரை திருத்துறைப்பூண்டி சப்-மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்

Friday, 8 December 2017

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 59 வேட்பாளர்கள் போட்டி


சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கி 4-ந்தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 145 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 5-ந் தேதி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.

தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி முன்னிலையில் நடந்த இந்த பரிசீலனையின் போது, விதிகளை முறையாக பின்பற்றாமல் தாக்கல் செய்யப்பட்ட நடிகர் விஷால், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா ஆகியோரின் மனுக்கள் உள்பட 73 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ், பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரின் மனுக்கள் உள்பட 72 பேரின் மனுக் கள் ஏற்கப்பட்டன.

இந்த நிலையில், போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும். மனுக்களை திரும்பப் பெற மாலை 3 மணி வரை அவகாசம் வழங் கப்பட்டு இருந்தது. நேற்று 13 பேர் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.

எனவே ஆர்.கே.நகர் தொகுதியில் இறுதியாக 59 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஒரு பெண் சுயேச்சை வேட்பாளரும் அடங்குவார். 59 வேட்பாளர்கள் அடங்கிய இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி வெளியிட்டார்.

பின்னர் வேட்பாளர்களுக் கான சின்னங்களையும் அவர் அறிவித்தார். கட்சி வேட்பாளர்களான மதுசூதனனுக்கு (அ.தி.மு.க.) இரட்டை இலையும், மருதுகணேஷுக்கு (தி.மு.க.) உதயசூரியனும், கரு.நாகராஜனுக்கு (பா.ஜனதா) தாமரையும் ஒதுக்கப்பட்டது.

சுயேச்சை வேட்பாளரான டி.டி.வி.தினகரன் தொப்பி, கிரிக்கெட் மட்டை, விசில் ஆகியவற்றில் ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு கேட்டு இருந்தார். ஆனால் அவருக்கு இதில் எந்த சின்னமும் கிடைக்கவில்லை.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான ‘நமது கொங்கு முன்னேற்ற கழகம்’ கட்சிக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது.

டி.டி.வி.தினகரனுக்கு சுயேச்சை சின்னங்களில் ஒன்றான ‘பிரஷர் குக்கர்’ சின்னம் ஒதுக்கப்பட்டது.

Thursday, 7 December 2017

மத்திய அரசின் 139 சேவைகள்-திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2018 மார்ச் 31 ந்தேதிவரை நீட்டிப்பு


மத்திய அரசின் 139 சேவைகள் மற்றும்  நலத்திட்டங்களுக்கு ‘ஆதார்’ எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு வருமான வரித்துறையால் நிரந்தர கணக்கு எண் (பான்) அளிக்கப்படுகிறது.

அந்த பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு, ஜூலை 31–ந்தேதி என்று நிர்ணயிக்கப்பட்டது. பிறகு இந்த கால அவகாசம் ஆகஸ்டு 31–ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த காலக்கெடு முடிவடைய இருந்த நிலையில், திடீரென மத்திய அரசு இந்த காலக்கெடுவை நீட்டித்து  உத்தரவிட்டது. அதன்படி, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31–ந்தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் பல்வேறு சமூக நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை அளிப்பதற்கான கால அவகாசமும் டிசம்பர் 31–ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கும் டிசம்பர் 31–ந்தேதிதான் கடைசி நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில், பான்–ஆதார் இணைப்புக்கும் டிசம்பர் 31–ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் தற்போது கால நீட்டிப்பு வழங்கப்பட்டு  உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31 ந்தேதி வரை இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மத்திய  அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு சேவைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெற ஆதார்  கட்டாயமாக இணைப்பதற்கான காலக்கெடு 2018 மார்ச் 31 வரை நீடிக்கும் வகையில்,  நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறி உள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்சிடம்  அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் மத்திய அரசின் 135 சேவைகள் மற்றும்  நலத்திட்டங்களுக்கு ‘ஆதார்’ எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 2017 மார்ச் 31 ஆம் தேதியிலிருந்து 2018 மார்ச் 31 வரை நீடிக்கப்படும் என கூறி உள்ளார்.

Wednesday, 6 December 2017

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
இஸ்ரேல் நாட்டின் தலைநகராக தற்போது ஜெருசலேம் இருக்கிறது (முன்பு டெல் அவிவ் இருந்தது). ஆனால் இது இதுவரை ஐநா அமைப்பாலோ, அமெரிக்காவாலோ அங்கீகரிக்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த நாடு நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. நிர்வாக ரீதியாக அங்கு இதன் காரணமாக நிறைய குழப்பங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க அமெரிக்கா முடிவு செய்து இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று வெளியிட்டார்.மேலும் இஸ்ரேலின் 'டெல் அவிவ்' என்ற நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகரத்திற்கு மாற்றப்பபோவதாகவும் கூறியுள்ளார். இன்னும் ஆறு மாதங்களுக்கு மட்டுமே டெல் அவிவ் நகரத்தில் தூதரகம் செயல்படும் என்று கூறியுள்ளார்
இதுகுறித்து டிரம்ப் சில நாட்டு அதிபர்களிடம் விவாதம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அமெரிக்கா ஏற்றுக் கொண்டால், பிற சர்வதேச சமூகத்திற்கு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுப்பதாக அமையும். கிழக்கு ஜெருசலேமிலுள்ள இஸ்ரேலிய சமூகத்தின் குடியிருப்புகள் அனைத்தும் சரியானவை என்று வாதிடும் இஸ்ரேலின் நிலைப்பாட்டுக்கு வலிமை சேர்க்கும்.

இதனால் விரைவில் ஜெருசலேம் அதிகாரப்பூர்வமாக தலைநகர் ஆகும் வாய்ப்புள்ளது. தற்போது இந்த தகவல் சில புதிய பிரச்சினைகளை உருவாக்க இருக்கிறது.

இஸ்ரேலுக்கும் அண்டை நாடுகளுக்கு இருக்கும் பிரச்சினையை இந்த அறிவிப்பு கிளறிவிடும். மேலும் சவுதி இந்த அறிவிப்பால் கொதிப்படைந்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரபு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் அதிபர் டொனால்ட் டிரம்பை எச்சரித்துள்ளனர்.

இஸ்ரேலில் நிறைய முஸ்லீம் மக்கள் அதிகம் கஷ்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. டிரம்ப்பின் இந்த முடிவுக்கு சவூதி அரசர் சல்மான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது இஸ்ரேலில் மிகப்பெரிய அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அங்கீகரிக்குமானால், இஸ்ரேலுடனான துருக்கியின் உறவு துண்டிக்கப்படலாம் என்று முன்னர் துருக்கி அதிபர் எச்சரித்திருந்தார். இத்தகைய நடவடிக்கை முஸ்லீம்களுக்கான சிவப்புக் கோட்டை தாண்டுவதாக அமையும் என்று துருக்கி அதிபர் ரிசெஃப் தாயிப் எர்துவான் கூறியிருந்தார்.

3 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் தமிழக மீனவர்களுக்கு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை


கடந்தவாரம் தென் தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளை தாக்கிய ஒகி புயல் தற்போது குஜராத் மாநிலத்தை நோக்கி திரும்பி உள்ளது. அந்த புயல் வலுவிழந்து நள்ளிரவிலோ அல்லது இன்று(புதன்கிழமை) காலையிலோ சூரத் அருகே கரையை கடக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஒகி புயல் குஜராத்தை தாக்கும் என்பதால் குஜராத், மராட்டிய மாநில மீனவர்கள் 6-ந்தேதி(இன்று) முதல் 8-ந்தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மீனவர்களை எச்சரித்து இருக்கிறது. புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 50 முதல் 70 கி.மீ.வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை ஒகி புயல் சூரத் நகரில் இருந்து மேற்கே 390 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இதேபோல் வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் புதிய புயல் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், இது வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் எனவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கணித்து இருக்கிறது.

இது அடுத்த 3 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் அப்போது பலத்த காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் அந்தமான் தீவு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 6-ந்தேதி(இன்று) முதல் 8-ந்தேதி வரை 3 நாட்களுக்கு கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

மீட்பு பணி தீவிரம்

இதற்கிடையே கேரளாவில் மாயமாகி, இன்னும் மீட்கப்படாத 92 மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, மாநில மீன்வளத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 252 கேரள மீனவர்களை மேற்கண்ட படையினர் மீட்டு விட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.

புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள லட்சத் தீவுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்வதில் மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து கடற்படைக்கு சொந்தமான 8 கடற்படை கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அங்கு அரிசி, பருப்பு, உருளைக்கிழங்கு, குடிநீர், போர்வைகள், மழைக்கோட்டு உள்ளிட்ட பல டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 

Tuesday, 5 December 2017

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று

ஆண்டு ஓன்று சென்றுவிட்டது. ஆனால் பல காட்சிகள் குழப்பங்கள் சச்சரவுகள் இன்னும் பல ...

Sunday, 3 December 2017

வங்க கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயல் சின்னமாக வலுப்பெற வாய்ப்பு

தமிழகத்தில் ‘ஒகி’ புயல் ஆபத்து நீங்கினாலும், தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது.
‘சாகர்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த புயல் வரும் 4, 5 மற்றும் 6–ந் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை தாக்கும் ஆபத்து உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:–
கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் வலுப்பெற்று நகர்ந்து சென்று லட்சத்தீவு பகுதியில் உள்ள அமினித்தீவுக்கு தென்கிழக்கே 270 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு உள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் லட்சத்தீவை கடந்து செல்லும்.
புயலின் தலைப்பகுதி தற்போது லட்சத்தீவு அருகே இருந்தபோதிலும், அதன் வால் பகுதி தமிழகத்தை ஒட்டிய பகுதியில் இருப்பதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்கிடையே தென்மேற்கு வங்க கடல் பகுதியை ஒட்டிய தமிழக கடற்கரைக்கு அப்பால் வழிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 36 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, அது புயல் சின்னமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அப்படி புயலாக மாறினால் வருகிற 4–ந் தேதிக்குள் வடமேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (இந்த தகவலை இந்திய நீர்வள ஆணையமும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது). இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று மதியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வடக்கு சுமத்ரா தீவு அருகே மையம் கொண்டுள்ளது. அதாவது தமிழக கடல் பகுதியில் இருந்து 1,600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக(புயல் சின்னமாக) மாறுகிறது.
இதனால் புயல் இருக்கும் இடத்தில் வானில் கருமேகத்தின் சுழற்சி 5.8 கிலோமீட்டர் தொலைவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாழ்வு மண்டலம் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும். இந்த தாழ்வு மண்டலமானது வட தமிழக கடலோர கரையை நெருங்கும் போது புயலாக மாற வாய்ப்புள்ளது.
‘சாகர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல் சின்னம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நாளை(திங்கட்கிழமை) முதல் வருகிற 6–ந் தேதி வரை கன மழை பெய்யும்.
குறிப்பாக வட தமிழகத்திலும், புதுச்சேரியிலும் 5–ந்தேதி மற்றும் 6–ந்தேதி மிக பலத்த மழை பெய்யும்.
மேலும் ‘ஓகி’ புயலானது குஜராத்தை நோக்கி நகருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் படிப்படியாக மழை குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, 2 December 2017

Kodikkalpalayam - மீலாது பெருவிழா பேரணி

Malaysia accident - வெளிநாட்டு மௌத் அறிவிப்பு 2/12/2017

மலேசியா பாம்பே ஜூவல்லரி உரிமையாளர்  சாகுல் ஹமீது அவர்களின் மனைவி ஹக்கி என்கிற முசாதிக்கா பின் ஜெஸ்மி அவர்கள் ஜோஹோர் அருகே சாலை விபத்தில் மௌத் ஆகிவிட்டார்கள்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுஹூன்

Friday, 1 December 2017

வருவாய் வசூல் அதிகரித்தால் 12 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி. விகிதம் ஒன்றாக இணைக்கப்படும்

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த ஜூலை 1–ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன்படி அத்தியாவசிய பொருட்கள் தவிர பிற பொருட்களுக்கு 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 அடுக்கு வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இதில் 12 மற்றும் 18 சதவீதங்களை ஒன்றாக இணைக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடந்த இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், இது தொடர்பாக கூறியதாவது:–
ஜி.எஸ்.டி.க்கு முந்தைய வரி மட்டங்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு வரிவிகிதங்கள் ஜி.எஸ்.டி.யில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. இதில் 28 சதவீத வரிப்பொருட்களின் எண்ணிக்கையை நாங்கள் குறைத்துள்ளோம். இந்த விகிதத்தை ஆடம்பர பொருட்கள் மற்றும் பாவ பொருட்களுக்கு மட்டும் நிர்ணயித்து இந்த பட்டியலை மேலும் குறைக்க முடியும்.
மேலும் 12 மற்றும் 18 சதவீதங்களை ஒரே சதவீதமாக மாற்றுவது குறித்தும் அரசு பரிசீலிக்கும். அதாவது 12 சதவீதத்தில் உள்ள சில பொருட்களை 5 சதவீதத்துக்கு மாற்றி, 12 மற்றும் 18 சதவீதங்களை குறிப்பிட்ட ஒரு இடைத்தர சதவீதமாக மாற்றப்படும். இறுதியில் 2 அடுக்கு ஜி.எஸ்.டி. விகிதத்தை நோக்கியும் நாடு தள்ளப்படும்.
ஆனால் இவை அனைத்தும் ஜி.எஸ்.டி. விகிதம் நிலைப்படுத்தப்பட்டு வரி வருவாய் வசூல் அதிகரிப்பதை பொறுத்தே அமையும். அரசின் வருவாய் நிலவரத்தை பொறுத்தே இந்த மாற்றங்களின் வேகம் இருக்கும்.
இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தா

Wednesday, 29 November 2017

திருவாரூர் மாவட்டத்தில் 3-வது நாளாக பலத்த மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி திருவாரூரில் கடந்த 26-ந் தேதி மழை பெய்ய தொடங்கியது. நேற்று 3-வது நாளாக பலத்த மழை பெய்தது.

நேற்று காலையிலேயே மழை பெய்ய தொடங்கியதால் பள்ளி மாணவ-மாணவிகள் சிரமப்பட்டனர். சாலையில் இருந்த பள்ளங்களில் தேங்கிய மழை நீர் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல மணிநேரம் பெய்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருவாரூரில் அதிகபட்சமாக 31 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தின் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- மன்னார்குடி-14, பாண்டவையாறு தலைப்பு-14, நன்னிலம்-13, வலங்கைமான்-9, முத்துப்பேட்டை-8, குடவாசல்-6, நீடாமங்கலம்-5, திருத்துறைப்பூண்டி-3. 

Tuesday, 28 November 2017

மாணவரின் தலை முடியை வெட்டியதாக புகார்: அரசு பள்ளி ஆசிரியை கைது

திருவாரூர் அருகே குளிக்கரையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சுந்தர் மகன் சுரேந்தர் (வயது 13) என்பவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சுரேந்தர் தலையில் அதிகமாக முடி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் 8-ம் வகுப்பு ஆசிரியை விஜயா என்பவர், ஏன் முடி அதிகமாக வைத்திருக்கிறாய் என சுரேந்தரை கேட்டு கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் ஆசிரியை விஜயா கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேந்தரின் தலை முடியை, சக மாணவர் மூலம் பிளேடால் வெட்டினார். இதற்கு மாணவரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முடி வெட்டப்பட்ட மாணவனின் புகைப்படம் சமூக வலைதலங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த பலரும், மாணவரின் தலைமுடியை வெட்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன் தலைமையில் விசாரணை குழு அமைத்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் மாணவனின் தலைமுடியை வெட்டியது ஆசிரியை விஜயா தான் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆசிரியை விஜயா உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனிடையில் மாணவனின் தந்தை சுந்தர், கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், குழந்தைகள் நலச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை விஜயாவை கைது செய்தனர். மாணவரின் தலைமுடியை வெட்டிய ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Saturday, 25 November 2017

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ-மின்சார ரெயில்களில் பயணம்


சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் மூலம் நகரில் போக்குவரத்தை மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் சென்னை சர்வதேச மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது. கருத்தரங்கில் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கலந்துகொண்டு பேசியதாவது:-

சென்னை நகரில் ‘ஷேர் ஆட்டோ’வில் பயணம் செய்வதற்கும், மெட்ரோ ரெயிலில் பயணிப்பதற்கும் ஒரே கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால் மெட்ரோ ரெயிலில் ஏ.சி.வசதி உள்ளது. சுற்றுச்சுழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக பயணிக்க முடிகிறது.

சென்னையில் 2015-ம் ஆண்டு வெள்ளம் பாதித்தபோதும் மெட்ரோ ரெயில் எந்த தடையுமின்றி இயங்கியது. அப்போது மின்தடை ஏற்பட்டிருந்தாலும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டது.

அண்ணாசாலையில், சைதாப்பேட்டை முதல் டி.எம்.எஸ். வரையிலான சுரங்கம் அமைக்கும் பணி மார்ச் மாதம் நிறைவடையும். மெட்ரோ ரெயில் 2-வது கட்ட திட்டப்பணிகள் மாதவரம்-சிறுசேரி, ஆயிரம்விளக்கு-கோயம்பேடு, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 107.55 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டது.

வருகிற நிதி ஆண்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். அதன்பின்னர் கடன் வாங்குதல், டெண்டர் விடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். 2025-ம் ஆண்டுக்குள் இந்த திட்டப்பணிகள் முடிவடையும் என்று நம்புகிறோம்.

சென்டிரல் ரெயில் நிலையம், வால்டாக்ஸ் சாலை, பல்லவன் பாலம் உள்ளிட்ட இடங்களில் தினசரி 6 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதசாரிகள் கடக்கிறார்கள். எனவே அவர்கள் சாலையை கடப்பதற்கு வசதியாக ரிப்பன் மாளிகையில் இருந்து ஒருங்கிணைந்த நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளது.

சென்டிரல் ரெயில் நிலையத்தில் வணிக வளாகத்துடன் கூடிய மிகப்பெரிய சுரங்கப்பாதை வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகர பஸ்கள், மின்சார ரெயில்கள், மெட்ரோ ரெயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிப்பதற்கு ஏற்றவகையில் தொழில்நுட்ப பணிகள் நடந்துவருகிறது. வெகுவிரைவில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது.

வடசென்னை பகுதியில் 2 ஆண்டுகளில் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்துவிடும். அதன்பின்னர் வடசென்னையை நோக்கி மக்கள் நகர தொடங்குவார்கள்.

Thursday, 23 November 2017

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றியது எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க. இரண்டு அணியாக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் என செயல்பட்டு வந்தன. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆனார். இந்த நேரத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தேர்தல் கமிஷனில் முறையிட்டன.

வேறு வழியில்லாமல், அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது. இதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் வெவ்வேறு சின்னங்களிலேயே இரு அணிகளும் போட்டியிட தயாராகின. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக வெளியான புகாரை தொடர்ந்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின்னர், இரு அணிகளும் கட்சி மற்றும் சின்னத்தை பெறுவதில் முனைப்பு காட்ட தொடங்கின. லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை இரு அணியினரும் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தனர். ஆனால், ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யும் முன், ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றாக இணைந்தன.

சசிகலா சிறை சென்றதால் அ.தி.மு.க. (அம்மா) அணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வந்தது. அதன்பிறகு இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. இந்த இணைப்பை விரும்பாத அ.தி.மு.க. (அம்மா) அணியைச் சேர்ந்த துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் அவரது தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.

இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய அணியினரும், டி.டி.வி.தினகரன் அணியினரும் தேர்தல் கமிஷனில் தங்கள் தரப்பிலான லட்சகணக்கான ஆவணங்களை தாக்கல் செய்தனர். இருதரப்பிலும் பல்வேறு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது.

 இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவது தொடர்பாக ஒருங்கிணைந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும், சசிகலா அணியினருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இன்று இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணைய உத்தரவை அடுத்து அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சிக் கொடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக் கொள்ளத் தடை இல்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் உறுதிபடுத்தப்படவில்லை.  என்றாலும் தேர்தல் கமிஷன் அறிவிப்பு  பற்றிய தகவல் காரணமாக எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் அவர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

சின்னம் தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ராஜேஷ் மல்கோத்ரா தகவல் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து கருத்து தெரித்த முதல் அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை எங்கள் வசம் வந்துள்ளது.  விசாரணையை மேற்கொண்டு நியாயமான தீர்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது என கூறினார்.

Tuesday, 21 November 2017

வட கொரியாவை தீவிரவாத ஆதரவு நாடாக அமெரிக்கா அறிவித்தது


திங்களன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வட கொரியாவை பயங்கரவாதத்தின்  ஆதரவுநாடாக  அறிவித்தார், டிரம்ப் நிர்வாகம் அதன் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்காக வடகொரியா  மீது கூடுதல் தடைகளை விதிக்க   நடவடிக்கை  போகிறது.டிரம்ப் அமைஅச்சரவை கூட்டத்தின் போதை இட்ய்ஹனை அறிவித்தார்.

அவர் கூறியதாவது:-

இன்று, அமெரிக்கா வட கொரியாவை பயங்கரவாதத்தின் அரசு  ஆதரவாளராக  அறிவிக்கிறது. இது ஒரு நீண்ட காலத்திற்கு முன்பு நடந்திருக்க வேண்டும். இது தற்போது தான் நடந்து உள்ளது. அணு ஆயுத பேரழிவு மூலம் உலக அச்சுறுத்தலகா உள்ளது.   வெளிநாட்டு மண்ணில் படுகொலைகள் உட்பட,வட கொரியா பலமுறை சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்துள்ளது.

இன்று இந்த நடவடிக்கை எடுக்கும்போது,   நமது  எண்ணங்கள் ஓட்டோ வார்பீயர் குறித்து போகிறது. அவன் ஒரு அற்புதமான இளைஞன் வட கொரிய ஒடுக்கு முறையால் கொடூரமாக பாதிக்கப்பட்டான்.

வட கொரியா மற்றும் தொடர்புடையவர்கள்  மீது இன்னும் கூடுதலான தடைகள் மற்றும் அபராதம் விதிக்கப்படும்.  கொலைகார ஆட்சியை தனிமைப்படுத்த அதிகபட்ச அழுத்தம்கொடுக்கப்படும்.செவ்வாயன்று கருவூலத் துறை வட கொரியா மீது மிகப்பெரிய ஒரு கூடுதல் சுற்று தடைகளை அறிவிக்கும். 

 வட கொரிய ஆட்சி சட்டபூர்வமானதாக இருக்க வேண்டும். வட  தனது சட்டவிரோதமான அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அபிவிருத்தியை முடிவுக்கு கொண்டு, சர்வதேச பயங்கரவாதத்திற்கு அனைத்து ஆதரவையும் நிறுத்த வேண்டும். இல்லாவிடால் அடுத்த 2 வாரங்கள் பொருளாதார தடைகள் அதிக அளவில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க வெளியுறவுக் குழு இந்த நடவடிக்கையை வரவேற்று உள்ளது.

Monday, 20 November 2017

1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டம்; முதல் அமைச்சர் வெளியிட்டார்

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில், தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளுக்கு தமிழக மாணவர்கள் தயாராகும் வகையில் வரைவு பாடத்திட்டம் உருவாக்கப்படும் என அரசு அறிவித்தது.
இந்த நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டத்தினை இன்று வெளியிட்டார்.
புதிய பாடத்திட்டம் 200 ஆசிரியர்கள் அடங்கிய குழுவினரால் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாடத்திட்டம் வரும் ஜனவரியில் இறுதி செய்யப்பட்டு அடுத்த கல்வியாண்டு முதல் படிப்படியாக நடைமுறைக்கு வரவுள்ளது.
1 முதல் 10 வகுப்புகளுக்கு 7 ஆண்டுகளுக்கு பின்னரும், 11 மற்றும் 12வது வகுப்புகளுக்கு 14 ஆண்டுகளுக்கு பின்னரும் புதிய பாடம் இருக்கும்.
புதிய வரைவு பாடத்திட்டங்கள் பற்றி 15 நாளில் பெற்றோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துகளை கூறலாம்.
www.tnscert.org

Sunday, 19 November 2017

திருவாரூர் அருகே கோதுமை ஏற்றி சென்ற லாரி, பள்ளத்தில் கவிழ்ந்தது


காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நேற்று அதிகாலை 20 டன் கோதுமை ஏற்றி கொண்டு லாரி திண்டுக்கலை நோக்கி சென்றது. இந்த லாரியை கரூர் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் மகன் ரத்தினாசலம் (வயது 42) என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த மாற்று டிரைவர் ராஜேஷ் (42) என்பவரும் சென்றுள்ளார். இந்த லாரி திருவாரூர் மாவட்டம் அம்மையப்பனை அடுத்த கீழமுகுந்தனூர் என்ற இடததில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற அரசு பஸ்சுக்கு வழிவிட முயன்றபோது எதிர்பாராதவிதமாக லாரி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த கோதுமை தரையில் கொட்டியது. இந்த விபத்தில் டிரைவர்கள் 2 பேரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், தஞ்சை-நாகை சாலை இருவழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டுள்ள சாலையில் அதி வேகமாக வாகனங்கள் செல்கின்றன. இதில் குறுகிய சாலையில் எதிரே வாகனத்திற்கு வழி விடமுடியாமல் விபத்துகள் ஏற்படுகின்றது. கடந்த மாதம் இதே இடத்தில் கோதுமை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலை பணிகள் நடைபெறும் இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

Saturday, 18 November 2017

அடுத்த வாரம் வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் இதுவரை வங்கக்கடலில் 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவானது. முதலில் இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் சுமார் 10 நாட்கள் மழை பெய்தது. பின்னர் 3 நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. ஆனால் இதனால் எதிர்ப்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. பின்னர் இந்த காற்றழுத்த தாழ்வுநிலை வடதிசையில் நகர்ந்து ஒடிஷா நோக்கி சென்று விட்டது.

இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை சராசரியை விட குறைந்த அளவே பெய்துள்ளதால் கலக்கமடைந்த மக்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியளித்துள்ளது.

வரும் 21ம் தேதி வட அந்தமான் அருகேயும், தென்கிழக்கு வங்க கடலில் வரும் 27ம் தேதியும் அடுத்தடுத்து 2 புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்தத்தை பொறுத்தவரை பெரும்பாலும் அது தமிழகம் நோக்கி வர வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் காற்றின் சுழற்சியை பொறுத்து தென் மாவட்டங்களுக்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய அதிகம் வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.