ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு 21-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலை எந்தவித முறைகேடும் இல்லாமல் நேர்மையாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன் ஆகியோரும், சுயேட்சை வேட்பாளராக சசிகலா உறவினர் டி.டி.வி. தினகரன் உள்பட 59 பேர் தேர்தல் களத்தில் நின்றனர்.
கடந்த முறை பணப்பட்டுவாடா புகார் விஸ்வரூபம் எடுத்தது போன்று இந்த முறையும் பணப்பட்டுவாடா புகார் எழுந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுக்கள் அளித்தன. பணப்பட்டுவாடா புகார் காரணமாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் இடைத்தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற சூழ்நிலை ஏற்பட்டது. பரபரப்பான சூழ்நிலையில் 21-ந்தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
இந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது.
இது ஒட்டு மொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும். தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். அடுத்த இடத்தை பிடித்த அதிமுகவால் அடுத்தடுத்த சுற்றுகளில் மீண்டும் முன்னேறி வரமுடியவில்லை. டிடிவி தினகரன் இரண்டாம் இடத்தில் நீடித்த மதுசூதனன் எட்டாத அளவு வித்தியாசத்தில் வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்தார். டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
14 சுற்றுகள் முடிவில் 32,091 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையிலும் முன்னிலையில் நீடித்தார். 18-வது சுற்று முடிவில் டிடிவி தினகரன் 86,472 வாக்குகள் பெற்று இருந்தார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 47,115 வாக்குகளை பெற்று இருந்தார். திமுகவின் மருதுகணேஷ் 22,962 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி 3,645 வாக்குகளையும், பாஜக 1,236 வாக்குகளையும் பெற்றது. 19-வது சுற்று முடிவில் டிடிவி தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் 50.32 சதவித வாக்குகளை பெற்று வெற்றியை தனதாக்கி உள்ளார். அவருடைய ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகளை பெற்றார். அதிமுகவை சேர்ந்த மதுசூதனன் 48,306 வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் மருது கணேஷ் 24,581 வாக்குகளை பெற்றது. இதற்கு அடுத்த இடங்களை நாம் தமிழர், பாரதீய ஜனதா பிடித்தது. திமுக, பாரதீய ஜனதா மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 57 வேட்பாளர்கள் தேர்தலில் டெப்பாசிட்டை இழந்தனர். தேர்தலில் பாரதீய ஜனதாவிற்கு விழுந்த வாக்குகளைவிடவும் அதிகமான வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்து உள்ளது.
19-வது சுற்று முடிவு விபரம்:-
டிடிவி தினகரன் (சுயேச்சை) - 89,013
மதுசூதனன் (அதிமுக) - 48,306
மருதுகணேஷ் (திமுக) - 24,581
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 3,802
கரு. நாகராஜன் (பாஜக)- 1,368
நோட்டா 2,348
ஜெயலலிதாவைவிட கூடுதல் வாக்கு வித்தியாசம்
தமிழகத்தில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும், மறைந்த முதல்-அமைச்சருமான ஜெ.ஜெயலலிதா போட்டியிட்டு, திமுக வேட்பாளர் சிம்லா முத்து சோழனை விட 39,545 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிப்பெற்றார். ஜெயலலிதா 97218 வாக்குகளை பெற்று இருந்தார். ஜெயலலிதா வாக்கு வித்தியாசத்தைவிடவும் 1,162 வாக்குகள் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றியை தனதாக்கி உள்ளார் டிடிவி தினகரன். இதே தொகுதியில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 1,50,722 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2006-க்கு பின்னர் சுயேட்சை
2006-ம் ஆண்டுக்கு பின்னர் தமிழக சட்டசபையில் சுயேட்சை எம்.எல்.ஏ.வாகி உள்ளார் டிடிவி தினகரன். கடந்த 2006-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக தளி தொகுதியில் களமிறங்கிய ராமச்சந்திரன்தான் வெற்றி பெற்று இருந்தார். அதற்கு பின்னர் இப்போது டிடிவி தினகரன் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி எம்.எல்.ஏ. ஆகிஉள்ளார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சுயேட்சை என்ற பெயரை தனதாக்கி உள்ளார் டிடிவி தினகரன், அவருடைய வெற்றியை அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
No comments:
Post a Comment